அத்தியாயம் 4 · 5 / 52

அத்தியாயம் 4

Chapter 4

மூல ஸ்கேன் 40 (chapter-4 portion)-49; continues on scan 50

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

4

கிழவர் ஏறிக்கொண்ட தோணி கடலைக் கிழித்தபடி போய்க் கொண்டிருந்தது. பொழுது விடிய இன்னும் சில மணி நேரமே இருந்த காரணத்தால் வாடைக் காற்றின் கொடுமை அதிகமாகவே யிருந்தது. படகில் அடுக்கப்பட்டிருந்த மூட்டைகளின் இடையே அவர் கோழி போல் உடலைச் சுருட்டிக் கொண்டிருந்தார். படகில் இன்னும் சிலரும் இருந்தார்கள். ஒரு பயங்கர முகம் படைத்த கிழவன், ஒரு காலத்தில் கட்டுமஸ்தாக இருந்தது இந்த தேகம், என்று எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தது அவனது உடலமைப்பு. அவன் பேசும்போது கேட்கச் சகிக்கவில்லை. அவ்வளவு கரகரப்பு. தாடிக்காக வளர்ந்திருக்கும் ரோமத்தையும் மீசையோடு இணைத்திருந்தான். பெரிய மீசைகள் இரண்டும் தோள் பட்டையில் உள்ள ஆழமான குழிகளை தொடுவதற்கு முயற்சிப்பது போல தொங்கிக் கொண்டிருந்தன. படகில் அந்தப் பயங்கரக் கிழவனுடைய சப்தம் தான் பெரும் சப்தமாயிருந்தது. மற்றும் சில வாலிபர்கள் தங்கள் வேலைகளில் அக்கரை காட்டிக் கொண்டிருந்தார்கள். படகின் பாயை காற்றுத் திசைக்குஏற்றாற்போல திருப்பிவிட்டு பாதையை சரி செய்து கொள்வதிலே அந்த வாலிபர்கள் அதிக சிரமம் எடுத்துக் கொண்டார்கள்.

“டேய்! இருளப்பா ஜாக்கிரதைடா! ஜாக்கிரதை!—படகைக் கவிழ்த்துடாதே—சோம்பேறித்தனமா நின்னு—கோட்டை விட்டீன்னா—அவ்வளவுதான்........ நம்ப நீஞ்சி வந்துடலாம்னு நினைச்சுக்காதே! உடமைக்காரன் நம்மைக் கொன்று விடுவான்! ஆமாம்........”

பயங்கரக் கிழவன் திருப்பித் திருப்பி அதையே சொல்லி விகாரக் குரலெடுத்து கத்திக் கொண்டிருந்தான். கோட்டான், எருமையின் தொனியைக் கற்றுக்கொண்டு, கூவிப் பார்ப்பதுபோல் இருந்தது அந்தக் கிழவனின் பேச்சு. அவ்வளவு கோரமான தொண்டையை அவன் திறக்காமலாவது இருந்தானா? அதுதான் இல்லை. அந்த வயதில் எவ்வளவு சுறுசுறுப்பாக அந்தப் படகிற்குள்ளே ஓடியாடி வேலை செய்தானோ; அவ்வளவு சுறுசுறுப்பாக பேசிக் கொண்டுமிருந்தான். கடலில் கூட பெரிய அலைகள் அடுத்தடுத்து வர சிறிது நேரமாகும். ஆனால் அவனது உரத்த குரலோ, நிற்காமலே ஒலித்துக் கொண்டிருந்தது.

“ஏய்—இருளப்பா!”

“டேய்! கொம்பேறி தூங்கிடாதே!”

“ஏண்டா—பட்டாணி!—எதுக்குடா நீ வந்தே? மடையா! வேலையிலே கவனமாயிருடா, விதியத்தவனே”

அவனது இந்த அதிகாரக் குரலிலே சிந்தனையை செலுத்தியவாறு பயணம் நடத்திக் கொண்டிருந்தார் கிழவர். அவருடைய பொறுமையையும் சோதிக்கிற அளவுக்கு அவன் கத்திக்கொண்டே யிருந்தான்.

“எப்பா! ஐயப்பா! கொஞ்சம் பேசாமத்தான் இரேன்!” கிழவர் சற்று வெறுப்புடன் கூறினார். உடனே அந்த விகார ரூபக் கிழவன்; ஆம்—ஐயப்பன்—கிழவரைப் பார்த்து ஒரு சிரிப்பை வெளியிட்டான். அந்த சிரிப்பிலே வரட்டுத்தனம் பளிச்சிட்டதே தவிர வேறெந்த அர்த்தமும் காணப்படவில்லை.

மூட்டையடியில் முடங்கிக் கொண்டிருந்த கிழவரை நோக்கி வந்தபடியே ஐயப்பன், “ஓய் வேதாந்தி! என்ன கூச்சல் போடுறே? என்னய்யா சேதி? ஆங்?” என்று குறும்பாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு அசட்டுத்தனமாகக் கத்தினான்.

“வேதாந்தியல்லப்பா என் பெயர்! மாயாண்டி......... என் பெயர்”

“கிழக் குறும்பு மட்டும் உமக்கு விடாதய்யா!” என்று சிரித்தபடி அருகே ஒரு மூட்டையில் அமர்ந்தான் ஐயப்பன்.

“நீ நல்ல வாலிபன் என்பது உனது நினைப்பு போலிருக்கிறது” என மெதுவாகச் சொல்லிக்கொண்டு, கிழவர் அசதியை உதறிக் கொண்டார். சிறிது நிமிர்ந்து உட்கார்ந்தார்.

“இப்போதே இப்படி தவிக்கிறீரே அய்யா! பாக்கி தூரம் எப்படிப் போய்ச் சேருகிறது. செத்துடுவீரா வழியிலேயே?”

ஐயப்பனின் இந்தக் கிண்டலிலே—கிழவனின் சிந்தனை சிறிது நேரம் மிதந்தது.

“செத்து விட்டால் என்ன; நல்லதுதான்! கடலில் செத்தால் மீன்களுக்காவது இந்த உடல் ஆகாரமாகக் கிடைக்கும்—”

“கடல் மீன் எல்லாம்—ஆகாரமில்லாமல் தவிக்குது! இவருதான் உடலைத் தருமம் பண்ணப் போறாராம்! மீனு உன் பிணத்தை எப்படி அய்யா சாப்பிடும்? மீனுகளுக்கு எலும்பு கடிக்கத் தெரியாதே; நாய் மாதிரி” (மாயாண்டி சிரித்துக் கொண்டார்).

“உன் உடம்பிலே ஒட்டிக் கொண்டிருக்கிற சதைத் திமிரிலே இப்படிப் பேசுகிறாய் கிழவா நீ! எலும்பு மனிதனா நான்? இருக்கட்டும்! இருக்கட்டும்! இந்த எலும்பின் மதிப்பு உனக்குத் தெரியாது!”

“யானைத் தந்தமாக்கும்; இறந்தாலும் ஆயிரம் பொன்!”

“ஆயிரமென்ன; இந்த எலும்பு மட்டும் சாகும்போது ஒழுங்காகச் செத்தால் எத்தனையோ லட்சம் பசும்பொன் பெறும்!”

“ஒழுங்காகச் சாவதென்றால் என்னய்யா?” மாயாண்டிக் கிழவர் பேச்சை வேறுபக்கம் திருப்பிவிட முயன்றார்.

“அதாவது ஐயப்பா! கஷ்டப்படாமல் சாகவேண்டும் நிம்மதியாக—என்கிறேன்.”

“உம்—அப்பேற்பட்ட மகான் ரமணரிஷிக்கே புற்று நோய் வந்து கஷ்டப்பட்டு செத்தாரு! நீயும் நானும் எப்படி சாகப் போகிறோமோ? ஆமாம்—மாயாண்டி! அப்படியே கஷ்டப்படாம சாகிறதா வச்சுக்க; அதுக்கும் லட்சக் கணக்கான பசும்பொன்னுக்கும் என்ன சம்பந்தம்?”

“சும்மா—விளையாட்டுக்குச் சொன்னேன். நான் தான் ஒரு பைத்தியக்காரன் என்று அடிக்கடி...”

“ஓய் ஓய்! பெரிய மனுஷா! பொய்! பொய்! ஜாக்கிரதை—உண்மையைச் சொல்லி விடும்—இல்லே—கடல்!—ஞாபகம் வைத்துக் கொள்ளும்—!”

“ஏ ஏ! என்ன செய்வாய்?”

“படகோட கவிழ்த்து விடுவேன் ஆளை! ஆமாம்! கேள்விப்பட்டிருப்பீரே; இந்த எடத்தில் தானே—மருங்கப்பள்ளத்து கொல்லர் குடும்பத்தையே கடல்லே கவிழ்த்தாங்களாம்;”

“அட அதுகூட தெரியுமா உனக்கு! நீ தான் பாத்தியா?”

“நான் எப்படி பார்க்க முடியும்—நான் தசரத மகாராஜனா? அறுபதாயிரம் வருஷம் உயிரோட இருந்து அறுநூறு தலைமுறைக் கதையை நேரிலே பார்க்க? மருங்கப்பள்ளத்து கொல்லர் கதை நடந்தே ஐநூறு வருஷம் இருக்கும் என்று சொல்றாங்க!”

“ஆமாம்—ஆமாம்! அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன்.”

“ஏன்—மாயாண்டி! மருங்கப்பள்ளத்து புதையலைப் பற்றிப் பலரும் பலவிதமாச் சொல்றாங்களே—உண்மை தான் என்ன?”

“உண்மை என்ன இருக்கு? கடல் நீல நிறமா இருக்கிறது உண்மை—அந்த உண்மையை வைத்துக்கொண்டு அதற்குப் பல புனை கதைகளை உண்டுபண்ணுகிறார்கள்! சூரிய சந்திர கிரகணங்கள் உண்டாவது உண்மை! அந்த உண்மையை அடிப்படையாக வைத்து, அதற்குப் பல புராணக் கதைகள் எழுதியிருக்கிறார்கள்! இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலே மலைப்பாறைகள் தொடர்ச்சியாக இருப்பது உண்மை. அந்த உண்மையை மூலமாக வைத்து, வானரங்கள் கட்டிய பாலமென்று கதை கட்டுகிறார்கள்! காக்கை ஒரு கண்ணால் பார்ப்பது உண்மை! அந்த உண்மை யென்னும் திரையிலே கற்பனை வர்ணத்தைக் குழைத்து, தெய்வீக தூரிகை கொண்டு—இந்திரன்மகன் சயந்தன் காக்கை உருவமெடுத்து, சீதையின் அங்கத்தை சுவைத்துப் பார்த்தான்; அதனால் கோபங் கொண்ட ராமர், அருகம்புல்லை அம்பாக்கி—சயந்தனின் கண்ணைக் குத்தினார்—அது முதல் காக்கை குலத்திற்கே ஒரு கண் இல்லை என்று புனைந்துரை ஓவியம் தீட்டி விட்டார்கள்!

அணிலின் முதுகிலே வெளுத்துப்போன வானவில்லைப்போல கோடுகள் இருக்கின்றன என்பது உண்மை!

அந்த உண்மைக்கு உரைக்க வந்த விளக்கம் தான்; ராமர் அணிலைத் தடவிக் கொடுத்தபோது விழுந்த விரலின் அடையாளங்கள் என்ற கட்டுக்கதை! அனுமார்களோடு சேர்ந்து கொண்டு அணிலும் பாலம் கட்டியதாம்—அதனால் அதை ராமர் பாராட்டினாராம்! இப்படியெல்லாம்; கண்ணுக்குத் தெரிந்த உண்மைகளை வைத்துக் கொண்டும்—கண்ணுக்குத் தெரியாத கற்பனைகளை வைத்துக் கொண்டும்—யூகங்களை அடிப்படையாக அமைத்துக் கொண்டும் எழுந்த கதைகள் ஏராளம்! ஏராளம்! அதிலும் கேட்பதற்கு உன்னைப்போல ஏமாளிகள் இருந்தால் பிறகு சொல்லவா வேண்டும்—ஏமாற்றுகிறவனுக்கு வேட்டை தான்!”

“அப்படின்னா—கதை சொல்றவன் எல்லாம்—ஏமாத்துறவனா?”

“எல்லோரும் அல்ல; கதைக்காக கதை சொல்லுகிறவர்களும் இருக்கிறார்கள். ஏமாற்றுவதற்காகவே கதை சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்—ஆனால், மருங்கப்பள்ளத்துக் கதையிருக்கிறதே; அதை நம்பி பலர் ஏமாந்திருக்கலாமே தவிர, ஏமாற்ற வேண்டுமென்பதற்காக யாரும் இயற்றிய கதையாக இருக்க முடியாது!—ஆழ்ந்துபார்க்கப் போனால், அப்படி ஒரு கதை நடந்திருக்கலாம் என்றும் நம்ப இடமிருக்கிறது!”

“மாயாண்டி!... அந்தக் கதையைச் சொல்லுமே இப்போது—நானும் பலரிடம் கேட்டிருக்கேன் அந்தக் கதையை—உமது வாயாலும் கேட்கிறேன்.”

“என் வாயால் கேட்க முடியாது! உன் காதாலேயே கேளப்பா!”

ஐயப்பன் அசட்டுத்தனமாக சிரித்துவிட்டு பக்கத்திலிருந்த மூட்டையை அவிழ்த்து அதிலிருந்து ஒரு வெங்காயத்தை எடுத்துக் கடித்துக் கொண்டான்.

“எல்லா மூட்டைகளும், வெங்காயம் தானா?” என்று கேட்டார் கிழவர்.

“ஆமாம்—கதையைச் சொல்லும் அய்யா!” என்று சலித்துக் கொண்டான்—ஐயப்பன்.

“சொல்கிறேன்—உம்!........ வெங்காயத்துக்கு பதில் என்ன கொண்டுவரப் போகிறீர்கள்?”

“வெங்காயத்து பண்டமாத்து—தேங்காய் எண்ணை கொண்டு வருவோம்! ஓய், கிழவா! பேச்சை மாத்தாமல் கதையைச் சொல்லும்!”

“சொல்லுகிறேன்” என்று கனைத்துக் கொண்டார் மாயாண்டி!

“டேய்! பசங்களா! எல்லாரும் ஒழுங்கா கவனிச்சுப் போங்க—கவிழ்த்து விட்டுடாதிங்க!” என்று ஆட்களை ஒருமுறை அதட்டிவிட்டு, ஐயப்பன் கதை கேட்கத் தயாரானான். கிழவரும் ஆரம்பித்தார்.

நானூறு ஐநூறு வருடங்களுக்கு முன்பு, மருங்கப்பள்ளம் பிரதேசம் எல்லாம் காட்டுப் பகுதியாகவே இருக்குமாம். ஒரு ஆட்டிடையர், காட்டுப் பகுதியிலே தன் ஆடுகளை ஒட்டிக்கொண்டு சென்று வழக்கமாக தழை வெட்டிப் போடுவாராம். ஒருநாள் மரத்திலேறி ஆடுகளுக்கு தழை வெட்டிப் போடும்போது அவரது அரிவாள் கூர் மழுங்கியிருந்ததை உணர்ந்தார். கிளைகளையோ, தழைகளையோ சுலபமாக வெட்ட முடியாதபடி மழுங்கியிருந்ததால், அந்த அரிவாளை நன்கு கூராக்கிக் கொள்வதற்காக, மரத்தடியில் கிடந்த ஒரு கல்லில் தீட்டினார். தீட்டத் தீட்ட அரிவாள், கூர்மை பெறுவதற்குப் பதிலாக மழுங்கிக் கொண்டே வந்ததாம். இடையருக்கு ஒன்றும் புரியவில்லை. அரிவாளை எடுத்துக்கொண்டு அந்த ஊரிலே உள்ள கொல்லர் வீட்டுக்குப் போனார். “தீட்டத் தீட்ட கூர் மழுங்குகிறது இந்த அரிவாள்!” என்று சங்கடப்பட்டுக் கொண்டார்.

“ஆமாம்—சிலருக்கு படிக்கப் படிக்க புத்தி மழுங்குவதுண்டு” என்று அந்தக் கொல்லர் பதில் சொன்னாரோ என்னமோ தெரியாது. அரிவாளை வாங்கி, உலையில் வைத்து பழுக்கக் காய்ச்ச ஆரம்பித்தார். காய்ச்சும் பொழுது, அரிவாளின் ஓரமெல்லாம் தங்க நிறமாக காட்சியளிப்பதைக் கண்டார். அரிவாளில் தங்கம் ஏறியிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார், அந்த யூகமுள்ள கொல்லர்! ஆகவே தந்திரமாக இடையரை மறுநாள் வரும்படி சொல்லி அனுப்பி விட்டார். இடையர் போனதும், அரிவாளை பக்குவமாகக் காய்ச்சிடவே அது முழுவதும் தங்கமாக மாறிவிட்டது. கொல்லருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அதை எடுத்து ஒளித்து வைத்துவிட்டு, வேறு ஒரு அரிவாள் அதேபோல செய்து, மறுநாள் வந்த இடையரிடம் கொடுத்தார். இடையரும் அதை சந்தோஷமாக வாங்கிக் கொண்டார். சந்தோஷத்தில் இருக்கும் இடையரிடம், கொல்லர் மெதுவாகப் பேச்சை ஆரம்பித்து, நேற்றைய தினம் இடையர் எந்தக் கல்லில் அரிவாளைத் தீட்டினார் என்பதைக் கேட்டார்.

இடையரும், கொல்லருக்கு அந்தக் கல்லைக் காட்டுவதாக அழைத்துப் போனார். கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தேடி அந்தக் கல்லையும் அவருக்குக் காட்டினார். கொல்லர் அந்தக் கல்லை, அலட்சியமாகப் பார்த்துவிட்டு வீடு திரும்பினார். திரும்பியவருக்கு வீட்டிலே இருப்பு கொள்ளவில்லை. அன்றிரவே அந்தக் காட்டுப் பகுதிக்குள் நுழைந்து இடையர் காட்டிய அந்தக் கல்லை யாருக்கும் தெரியாமல் தன் வீட்டுக்குள்ளே கொண்டு வந்து சேர்த்தார்.

மறுநாள் காலையிலிருந்து கொல்லருக்கு இரும்பு பொறுக்கும் வேலைதான்! பொறுக்கிய இரும்புகளை அந்தக் கல்லிலே வைத்துத் தேய்ப்பதும்—பிறகு அவைகளைப் பழுக்கக் காய்ச்சிப் பசும்பொன் ஆக்குவதும் அவரது அன்றாடத் தொழிலாகி விட்டது. இப்படியாக லட்சக்கணக்கிலே பொன்னைக் குவிக்க ஆரம்பித்தார். கொல்லருக்குப் பொன் குவியும் ரகசியம் யாருக்கும் தெரியவில்லை. பொன் செய்யும் கொல்லருக்கு, அழகிய பெண்ணொன்றும் உண்டு. ஐஸ்வரியச் சீமானாக கொல்லர் மாறியதும் அவர், தனது மகளை காரை வேளாளர் என்னும் உயர் ஜாதியில் திருமணம் செய்து கொடுத்து அந்த வகுப்போடு சம்பந்தம் வைத்துக்கொள்ள விரும்பினார். காரை வேளாளர்களுக்கு, கொல்லரிடமிருந்து பொன்னை வசப்படுத்த வேண்டுமென்பதில் ஆசைதான். ஆனால், அதற்காக அவரது பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனையை வெறுத்தார்கள். வெறுப்பு விபரீத எண்ணத்திற்கு வித்திடலாயிற்று. கொல்லரை எப்படிப்யாவது சதி செய்து கொன்றுவிட்டு, அவரிடமுள்ள பொன் குவியல்களையும் கைப்பற்றிவிட வேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

உயர்ந்த ஜாதிக்காரர்களாகிய தம்மிடம், சாதாரணமான ஒரு கொல்லர்—சம்பந்தம் வைத்துக் கொள்ள எண்ணியது மகா பாபம்—பெரிய குறும்புத்தனம்—என்றெல்லாம் அந்த வேளாளர் மரபினர் ஆத்திரப்பட்டு துடித்தனர். எப்படியோ சதி உருவாகி விட்டது. கொல்லரிடம் சென்று, அவரது பெண்ணை தங்கள் மணமகனுக்குத் திருமணம் செய்ய சம்மதமென்றும், ஆனால்—தங்கள் ஜாதி வழக்கப்படி—கடலிலே தான் திருமணம் நடக்க வேண்டுமென்றும் கூறினார்கள். சதியை உணராத அந்தக் கொல்லரும் அதற்கு சம்மதித்தார். இரண்டு மூன்று படகுகளில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் புறப்பட்டனர். ஒரு படகில் கொல்லர்—அவர் பெற்ற பைங்கொடி—அவரது மகன்—இன்னும் சில உறவினர்கள்; மற்றொரு படகில், மாப்பிள்ளை, அவரது வீட்டார்; இன்னொரு படகில் சதித் திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்கள். இப்படி மூன்று படகுகளும், கடலிலே பிரயாணம் நடத்துகின்றன. ஜாதி ஆசாரப்படி கடலிலே திருமணம் நடக்கப் போகிறது என எண்ணியிருக்கிறார்கள் பெண் வீட்டார்கள். படகுகள் மூன்றும் நின்றன. வேளாளர் வீட்டார் ஒருவர் உரத்த குரலில் சொன்னார்—

“உம்! கல்யாணத்தை ஆரம்பிக்கலாம்!” என்று! அவர் சொல்லி வாய் மூடுவதற்குள், மூன்றாவது படகில் இருந்தவர்கள் பெண் வீட்டாரின் படகில் பாய்ந்து குதித்து அந்தப் படகை அப்படியே கடலில் கவிழ்த்து விட்டார்கள்.

அந்தோ பரிதாபம்! எதிர்காலத்தை எண்ணி ஆனந்தப் பட்டிருந்த அந்த அழகியும், அவள் அப்பனும்,

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்