அத்தியாயம் 5 · 6 / 52
அத்தியாயம் 5
Chapter 5
மூல ஸ்கேன் 52 (chapter-5 portion)-60 (chapter-5 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
5
பொழுது இன்னும் சரியாக விடிந்து விடவில்லை; தெளிவற்று இருந்தது உலகம், புராணீகர் உள்ளம் போல!
சரியாக விடிந்து வெளிச்சம் பரவுவதற்குள் வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்ற துடிதுடிப்பில் பரிமளம் நடந்து கொண்டிருந்தாள். யாராவது தன்னை அந்த நிலையில் பார்த்துவிடப் போகிறார்கள் என்ற அச்சம், அவள் கண்களில் மின்னிக் கொண்டிருந்தது. மேலங்கிக்குப் பதிலாக ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு வரும் அவளைப் பற்றி யார்தான் சந்தேகப்படமாட்டார்கள். அவளது கால்கள் கல், முள் என்று கூடப் பாராமல் வீடு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. நன்றாகப் பொழுது விடிவதற்கும் அவள் தன் வீட்டுக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.
நடுத்தரமான ஓட்டுவில்லை வீடு. பல இடங்களில் ஓடுகள் பிரிந்துபோய் பழுது பார்க்கப்படாமலே இருந்தது. மூங்கி முள்ளால் ஆன வேலிகள் அமைத்த கொல்லை அந்தவீட்டிற்கு அழகு தந்து கிராமீய மெருகைப் பூரணமாக அளித்தது. கொல்லையின் கடைசியிலே உயர்ந்த வைக்கோற் போர். அதைத் தொடர்ந்து சிறு சிறு மிளகாய்ப் பாத்திகள்—கொத்தமல்லி தெளித்திருந்த காரணத்தால் கொல்லை முழுதும் 'கம்' என்ற வாசனை எழுந்து கொண்டிருந்தது. மல்லிகை முல்லைக்கொடிகள், கொம்புகளிலே பின்னிக் கொண்டு கிடந்தன. வீட்டை ஒட்டினாற்போல மாட்டுத் தொழுவம்.
செவலைப் பசு ஒன்றும், ஒரு நோஞ்சான் கன்றுக்குட்டியும் அந்தத் தொழுவத்திலே யிருந்தன. அதிலிருந்து, பரிமளாவின் வீட்டில் பால் வியாபாரம் செய்கிறார்கள் என்று புரிந்தது.
பரிமளா, மெதுவாக நடந்து வந்து, மாட்டுத் தொழுவத்திலே புகுந்தாள். அப்போதுதான், கரந்தது போக மீதமிருந்த பாலை கன்றுக்குத் தந்துவிட்டு நின்ற செவலைப் பசு, பரிமளாவை ஆவலோடு பார்த்து “அம்மா!” என்று கதறியது. பரிமளாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. செவலைப் பசு கத்தும்போது எத்தனையோ முறை அவள் அதைத் தடவிக் கொடுத்து அன்பு காட்டியிருக்கிறாள். அதன் கன்றுக்காக, தன் பெற்றோர்களிடம் வாதாடியிருக்கிறாள், பால் நிறைய விட வேண்டுமென்று!
ஆனால் இப்போது அவளால் பசுவையோ, கன்றையோ கவனிக்க இயலவில்லை. ஏதோ ஒரு பீதி அவளை ஆட்டிப் படைத்தது. இரவு முழுதும் பீதிக்கிடையே காதலனோடு இருந்த போதும் அப்போது அதுபற்றி கவலை தெரியவில்லை அவளுக்கு. அப்போது அவளால் அந்த பயத்தை சுமக்க முடியவில்லை. பெற்றோர்கள் ராத்திரியெல்லாம் தன்னை தேடியிருப்பார்களே, அவர்களிடம் என்ன சமாதானம் கூறித் தப்புவது—எதைச் சொன்னால் நம்புவார்கள்—
துரை சொன்னது போலவே சொல்லி விடலாமா? நம்புவார்களா?—ஒருவேளை நம்பி விட்டால்? இப்படியெல்லாம் குழப்பிக் கொண்டாள். மாட்டுத் தொழுவத்திலிருந்தபடியே வாயிற்புரத்தை எட்டிப் பார்த்தாள். அவள் உடம்பு அவளையறியாமலே குலுங்கியது. அவள் தகப்பனார் தாண்டவன், வாயிற்புறத்திலே வந்து நின்றார். அவரது முகம் இரவெல்லாம் கண் விழித்தது போல சோம்பிப் போயிருந்தது. எங்கெங்கே போய்த் தன்னைத் தேடினாரோ என்று தனக்குத் தானே எண்ணிக்கொண்டு, பரிமளம் கண் கலங்கினாள். தாண்டவன் மெதுவாக நடந்து சென்று வீட்டுக் கெதிரேயுள்ள வேப்ப மரத்தில் குச்சி ஒடித்துக் கொண்டு பல் துலக்கியவாறு அதை விட்டு நகர்ந்தார்.
“எங்க போறீங்க?” என்று ஒரு குரல் வேதனை கலந்து ஒலித்தது. தாண்டவன் திரும்பினார்.
பரிமளாவின் தாயின் குரல் அது.
“போம்போதே கேட்கிறீயா? வாழ்ந்தாப்புலதான்! போறது தெரியலே—பல்லு விளக்கத்தான் போறேன்?”
“சரிதான்—காலங்காத்தால உங்க காரியம் சரியா நடந்துட வேண்டியது—அவ்வளவு தான்! என பெத்த வயிறு பத்தி எரியுது; அதைப்பத்தி உங்களுக்கென்ன கவலை!”
“ஏண்டி பெத்த வயிறு பத்தி எரியுது? கொஞ்சம் குளிச்சியா பழையது சாப்பிட்டு, நீராகாரத்தைக் குடியேண்டி!”
“அப்ப, என் பெண்ணு போனது, போனதுதானா?”
“ஏ துடி எழவு! ஜோஸ்யக்காரனை கேக்ராப்ல என்னை கேக்கிறே? நானுந்தான் ராத்திரியே புடிச்சு, அலையாத ஏடமெல்லாம் அலையிறேன்—ஏ, அஞ்சலை! போயியைப்பாரு! இதா பல்லு விளக்கிட்டு வந்துடறேன்—பழையத்தை பினஞ்சு வையி! வயிற்றுக்கு கொஞ்சம் போட்டுக் கிட்டாத்தான் வாடி வளைஞ்சு ஒம் பொண்ணை தேட முடியும்!”
சொல்லிக் கொண்டே, தாண்டவன் அதைவிட்டு அகன்றார். நாட்டுப்புறத்தின் அசல் பதிப்புத்தான் தாண்டவனின் உருவம். அவருக்கு கொஞ்சமும் குறைந்தவளல்ல, அஞ்சலை. அவர்கள் இருவருக்கும் பிறந்த பரிமளா—நாகரீகத்தின் சிகரத்திலே நின்று நர்த்தனம் புரியாவிட்டாலும், பட்டிக்காட்டுப் பெண் என்று கூற முடியாத அளவுக்குப் படிப்பறிவு வாய்ந்தவள்.
தந்தை வீட்டைவிட்டு அகன்றதும், பரிமளத்திற்கு ஒரு சிறு துணிச்சல் ஏற்பட்டது. அவர் வருவதற்குள், தாயாரிடம் ஓடிப்போய் அவளை சமாதானம் செய்து விட்டால், பிறகு அம்மாவையும் துணைக்கு வைத்துக்கொண்டு, அப்பாவின் கோபத்தை தணித்து விடலாம் என்ற நம்பிக்கை அவள் உள்ளத்திலே ஒளி விடத்துவங்கியது.
மாட்டுத் தொழுவத்திலிருந்தபடியே, நகர்ந்து, கொல்லைப்பக்கமாக வந்து, முள்வேலியின் படலைத் திறந்து கொண்டு வீட்டுக்குள் நுழைந்து விட்டாள் பரிமளம்.
உள்ளே நுழைந்த பரிமளம், தாய் அஞ்சலை எங்கே யென்று தேடினாள். அஞ்சலை, கன்னத்தில் கைவைத்தபடியே ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தாள். அவள் அருகே போய், ‘அம்மா!’ என்று பரிமளம் கூப்பிட்டாள். அவ்வளவுதான், இருவரும் ஏக காலத்தில் ஒருவரையொருவர் கட்டித் தழுவிக் கொண்டார்கள். பிள்ளைகள் எந்தவிதமான தவறு செய்துவிட்டு வெளியேறியிருந்தாலும்—
அவர்கள் திரும்பி வரும்போது அந்தத் தவறுகள் மறைந்து போய், காணாமற்போன செல்வத்தைக் கண்டேனே என்கிற ஆனந்தமும், பாச உணர்ச்சியும்—தாய் ஒருத்திக்குத் தான் ஏற்படும்—என்பதை அஞ்சலை பரிமளம் தழுவல் காட்சி உணர்த்தியது.
“என் கண்ணு—எங்கம்மா போய்விட்டாய்! பெத்த வயிற்றிலே பால் வார்த்தவளே! என் பத்தரை மாற்றுத் தங்கமே! என் கண்ணாட்டி! ஏண்டி என்னை இப்படி தவிக்க விட்டே!” ஒப்பாரிவைக்கவே ஆரம்பித்து விட்டாள் அஞ்சலை. பரிமளாவும் தாய்ப் பாசத்தின் எல்லை மீறிய உணர்ச்சிக்கு அடிமைப்பட்டு அஞ்சலையின் மடியிலே தலையைக் கவிழ்த்தவாறு அழ ஆரம்பித்து விட்டாள்.
“எங்கே போனம்மா? சொல்லும்மா! உங்க அப்பா—ரௌத்ரகாரமா இருக்காரு! படிக்கவைக்கக் கூடாதுன்னு அப்பவே சொன்னேனே கேட்டியான்னு என்னைப் போட்டு ராத்திரி கொன்னுட்டாரும்மா!”
பரிமளம், தடுமாறித் தடுமாறி தன் காதலன் சொல்லிக் கொடுத்த பொய்க் கதையை அம்மாவிடம் கூற ஆரம்பித்தாள்.
“அம்மா! என்மேல் ஒரு குற்றமும் இல்லம்மா! நான் தூங்கிக்கொண்டிருந்தேனே; அப்போது யாரோ வந்து என்னை எழுப்பினது மாதிரி கனவு கண்டேன்—கண்ணை விழித்துப் பார்த்தேன்—ஆனால் இமைகளைத் திறக்க முடியவில்லை. யாரோ என்னைத் தூக்கிக் கொண்டு போனது மாதிரி இருந்தது; அவ்வளவு தான்; எனக்கு ஒரே மயக்கமாய் இருந்தது—பிறகு எங்கேயோ ஒரு இடத்தில் என்னை உட்காரவைத்து, என்னைச்சுற்றி ஒரு அழகான பெண் நின்றுகொண்டு சிறிது நேரம் சிரித்தாள்—பிறகுபாடினாள்! கல்யாணம்—கல்யாணம்—என்று கத்தினாள்—அதன் பிறகு அவள் ஆட ஆரம்பித்தாள்—அருமையான நடனம்—ஆடிமுடிந்ததும், கல்யாணம்—கல்யாணம் என்று கூச்சலிட்டாள்! அய்யோ, கடலிலே தள்ளுகிறார்களே—என்று பயங்கரமாகக் கூவினாள். திடீரென அவள் மறைந்து விட்டாள். விழித்துப் பார்த்தேன். பொழுது விடியும் வேளை. ஒரு மதகு அடியில் நான் படுத்திருந்தேன், என்னுடைய மேலங்கியை காணோம். அதற்குப் பதிலாக இந்தத் துண்டு கிடந்தது. எதுவுமே புரியாமல் பயந்துபோய், எங்கேயோ அழுது கொண்டு ஓடினேன். நல்லவேளையாக என்னை அறியாமலேயே நம் வீட்டுக்கே வந்து விட்டேன், இது தானம்மா நடந்தது” என்று பரிமளம் கூறினாள்.
அவள் கண்களில் நீர் துளிர்த்தது. ஏமாற்றும் தந்திரத்தைக் கையாளும் பெண்கள் விடுவார்களே; நீலிக்கண்ணீர்—அந்தக் கண்ணீர் அல்ல அது! பொய் சொல்லித் தாயை ஏமாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதே என்பதற்காக வருந்தி உதிர்த்த நீர்த்துளிகள் அவைகள்! தானும் தன் காதல் துரையும், கூடி வாழ்ந்திட முடியாமல், தடுக்கப் போகும் முட்டுக் கட்டைகளை இந்தக் கண்ணீரால் கரைத்துவிட முடியுமா? என்ற கலக்கம் பரிமளாவின் நெஞ்சத்தை ரம்பம் போட்டு அறுத்தது. அப்படி அறுபடும் இருதயத்திலேயிருந்து பீறிடும் ரத்தத் துளிகளே, அவளது அழகுக் கண்களில் எட்டிப் பார்த்து, கன்னத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டு ஓடின என்று கூறலாம்.
துரையும் தானும் காதலர்கள்; இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில் சந்தித்தோம்; நாங்கள் வாழ்வுப் பாதையிலே கை கோர்த்து நடைபோட ஆசைப்படுகிறோம், என்று துணிந்து கூற முடியாத அந்தத் தோகை மயிலாள். பெற்றோரின் கோபத்திலிருந்து தப்புவதற்கு காதலன் கூறிய கற்பனைக் கதையைத் தன் கண்ணீரோடு குழைத்துத் தந்தாள் தாயிடம்!
காட்டாமணி செடிகளின் அசைவிலே, காட்டேரியையும், ஒதிய மரத்துக் கிளையின் மீது பேச்சி, பேய்களையும், கண்டதாக கதை கட்டும் வட்டாரத்திலே வாழ்ந்திடும் அஞ்சலை, தன் மகளின் கதையை அப்படியே நம்பி விட்டாள். நம்பியது மட்டுமல்ல அந்தக் கதைக்குப் பூரணத்துவமும் அளித்தாள்.
“அடி என் கண்ணு! உன்னை அழைச்சிகிட்டுப் போனது யாருன்னு நான் தெரிஞ்சுகிட்டேன்—அந்தப் பத்தரு மகள் தான்!”
“யாரும்மா? எந்தப் பத்தரு மகள்?”
“அதான்—கொல்லர் வீட்டுப் பெண்ணு!—உனக்குத்தான் சொல்லியிருக்கேனே கண்ணு! கல்யாணத்துக்குன்னு போயி, கடல்ல கவிழ்த்து விட்டாங்களே; அந்தப் பெண்ணு தான்!”
“இருக்கும்மா—இருக்கும்! அந்தப் பெண் கழுத்திலே கூட மாலை இருந்தது!”
“அதே தான்! அந்தப் பெண்ணு, கன்னி கழியாமல் செத்ததினாலே, மோகினிப் பிசாசு சுத்திகிட்டு இருக்குதாம்! அது தான் உன்னைத் தூக்கிகிட்டுப் போயி, விளையாடியிருக்கு!”
“ஏம்மா—அந்தக் கொல்லர் வீட்டுப் பெண்ணு, செத்துப் போயி, எத்தனையோ நூறு வருஷம் ஆயிற்று என்கிறார்களே; நான் பார்த்த பெண்ணு இளமை மாறாமல் இருந்ததே!”
“இருக்கும்—இருக்கும். அப்படித்தான் இருக்கும். சாகிற வரையிலேதான் மனுஷாளுக்கு வயசு ஏறி ஏறி, கிழமாப் போவாங்க—செத்து விட்டா, அப்புறம், செத்தப்ப என்ன வயசு இருந்ததோ; அந்த வயசு தான் இருக்கும்.”
பரிமளத்திற்கு சிரிப்பு வேறு வந்து விட்டது. கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டாள். அஞ்சலையால் அதை கவனிக்க முடியவில்லை. மகள் திரும்பி வந்த மகிழ்ச்சியில் இருந்தாள் அவள்.
“எப்படியோ அம்மா! கொல்லர் வீட்டு மோகினிப் பெண்ணு உன்னை எனக்கு திருப்பிக் கொடுத்தது! யார் செஞ்ச புண்யமோ; என் வயிறு குளிர்ந்தது—” என்று அஞ்சலை, தன் மகளின் நெளி பாய்ந்த கூந்தலை வருடினாள். அப்போது, தாண்டவன் “அஞ்சலை” என்று கூப்பிட்டபடியே உள்ளே வந்தார்.
“கேட்டீங்களா நல்ல சேதி! நம்ப கண்ணு வந்துட்டுது—இதோ பாருங்க!” என்று அஞ்சலை சந்தோஷத்தில் கத்தினாள்.
தாண்டவன், தன் மகளை ஏற இறங்கப் பார்த்தார். அப்பா, ஆத்திரத்தில் ஏதோ செய்துவிடப் போகிறார் என்று மட்டும் பரிமளா புரிந்து கொண்டாள்.
“நீங்க ஒண்ணும் மீசையை முறுக்காதிங்க! பரிமளத்தை மோகினி பெண்ணு தூக்கிட்டுப் போயி—” அஞ்சலை வாய் மூடவில்லை. அதற்குள் தாண்டவன் ஆத்திரமாக, அவளை ஓங்கி அறைந்து கீழே தள்ளிவிட்டு, “சீ, பேசாதே நாயே! பெண்ணு வளர்க்கிற லக்ஷணம் நல்லா இருக்கு! மோகினியாம்—ராகினியாம்!” என்று கூச்சல் போட்டார் தாண்டவன்.
“அப்பா!” என்று கூவி, ஏதோ சொல்ல முயன்றாள் பரிமளா!
“பேசாதே! அப்பாவாவது—ஆட்டுக் குட்டியாவது! உன்னை துண்டு துண்டா வெட்டி போடுறேன் இரு—மானங்கெட்ட கழுதை!” என்று கூறியபடி தாவிப் பாய்ந்து, ஒரு பெரிய அரிவாளைக் கையிலே தூக்கிக்கொண்டார் தாண்டவன். பரிமளா, தந்தையின் சுபாவம் அறிந்தவள். ஆகவே, தன் வாழ்வு முடிந்து விட்டது என்பதை புரிந்து கொண்டாள்.
“அப்பா!” என்று அலறினாள்! தாண்டவன் பேசவில்லை; அரிவாளை ஓங்கியபடி மகள் மீது பாய்ந்தார். அதற்குள் “டேய் நில்லு!” என்ற சப்தம் கேட்டு தாண்டவன் திரும்பினார்—பரிமளா மீது விழ இருந்த அரிவாளை ஒரு கை தடுத்தது.
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்