பொருளடக்கம்

பலிபீடம் நோக்கி

பகுதி 2 / 3

ராயசம் வெங்கண்ணா — தஞ்சை சரித்திரக் கதை

Towards the Sacrificial Altar — Internal Rayasam Venganna Sequence

இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; 1947 பதிப்பில் அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.

இது தனி நூல் அல்ல — ‘பலிபீடம் நோக்கி’ நூலுக்குள் திரைப்படக் காட்சியாக அமைந்த உள்ளமைந்த வரலாற்றுப் பகுதி.

மூல ஸ்கேன் 8-29 plus scan 30 through the internal film end card

X

கீழே 1947 முதற்பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

ராயசம் வெங்கண்ணா

தஞ்சை சரித்திரக் கதை

எரிமலை ‘ரிலீஸ்’

டைரக்ஷன், திரைக்கதை அமைப்பு, வசனம்: மு. கருணாநிதி (நான்)

விநியோக உரிமை து. வி. நாராயணன் அன் கோ.

எரிமலையின் அனல் மூச்சு நின்று விடுகிறது. பின்னணி இசையில் இனிமை இழைகிறது. வானளாவிய பிரகதீஸ்வரன் ஆலயத்தின் கோபுரம் காட்டப்படுகிறது. தொடர்ந்து மாடமாளிகைகள், கூட கோபுரங்கள், தஞ்சையின் வீதிகள் சுற்றிச் சுழல்கின்றன. பின்னணி நின்றுவிடுகிறது.

வீதியில் ஒரு பல்லக்கு!... அதைத் தூக்கியிருக்கும் மனிதர்களின் தோள்வலியை முகத்தில் படர்ந்துள்ள சோக ரேகைகள் சொல்லுகின்றன.

‘வைணவ மகான் குமார தாத்தாச்சார்யாவுக்கு’ ...ஒரு பட்டை நாமக்காரன் கத்துகிறான். தொடர்ந்து ‘ஜே கோஷம்’! தெரு அதிர்கிறது,

பல்லக்கு போய்க்கொண்டே இருக்கிறது. கோட்டை வாசலில் பல்லக்கு நுழைகிறது. காட்சி மாறுகிறது.

தர்பார் மண்டபம். மந்திரி பிரதானியர் வீற்றிருக்கின்றனர்.

‘வீராதி வீரர் விசயராகவ மன்னன் வாழ்க!’ என்ற வாழ்த்தொலியோடு தர்பார் ஆரம்பமாகிறது. சிம்மாசனத்தில் ஒரு கிழவேந்தன் அமர்ந்திருக்கிறான்.

‘இளவரசர் மன்னரு நாயக்கர் வருகிறார்’ ஒரு காவலன் வாய்மொழிகிறான்.

இளமையும், எழிலுந் ததும்ப மன்னரு நாயக்கன் ஆசனத்தில் உட்காருகிறான். டக்டக் என்ற சப்தம் கேட்கிறது. சப்தம் வந்த திக்கில் எல்லோரும் திரும்புகிறார்கள். பாதரக்ஷை தெரிகிறது. பிறகு கால். பிறகு பஞ்சகச்சம். பிறகு பட்டை நாமம், பல்லக்கில் பவனி வந்த குமார தாத்தாச்சார்யா ஒய்யாரமாக நடந்து வருகிறார். விசயராகவ நாயக்கர், மன்னரு மற்றுமெல்லோரும் எழுந்து வணங்குகிறார்கள். குருவுக்கு பாத பூஜை நடக்கிறது. குரு பேசுகிறார்.

‘விசயராகவா! என்னை அழைத்த விஷயம் என்ன?’

விசயராகவர்: குருஸ்வாமி. மதுரைசொக்கநாத நாயக்கன் நமது மன்னருவின் மகளை மணந்து கொள்ள விரும்புகிறான்.

குரு: மண விஷயமா?... மங்களமாக நடக்கட்டும்.

விசய: மங்களத்திற்கு வழியில்லை.

குரு: விசயராகவா?... என்ன சொல்கிறாய்?

விசய: மதுரை மன்னன்... விஜயநகரின் சேவக மரபில் வந்தவன். அவனுக்கு என் பேத்தியை அளிப்பது பேதமை. பெரும் இழிவு!... ஆகவே மறுத்துவிட்டேன்.

குரு: கோத்திரமறிந்து பெண்ணைக் கொடுக்க வேண்டும் ...சந்தோஷம்!

[மன்னரு நாயக்கன் குறுக்கிட்டு]

‘சந்தோஷத்திற்கும் வழியில்லை சாமி!... சமர்க்களத்தில் சந்திப்பதாக மதுரை வேந்தன் அறிவித்து விட்டான்.’

குரு: சமாதானத்திற்கு வழியில்லையா?

மன்னரு: சமாதானம்!... என் மகள் அவனுக்குக் கன்னிகாதானம் செய்தால் சமாதானம்!... இல்லையேல் போர்க்களத்தில் பெருக்கெடுக்கும் ரத்தவெள்ளத்தில் தான் சமாதானம் முளைக்கும்.

குரு: போருக்குத் துணிந்துவிட்டீர்களா?......

மன்னரு: ஆம்! தோளில் பலமுள்ள வரையில் போராட்டம். மார்பில் வேல்தாங்கி மாண்டுபோகத் தீர்மானம், மகள் அந்த மித்தானமத்தனுக்குக் கொடுத்து மானமிழப்பதில்லை என்ற முடிவு.

குரு: சரியான முடிவு செய்யுங்கள்.

[விசயராகவ மன்னன் எழுந்து]

‘ஸ்வாமி... மதுரை, மகத்தான வலிவோடு தஞ்சையில் பாயத் திட்டமிட்டிருக்கிறது. நம் படை மிகச் சிறிது. போரில் வெற்றிகாண வேண்டுமானால்... உங்கள் வாழ்த்து தேவை. அருளுங்கள்.’

மன்னன் மண்டியிட்டு வணங்குகிறான். சபையில் ஒரே நிசப்தம். தாத்தாச்சார்யா பேச ஆரம்பிக்கிறார்:

‘விசயராகவா! நீயும், நின் குலமும் வாழ்க! இருப்பும், கடல் துயிலும் திருமாலின் திருவருளால்

நின் திருமுடி வாழ்க! நின் தரணியில் அமைதி நிலவுக! நின் புகழ் பரவுக! நின் ஆயுள் வளர்க! நின் ஆட்சி நீள்க!...போரில் ஜெயம் உனக்கே!’

வாழ்த்து முடிகிறது. ‘கல கல’ என்ற ஒலி கேட்கிறது. ஆச்சார்யாவின் பாதத்தில் பவுன் நாணயங்கள் கொட்டப்படும் காட்சி! திரையில் ஒரு மின்னல். மீண்டும் பயங்கரமான இசை!....... முரசு முழங்குகிறது. ஒரே தூசிப்படலம். குதிரைகளின் ஓட்டம். ‘ஆ ஊ’ என்ற கூச்சல்கள் எழுகின்றன.

பீரங்கி வேட்டுகள் இடியென முழங்குகின்றன. கால்வாய்களில் சிகப்புத்தண்ணீர் ஓடுகின்றது.

மார்பில் காயம் பட்டவரும், விலாவில் வேல் பட்டவரும், தலையில் ஈட்டிபாய்ந்தவருமாக......சட சடவென்று வீரர்கள் முறிந்து விழுகின்றனர். ஒரு வீரனின் கண்ணில் குண்டு துளைத்து பிடரிப்பக்கம் ஊடுறவுகிறது. பரிதாபமான காட்சி!

போர்முனையில் மற்றொருபக்கம்.

விசயராகவன், அவன் தேவி, மன்னரு, அவன் மகள் ஆயுதபாணிகளாய் காட்சிதருகின்றனர். விசயராகவன் கேட்கிறான்.

‘அந்தப்புர மாதர்கள் எங்கே?’

மன்னரு: எதிரிகள் உள்ளே நுழைந்தால், அவர்கள் தற்கொலை செய்துகொள்ள தீ, வளர்க்கிறார்கள்

[விசயராகன் ஆசையோடு]

‘மன்னரு’!... உன் குழந்தை செங்கமலதாசன் பத்திரமாக இருக்கிறானா?’

மன்னரு: தாயிடம் இருக்கிறான். பயம் வேண்டியதில்லை.

இந்தப் பேச்சு முடிவதற்குள் பேரிடி போன்ற சப்தங்கள் கிளம்புகின்றன. கோட்டைச்சுவர்கள் சரிகின்றன. கல்லும் மண்ணும் காற்றில் பறக்கின்றன. ஒரே அக்கினி வீச்சு!.......

மன்னரு நாயக்கன் மார்பில் ஒரு ஈட்டி பாய்கிறது. ஈட்டி எறிந்தவன் அவன் மகள் வெட்டி வீழ்த்தி இன்னொரு ஈட்டிக்கு இரையாகிறாள். மன்னருவின் பயங்கர மரணம். சோகம் எதிரொலிக்கிறது.

விசயராகவனையும் அவன் தேவியையும் கைது செய்ய மதுரைத் தளபதி நெருங்கிவருகிறான். விசயராகவன் ஈட்டியை மேலே எறிந்து, அதை மார்பில் தாங்குகிறான். கீழே சாய்கிறான், மகாராணியும் அவ்வாறே மரணத்தை முத்தமிட்டு மன்னன் மார்பில் விழுகிறாள். எதிரிகள் பக்கம் வெற்றி யொலி கடல்போல் முழங்குகிறது.

குற்றுயிராகக் கிடக்கும் விசயராகவ வேந்தன் ‘குளோசப்பில்’ காண்கிறோம். அவன் வாய் முணு முணுக்கிறது.

‘ஸ்ரீரங்கத்தை தெரிசிக்க, தஞ்சையில் ஆகாய மளாவக் கோபுரம், நாள்தோறும் பன்னீராயிரம் பிராமணருக்கு சந்தர்ப்பணம். மன்னார்குடி ராஜ கோபால ஸ்வாமிக்கு நவரத்ன கவசம், வைரமுடி, ஆலயப்பிரகாரங்கள், நந்தவனம், குளம், ரகுநாத அக்கிரகாரம், இவ்வளவு கைங்கர்யமும் செய்தேன். இன்று எதிரிகள் என் நாட்டில் நுழைவதைக்

கண்டு துடிக்கிறேன். என் தான தர்மங்கள் தெய்வ பக்திகள் வீண் தானா? தாத்தாச்சார்யாவின் வாழ்த்து தண்ணீரில் விழுந்த சாம்பல் போல் கரைந்துவிட்டதே!... கடவுள்களுக்கு அழித்த பொக்கிஷத்தை என் படைப்பெருக்கத்திற்கு செலவிட்டிருந்தால் இக்கதி வந்திராதே!......’

விசயராகவன் கண்ணை மூடுகிறான், மார்பில் ரத்தம் மளமளவென வழிகிறது. கோட்டை வாயிலில் முச்சுற்றுப்படுத்திருக்கும் வீர உருவங்கள் வரிசையாகப் பார்க்கிறோம். காட்சி மாறுகிறது. அரண்மனையின் உட்புறம்! தீக்குண்டம் எரிநாக்குகளால் இரையைத் தேடி அலமோதுகிறது ...... ஒருவர்பின் ஒருவராக பெண்கள் தீக்குளத்தில் குதிக்கின்றனர்.

மன்னரு நாயக்கன் மனைவி, குழந்தை செங்கமலதாசனுடன் நெருப்பின் பக்கம் வருகிறாள். அவள் கண்களில் இரண்டு நீர் வீழ்ச்சிகள், கையில் இருக்கும் குழந்தையை ஒரு தோழியிடம் கொடுக்கிறாள்.

‘பட்டத்துக் குரியவன். பத்திரமாகப் பாது காத்துக் கொள்.’

இதைக் சொல்லிக்கொண்டே அக்கினி குண்டத்தின் அருகில் வருகிறாள். குழந்தையை மறு முறையும் பார்க்கிறாள். அவ்வளவு தான் ‘சர்’ என்ற சப்தம். ஆம்... அவள் கண்ணீரைத்தான் நெருப்பு, அப்படி உறிஞ்சுகிறது. குழந்தையோடு தோழி எங்கேயோ ஓடுகிறாள்,

ஓடுகிறாள்... ஓடுகிறாள்... அப்படியே ஓடுகிறாள். காட்சி இருள் கொள்கிறது.

மீண்டும் திரையில் எழுத்துக்கள், ஓடிவந்து நிற்கின்றன. அவை........

தஞ்சையைத் தன் வசமாக்கிக்கொண்ட மதுரை மன்னன் தன் பிரதிநிதியாக தம்பி அழகிரி என்பவனை தஞ்சைக்கு அனுப்பினான். அரசப் பிரதிநிதியாக வந்த அழகிரி ஆட்சியைக் கைப்பற்ற ஆசை கொண்டான். ஆசையைக் கிளப்பிவிட்டவன் வெங்கண்ணா என்னும் வேதியன். மதுரைக்குக் கப்பம் கட்டாமலிருந்தால் தஞ்சையை நம் வசப்படுத்திக் கொள்ளலாம் என்று வெங்கண்ணா தந்திரம் சொல்லிக் கொடுக்கவே அதன்படி அழகிரி நடந்துகொண்டான். பேராசையது கிளந்திருந்த மதுரையும் அலட்சியமாக இருந்துவிடுகிறது. அதேசமயம், அதிர்ஷ்டத்தின் மேல் அதிர்ஷ்டமாக அரண்மனையில் ஒரு புதையல் அகப்படுகிறது. அந்தப் புதையல் தான் அழகிரியின் ஆட்சிக்கு முடிவு தருகிறது.

எழுத்துக்கள் சென்றுவிடுகின்றன. அடுத்த காட்சியாக தஞ்சை அரண்மனையில் ஒரு தனியிடத்தைப் பார்க்கிறோம். வேந்தனும் வேதியரும் சரியாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள் வேதியர் சிரித்துக்கொண்டே பேச்சைத் தொடங்குகிறார்.

‘இந்த முறை கப்பம் கட்டியிருந்தால் சொக்க நாதனின் அடிமையாகவே இருந்திருக்க வேண்டும். எப்படி என் ராஜதந்திரம்?’

‘வெங்கண்ணா வாக்கு, வேதவாக்கு. ஒருவேளை ...மதுரை நம்மீது திடீரெனப் பாய்ந்தால்?’

‘புலி, கிளத்திருக்கிறது. அது கொஞ்ச நாளைக்கு குகையை விட்டுக் கிளம்பாது. அதற்குள் நம்படை வரிசையை பலப்படுத்தி விடலாம்.’

‘ஆஹா...வெங்கண்ணாவின் மூளையே மூளை!... விதவிதமான யோசனைகள் வெகுவேகமாக முளைக்கின்றன.’

‘இல்லாவிட்டால், பரம்பரை பரம்பரையாகப் பார்த்துவரும் ராயசத் தொழில் நிலைக்குமா? வீழ்ந்து போன விசயராகவன் கூட என் மூளைக்கு வேலை கொடுக்கத் தவறுவதில்லை. நான் மட்டும் மல்ல. அந்தணர் வம்சத்திற்கே அறிவியலிலும், அரசியலிலும் அதிக அனுபவமுண்டு.’

‘அதற்கென்ன தடை....ஆண்டவன் படைப்பே அப்படியிருக்கிறது.’

‘முகத்தில் பிறந்தவர்கள் அல்லவா? மூளைக்கு அருகாமையில் இருப்பது தானே முகம்.’

‘சந்தேகமென்ன?...ஆமாம்’

‘சாதாரண ஒரு ராஜப்பிரதிநிதியை சாம்ராஜ்ய மன்னனாக ஆக்குவதென்றால் எவ்வளவு அரிய பெரிய ஆலோசனை இருக்கவேண்டும்’

‘ஆலோசனை மட்டுமா?... அழகிரியின் நலத்தில் அவ்வளவு அக்கரையும் இருக்கிறது உமக்கு. வெங்கண்ணா!...உம்முடைய உதவிக்கு நன்றி...ஏற்றுக் கொள்ள வேண்டும்.’

‘வாயளவில்...வார்த்தை யளவில் அவ்வளவு தானே?’

‘வெங்கண்ணா! நீர் வேண்டும். வெகுமானம் பெறலாம்.’

‘அரசர் வாக்குத்தவற மாட்டாரல்லவா ?’

‘அகில உலகம் அதைத் தவறும் வெங்கண்ணா விஷயத்தில் அழகிரி தவறமாட்டான்.’

‘சரி .. எனக்கு வேண்டிய சன்மானத்தைக் கேட்கலாமா?’

‘சங்கோசமின்றிக் கேட்கலாம். சந்தோஷமாகத் தரப்படும்.’

‘உழைப்புக்கேற்ற ஊதியம்! இதில் சங்கோசத்திற்கு இடமேது?’

‘உமது உழைப்பால் நான் உயர்ந்தேன் உண்மை!... உழைப்பு உபயோகமான பிறகு உதறி விடும் உன்மத்தனல்ல நான். உமக்கு வேண்டியதைக் கேளும்.’

‘விபீஷணன் செய்த உதவிக்கு ஸ்ரீராமன்... இலங்கையையே கொடுத்துவிட்டானல்லவா?’

‘ஆமாம். இப்போது...’

[அழகிரியின் முகத்தில் சில கோடுகள் சந்தேகத்தைக் கிளப்புகின்றன.]

‘அதைப்போல், நானும் தேசம் கேட்பேனென்று திகைக்க வேண்டாம்’

‘நீர் கேட்டமாட்டீர்! நல்லவர்! எனக்குத் தெரியும்!’

[அழகிரி முகத்தில் அசடு வழிகிறது.]

‘நீர் என்னிடம் காட்டும் பிரியத்தில், நான் எதைக் கேட்டாலும் கொடுப்பீர்! அவ்வளவு தாராள சிந்தையும் தணியாத அன்பும் கொண்டவர் நீர்’

‘உம், கேளும்’

[அழகிரியின் கண்களில் ஒளி இல்லை. புருவம் வணங்குகிறது.]

‘புதைந்து கிடந்த பொக்கிஷம்! அதைக் கண்டு பிடித்துக்கொடுத்தது, நான்தானே மகாராஜா!’

‘ஆமாம்’

[அழகிரியை இப்பொழுது பார்க்க சகிக்க வில்லை. பரிதாபமாக இருக்கிறது.]

‘அதைக் கொடுத்தால் போதும்’

இதைக் சொல்லிவிட்டு வெங்கண்ணா அழகிரியின் வாயை ஆவலோடு நோக்குகிறான். அழகிரி பேச ஆரம்பிக்கிறான். பேச்சில் ஆத்திரம் கொப்பளிக்கிறது. அதை அவனால் அடக்கமுடியவில்லை எப்படி அடக்கமுடியும்?

‘பிராமணரே! பேராசைப்படுகிறீர். பொக்கிஷம் பொதுமக்கள் நலத்திற்காக! அதைத் தர முடியாது’

வெங்கண்ணாவுக்குக் கூட வீரம் பிறக்கிறது வெடுவெடுப்பாகப் பேசுகிறார்.

‘அழகிரி!... அகம்பாவம் தலைக்கேறிவிட்டது, அதிகார போதையில் அறிவை அணைத்துக்கொள்ளாதே. உன்னை அரசனாக்கியது நான். மதுரையின் அடிமையை மன்னனுக்கினேன். அவன் மமதை கொண்டு பேசுகிறான். பேஷ்!’

‘வெங்கண்ணா!... வெத்துவேட்டுக்கள் கிளப்ப வேண்டாம். வார்த்தையில் நிதானமிருக்கட்டும்’

‘நன்றி கெட்டவனே! ஆரியத்தை நீ சரியாக உணரவில்லை. அது நெருப்பு. நெருங்காதே,’

‘சினத்தைக் கிளப்பாதீர். சிறைச்சாலை திறக்கப்படும்.’

‘அழகிரி! இதோ உன் ஜாதகத்தைக் கணித்து விட்டேன் உன் ஆட்சி அற்பாயுசில் அழியப்போகிறது. வெங்கண்ணா ஒரு பூகம்பம். அதில் மாட்டி மாளப்போகிறாய்’

வெங்கண்ணா ரெளத்ரகாரமாகத் திரும்புகிறான். அழகிரியும் அசைவற்று நின்றவன் ‘கட கட’வெனச் சிரிக்கிறான். அந்த சிரிப்பின் ஒலியைத் தொடர்ந்து ஒரு சித்திரம் காட்டப்படுகிறது.

சேரன் செங்குட்டுவன் மாடலவறையனுக்குமுன் சிரந்தாழ்த்தி நிற்கும் சித்திரமது. அதை உற்றுப் பார்க்கிறான் வெங்கண்ணா, ஒரு பயங்கர மின்னல், திரையில் பளிச்சிடுகிறது, காட்சி மாறுகிறது. கடற்கரையின் வெண்மணல். அதை முத்தமிட்டுத் திரும்பும் பேரலைகள். நீண்ட தெருக்கள். தெருக்களில் டச்சுக்காரர், போர்ச்சுக்கீசியர் நடந்துகொண்டிருக்கின்றனர். இப்படியே காட்சியில் பல பகுதிகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. கடைத் தெரு காட்டப்படுகிறது. குறிப்பாக ஒரு விளம்பரப் பலகை.

‘நயமான சிகப்புக்கள் விற்கப்படும் நல்லவெண்ண செட்டிக்கடை நாகை.’

காட்சி மீண்டும் உருண்டு, கடைசியில் ஒரு தெருக்கோடி தெரிகிறது. அழகான வீடு ஒன்று. அதில் வெங்கண்ணா நுழைகிறான் வீட்டின் வெளிப்புறம் மறைந்துவிடுகிறது. உள்ளே.... வெங்கண்ணா ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

‘செங்கமலதாசன் ஒரு செட்டிப் பெண்ணிடம் வளர்கிறான் என்பது மட்டும் எனக்கு முன்னமே தெரியும்! அந்தப் பெண்ணரசி நீதான் என்பது எனக்குத் தெரியாது... கடவுள்தான் உன்னைக் காட்டிவிட்டார்’

வெங்கண்ணா பேசிமுடிவதற்குள், செட்டிப் பெண்ணின் புருஷனும், ஒரு இளைஞனும் பிரவேசிக்கிறார்கள். வெங்கண்ணா ஆவலாக ஓடி அந்த வாலிபனைக் கட்டிக்கொண்டு அழுகிறான். அவன் அழுவது வெறும் பாசாங்கு என்பது அவன் முகத்தில் பிரதிபலிக்கிறது. வெங்கண்ணா சோக மொழிகள் உதிர்க்கிறான்.

‘இளவரசே!... என் கண்ணே!... நீ உயிரோடு இருக்கிறாயே, அது போதும் அப்பா!... உன் தந்தை வேலுக்கு இரையானார். உன் தாய் நெருப்புக்கு இரையானாள். உன் தஞ்சைத் தரணி... தெகிடு தத்தக்கார்களுக்கு இரையாகிவிட்டது. இனிமேலாவது நாடு செழிக்கவும், மக்கள் நலம் பெறவும், இழந்த பொன்னுடை ஆளுவதற்கு வா!...’

வாலிபன் விழிக்கிறான். ‘அம்மா!’ என்று அவள் முகத்தைப் பார்க்கிறான். அவளும் ஆனந்தக் கண்ணீர் வழிய அவன் முகத்தமிடுகிறாள்.

‘தம்பி! நான் உன் அம்மா அல்ல. நீ...விசயராகவ வேந்தரின் பேரன், மன்னரு நாயக்கரின் மகன். தஞ்சைக் கோட்டை தணலில் வேகும்போது... உன் தாத்தாவும், தந்தையும் மாண்ட செய்தி கேட்டு உன் தாய் தற்கொலை செய்து கொண்டாள். அப்போது உன்னை என் கையில் கொடுத்து “பட்டத்துக்குரியவன். பத்திரமாக பாதுகாத்துக்கொள்’ என்று கூறி உன்னை வளர்க்க இந்தப் பவுன் மூட்டையையும் கொடுத்தாள்.’

பெட்டியிலிருந்து செட்டிப் பெண் ஒரு பவுன் மூட்டையை எடுத்து செங்கமலதாசனிடம் காட்டுகிறாள்.

செங்கமலதாசனின் தலை கம்பீரத்தால் நிமிர்கிறது. அவன் கண்களில் புதுஒளி. ஒரு வீர மூச்சு!....

‘என் தந்தையர் நாடு என்னைவிட்டுப் போய்விட்டதா?’

இளவரசன் கேட்கிறான் சோகமாக! அதில் கோபமும் கலந்துள்ளது, ஊமை வெயில் போல!

‘உன் நாட்டை உனக்காக்கவே இந்த ஊழியன் கிளம்பியிருக்கிறேன். செங்கமலதாசா!...... உடன்புறப்படு.’

வெங்கண்ணா அழைக்கிறான். செங்கமலம் தன் வளர்ப்புப்பெற்றோரை வணங்குகிறான். வளர்ப்புத் தந்தையின் இதழோரப் புன்னகை நெளிகிறது.

‘அந்தணர் பெருமானே!...... அரசைக் கைப்பற்றுவதென்றால் ஆட்பெரும் படை, அணிதேர் புரவி. அனைத்தும் வேண்டுமே. வீணே... செல்வன் செங்கமலத்தை பலியிட்டுவிடாதீர்கள்.’

தந்தை கெஞ்சலுடன் எச்சரிக்கை முழங்குகிறான்.

‘அமோகமான சைன்யம் இருக்கிறது. அதற்கெல்லாம் ஏற்பாடு செய்துவிட்டேன். அழகிரி ஒழிவான்.’

வெங்கண்ணாவின் வெற்றிச் சிரிப்போடு காட்சி திடீரெனத் திரும்புகிறது.

பிறைக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. கொடி நடப்பட்டிருக்கும் உயர்ந்த ஸ்தூபி! அதைப் பின்பற்றி மளமள வென்று கோட்டையின் பல பாகங்கள் நகருகின்றன. பேச்சுக்குரல் கேட்கிறது.

வெங்கண்ணா தான் பேசிக்கொண்டிருக்கிறான்.

‘பீஜபூர் சுல்தான். பிரபு!... இன்னும் கேளுங்கள். மக்கள் பசியால் மாளுகிறார்கள். வறுமையால் வாடுகிறார்கள். அழகிரியின் ஆட்சி அழிந்தால் அக்கிரமம் அழியும். அக்கிரமம் ஒழியும். அந்தணர் வாழ்வர். ஆட்சி செழிக்கும்.

இன்னுங் கேளுங்கள், பீஜபூரின் புகழ்வதை இகழுகிறான் அழகிரி! உங்கள்...... பரந்த படை வலிமையைப் பரிகசிக்கிறான் அற்பன்! நான் அவனைப் பலமுறை எச்சரித்தேன். எரிமலை மேல் விளையாடாதே என்றேன். மக்களுக்காக ஆட்சி நடத்து. இல்லையேல் பீஜபூர் மன்னனை அழைத்து நீதி வழங்கச்செய்வேன் என்றேன். பீஜபூர் தனக்கு ஒரு தூசி என்றுன் பேதை!’

சுல்தான்ஜி! இதோ இருக்கிறான் சொந்த நாட்டுக்குரிய செங்கமலம். தாய் தந்தையற்றவன் நீங்களே அவனுக்குத்தாய் - தந்தை - கடவுள் எல்லாம்! இவன் இழந்த உரிமையை நீங்கள் தான் வாங்கி அருளவேண்டும்.”

இதுவரை மெளனமாக இருந்த சுல்தான் ‘சரி...ஷாஜியின் மைந்தனை அனுப்புகிறேன்’ என்று கூறியபடி பக்கத்து ஆசனத்தைப் பார்க்கிறான். அதில் அமர்ந்திருந்த ஒரு ஆண்மையாளன் கம்பீரமாக எழுந்து நிற்கிறான்.

‘வெங்காஜி! அழகிரியின் மருட்டம் சாயவேண்டும். செங்கமலம் சிம்மாசனம் ஏற வேண்டும். பெரும்படையுடன் புறப்படுக.’

சுல்தானின் ஆணையேற்று வெங்காஜியின் தலை அசைகிறது.

‘வெற்றியோடு திரும்புக.’

சுல்தானின் வாழ்த்து இது!

‘மராட்டியன் மார்பு ரத்தக்கரை படிந்து வெற்றி அவனுக்கு சாதாரண விஷயம். துர்க்கையின் அருள் இருக்கும் வரையில் தோல்வி இல்லை ......’

வெற்றி தான்! வீரமொழியோடு வெங்காஜி வாளை உருவுகிறான். செங்கமலதாசனும் கம்பீரமாக நிமிர்கிறான்.

திரையில் ஒரு நட்சத்திரம் ‘விசுவரூப’மெடுத்து விடுகிறது. ‘தோல்வி இங்கே...வெற்றி தான்!’ என்ற வீர முழக்கத்தோடு கையிலிருந்த வாளை உறையில் போடுகிறான் வெங்காஜி. பேரிகை ஒலித்து நிற்கிறது. செங்கமலதாசனுக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்பதின் அடையாளம் அது.

உடன் ஒரு பயங்கரமான காடு தோன்றுகிறது. உயர்ந்த மலைப்பாறைகளில் ஒரு உருவம். ஓடிக்கொண்டிருக்கிறது. உருவத்தை ‘குளோசப்’பில் பார்க்கிறோம். ஆம் அழகிரி தான் அப்படி ஓடுகிறான்.

‘பாவி...வெங்கண்ணா!’ அவன் வாய் முணு முணுக்கிறது. பாறையிலிருந்து கீழே உருளுகிறான். பேச்சு மூச்சைக்காணோம்.

‘டான்! டான்!’ என்று மணியோசை கிளம்புகிறது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் பெரிய நந்தியை தரிசித்துவிட்டு கை கூப்பியவண்ணம் வெங்கண்ணாவும் செங்கமலதாசனும் பிரகதீஸ்வரர் சன்னதியில் நுழைகின்றனர். வெற்றி முழக்கம் காது செவிடுபடுகிறது. ‘ஆண்டவனுக்கு அர்ச்சனை’ களேபாரப்படுகிறது.

மணியோசையின் ஸ்தாயி குறைந்துவிட்டதே... அரண்மனைக் கொலுமண்டபத்தைப் பார்க்கிறோம்.

செங்கமலதாசன் பேசுகிறான்: ‘தஞ்சையில் மறு மலர்ச்சி உண்டாக்கி மகுடம் புனைந்ததற்காக மராட்டிய வீரர் வெங்காஜி இந்தப் பதினாறு லட்சம் பூவராகன்களும் பெற வேண்டுகிறேன். அத்துடன் சேனையின் செலவுக்கு ஈடாக கும்பகோணம் பாபநாசம், மன்னார்குடி வட்டாரங்களின் வரிப்பணத்தையும் எழுதிக்கொடுக்கிறேன்’

வெங்காஜி: வாழ்க மன்னன்! துர்க்கையின் அருள் சுரக்குமாக!

வாழ்க தஞ்சை!

வெங்காஜி பரிசைப் பெற்றுக்கொள்கிறான். வெங்கண்ணா முகத்தில் பரவசம் பிரகாசிக்கிறது.

திரையில் இரண்டு வாள்கள் மோதிக்கொள்கின்றன. அந்த மின்வெட்டில் அடுத்த காட்சி ஆரம்பமாகிறது. நந்தவனம்! நீர்த்தொட்டிகள்!...

பூஞ்செடிகள்!...பளிங்கு மேடை!...நாம் காண்பது காதலர்கள் அல்ல!......

செங்கமலதாசனும் வெங்கண்ணாவும் உரையாடலில் சிக்கியிருக்கிறார்கள்.

‘வெங்கண்ணா! இன்னொரு சந்தோஷ சமாசாரம்.’

‘என்ன அரசே?’

‘என்னை மகன் போல் வளர்த்தவர்கள் மறக்கக் கூடாதல்லவா?’

‘கண்டிப்பாக மறக்கக் கூடாது. மாதா — பிதா — குரு — தெய்வம்.’

‘அப்பாவையும் அம்மாவையும் தஞ்சைக்கே கூப்பிட்டுவிட்டேன்.’

‘ஆமாம். அரண்மனையில் ஆனந்தமாயிருக்கட்டுமே.’

‘அத்தோடு...அப்பா அகங்குளிரும்படி...செய்யப் போகிறேன்.’

‘செய்யத்தானே வேண்டும். கடமை தான்.’

‘அருமையான பரிசளிக்கப் போகிறேன்.’

‘அளிக்கத்தான் வேண்டும்.’

‘அப்பாவையே அமைச்சராக்க உத்தேசம்.’

‘ஆ!... அபச்சாரம். வளர்த்த வாணிபச் செட்டிக்கு மந்திரிப்பதவி!... அப்படியானால் முடிசூட்டிய வெங்கண்ணாவுக்கு?’

‘வெங்கண்ணா!.. நீங்கள் தான். என் குருவாயிற்றே!’

‘சிறுபிள்ளை! விளையாடுகிறீர். கோவிந்த தீட்சதர் போன்ற பெரியோர்கள் அமர்ந்த மந்திரி பீடத்தில் நீர் மாசு தூவுகிறீர்.’

‘அவர்கள், திக்கற்ற என்னை தாலாட்டி வளர்த்தவர்கள். என் உடலின் ஒவ்வொரு பாகமும் அவர்கள் உப்பால் வளர்ந்தவை. எனக்காக அல்லும் பகலும் கஷ்டப்பட்டார்கள். என் தாயும் தந்தையும் அவர்கள் தானே!’

‘இருக்கலாம். உமது தலையில் மின்னுகிற கிரீடத்தைக் கேளும். உம்மை மன்னுக்கியது யார், என்று அது சொல்லும்.’

‘நீங்கள் தான்! அதை என் உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் சொல்லும். நன்றி மறக்க மாட்டேன்.’

‘மறக்கவில்லையானால் மந்திரிப் பதவி எனக்கே வேண்டும்.’

‘கேவலம் மந்திரி பீடத்தில் உள்ள மோகத்திற்காகவா என்னை மன்னனாக்கினீர்? மக்களுக்கு நல்லாட்சி வேண்டும், எனக் கதறினீரே — உமக்கு ஒரு நல்ல பதவி கிடைக்கும் என்பதற்காகத்தானே?’

‘செங்கமலதாசா! குறும்பு வேண்டாம். கொதிக்கும் கொப்பரையில் குதித்துச் சாகாதே, நன்றி மறந்தாய்! நாயினுங் கீழானாய்!’

‘மன்னிக்கவும். மந்திரி பதவி தருவதாக வாக்களித்துவிட்டேன்.’

‘அதைமாற்றி அமைத்தாக வேண்டும்,’

‘வாக்குறுதியை மீறுவது சரியா?’

‘வெட்டிப் பேச்சு வேண்டாம். விறுவிறு என்று பதில் கூறு.’

‘அமைச்சர் பதவி அப்பாவுக்குத்தான்! அதை மாற்ற முடியாது. தயவுசெய்து என்னை மன்னித்து விடுங்கள்.’

தீவணங்குகிறான் தஞ்சை அரசன். தர்ப்பாகூரர் வெங்கண்ணா தடதடவென ஆத்திர மொழிகளை அள்ளிக்கொட்டுகிறான்.

‘அடே! நீ ஆரியத்தை உணரவில்லை. விஷத்தை நாக்கில் தடவிக்கொள்கிறாய். விபரீதத்தை ஏற்கத் தயாராயிரு. அழகிரியின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறாய். ஆபத்து வெடிக்கப்போகிறது. இனி ஆண்டவன் பொறுக்கமாட்டான்.’

வெங்கண்ணா நந்தவனத்தை விட்டே வேகமாக வெளியேறுகிறான். அவன் வேகத்தில் மோதுண்ட ஒரு மல்லிகை மொட்டு... காற்று முறிந்து கீழே விழுவதைக் காண்கிறோம். செங்கமல தாசன் சோக நடை போடுகிறான். இதையும் பின்னணி சங்கீதத்துடன்... கும்பகோணத்தின் மகாமகக் குளம் காட்சியாகிறது.

காமிராவின் மாயாஜாலங்களில் குடந்தையின் அழகான பகுதிகள் அகப்பட்டு அசைந்தோடுகின்றன. தெருவில் இருவர் பேசிக்கொண்டு போகிறார்கள்.

‘வெங்காஜி, நம்ப ஊரில் தங்கியிருக்கிறாராமே?’

‘தங்குவாரப்பா... தங்குவார். தஞ்சாவூர் ராஜா தான் கும்பகோணத்தை வெங்காஜிக்குக் கொடுத்து விட்டாரே’

தெருவின் மூல வரையில் தான் அவர்களைப் பார்க்க முடிகிறது. பிறகு காட்சியில் ஒரு காரணம்!

வெங்காஜி தன் மாளிகைத் தாழ்வாரத்தில் உலவிக்கொண்டிருக்கிறான். சிந்தனைக் கீறல்கள் நெற்றியில் ஒன்றன் மேல் ஒன்றாகப் படிகின்றன. உலகைக் கொண்டிருந்தவன் நடையை நிறுத்தி வாயைத் திறக்கிறான்.

‘நல்லகதை’ என்று நையாண்டியாக சொல் உதிர்க்கிறான். இதுவரை வெங்காஜியை மட்டுமே கண்ட நாம் இப்பொழுது வெங்கண்ணாவையும் காணுகிறோம் பூணூல் தடவிக்கொண்டே பூசாரி, வெங்காஜியின் பக்கம் அடி போடுகிறான்.

‘மராட்டிய குல மகிபா! தஞ்சாவூர் சிம்மாசனம் தங்களை அழைக்கிறது.’

‘விளையாட்டாக இருக்கிறது.’

‘ஆம். செங்கமலம் அரசியல் விளையாட்டாகத்தான் எண்ணிவிட்டான்.’

‘பாவம் .. சிறுவன்! பக்குவம் வரவேண்டும்’

‘ஷாஜி மைந்தரே! அவனு சிறுவன் இல்லை. விஷ வித்து!... தங்களைக் கொல்ல என்ன யோசனை கேட்கிறான்’

‘அவன் பலம், அவனுக்கே தெரியும். அப்படி யெல்லாம் நினைக்கமாட்டான்’

‘உங்களோடு சண்டை செய்து அவன் ஜெயிக்கவா? அது இல்லை. ஆனால்...’

‘என்ன ஆனால் ...?’

‘வீரரே!... உங்களை நான் இப்போது விருந்துக்கு அழைக்க வந்திருக்கிறேன்’

‘விருந்தா?’

‘கேளுங்கள்! அழைப்பது விருந்துக்கு. அங்கு நடப்பதும் விருந்துதான். ஆனால்... விருந்து உங்களை வீழ்த்திவிடும்.’

‘காரணம்?’

‘செங்கமலத்தின் சூழ்ச்சி! விருந்தில் விஷத்தைக் கலக்க ஏற்பாடு செய்திருக்கிறான்.’

‘நன்றி மறந்த தீயன்! நானுக்கே நமது படையைத் திரட்டுகிறேன். தஞ்சையை ஆளவேண்டு மென்ற என் கனவு... பலிக்கட்டும். மழையை எதிர்க்கிறது மண்மேடு...!’

‘ஆம்! .. அந்த மண்மேடு ரத்த மழையில் கரையப் போகிறது.’

‘இனி தஞ்சைக்கு நானே மன்னன்.’

‘புலிக்கிர் வீரா! மராட்டிய சாம்ராஜ்யம் உதயமாகப்போகிறது. அகம்பாவம் பிடித்த நாயக்க வம்சம் அஸ்தமிக்கப் போகிறது’

‘மராட்டிய வீரத்தை, தஞ்சை மறமுறையும் ரசிக்க ஒரு வாய்ப்பு’

‘அரசே!... தங்கள் ஆட்சிக் காலத்தில் .????’

வெங்கண்ணா விஷயத்தை இழுத்து மறுப்புகிறான்.

‘அந்தணர் வாழ்வார். ஆலயம் செழிக்கும். அக்கிரகாரம் வளரும் அஞ்சாதீர்.’

‘சிவாஜியின் தம்பியல்லவா தாங்கள்!... மகாராஷ்டிர மாவீரரே! வாழ்க! வாழ்க!... வாழ்க அந்தணர் வானவாணினம்... வாழ்க!...’

இங்கே பேச்சு முடிகிறது .. தஞ்சையில் ஒரே அல்லோலம். வீதிக்கு வீதி வீரர் கூட்டம். குதிரைகளின் குளம்புகளில் குழந்தைகள் மிதிபட்டுச் சாகின்ற கோரக்காட்சி! மராட்டியப் படை கோட்டை வாயிலில் நுழையப் போகிறது. அகோர சப்தம் மாறி, அமைதி நிலவுகிறது. தன்னந் தனியாக நிற்கிறான் செங்கமல தாசன். எதிரிகள் கோட்டையில் புகுந்துவிட்டனர். கோட்டை வாயிலைக் காத்திருந்த பீரங்கிகள் மெளன விரதமிருக்கின்றன... புத்த பூதம் உண்ணாவிரதமிருக்கிறதுபோலும். ஏன் என்று கேட்பாரில்லை. எதிரிப் படையின் எக்காளம் வெற்றித் தொனி கொட்டுகிறது. கோட்டை முகப்பில் பறந்த... நாயக்கர்கொடி .. எரிந்துகொண்டிருக்கிறது. அந்த எரியலைகளினூடே வெங்கண்ணாவின் இறுமாப்பான சிரிப்பும் முழங்குகிறது.

செங்கமலதாசனை மீண்டும் பார்க்கிறோம். எங்கே? அரண்மனையிலா? .. இல்லை. இருண்ட ஒரு காட்டுப்பாதையில் காண்கிறோம். அந்த அகாத இருட்டில் கோட்டை வாயிலின் கொடி கொழுந்து விட்டெரிவதை... அந்தக் கொழுந்துச் சிறுவன் தரிசிக்கிறான். ‘கோ’வென அழுகிறான். அந்த அழுகையை மறைத்து அங்கே ஆயிரம் தலைகள் சிரிக்கின்றன. அனைத்தும் வெங்கண்ணாவின் தலைகள்!

சிரிப்பது மட்டுமா?... அவைகள் பேசுகின்றன.

‘டேய்!... சிறுவா!... வெங்கண்ணா வம்சம் நினைத்தால் பட்டமும் கட்டும் — பலிபீடத்தையும் காட்டும்.’

மீண்டும் ஒரே கர்வச் சிரிப்பு! ...

பைத்தியக்காரனைப் போல செங்கமலதாசன் ஓடுகிறான். ஆம்!... தஞ்சையின் மன்னன் அப்படித் தத்தளிக்கிறான்... குடிகாரனைப் போல் தள்ளாடுகிறான். முதலாளியின் முரட்டுச் சவுக்கால் தோல் கிழிய அடிக்கப்பட்ட ஏழைத் தொழிலாளியைப் போல் ஏங்குகிறான்.

ஒரு மரம் அவன் ஆட்டத்தைத் தடுத்து அமைதி வழங்குகிறது. முகமெல்லாம் ரத்தம் வழிய தஞ்சையின் தலைவன் பிணமாகத் தரையில் படுத்துக்கொள்கிறான். அந்தப் பசலுக்கு வெங்கண்ணா அமைத்துத் தந்த பலிபீடம் அதுதான்!...

வெங்கண்ணாவின் சிரிப்பு ஓய்கிறது. இருள் மறைகிறது ...

‘மராட்டிய சாம்ராஜ்யம் உதயம்’ என்ற வார்த்தைகளே கட்டமாக அமைத்துக்கொண்டு, காலக் கதிரவன் உதிக்கிறான். படத்தின் முடிவைக் குறிக்க திரையில் ‘வணக்கம்’ என்ற வார்த்தை குதிக்கிறது. அதற்கு மேலே ஒரு வட்டத்திலே வேதியர் வெங்கண்ணா, வெங்காஜிக்கு மாலை அணிவிக்கிறார்.

மு. கருணாநிதி · பலிபீடம் நோக்கி, முதற்பதிப்பு ஏப்ரல் 1947. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்