அத்தியாயம் 3 · 4 / 52
அத்தியாயம் 3
Chapter 3
மூல ஸ்கேன் 30 (chapter-3 portion)-40 (chapter-3 portion)
கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.
3
அடித்தளத்திலிருந்து வந்த அபயக்குரல் பரிமளத்தினுடையது என்பதை உணர்ந்த துரை மிகவும் நடுங்கிப் போனான். எதைப் பற்றியும் கவலைப்படாமல் தன் மீது கொண்ட தணியாத காதலால் பரிமளம் அந்த இரவில் தன்னை சந்தித்து—இவ்வளவு இடையூறுக்கும் ஆளாகி விட்டாளே; அதற்கு நாமும் காரணமாகி விட்டோமே—என்ற கவலையும் ஒருக்கணம் மின்னி மறைந்தது துரையின் நெஞ்சத்தில்! ஆனாலும் சமாளித்துக் கொண்டு, கீழ் நோக்கி இறங்கினான்.
ஒரு உப்பரிகையின் படிகளை அவன் கடப்பதற்குள்ளாகவே இன்னொரு சப்தம் “அத்தான்” என்று அவன் எதிரே கேட்டது. அவள் அவனிடம் ஓடிவந்து கொண்டிருந்தாள்.
“என்ன பரிமளம்?” என்று நடுங்கும் தொனியில் கேட்டான் துரை.
“அந்த முரடர்களைப் போலவே யிருக்கிறது—பின் தொடருகிறார்கள்” என்று அவள் சொல்லி வாய் மூடுவதற்குள் உப்பரிகையின் மேல் பகுதியிலிருந்து துரையின் தலையில் ஒரு அடி பலமாக விழுந்தது. ஆம்; அந்தக் கிழவர்தான் தன் பலங்கொண்ட மட்டும் ஒரு கட்டையால் துரையைத் தாக்கி விட்டார். திடீரென ஏற்பட்ட அதிர்ச்சியில் துரை மூர்ச்சை யடைந்தான் துரையின் மீது பரிமளம் பாய்ந்து வாரி அணைத்துக் கொண்டாள்.
“அத்தான்” என்று இப்போது அவள் கூறியபோது அடடா! அந்த முறைச் சொல்லிலே தான் எவ்வளவு ஜீவன் இருந்தது. அழகான பெண்களின் சோக மயமான முகம் ஒரு புதிய பொலிவோடு விளங்கும். அந்தப் பொலிவுப் பதுமையாள் சிந்தும் சோகச் சொல்லிலே கூட ஒரு தனித்த சுவை யிருக்கத்தான் செய்கிறது. பரிமளம், “அத்தான்” என்று அவனைத்தழுவிக் கொண்டு, அவனது முகத்தை தனது காந்தள் விரல்களால் வருடிய போது காதல் வீணையின் சோகஸ்தாயியை கலையரசி ஒருத்தி எழுப்புவது போலவேயிருந்தது! பாச மலரின் இதழ்கள் எவ்வளவு மென்மையானவை. அந்த மலர் சூடான கண்ணீர்த் துளிகளால் நனையும் போது எவ்வளவு குளிர்ச்சி பெறுகிறது, அத்தகைய ஒரு அன்பு மலராகத் தான் காட்சி தந்தாள் பரிமளம். அந்தக் காட்சி அந்த இடத்திலே அதிக நேரம் அனுமதிக்கப்படவில்லை. நின்று கொண்டிருந்த கிழவர் பரிமளத்தின் கையைப் பிடித்துப் பர பரவென இழுத்து, அவள் திமிறி ஓட முயன்றும்—விடாமல் அவளது கண்களை இறுகக் கட்டிவிட்டார், தன் மேலிருந்த துண்டு வேட்டியினால்! கண்ணைக் கட்டியது போக மிச்சமிருந்த துண்டைக் கிழித்துக் கொண்டார்.
பரிமளம், “அய்யோ! எங்களை விட்டுவிடு! பாவி! பாவி!” என்று கத்தினாள். மிச்சத் துணியால் கிழவர் பரிமளத்தின் கைகளையும் பின்புறமாக வைத்து கட்டி விட்டார். பரிமளம் அலறினாள், துடித்தாள், துவண்டாள். “சப்தம் செய்தால் செத்துவிடுவாய்!” என்று கிழவர் பயங்கரமாக அதட்டினார். சற்று முன்பு, சாந்த சொரூபியாகத் தெரிந்த அந்தக் கிழவரா இவர்? உலகத்தைப் படித்தவர் போல ஆகாயத்தை நோக்கிப் பிரார்த்தனை புரிந்த அந்தக் கிழவர் தானா இவர்? பரிமளத்திற்கு எதுவுமே புரியவில்லை, வருவது வரட்டும் என்று எண்ணிக் கொண்டாள். துரையைப் பார்க்க முடியாமல் தன் கண்கள் மூடப்பட்டு விட்டதை நினைத்து அழுதாள். அந்த அழுகை, அவள் கண்ணை மூடியிருக்கும் துணியை நனைக்கத்தான் பயன்பட்டது போலும்—கிழவரின் இருதயத்தை நனைத்திடப் பயன்படவில்லை.
“அத்தான்! அத்தான்!” என்று மட்டும் மெதுவாக முணகினாள்.
கண்ணைத் திறக்க முடியாமல் மெய் மறந்து கிடக்கும் காதலன், அவனைப் பார்க்க முடியாமல் கட்டுண்டு தவிக்கும் காதலி அந்த இருவரிடையே கிழவனார். அவருடைய முகத்திலே நிலவொளி லேசாகப் படர்ந்திருந்தது. சுருக்கம் விழுந்த அவர் கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டு திரண்டு நின்றன.
சாந்தமும்—அமைதியும்—அடக்கமும்—கலந்த வார்த்தைகளை ஆகாயத்திலே மேயும் மேகக் குழுவை நோக்கி அனுப்பியவர்—திடீரென பயங்கர மனிதனாக மாறி—அந்த மாற்றமும்—உடனே அகன்று அவரால் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் அந்த இருவரிடையே நின்றுகொண்டு கண்ணீர் விடுகிறார்! ஏன்? சுருங்கிய கன்னத்திலே உள்ள கோடுகளில் பாதரசம் போல உருண்டோடும் நீர்த் துளிகள் அவரது தும்பைப்பூ தாடியிலே படியும் போது காலைத்தளிரில் தூங்குகின்ற பனித் துளியை ஞாபகப் படுத்துகின்றன. நீண்ட மூக்கும், ஆழத்திலே இருக்கும் விழிகளும், அமைதியான அசைவும் படைத்த அந்தக் கிழவர், திடீரென கோர சுபாவம் கொள்வானேன்—அடுத்த விநாடியே அதே இடத்தில் நின்றுகொண்டு அழுவானேன்—இந்தக் கேள்விகளுக்குப் பதில் அவருக்கே தெரியவில்லை போலும். அதைத்தான் அவருடைய முகம் விளக்குகிறது. வழியும் கண்ணீரைத் துடைக்காமலே அவர்களை கிழவர் நோக்கினார்.
அங்கவஸ்திரத்தை எடுத்து பரிமளத்தின் கைகளையும், கண்ணையும் கட்டிவிட்டாராகையால் அவருடைய மேலுடம்பை குளிர் காற்று நேரடியாகத் தாக்கியது. எண்ணி விடக்கூடிய அளவுக்கு எலும்புகள் விலாப் புறங்களிலே! இடுப்பில் கட்டியிருந்த வேட்டியின் மேல் முனையிலே ஏதோ ஒரு முடிச்சு இருந்தது. அதையும் இடுப்பில் பத்திரமாக சொருகிக் கொண்டிருந்தார். ஒரு அழுத்தமான தாள் உறை (கவர்) யும் இடுப்பில் வேட்டிக்கு வெளியே சற்று தலை நீட்டிக் கொண்டிருந்தது. கிழவர் அவைகளை நன்றாக சரி செய்து கொண்டார். கட்டுண்டு கிடக்கும் பரிமளத்தையும் மயக்கமுற்றுக் கிடக்கும் துரையையும் குனிந்து பார்த்தார். அப்படிக் குனியும் போது அவரது கண்களிலேயிருந்து சொட்டிய கண்ணீர், பரிமளத்தின் காலிலே விழுந்தது. பரிமளம் துடிப்போடு துடிப்பாக காலை நகர்த்திக் கொண்டாள்.
“யார்?”
“தன் காலிலே ஏது நீர்த் துளி?”
“எங்கிருந்து விழுந்தது?”
இந்தக் கேள்விகளையெல்லாம் உள்ளடக்கிய ஒரே ஒரு சொல்லை—ஆம்—அத்தான் என்ற சொல்லை உதிர்த்தாள். பதில் இல்லை. கிழக் குரல் விம்மி யெழுந்தது.
“எந்தக் குற்றமும் எனக்குச் செய்யாத செல்வங்களே! மழலைகளே! பழம் பேசுகிறது கேளுங்கள்!
பரிதாபத்திற்குரிய கிழம் கூச்சலிடுகிறது; செவியைத் திருப்புங்கள்!
கண் திறக்க முடியாமல் இருக்கின்ற கண்மணி! உன் அன்பன் மயக்கம் தெளிந்ததும் அவனிடமும் நான் சொன்னதைச் சொல்.... என்னுடைய சாவுக் கண்ணீர் நன்மைத் தருவை செழித்து வளரச் செய்யப் பயன்படாதா என்று எத்தனையோ முறை ஏங்கியிருக்கிறேன். ஆனால்; இதோ என் வாழ்வின் கண்ணீர் உங்களை வாட்டி வதைத்து விட்டதை நான் உணருகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். உங்கள் அப்பனை மன்னிப்பது போல என்னை மன்னித்து விடுங்கள்!
நன்மை யொன்றை—யாரும் செய்ய முடியாத விதத்திலே செய்ய வேண்டும் என்று எத்தனையோ நாளாய்த் தவித்து நிற்கிறேன். சுயநலமும் வஞ்சகமும்—சூதும் பொறாமையும் வேலிகளாய் அமைந்துவிட்ட மனிதனின் வாழ்க்கைத் தோட்டத்திலே—நன்மை மலர்களே மலரக் கூடாதாமே! அப்படி ஒரு கடும் சட்டம் கடவுள் எனப்படுவோன் விதித்து விட்டானாமே! ஆகவே, நான் செய்ய வேண்டுமென்று எண்ணியிருக்கிற நன்மையை சுருட்டிக் கொண்டு, கடல் கடந்து போகிறேன். அது என்ன நன்மை என்று என்னைக் கேட்டு விடாதீர்கள். நீங்கள் யாரோ எவரோ—நான் எப்படி உங்களிடம் தைரியமாகச் சொல்ல முடியும். நீங்கள் என்னைப் பார்ப்பதே கூடாது—அது மிகப் பயங்கரமானது என நினைக்கிறேன் நான்!
ஆகவே நான் அந்த நன்மையைப் பற்றிய உண்மையைச் சொல்ல மாட்டேன். அந்தஉண்மை அழிந்தாலும் கவலையில்லை—நான் வீணாக அழிக்கப்பட்டு, அந்த உண்மை, உலுத்தர்கள் கையிலே சிக்கி விட நான் அனுமதிக்க மாட்டேன், அதற்குத்தான் இந்த நாட்டை விட்டே வேறு நாடு ஓடுகிறேன். யாராவது என் மனம்போல ஒரு மனிதன் கிடைப்பானேயானால்—அவனிடம் அந்த உண்மையை ஒப்படைத்துவிட்டு, சாவை கட்டிப் பிடித்துக் கொள்வேன். என் சாவுக் கண்ணீரை நன்மையின் மீது அபிஷேகிப்பேன்! நான் எடுத்துக் கொண்ட பெரிய முயற்சியில் நீங்கள் எப்படியோ குறுக்கே வந்து விட்டீர்கள். வேண்டுமென்று வரவில்லை—அது தெரிகிறது! ஆனாலும் என் தற்காப்புக்காக உங்கள் எதிரியாகிவிட்டேன் நான் சென்று வருகிறேன், என்னை மன்னித்து விடுங்கள்! தயவுசெய்து இங்கு நடந்த இந்த சம்பவத்தை மறந்து விடுங்கள். யாரோ ஒரு கிழப்பயல்—பொக்கை வாய் திறந்து பொய்யும் புளுகுமாக உளறினான் என்று நினைத்துக்கொண்டு—உங்கள் காதல் காரியத்தில் ஈடுபடுங்கள்! அதோ—அந்த வாலிபன் அழகானவன் தான்—நல்லவனாயுமிருக்கிறான். ஆனால் அவன் காதல் வலையில் சிக்கியவனாயிற்றே—காதலர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காதே! அவர்களை நம்பி நான் எப்படி இந்தப் பெரிய காரியத்தை ஒப்படைப்பது! கூடாது கூடாது! நான் வருகிறேன்—வாழப்பிறந்த காதலர்களே! உங்களுக்காகத்தான் சரபோஜி மகராஜன் இந்த சல்லாப மண்டபத்தை கட்டிவைத்திருக்கிறான் என்று எண்ணிக்கொண்டு கேளிக்கை நடத்துங்கள்! அவன் ஏன் இதைக் கட்டினான் என்று உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியமென்ன இருக்கிறது.”
இவர் இப்படி தன் மனம் போன போக்கில் ஏதேதோ பேசிக்கொண்டிருக்கும் போது பேச்சின்பாதியிலேயே துரை விழித்துக் கொண்டான்; என்றாலும், முழுவதையும் கேட்டுவிட வேண்டுமென்ற ஆவலில் மயக்கமுற்றவன் போலவே கிடந்தான். ஆனால்; கிழவர்—“சரபோஜி, இதை ஏன் கட்டினான் தெரியுமா?” என்று ஆரம்பித்த போது, “ஏன்?” என்று கேட்டுவிட இதழ் அசைத்து விட்டான். உடனே அந்த வார்த்தையை அடக்கிக்கொண்டு, சமாளிப்பதற்காக சிறிது முணகினான். அவ்வளவு தான்; கிழவர் இனி அங்கு நிற்கக்கூடாது என்ற முடிவுடன், அவசர அவசரமாக, கீழே இறங்கினார். அவர் கீழே இறங்கி விட்டார் என்பதைத் தெரிந்து கொண்ட துரை, உடனே எழுந்து, தலையை சரி செய்து கொண்டு, பரிமளத்தின் கட்டுக்களை அவிழ்க்க ஆரம்பித்தான். அதுவரையில் அதிசயத்தோடு கிழவரின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டிருந்த பரிமளமும், தன் அத்தானின் கரம்பட்டு புத்துணர்ச்சி பெற்றாள். இறந்து போய் மீண்டும் புது ஜென்மம் என்ற கற்பனை உண்மையாகவே நிகழ்வது போல இருந்தது அவர்களுக்கு! பரிமளத்தின் கட்டப்பட்ட கரங்களை அவிழ்த்து விட்டு, அந்தக் கரத்தை எடுத்து முத்தம் கொடுத்தான் துரை. சுவைத்தளித்த அந்த முத்தத்தை பரிமள சுந்தரியும் தேனில் துவைத்தெடுத்த பலாச்சுளை எனக் கருதி பெற்றுக் கொண்டாள். கட்டுண்டு கிடந்த அவள் கண்களுக்கெல்லாம் முத்தம் கிடைத்தது. பரிமளம் கண்ணைக் கட்டிய அந்தக் கிழவரை வாழ்த்தினாள்.
முத்தத்திலேயே முடிந்து விடவில்லை—அந்த நேரம், துரை துள்ளி எழுந்து மனோராவின் பலகணி வழியாகக் கீழே பார்த்தான். பரிமளமும் பார்த்தாள். கிழவர் கடலோரத்தில் சென்று நின்றார். முதலிலே மனோராவை நோக்கி வந்த மனிதர்கள் அவரிடம் வந்து சுற்றி நின்றார்கள்.
“இவர்கள் நம்மைத் துரத்திய முரடர்கள் அல்ல!” என்றான் பெருமூச்சுடன் துரை!
“கிழவர் பேசியதை யெல்லாம் கேட்டீர்களா அத்தான்?”
“பாதிக்குமேல் கேட்டேன். புரிந்தும்—புரியாமலும் கேட்டேன்.”
“முழுதும் கேட்ட எனக்கும் அப்படித்தான்!”
“இரு இரு! அதை கவனிப்போம்.”
கடலோரத்தில் நின்ற கிழவர், வந்த ஆட்களுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். கரையிலிருந்து சுமார் இரண்டு மைல் தூரத்தில் ஒரு சிறு வெளிச்சம் தோன்றி மறைந்தது—நெருப்புக்குச்சியை கிழித்து யாரோ மேலே எறிந்தது போலிருந்தது அந்த வெளிச்சம்! ஆமாம், அப்படித்தான்!
கரையில் நின்றவர்களில் ஒருவனும் அதேபோல நெருப்புக்குச்சியைக் கிழித்துத்தான் மேலே எறிந்தான்.
“என்ன இது?” என்றாள் பரிமளம்.
“இதுதான் கள்ளத்தோணி என்பது! நெருப்புக் குச்சி வெளிச்ச அடையாளத்தில், அந்தத் தோணி கரைக்கு வரும் பாரேன்!” என்றான் துரை.
இருவரும், தோணியைப் பார்த்தபடியே நின்றார்கள். கிழவர் அங்குமிங்கும் உலவிக் கொண்டேயிருந்தார்.
“பொழுது விடியும் நேரமும் நெருங்கி விட்டது போலிருக்கிறதே அத்தான்; நான் எப்படி வீட்டுக்குப் போவது?”
“கொஞ்சம் பொறு! இதைப் பார்ப்போம், இப்போது நாம் கீழே இறங்கினால், கடலிலேயே தூக்கிப் போட்டு விடுவான் அந்தக் கிழவன்!”
பரிமளம் துரையின் தோளில் முகத்தை அழுத்திய படியே கரையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
தோணி கரைக்கு அருகே வந்து நின்றது. ஆட்கள் எல்லாம் தோணியிடம் ஓடினார்கள். கிழவர் நெருப்புக் குச்சியைக் கிழித்து, தன் இடுப்பில் உள்ள தாளை ஒரு முறை எடுத்துப் படித்துக் கொண்டார். தாள் உறையிலே முகப்பில்—புதையல்—என்ற தேய்ந்த எழுத்துக்கள் தெரிந்தன. தீக்குச்சியை கீழே எறிந்துவிட்டு, உறையை நன்றாகச் சொருகிக் கொண்டு, வேட்டியின் முனையிலிருந்த சிறு முடிச்சையும் சரி பார்த்துக்கொண்டு, அவர் தோணியிடம் போனார். படகோட்டி, அவரை மெதுவாகத் தோணியில் ஏற்றி விட்டான், ஏறிக்கொண்டார். மற்ற ஆட்கள் ஏதோ பல மூட்டைகளை படகில் அவசர அவசரமாக ஏற்றினார்கள். படகிலிருந்தும் சில மூட்டைகள் துரிதமாக கரைக்கு இறக்கப்பட்டன. பின்னர் படகு நகர்ந்தது—மீண்டும் கடலை நோக்கி பயணம் ஆரம்பமாயிற்று அந்தத் தோணிக்கு!
பரிமளமும், துரையும் அந்த காட்சியைப் பார்த்துக் கொண்டே நின்றார்கள்.
சாது போலத் தோன்றினார். பின்னர் மிரண்டார். அதன் பின் நன்மை செய்யப் பூண்ட கோலம் இது என்றார். கடைசியில் கள்ளத் தோணியிலும் ஏறி விட்டார். யார் இவர்?
இந்த நினைவுகள் காதலரை சிறிது நேரம் மௌனமாக்கியிருந்தன. படகு சிறிது தூரம் நகர்ந்து இருட்டில் மறைந்துகொள்ளத் துவங்கியதும், பரிமளம் மறுபடியும் வீட்டுக்குப் போகும் பிரச்சினையில் ஈடுபட்டாள்.
“நல்ல இரவு இது. கோயிலுக்குச் சென்றோம். அங்கே கொம்பேறி மூக்கன் பாம்பு போல ஒருவன் வந்தான். கோபுரத்துக்கு வந்தோம்—விசித்திர மனிதனைக் கண்டோம். நினைக்காத இடையூறுகள் அல்லவா—யாரும்எதிர்பாராமலே வருகின்றன!” என்று துரை பரிமளத்தின் விரல்களைத் தன் விரல்களால் கோர்த்துக்கொண்டு, கொஞ்சினான்.
“வாருங்களத்தான் போவோம்!” என்று அவசரத்தைக் காட்டினாள் அவள்.
“நான் இப்போது வரக்கூடாது பரிமளா! நாம் இருவரும் சென்றால்—அந்தக் கோயிலடி ஆள் இருக்கிறானே அவன் நம்மை அடையாளம் கண்டுபிடித்து விடுவான்; அதனால் நீ மட்டும் புறப்படு! பயப்படாமல் புறப்படு—பொழுதும் விடியப் போகிறது!”
“அது தானே பயமாயிருக்கிறது—பொழுது விடிந்து விட்டால் நான் எப்படி ஊருக்குள் நுழைவது? வீட்டில் என்ன நடக்குமோ?”
“அதெல்லாம் வீட்டில் ஒன்றும் நடக்காது பரிமளம்! ஏதாவது பெற்றோர்கள் சீறினால்—நான் சொல்லிக் கொடுத்த அந்தக் கதையை முழு சாமர்த்தியத்தோடு சொல்லிவிடு! அதையும் மிஞ்சி, அப்பா அம்மா—ஆத்திரத்தைக் கொட்டினால், விஷயம் வெளிச்சமாகி விட்டால்—உடனே நீ ஆரம்பித்து விடு! காதலனைத்தேடி நான் சென்றதிலே என்னப்பா தப்பு? இதோ மாட்டியிருக்கிறீர்களே—வள்ளி மணவாளன் படம்—அந்த வள்ளி தினைப் புனத்தில் தேடிக்கொண்ட காதலன் தானே அந்த முருகன்? இப்படிக் கேள் அவர்களிடம். சங்க இலக்கியத்திலே இருக்கிற காதல் நிகழ்ச்சிகளை யெல்லாம் உதாரணம் காட்ட ஆரம்பித்து விடாதே! சங்க இலக்கியம் என்றால் உன் பெற்றோர்கள்—ஏதோ ஒரு ஊர் என்று எண்ணிக் கொண்டிருப்பார்கள்.”
“சரி! சரி! வருவது வரட்டும்—நான் புறப்படுகிறேன்—எப்போது சந்திப்பது?”
“சந்திப்போம் கண்ணே—கோயிலடியாயினும்—கோபுரமேறியும்—அந்த இருவர் கண்ணிலும் படாத இடத்திலே அல்லவா இனி சந்திக்க வேண்டும்!”
“சொல்லுங்கள். நேரமாகிறது!”
“அதே கோயிலில்—அதே நேரத்தில்—வரும் வெள்ளிக்கிழமை சந்திப்போம்—வா போவோம்!”
---
கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்