அறிமுகம் · 1 / 52

அறிமுகம்

Introduction

மூல ஸ்கேன் 7-12

X

கீழே மூலப் பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

அறிமுகம்:

சரித்திரத்தின் அடிச்சுவடுகள் தெளிவின்றி மறைந்து விட்டது போன்ற சூழ்நிலைகள். பழமையின் கதையைப் பரிதாபத்தோடு சொல்லிக் கொண்டிருக்கும் பாழ் மண்டபங்கள். கதிர் மறைக்க கிளைக் கரம் நீட்டும் தரு நிழல்கள். வான் தொடுவதற்கென்று வளைந்து நிமிர்ந்து பனங்காய்த் தலையைத் தொங்கப் போட்டு, தம் தோல்வியை சொல்லாமற் சொல்லும் பனை மரக்காடுகள். இவைகளுக்கிடையே வீழ்ச்சியிலும் கலங்காத வீர நெப்போலியனைப் போல உயர்ந்து நிற்கும் அந்த ஏழடுக்கு எழில் மாடம்; அந்த மாடத்தின் மடியிலே தவழ்ந்தாடத் துள்ளி வரும் கடலரசி. இரவு நேரத்து விண் பிறைக்குப் போட்டியென பகல் நேரத்தில் நீலக்கடல் ராணி தன்பால் மிதக்கவிட்டுக் காட்டும் பாய் கட்டிப் படகுகள்.

சாளுவ நாயக்கன் பட்டினம் அந்த ஊரின் பெயர். தஞ்சை மாவட்டத்திலே வாழ்பவருக்கே அது புதுமையான இடம். அதிராம்பட்டினத்திலிருந்து கடல் வழியே செல்லலாம். பேராவூரணியிலிருந்து நாடியம் என்னும் சிற்றூர் வழியாக தரை மார்க்கமாகவும் செல்லலாம். தமிழகத்தின் கடற்கரையில் அமைந்துள்ள சிற்றூர், பேரூர்கள் அனைத்திற்கும் பெரும்பாலும் “பட்டினம்” எனும் சிறப்புப் பெயர் வழங்குதலுண்டு. அதிராம்பட்டினத்திற்கும் சாளுவ நாயக்கன் பட்டினத்திற்கும் இடையே புதுப்பட்டினம் என்ற சிங்காரச் சிற்றூரும் இருக்கிறது. புதுப்பட்டினத்தில் பெருமளவுக்கு கடலை நம்பி வாழும் மனிதர்களே வாழ்கிறார்கள். எந்த நேரத்திலும் அந்த சிற்றூரின் தெருக்களிலே வலைகள் காய்ந்து கொண்டிருக்கும். அல்லது பழுதான வலைகள் புதுமையாக்கப்படும் வேலைகள் நடந்து கொண்டிருக்கும். காய்ந்த மீனின் வாசம்

‘கம கம’ வென்று வந்துகொண்டிருக்கும். கட்டு மரங்கள்-படகுச் சாமான்கள்-தெருவெல்லாம் இறைந்து கிடக்கும்; அவைகளில் சிறார்கள் அமர்ந்து விளையாடிக் கொண்டிருப்பார்கள். நாலைந்து தெருக்களே உள்ள அந்தப் புதுப்பட்டினம் பார்வைக்கு அழகாகவும் ஓய்வு பெறுகிறவருக்கு உல்லாசமளிப்பதாகவும் இருப்பதற்கு காரணமே அந்தக் கடல்தான் என்று கூறிவிடலாம். முஸ்லீம் மக்களும் அந்த சிற்றூரில் வாழ்கிறார்கள் என்பதை எடுத்துக்காட்ட ஒரு சிறு மசூதி. அதன் எதிரிலே கட்டிவிடப்பட்டிருக்கும் துண்டுத் திண்ணைகள் தான் அந்த ஊர்க்காரர்களுக்கு கடற்காற்று வாங்கும் இடம். புதுப்பட்டினத்திற்கும், சாளுவ நாயக்கன் பட்டினத்திற்கும் அதிக தொலைவில்லாவிடினும் கடல்வழியாகப் போவதுதான் சுலபமான பயணம்.

சாளுவ நாயக்கன் பட்டினம் என்ற பெயர் அந்தப் பகுதி மக்களிடையே அதிகமாக அடிபடுவதில்லை. காரணம், பட்டினத்திற்குரிய அமைப்புகளோ - வீடு வாசல்களோ- தெருக்களோ- எதுவுமே அங்கு கிடையாது. அங்கே நிற்கும் அந்த ஏழடுக்கு மாடத்தின் பெயராலேயே அந்த இடத்தை அழைப்பது வழக்கமாகிவிட்டது.

மனோரா! ஆம், சாளுவ நாயக்கன் பட்டினத்தைக் குறிக்கும் செல்லப் பெயர் அதுதான், அந்த எழில் மாடத்தின் பெயர் தான் மனோரா! “மினார்” என்ற சொல், நாளடைவில் மனோரா என்று மாறியிருக்கவேண்டும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாகூர், முஸ்லீம்கள் வாழும் பிரதேசம். அங்குள்ள தர்க்காவில் எழுந்து நிற்கும் மாடங்களை மனோரா என்றே அழைப்பார்கள். அதே முறையில் இந்த மாடத்திற்கும் பெயர் சூட்டிவிட்டார்கள் போலும்! மனோரா- தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னனால் கட்டப்பட்டது. நெப்போலியன் ஆங்கிலேயரால் தோற்கடிக்கப்பட்டான் என்ற வெற்றிச் செய்தியை அறிவிக்கும் அடையாளமாக இந்த நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டது என்று தான் செதுக்கப்பட்டுள்ள எழுத்துக்கள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலேயரின் ஆதிபத்யம் ஆணிவேர் விடுவது கண்டு அஞ்சிய தஞ்சை மன்னன், அவர்களை எதிர்த்தொழிக்க ஒரு பாசறைக் கோட்டை - ஆம், போர்க் கோட்டை கட்டினான் என்றும், அந்தக் கோட்டையிலே அவன் நினைத்தபடி ஏற்பாடுகள் நடப்பதற்கு முன்பே, செய்தி, ஆங்கிலேயருக்குப் பரவிவிட்டதென்றும் - வினா எழுப்பிய வெள்ளையரிடமிருந்து தப்புவதற்காகவே-இது வெற்றியின் சின்னம் - என சரபோஜி மன்னர் விடையளித்தார் என்றும் ஒரு தேய்ந்து போன செய்தி உலவுகிறது. எதிர்ப்பு முகாமோ - அல்லது எதிரியின் வெற்றியைப் புகழ்ந்திடும் மண்டபமோ-தெரியாது; ஆனால் மனோராவின் அமைப்பு கண்ணைக் கவருவதாக மட்டுமல்ல, படை வீரர்கள் தங்கக் கூடிய கோட்டையைப் போலவும் இருக்கிறது. முழுதும் மர உத்திரங்களும், பக்குவப்படுத்தப்பட்ட சுண்ணாம்பும், அழுத்தமான செங்கல்லும் கொண்டு கட்டப்பட்ட கட்டிடம் அந்த மனோரா. மர உத்திரங்கள் கால வெள்ளத்தில் உளுத்துவிடக் கூடும் என்பதற்காக- அவைகளில் கயிறுகளை சுற்றி அதன் மீது கல் அடுக்கி சுண்ணாம்பு பூசியிருக்கிறார்கள் என்பது மனோராவில் பழுது அடைந்துள்ள பகுதிகளைக் காணும்போது தெளிவாகும். சுண்ணாம்பு உதிர்ந்து விட்டிருக்கிறது. கல் உடைந்து போயிருக்கிறது. மரத்தில் சுற்றப்பட்ட கயிறு மட்டும் இன்றைய தினம் திரிக்கப்பட்ட கயிறுபோலத் தெரிகிறது.

மனோராவிலே ஒரு பாதாளக் குகையிருந்து மூடப்பட்டு விட்டதாக - அந்தக் குகையிருந்த அடையாளத்தையும் உத்தேசமாகக் காட்டுவார்கள். அந்தக் குகையில் நுழைந்தால் அருகே உள்ள மருங்கப் பள்ளம் என்ற ஊருக்கு போக முடியுமாம்.

‘மருந்துப் பள்ளம்’ தான் மருங்கப் பள்ளமாகி விட்டது என்று ஆதாரப் பூர்வமாக நிரூபித்துக் காட்டுகிறவர்கள் அந்தப் பகுதியிலே பலர் இருக்கிறார்கள்.

பொன் குட்டம் எனப்படும் கல் அங்கே ஏராளமாகக் கிடைக்கிறது. பொற்கொல்லர்கள் பொன்னை உருக்குவதற்காக உபயோகப்படுத்தும் ஒருவித மணலில் தங்கப் பொடிகள் உருகி, சிந்தி, கெட்டிப் பட்டுப் போய் அது கற்கள் போல மாறிவிடுகிறதாம். அந்தக் கல் மருங்கப் பள்ளம் கிராமத்திலே எங்கு நோக்கினும் கிடக்கிறது. அந்தப் பொன் குட்டக் கல்லை எடுத்து அதிலே மருந்து செய்து, பித்தம் சோகை - பாண்டு - முதலிய நோய்களுக்குக் கொடுத்து குணப்படுத்துகிறார்கள். அதன் காரணமாக அந்த மருங்கப் பள்ளம் மருந்துப் பள்ளம் என அழைக்கப்படுதலே சிறந்தது எனக் கூறுவர் அங்குள்ளோர்.

மற்றொரு ஆராய்ச்சியும் அங்கே நடைபெற்று, இன்னும் முடிவு காணாமல் கிடக்கிறது. எத்தனையோ லட்சம் பெறுமானமுள்ள பொன் அந்த ஊரில் எங்கேயோ ஒரு மூலையில் புதைந்து கிடக்கிறதாம். அது எங்கே தோண்டினால் கிடைக்கும் என்று திட்டவட்டமாகத் தெரியாமல் பெரியதோர் திகைப்பே ஏற்பட்டிருக்கிறதாம்.

பொன் குட்டம் இவ்வளவு அதிகமாகக் கிடைப்பதற்குக் காரணம் என்ன? பொற்கொல்லர்கள் பலர் பொன் கட்டிகளை அந்த இடத்திலே உருக்கியிருக்க வேண்டும். அப்போது உருகி உருவான பொன் குட்டங்கள் தான் மருங்கப் பள்ளம் முழுமையும் சிதறிக் காணப்படுகின்றன, என்று தங்களது சிந்தனையின் விளைவைக் கூறிக்கொண்டிருப்போருமுண்டு.

“செவத்தான் மகள் கருப்பாயி, எலுமிச்சம்பழம் நிறத்துக்கு இருக்கிறாள்ன்னு ஊரெல்லாம் வர்ணிச்சுகிட்டு கிடந்தது; கடைசியிலே பாக்கப்போனா

அவளுக்குப் பாண்டு ரோகம், அதனால் தான் அப்படி வெளுத்துப் போய் இருக்கிறான்னு வைத்தியர் சொன்னாரு - கொடுக்காத மருந்து பாக்கியில்லை - கடைசியிலே பொன் குட்டத்திலே ஒரு மருந்து தயார் பண்ணி சாப்பிட்டுகிட்டே வந்தது - இப்ப கருப்பாயி கட்ட பொம்மன் சம்சாரம் மாறி ஆயிட்டா - கல்யாணம் ஆகி புள்ளையும் பெத்துட்டா-” என்ற உரையாடல் மருங்கப் பள்ளத்து திண்ணைப் பேச்சுக்களின்போது எப்போதாவது ஒரு முறை நடைபெற்றுக்கொண்டு தானிருக்கும்.

சாலையிலே நடந்து செல்கிறவர்கள் காலிலே தட்டுப்படும் கல், பொன் குட்டக் கல்லாக இருக்கக் கண்டுவிட்டால், அதன் பெருமையைப் பற்றி ஆளுக்கொரு கதை கூறிக் கொண்டு தங்கள் வழிப் பயணத்தை சிரமம் இல்லாமல் முடித்துக் கொள்வார்கள். இப்படியெல்லாம் அந்தப் பொன் குட்டக் கல், அபரிமிதமான பொன் குவியல்கள் அந்த இடத்து மண்ணிலே புதைந்து கிடக்கின்றன என்ற அந்தரங்கத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறது என்பது மட்டுமல்லாமல் அந்த ஊரின் வயல் வெளிகளுக்கிடையே அமைந்த சிவன் கோவிலில் உள்ள சில வரிகள் பொன் புதைந்து கிடக்கும் செய்தியை இன்னும் அழுத்தமாக ஊர்ஜிதப்படுத்துவதாகவும் பேசிக்கொள்கிறார்கள்.

“எழுவானுக்கும் தொழுவானுக்கும் இடையிலே காக்கை மூக்கு நிழலிலே கண்டாலும் ‘கம்மாளர்’ கண்ணிலே”

என்பதுதான் அந்த வரிகள். எழுவான் என்றால் யார்? தொழுவான் என்றால் யார்? காக்கை மூக்கு நிழல் என்பதற்குப் பொருள் என்ன? “கம்மாளர்” என்பது பொற்கொல்லரை மட்டும் தான் குறிக்குமா? இதுபோன்ற கேள்விகள் லட்சக் கணக்கான பொன்களைப்பற்றிக் கனவு காண்பவர்களின் உள்ளத்தில் எழத்தானே செய்யும்! அப்படி எழுந்த நினைவு அலைகள் எப்படியும் அந்தப் பொற்குவியல்களுக்கு, தான்- ஏகச் சக்ராதிபதியாகிவிட வேண்டுமென்ற பச்சை சுய நலத்தை ஒரு சில மனிதர்களுக்கு பெருக்கிடும் தன்மை வாய்ந்தவை என்பதை யார் மறுத்துக் கூற முடியும்?

இரவு நேரங்களிலே-நிலவைக் காணமுடியாத இருள் வேளைகளிலே-கையிலே மண்வெட்டி கொண்டு எத்தனை எத்தனை ஆசைக்காரர்கள் தாங்கள் பூவைத்துப் பார்த்து உத்தேசமாக உறுதிப் படுத்திக்கொண்ட பகுதியிலே தோண்டிப் பார்த்து-பொன் குடங்களை காணாமல் ஏமாந்திருக்கிறார்களோ-யார் கண்டது!

இப்படிப் பலருக்கு ஆசை காட்டியும்-பலரை ஏமாற்றியும் பலரால் சிறப்பிக்கப்பட்டும்-சிரமத்தை சுமந்து தோற்றுவிட்ட சிலரால் சபிக்கப்பட்டும்-தனித் தன்மை பெற்றுவிட்ட அந்த மருங்கப் பள்ளம் காண்பதற்கு அழகான ஊர். சிறியதோர் சாலை-அதன் ஓரத்திலே வயலுக்கு உயிர் வழங்கும் வாய்க்கால். அந்த வாய்க்காலின் கரைகளிலே புறாக்கூடு போன்ற ஓலைக் குடிசைகள். பச்சைப் பட்டாடை விரித்து இயற்கையன்னை எழில் கொட்டி மகிழ்வூட்டும் பூமி அந்த மருங்கப்பள்ளம்-பிரச்சினைக்குரிய பிரதேசம். அதிராம்பட்டினம்-புதுப்பட்டினம்-சாளுவ நாயக்கன் பட்டினம்-மனோரா-மருங்கப் பள்ளம்-பேராவூரணி நாடியம் ஆகிய ஊர்களையும், பகுதிகளையும் நாம், இப்போது அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறோம். இந்த இடங்களில் சுற்றிச் சுழன்று-கடல் தாண்டி, இலங்கைக் கரையில் மோதித் திரும்பும் ஒரு சில மனித ஜீவன்களின் கதைக்கு நாம் அறிமுகப்படுத்திக்கொண்ட இந்த இடங்கள் பெரிதும் உதவும்.

---

கலைஞர் மு. கருணாநிதி, எம். எல். ஏ. · புதையல், அன்புப் பதிப்பகம், பொறையார் (தஞ்சை மாவட்டம்). அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்