அத்தியாயம் 1 · 2 / 52

அத்தியாயம் 1

Chapter 1

மூல ஸ்கேன் 13-22 (chapter-1 portion)

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

புதையல்

1

வெள்ளியம்பலம், தன் தோட்டத்துக்குள்ளே உலவியபடியிருந்தார். அவருடைய கண்கள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டேயிருந்தன. அப்போது தான் இரவு உணவை முடித்துக் கொண்டிருக்கிறார் என்பதை அடிக்கடி வெளியான பலமான ஏப்பங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன. தோட்டத்தின் திறந்த வாசலிலே யாரையோ எதிர்பார்த்து அவர் கண்கள் அலைவது நன்றாகப் புரிந்தது. கறுத்த மேனியும், கம்பீரமான தோற்றமும், பயங்கரமான மீசைகளும் உடைய வெள்ளியம்பலம், கையிலேயும் ஒரு அழுத்தமான தடியை வைத்திருந்தார் என்றால் கேட்கவேண்டுமோ? அவருடைய கழுத்திலே யிருந்த மெல்லிய தங்கச் சங்கிலியும், அதிலே தொங்கிக் கொண்டிருந்த தாயத்தும் நிலவின் மங்கலான ஒளியிலே மின்னிக் கொண்டிருந்தன. அடிக்கடி கனைத்துக்கொண்டு வேங்கை போல தலையை நிமிர்த்தி கண்களையும் சுழற்றிக் கொண்டு அலைந்த வெள்ளியம்பலம் மருங்கப்பள்ளம் வட்டாரத்திலே ஒரு பெரிய புள்ளி. பண வசதியிலே என்று கூறிவிட முடியாது; படை வசதியிலேதான்! அம்பலம் வருகிறார் என்றாலே போதும்; அந்த வட்டாரத்து மக்கள் அச்சத்தை அணைத்துக்கொண்டு, ஆளுக்கொரு மூலைக்கு போய் விடுவர். ஊரிலே நடைபெறும் நல்லது கெட்டது அனைவற்றிலும் அம்பலம் இல்லாமல் இருக்க மாட்டார். யார் வீட்டிலாவது விசேஷ மென்றால், இவரே அந்த விசேஷக்காரனாக மாறி காரியங்களை கவனிப்பார். அவன் மீதுள்ள

அன்பால் இதைச் செய்கிறாரா-அல்லது ஜனங்கள் மனதிலே தன்னுடைய உருவமும் பெயரும் பதிந்து கிடக்க வேண்டும் என்ற எண்ணத்தில் செய்கிறாரா-அல்லது அந்த விசேஷங்களில் எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை சுருட்டலாம்; கேட்பதற்கு ஆளில்லை - என்ற தைரியத்தில் செய்கிறாரா-என்பதெல்லாம் அப்பகுதியின் மக்களால் பேசப்பட்டு, அப்படிப் பேசுவதே உயிருக்கு ஆபத்து தரும் வேலை என்று அவர்களாலேயே தீர்மானித்துக் கொள்ளப்பட்டு கைவிடப்பட்ட விஷயங்கள். தெருவிலே அவர் போகும் போது யாராவது கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து விட்டால் - உடனே அம்பலம் அவன் மீது சீறி விழுந்து ஒரு அடியும் கொடுத்து விட்டுத்தான் போவார். காட்டு ராஜா தர்பார் என்று நினைப்பதற்குக் கூட பயப்படுகிற ஜீவன்கள் வாழுகிற பகுதியிலே அம்பலம் வைத்ததுதானே சட்டம். ஆனால் அம்பலத்தின் மனதிலே மட்டும் ஒரு பயம் கருத்தரிக்க ஆரம்பித்தது, என்னமோ உண்மைதான். எவ்வளவு நாளைக்கு எல்லோரையும் மிரட்டி வாழ முடியும்-ஒரு நாளைக்கு எல்லோரும் ஒன்று சேர்ந்துகொண்டு எதிர்க்க ஆரம்பித்துவிட்டால் என்ன செய்வது-என்பது போன்ற சந்தேகங்கள் வளர ஆரம்பித்தன. இந்தப் பயமும் சந்தேகமும் வெள்ளியம்பலத்திற்கு சிறிது நேர சிந்தனையை அளித்தனவே தவிர, அவரது காரியங்கள் எதற்கும் தடையாக நிற்கவில்லை, அப்படித் தடையாக நிற்காத காரணத்தால்தான் மருங்கப் பள்ளத்தின் சிவன் கோயிலைச் சுற்றி பூமியைத் தோண்டிப் பார்த்து அந்தப் பொன் குவியல்களை எப்படியும் எடுத்து விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டார். அவர் அந்த வேலையை நடத்துவதற்காக குறிக்கப்பட்ட நாள் தான் அவர் உலவிக்கொண்டிருக்கும் அந்த நாள். குறிக்கப்பட்ட நாள் என்றால், அவரே குறித்துக்கொண்ட நாள்

அல்ல; ஜோசியர் குறித்த நாள். அம்பலத்திற்கு ஆரூடம் ஜோசியம் முதலியவற்றில் அளவற்ற நம்பிக்கை யுண்டு. அதனால் தான் ரகசியமாக செய்ய வேண்டிய இந்த வேலைக்குக் கூட பஞ்சாங்கத்தைப் புரட்டும்படி கூறினார். பஞ்சாங்கம் பார்த்த அய்யர், அம்பலத்தின் குணங்களை நன்கு தெரிந்தவர். தேடிப் போகும் காரியத்தில் வெற்றி ஏற்படும் என்று சொல்லி பிறகு ஏற்படாவிட்டால் தன உயிருக்கே மோசம் வந்து விடும் என்று அவருக்குப் புரியுமாதலால்-சுக்கிர திசையும் இருக்கிறது-அதோடு சனி பார்வையும் லேசாக இருக்கிறது-அதனால் ஜெயத்தை மதில் மேல் பூனை போலத்தான் சொல்லவேண்டும். ஒருவேளை ஜெயமும் கிடைத்துவிடலாம்-என்று மிகத் தெளிவாக ஜோசியம் கூறி நாள் பார்த்துக் கொடுத்துவிட்டார்.

ஏக காலத்தில் பல இடங்களில் தோண்டிப் பார்த்து பொற்குவியல் இருக்குமிடத்தை எப்படியும் கண்டுபிடித்து விட வேண்டுமென்பதற்காக ஐம்பது ஆட்களுக்கு மேல் ஏற்பாடு செய்திருந்தார். அவர்களுடைய வரவை எதிர்பார்த்துத்தான் தோட்டத்து வாசலிலும் காத்திருந்தார். அவர்களும் வந்து விட்டார்கள்.

“ஏண்டா இவ்வளவு நாழி?”

அவர்கள் மெளனமாய் நின்றார்கள். நாழிகையானதற்கு சரியான காரணமிருந்தாலும், அதைச் சொன்னால் எதிர்த்துப் பேசியதாக ஆகிவிடும் என்ற பயம் அவர்களை மெளனமாக்கியது.

“டேய் சாம்பான்-சக்கிலி-முனியா-எல்லா பயலும் ஜாக்கிரதையா இன்னைக்கு வேலையை கவனிக்கணும். இல்லேன்னா தோலை உரிச்சிடுவேன். ஆமாம்.”

என்று சொல்லிக்கொண்டே வெள்ளியம்பலம் முன்னே நடந்தார். மற்றவர்கள் பின்னே நடந்தார்கள். அவர்கள்

ஒவ்வொருவரிடமும், மண்வெட்டி, கடப்பாறை முதலிய ஆயுதங்கள் இருந்தன. தோட்டத்துக்குப் பின்புறமுள்ள வாய்க்காலைக் கடந்து அங்குள்ள ஒற்றையடி வரப்பின் மீது அம்பலம் முன் செல்ல மற்றவர்களும் பின் தொடர்ந்து சென்ற காட்சி ஊர் மக்கள் யாருக்கும் தெரியாது. இரவு 8-மணி ஆகிவிட்டாலே கிராமங்கள் அடங்கி விட்டதாகத் தானே அர்த்தம். இரவு நேரத்துப் பறவைகளின் வரட்டு சங்கீதமும், நீர் தேங்கிய குழிகளின் மேலே அமர்ந்து தவளைகள் பாடும் கொர கொர கோரசும் வெள்ளியம்பலத்தின் அந்த அணிவகுப்புக்கென தயாரிக்கப்பட்ட இசையமைப்பு போல இருந்தன. பல வயல்களைக் கடந்து அவர்கள், கடைசியாக அந்த சிவன் கோயில் பக்கம் வந்துவிட்டார்கள். நிலவு மேகத்தில் மறைந்து கொண்டு, வெளி வருவதற்குத் திண்டாடிய காரணத்தால் தெளிவாக வழி தெரிவதற்கு அம்பலத்தின் கையிலிருந்த பழைய “டார்ச் லைட்” பயன்பட்டது. கோயிலுக்கு வெளியிலே ஆட்களை நிறுத்தி வைத்துவிட்டு, அம்பலம் மட்டும் கோயிலுக்குள்ளே நுழைந்தார். அங்குள்ள கல்லிலே செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்களை அவர் எத்தனையோ முறை துருவித் துருவிப் படித்திருந்தாலும் - இப்போது ஒருமுறை படிக்க விரும்பினார். டார்ச் லைட்டை அந்த எழுத்துக்களின் மீது அடித்தார்.

“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே, காக்கை மூக்கு நிழலிலே, கண்டாலும் கம்மாளர் கண்ணிலே......”

அம்பலம் இன்னும் படித்தார் - தேய்ந்து மறைந்து போகும் நிலையிலுள்ள அந்த கடைசி வரியையும் படித்தார்.

“எழுபது கோடி பசும் பொன்” என்ற அந்த கடைசி வரி அம்பலத்தின் நெஞ்சிலே எவ்வளவு படபடப்பைஉண்டாக்கியது தெரியுமா? டார்ச் லைட் ஒளிபட்டு மின்னும் அந்த எழுத்துக்கள் எல்லாம் அம்பலத்தின் கண்ணுக்கு வைர மழை கொட்டுவதுபோலத் தோன்றின. தனக்குத் தானே ஒரு முறை பொருள் கூறிக்கொண்டார்.

“எழுவான் என்றால் சூரியன்-தொழுவான் என்றால்-இந்தக் கோயிலில் இருக்கிற ஆண்டவன்-சூரியனுக்கும் இந்த ஆண்டவனுக்கு மிடையிலே-அப்படியானால் சூரியன் உதயத்திலிருந்து சாளுவ நாயக்கன் பட்டினம் வரையிலே வியாபித்திருக்கிற கடலிலே பசும் பொன் இருக்க முடியாது-அதனால் சாளுவ நாயக்கன் பட்டினத்திற்கும் இந்தக் கோயிலுக்கும் இடையிலே தான் அந்தப் புதையல் இருந்து தீரவேண்டும்-காக்கை மூக்கு நிழலிலே என்பதையும் தான் காலையிலே ஆராய்ந்து விட்டோம்-அதோ இருக்கிற ஒதிய மரத்தின் மேல் காலையில் அமர்ந்த காக்கையின் மூக்கு நிழலை நான் அப்போதே குறித்துக் கொண்டேனே; அந்தக் குறிப்பு சரியாகத் தான் இருந்து தீரவேண்டும்-என்னமோ-எல்லாம் சிவன் செயல்-கடவுளே! மருங்கப் பள்ளத்து மகேஸ்வரா, தேடும் பசும் பொன் கிடைத்து விட்டால், தங்கக் கட்டிகள் அகப்பட்டு விட்டால், உனக்கு ஒரு வெள்ளி ரிஷப வாகனம் செய்து வைக்கிறேன்”-

இப்படியெல்லாம் ஆசைக் கனவு கண்டவாறு கோயிலுக்குள்ளிருந்து வெளிவரத் திரும்பினார். திரும்பிய அவர் கவனத்தை ஏதோ ஒரு ஒலி இழுத்தது. அப்படியே அசையாமல் நின்று கவனித்தார்.

இச்-இச்-என்ற ஒலி! அது என்ன ஒலி என்பதை அவர் புரிந்துகொண்டார். மீண்டும் கவனித்தார்.

போதை நிறைந்த வார்த்தைகள் அவர் காதுகளில் மோதின.

“அத்தான்!”

“கண்ணே!”

“ராஜா!”

“என்னடி ராஜாத்தி!”

வெள்ளியம்பலத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. அந்த ஒலிக்கு உரியவர்கள் யார் என்பதைப் பார்த்துவிட வேண்டுமென்று ஆசை துடித்தது. அதோடு தன் காரியத்திற்கும் அவர்கள் ஏதாவது இடையூறாக வந்து விடுவார்களோ என்றும் பயந்தார். யார் அவர்கள்? அவரையறியாமல் அவர் தடித்த உதடுகள் அசைந்தன இப்படி.

“ஒருவேளை-பார்வதி பரமேஸ்வரனாகவே யிருக்குமோ-சேச்சே! கைலாசத்தில் இடமில்லாமலா-இங்கே வந்து......ஏன் வந்தால் என்ன......வரமாட்டார்களா என்ன......அப்படி அவர்களாக இருந்தாலும்-ராஜா, ராஜாத்தி என்று கூப்பிட்டுக் கொள்ள மாட்டார்களே......”

சந்தேகத்தின் ஏகப் பிரதிநிதியாக வெள்ளியம்பலம் நின்று கொண்டிருந்தார், பெருமூச்சையும் கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு!

மறைந்திருந்து அவர்கள் யார் என்று பார்த்து விடலாம்-சேச்சே!-இந்த நிலையில் போய் கூடாது! கூடாது! தனக்குத் தானே புத்தி சொல்லிக்கொண்டார். தங்கம் தேட வந்தவர் இன்பம் தேடும் கிள்ளைகளின் தென்றல் மொழியிலே மனதைப் பறிகொடுத்தார்.

மீண்டும் யாழ் அதிர்ந்தது.

‘மறக்க மாட்டீர்களே கண்ணே!’ பதில் வரவில்லை-‘இச்’ என்ற, ஒலி மட்டும் காற்றில் மிதந்து அவர் காதில் புகுந்தது.

வெள்ளியம்பலத்திற்கு நிலைகொள்ளவில்லை. இந்தப் பிரச்சினைக்கு சீக்கிரம் ஒரு முடிவு கட்டினால் தான் தன்னுடைய பொன் தோண்டும் காரியம் விரைவில் நடைபெற முடியும் என்ற தீர்மானத்திற்கு வந்தார். ஆட்கள் அனைவரையும் அழைத்து கூச்சலிடச் செய்து, அவர்களை விரட்டி விடலாம் என்று முடிவு செய்தார். ஆட்களை அழைப்பதற்காக ஒரு அடி எடுத்து வைத்தார். பட பட வென ஒரு சிறு சப்தம்-அம்பலம் திடுக்கிட்டுப் பார்த்தார். ஒன்றுமில்லை. தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு வெளவாலிடம் இன்னொரு வெளவால் நெருங்கியதால் வந்த வினை; அவ்வளவு தான் துடித்துக் கொண்டிருக்கும் இருதயத்தை அழுத்தியவாறு மீண்டும் நடக்க ஆரம்பித்தார்.

சற்று பலமாகவே பேச்சுக் குரல் கேட்டது. அம்பலம் தொடர்ந்து நடக்காமல் நின்று விட்டார்.

“அத்தான்-நடந்ததை யெல்லாம் மறந்து விடுங்கள்-இனிமேலாவது......”

அவ்வளவு தான் அவர் காதில் விழுந்தது-அதற்குமேல் பேசியது சரியாகக் கேட்கவில்லை. இனி ஆட்களை இழுத்து வந்து கலாட்டா செய்ய வேண்டியது தான் என்று எண்ணியபடி வேகமாக வெளியேறினார் அம்பலம். ஆட்களை அழைத்து வந்து கலவரம் செய்தால்-அதனால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டு ஊர் கூடிவிட்டால்-பிறகு, தான் நினைத்தபடி தங்கம் வெட்டி யெடுக்கும் காரியம் நடக்காமல் போய் விடுமே, ஜோசியர் கூறிய நாளைத் தவற விட்டு விட்டால், மறுபடியும் இப்படி ஒரு நாள் கிடைக்காதே-என்றும் யோசிக்கத் தொடங்கினார். சரி-தானே போய் அவர்களை மிரட்டி விரட்டுவது-என்றும் முடிவு செய்து கொண்டு மறுபடியும் கோயிலுக்குள் திரும்பினார்.

‘இச்’ சப்தம் மாறி மாறி ஒலித்துக் கொண்டிருந்தது-அம்பலம் சிறிது தயங்கி நின்றார். ஆண்குரல் கேட்டது.

“பரிமளம்! அதோ இருக்கிறது பார், அந்த மாமரம்-அந்த மரத்தடி தான் தங்கம் புதைக்கப்பட்ட இடம்.”

இந்த வார்த்தைகள் வெள்ளியம்பலத்தின் காதில் விழுந்ததோ இல்லையோ-உடனே எந்தவித தயக்கமுமின்றி உள்ளே பாய்ந்தார். கோயிலின் பின்புறப் பக்கமாக உள்ள ஒரு சிறு சுவற்றின் மறைவில் தான் அவர்கள் இருந்தார்கள் போலும்-அம்பலம் அங்கு பாய்ந்தாரோ இல்லையோ அவர்கள் இருவரும் நடு நடுங்கி விட்டார்கள். “அத்தான்” எனக் கட்டித் தழுவிப் பின்னிக் கொண்டாள் அந்தப் பெண்ணழகி. அப்படித் தழுவியது இமைப் பொழுது தான்-அதற்குள் அம்பலம், “எந்த மாமரத்தடியிலடா தங்கம் புதைந்திருக்கிறது-சொல்லடா!” என்று கூவிக் கொண்டே அங்கு பாய்ந்ததைக் கண்டு, இரு புறாக்களும் ஓட ஆரம்பித்தன. வெள்ளியம்பலம் ஒரே தாவாகத் தாவி அவனைப் பிடித்து விட எண்ணினார். அப்படித் தாவிய நேரத்தில் கல் இடறிக் கீழே விழுந்து காலிலே சரியான அடிபட்டு விட்டதால் உடனே அவர் ஆட்களை அழைக்க ஆரம்பித்தார்-ஆட்கள் ஓடி வரவே, அவர்களிடம், “டேய் சக்கிலி, சாம்பான்! இரண்டு பேர் இப்படி ஓடுகிறார்கள்-ஆம்பளையும், பொம்பளையும் விடாதீங்க, பிடியுங்க-ஓடுங்க!” என்று கத்தினார்-ஆட்கள் ஓட ஆரம்பித்தனர். “டேய் முனியா! நீயும் சில ஆளுகளும்-நம்ப ஊரு ரோட்டிலேயும், வயல் வரப்புலேயும் நில்லுங்க-அந்தப் பயலும்சிறுக்கியும் ஊருக்குள்ளே நுழைஞ்சு தான் தீரணும்-எப்படியும் புடிச்சுடலாம்!” என்று முனியனுக்கு உத்திரவு போட்டார். மற்றவர்கள் எல்லாம் கிழக்கு நோக்கி ஓடினார்கள்.

காதல் புறாக்களும் கிழக்கு நோக்கித்தான் பறந்தன-கிராமத்திலே எத்தனையோ பாதைகள். எத்தனையோ வயல் வெளிகள். எத்தனையோ வரப்புகள்-அவைகளில் எந்த வழியாக ஓடினார்கள் என்று எப்படிக் கண்டு பிடிக்க முடியும்? முழங்காலில் நல்ல அடிபட்டு விட்டதால் நொண்டியபடி வெள்ளியம்பலம் எழுந்தார். கையிலிருந்த டார்ச் லைட் விழுந்த வேகத்தில் கண்ணாடி உடைந்து போயிருந்தது. ஆனாலும் வெளிச்சம் காட்ட சிறிது உதவியது. அதன் துணையோடு சுற்று முற்றும் பார்த்தார். அந்தப் பெண்ணின் மேலங்கி கீழே கிடந்தது. ஒரு நல்ல செருப்பும் கிடந்தது. இரண்டு செருப்புகளில் ஒன்றைப் போட்டு விட்டு ஓடியிருக்கிறான், அவசரத்தில் என்று அம்பலம் தனக்குள் சொல்லிக் கொண்டார். லைட்டை கொஞ்ச தூரத்தில் அடித்து தேடிப் பார்த்தார். மற்றொரு செருப்பு காணப்படவில்லை. மேலங்கியையும், செருப்பையும் கையில் எடுத்துக் கொண்டு, நொண்டியபடி நடந்தார்.

“மாமரத்தடியில் தான் தங்கம் புதைக்கப்பட்டது” என்று கூறினானே-அது எந்த மாமரத்தடி? எத்தனையோ மாமரங்களில் எந்த மரத்தைக் கண்டு பிடிப்பது? உம்!-காக்கை மூக்கு நிழல் விழுந்ததோ-ஒதிய மரத்தடி! இவன் மாமரத்தடி என்கிறான்-எனக்கு ஒன்றும் புரியவில்லையே-கடவுளே!” என்று உளறிக் கொண்டே நகர்ந்தார் அம்பலம். அவரது ஆட்களோ வேட்டை நாய்களைப்போல மோப்பம் பிடித்தவாறு, கிழக்கு நோக்கிப் பறந்த அந்த காதல் ஜீவன்களை தேடி அலைந்தார்கள்.

வாய்க்காலின் உட்புறமாக மறைந்தும், புதர்களில் பதுங்கிப் பதுங்கிப் பார்த்தும், கால்களிலும் உடலிலும் குத்திக் குருதி வழியச்செய்யும் முட்களை சமாளித்துக் கொண்டும், அந்த இருவரும் லட்சியமற்ற ஒரு திசையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தார்கள். ஓடியவர்கள் பின்னால் திரும்பிப் பார்த்தார்கள். பத்து பேர் தங்கள் பாதையிலே வந்து கொண்டிருப்பது தெரிந்தது. வரப்பிலே மறைந்தபடி எதிரே பார்த்தார்கள். எதிரேயும் நாலைந்து பேர் வருவது தெரிந்தது.

“சரி அகப்பட்டுக் கொண்டோம் அத்தான்” என்று நடுங்கும் கரத்தால் இறுக அணைத்துக் கொண்டாள் அவள். “பயப்படாதே பரிமளம்!” என அவள் நெளியும் கூந்தலை தடவிக் கொடுத்தான் அவன்.

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்