அத்தியாயம் 2 · 3 / 52

அத்தியாயம் 2

Chapter 2

மூல ஸ்கேன் 22 (chapter-2 portion)-30 (chapter-2 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

2

பயப்படும் பரிமளத்தை அவன் அணைத்துக் கொண்டான். அணா நாணயத்தின் விளிம்பு போல நெளிந்து கிடக்கும் அவள் அழகுக் கூந்தலைத் தடவிக் கொடுத்தபடியே வரப்பின் மறைவிலே தன்னை மறைத்துக் கொண்டான். அவளையும் யாரும் பார்த்து விடாதபடி தன்னோடு ஒளித்துக் கொண்டான். அங்குள்ள சிறிய மதகு ஒன்றை நோக்கி இருவரும் உடலால் ஊர்ந்து சென்றார்கள். அவள் நெஞ்சு பட பட வென அடித்துக் கொண்டது. அவன் கை அவள் மீது படும் போது கூட அவளுக்குத் தூக்கி வாரிப் போட்டது. ஒரு வேளை அவர்கள் தான் தன்னைப் பிடித்து விட்டார்களோ என்று பயந்து துடித்தாள்.

மெதுவாக மதகின் உள்ளே நுழைந்து கொண்டார்கள். இருபுறங்களிலும் வந்து கொண்டிருந்த ஆட்களும் வந்து சேர்ந்தார்கள்.

“என்னப்பா — கிடைக்கலியா?”

“இல்லியே — எங்கேயோ பறந்துட்டாங்களே!”

“அவங்களை — இன்னைக்கு பிடிக்காமலா விடுறது?”

“அவரு வேற கோவக்கார மனுஷன் — நம்மைக் கொண்ணுபிடுவாரு!”

காதலர்கள் ஒளிந்திருந்த அந்த மதகின் மேலேயே அவர்கள் நின்று பேசிக்கொண்டிருந்தார்கள். மதகின் உள்ளேயிருந்தவர்களுக்கு மூச்சு விடவும் பயமாயிருந்தது. அவன் உடலோடு தன் உடலை ஒட்டியபடி நடுங்கிக்கொண்டிருந்த பரிமளம் தன் பார்வையை வேறு பக்கம் திருப்பினாள். அய்யோ! பாம்பொன்று படமெடுத்தபடி நின்று கொண்டிருந்தது. நல்ல வேளையாக அதே சமயம் அந்தப் பக்கம் திரும்பிய அவன் பாம்பைக் கண்டதும் எங்கே அவள் கத்திவிடப் போகிறாளோ எனக்கருதி அவளது வாயை உடனடியாக மூடிவிட்டான். அவசரத்தில் அதை தைரியமாகச் செய்தானாயினும் பாம்பின் மீதே அவன் கண் இருந்தது. மதகின் மேலே நின்று தங்களைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் முரடர்களின் பேச்சு கூட இப்போது அவர்கள் காதில் அவ்வளவாக விழவில்லை. காரணம், அவர்கள் கவனமெல்லாம் அந்தப் பாம்பின் மீதே இருந்தது. அசைந்தாலே அபாயம்—அது தீண்டிவிடும் என்ற அளவுக்கு அச்சம் பிறந்துவிட்டது அவர்களுக்கு!

“வேறு பக்கம் போய் பார்க்கலாம் வாங்க — ஆனா ஒண்ணு; ஆளுங்க ரெண்டு பேரும் மருங்கப்பள்ளத்து ஆளாய்த்தான் இருக்கணும்—அதனால் மருங்கப்பள்ளம் போற பாதை முழுதும் கவனமாயிருங்க! நானும் சக்கிலியும்

இந்தப் பக்கம் போறோம் — நீங்க அந்தப் பக்கம் போங்க!”

மதகின் மேலேயிருந்த ஆட்கள் இப்படி பேசிக் கொண்டு அதை விட்டுப் போய் விட்டார்கள் என்பது அவர்களுக்கு சிறு ஆறுதல் அளித்தது. ஆனாலும் எதிரேயிருக்கும் பாம்பு? அதனிடமிருந்து தப்புவதற்காக இருவரும் பின்னோக்கி நகர்ந்தார்கள். காற்று வீச ஆரம்பித்தது. மதகிற்குள்ளே அடைபட்டது போல கிடந்தவர்களுக்கு அந்தக் காற்று சற்று ஆறுதல் அளித்தது. ஜிலு ஜிலு வென்று வீசிக்கொண்டிருந்த காற்று சற்று பலமாக வீசியது. அவர்கள் பின்புறமாக ஊர்ந்துகொண்டே பாம்பை பார்த்தார்கள். என்ன ஆச்சரியம்—பாம்பின் தலை மட்டும் அவர்களை நோக்கி பாய்ந்து வந்தது. வந்த தலை பரிமளத்தின் முகத்தில் பட்டுக் கீழே விழுந்தது. அவள் ஓவென அலறிவிட்டாள்.

அவன் அந்தத் தலையை உற்றுப் பார்த்தான். படமெடுத்தபடி பாய்ந்து வந்த தலை, பாம்பின் தலை அல்ல; காற்றிலே பறந்து வந்த பூவரசின் இலை என்பது அப்போது தான் அவனுக்குத் தெரிந்தது. பிரண்டைக் கொடி ஒன்றிலே சிக்கிக் கொண்டிருந்த பூவரசம் இலைதான் படமெடுக்கும் பாம்பு போல காட்சியளித்தது என்ற உண்மை, அந்த வேதனையான நேரத்திலே அவர்களுக்கோர் வேடிக்கைத் துணுக்காக அமைந்தது.

சுற்றுமுற்றும் பார்த்தார்கள். மருங்கப்பள்ளம் பாதையிலே முரடர்கள் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.

“எப்படியத்தான் ஊருக்குத் திரும்புவது? பாதையெல்லாம் அவர்கள் இருக்கிறார்களே!”

“இப்போது ஊருக்குள் போகக் கூடாது, பரிமளம்—வா! இன்னும் சிறிது தொலைவு நடந்தால் கடற்கரை வந்து

விடும். சாளுவநாயக்கன் பட்டினத்தில் அந்த மனோரா பக்கத்தில் போய் ஒளிந்துகொண்டால் நம்மை யாரும் பார்க்க முடியாது. இன்றிரவை எப்படியும் கழித்து விட்டால் காலையில் நீ வீட்டுக்குப் போய்விடலாம்.”

“காலையிலா? அய்யோ—அப்பா, அம்மாவுக்கு நான் என்ன பதில் சொல்வது?”

“உன் அப்பா அம்மா என்ன படித்தவர்களா?”

“இல்லை—அதற்காக?”

“அவர்கள் மூட நம்பிக்கையை நாம் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.”

“புரியும்படி சொல்லுங்கள், துரை!”

“சொல்லுகிறேன்—இரவு வீட்டிலே படுத்து நீ தூங்கிக் கொண்டிருந்ததாகவும்—கனவில் ஒரு தேவதை வந்து எதோ மருந்தொன்றை மூக்கிலே காட்டியதாகவும்—கனவு கலைந்து விழிப்பதற்காக எவ்வளவோ முயன்றும் முடியாமற் போனதாகவும், சப்தம் போடக்கூட இயலாமற் போனதாகவும், அதன் பிறகு பிரக்ஞையற்றுப்போய் நடந்தது எதுவும் தெரியாதென்றும், விடியற்காலையில் விழித்துப் பார்த்தால் ஒரு மதகின் பக்கம் படுத்திருப்பதை உணர்ந்ததாகவும்—உடனே எழுந்து ஓடி வந்ததாகவும் சொல்லி விடு; உன் அப்பா அம்மா நம்பி விடுவார்கள்!”

“வாழ்க மூட நம்பிக்கை!” என்று அவன் கன்னத்தில் தன் கன்னத்தை உரசியபடி சிரித்தாள் அந்த சிங்காரி.

“சரி பரிமளம்—வா! வா! அவர்கள் கண்கள் இந்தப் பக்கம் திரும்புவதற்குள்ளாகவே போய்விடுவோம்—”

“துரை! காதல் பாதை கரடு முரடானது என்பது உண்மை தான்!”

“எல்லாப் பாதையும் அப்படித்தான்! பாதை என்பதே உபாதையிலிருந்து வந்தது தானே!”

துரையும் பரிமளமும் ஒளிந்து ஒளிந்து நடக்கத் தொடங்கினார்கள். இரவின் அமைதி, தவளை சப்தத்தால் இடை இடையே கலைந்தது. நிலவின் ஒளியும் மேகத்தின் தழுவுதலால் மங்கி மங்கி வீசியது. சாளுவ நாயக்கன் பட்டினத்துக் கடற்கரைப் பக்கம் வந்து விட்டார்கள். குளிர் காற்று வீசிய காரணத்தால் பரிமளம், துரையின் தோள்களில் சாய்ந்தவாறு நடந்தாள். குளிரைச் சிறிது தடுத்துக் கொள்ள அவளுக்கு மேலங்கியும் கிடையாது. துரை தன்னுடைய துண்டை எடுத்து அவளுக்குப் போர்த்தி விட்டான். அவளும் நாணங்கலந்த ஒரு சிரிப்பை அவனுக்குப் பரிசாகத் தந்துவிட்டு பின் தொடர்ந்தாள்.

மனோராவின் கம்பீரத்தையும் தன் காதலன் கம்பீரத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பது போல அவளது அழகிய கண்கள் மனோராவையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தன. ஆனால் அவனோ எதையோ ஒன்றை மிக கூர்மையாக கவனித்தான். அவனது நடையிலே வேகம் குறைந்தது. நின்று விட்டான்.

“என்ன அத்தான்?”

“ஒன்றுமில்லை—அதோ பார்!”

இருவரும் பார்த்தார்கள். ஒரு உருவம் மனோராவின் பக்கமுள்ள ஒரு பெரிய மேட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த உருவத்தின் அமைப்பு பூரணமாக விளங்குவதற்கு

உதவியாக நிலவு, மேகத்திலிருந்து விடுபட்டது. வழுக்கைத் தலையும், வளர்ந்த தாடியும் கொண்ட அந்த வயோதிக மனிதர், மேட்டில் நின்றபடி ஆகாயத்தை நோக்கி கையை உயர்த்தினார். அந்த தளர்ந்த மேனிப் பெரியவர் தன் அதிரும் கரத்தை ஆகாயம் நோக்கி நீட்டிய காட்சி—அதுவும் அந்த இரவில்—ஏதோ ஒரு புனிதத்தன்மை படிந்த காட்சியாகவே திகழ்ந்தது.

துரையும் பரிமளமும் வைத்த கண் வாங்காமல் நின்றனர்.

“யார் அத்தான் அது?”

“வயதான ஒரு மனிதர்!”

“மனிதர்தானா? அல்லது பூவரசு இலைப் பாம்பு போலத்தானா?”

“இரு! கவனிப்போம்—”

பெரியவர் ஆகாயத்திலிருந்த பார்வையைத் திருப்பாமல் ஏதோ பேசினார். பேச்சல்ல அது—பிரார்த்தனை போலிருந்தது.

“ஓ! ஆகாயத்தில் மேயும் மேக மந்தைகளே! உங்கள் வாழ்நாள் சதமென்று எண்ணியிருக்கிறீர்களா? குளிர்ந்த காற்றுத்தான் உங்கள் எமன் என்பதை மறந்து விடாதீர்கள்! மேகங்களே! உங்கள் சாவுக் கண்ணீர் மாநிலத்தை வாழவைக்கவும் உதவுகிறது. சில சமயம் அழிக்கவும் உதவுகிறது! ஆனாலும் உங்கள் சாவுக் கண்ணீர் வாழ்க! அதுபோல என் சாவுக் கண்ணீர் யாரையும் வாழவைக்காதா என்று ஏங்குகிறேன். மேகப் பிராணிகளே உங்கள் சாவுக் கண்ணீரின் சக்தியை இந்த ஏழை மனிதனின் சாவுக் கண்ணீருக்கு தாருங்கள்—உம்—சீக்கிரம்! அந்த குளிர்காற்று வீசுவதற்குள்! உடனே! உடனே!”

பெரியவரின் வார்த்தைகளைக் கேட்ட பரிமளம், துரையிடம் பேசினாள்.

“என்ன அத்தான் புலம்புகிறார்? சாவுக் கண்ணீர் என்றால் என்ன?”

“சாவுக் கண்ணீர்! மேகத்தின் சாவுக் கண்ணீர் மழைதான்! பரிமளம் இரு இரு—இன்னும் கவனிப்போம்!”

குழந்தை சீப்பித் தின்ற மாம்பழத்தின் நார்க்கொத்து போன்ற தாடியுடைய அந்தப் பெரியவர் தன் பிரார்த்தனையை முடித்து விட்டு மேட்டிலிருந்து கீழே இறங்கினார். துரை, பரிமளத்தை அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு, கிழவரின் பின்னே தொடர்ந்தான். கிழவர் மனோராவிற்குள் நுழைந்தார்—பாழடைந்துபோன படிகளின் வழியாக மனோராவின் முதல் மாடியை அடைந்தார். துரை, சந்தடியின்றிப் பின் தொடர்ந்தான். முதல் மாடியிலிருந்து அடுத்த மாடியில் ஏறுவதற்கு பனை மரத்தால் ஆன ஏணி ஒன்று இருந்தது. அந்த ஏணி சரியாகத் தெரியவில்லை. மாடியின் உட்பகுதியில் நிலவின் ஒளி தலை நீட்டிக் கொண்டிருந்தது. ஆகா அந்த ஒளியிலே மூத்தவரின் முகம் எவ்வளவு துல்யமாகத் தெரிகிறது. பருவக் கழுகு அவர் முகமெல்லாம் தன் கூரிய நகங்களால் பிராண்டியிருந்தது. சுருக்கம் நிறைந்த முகம், அதில் சுடர் விழி கொண்ட பெரியவர். அவரை ரசித்தான் துரை. கிழவர் ஏணி வழியாக மேலே ஏறினார். துரையும் ஒரு மூலையில் ஒளிந்து கொண்டு அவர் ஏறிச் செல்வதைக் கவனித்தான். அவன் முதுகில் யாரோ கை வைத்து அழுத்தினார்கள். திடுக்கிட்டான். யாருமில்லை, பரிமளம் தான்.

“என்னத்தான்” என்று ஈனஸ்வரத்தில் அவள் கேட்டாள்.

“பரிமளம்—நீ இங்கேயே இரு—நான் மேலே போய் பார்த்துவிட்டு வருகிறேன்.”

என்று கூறிவிட்டு துரை மேலே ஏறினான். பரிமளம் எதுவும் புரியாமல் கடலையே பார்த்துக் கொண்டிருந்தாள். அலைகடல் போலவே அவள் உள்ளமும் ஆகியிருந்தது. துரை கிழவரைத் தொடர்ந்து கொண்டே போனான். ஒன்று இரண்டு—மூன்று! ஏழாவது உப்பரிகையிலே கிழவர் ஏறிவிட்டார். துரை ஆறாம் உப்பரிகையிலே நின்று கொண்டு மேலே கவனித்தான். ஒரே நிசப்தம். எதுவும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. உப்பரிகைப் பலகணி வழியாக கடற்கரையை அவன் பார்க்க முடிந்தது. கடற்கரையைப் பார்த்தான், ஆம்—உள்ளபடியே அவன் நடுங்கி விட்டான். அவர்களைத் தொடர்ந்த அந்த முரடர்கள் மனோராவின் பக்கம் வந்து கொண்டிருந்தார்கள். ஆம்—அவர்களே தான்—நிச்சயமாகத் தெரிந்து கொண்டான். ஆனால் பரிமளமோ வேறு திசையில் நின்று—மனோராவின் முதல் தளத்திலிருந்தபடி கடல் பார்த்துக் கொண்டிருந்தாள். துரைக்கு எதுவுமே புரியவில்லை.

உச்சியிலே கிழவர்! உப்பரிகையின் அடித் தளத்திலே குமரி! ஆம்—காதல் குமரி. அவளை அவன் காப்பாற்றித் தீர வேண்டும். உச்சிக்குப் போன கிழவர் அதற்கு மேல் எங்கும் போக முடியாது. அவரை எப்படியும் பிறகு பார்த்து விடலாம்—முதலில் பரிமளத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் துரை கீழே திரும்பினான். அப்போது மேலே ஒரு சப்தம் கேட்டது.

“சாவுக் கண்ணீர்! சாவுக் கண்ணீர்!”

என்ற ஒலிதான் அது! துரை ஆச்சரியத்தோடு மேல் நோக்கினான்.

கிழவரின் குரல் நடுக்கமின்றி ஒலித்தது! ஓ, ஆகாயத்தில் மேயும் மேக மந்தைகளே! உங்கள் வாழ்நாள் சதமென்று எண்ணியிருக்கிறீர்களா? குளிர்ந்த காற்றுத்தான் உங்கள் எமன் என்பதை மறந்து விடாதீர்கள்!

பழைய பிரார்த்தனையில் பாதி வாசகங்களைக் கேட்டான் துரை—

அதற்குள் “அத்தான்” என்ற அபயக்குரல் இரவின் அமைதியைக் கிழித்துக் கொண்டு அடித்தளத்திலிருந்து புறப்பட்டது—துரை திடுக்கிட்டுத் திரும்பினான்.

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்