பொருளடக்கம்

பலிபீடம் நோக்கி

பகுதி 1 / 3

பலிபீடம் நோக்கி — தொடக்க frame

Towards the Sacrificial Altar — Opening Frame

இத்தலைப்பு மூலக் காப்பகத்தின் வாசிப்புப் பிரிவுக்கான விளக்கக் குறிப்பே; 1947 பதிப்பில் அச்சிடப்பட்ட தலைப்பு அல்ல.

மூல ஸ்கேன் 4-7

X

கீழே 1947 முதற்பதிப்பின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், வரலாற்று எழுத்துமுறை அனைத்தும் மூலத்தின்படியே.

பலிபீடம் நோக்கி

இமயத்தின் பனிப்பாறைகள், சேரன் செங்குட்டுவனின் வீரம் தீட்டிய ஏடுகள். கனக விசயரின் வளைந்த கழுத்துக்கள், அவன் வரலாற்றை விளக்கும் ‘கார்டூன்’ ஓவியங்கள். ஆரியவர்த்தத்தில் உருண்ட தலைகள், அவன் படை வலியைப் பாராட்டிய விமர்சன எழுத்துக்கள். தமிழகத்தில் எழுந்த கண்ணகியின் சிலை, அவன் கலையார்வத்தின் சின்னம்.

வாளேந்தி, தமிழகத்தில் புகழேந்தி வாழ்ந்த வேங்கைப் புலி சேரன் செங்குட்டுவன், தம்பி அமைத்துத் தந்த தமிழச்சியின் கல்லுக்கு சிலை அமைத்தவன். அரசியல் துறையில் ஆரியத்தை எதிர்த்து, அதன் கொழுப்பேறிய இருதயத்தைத் துவைத்துப் பிழிந்த கோமான்.

அந்த வீராதி வீரன் வீழ்ந்தான்.

சிங்கத்தை சுண்டெலி வெற்றி கண்டது போல்- வேங்கையை வெள்ளாடு வீழ்த்தியது போல்- வாளின் கூர்மை வைக்கோல் வீச்சால் மழுங்கியது போல் ஆரியத்திடம் அவன் அடிமைப்பட்டான். மறவேந்தன் மண்புழு போல் நெளிந்தான். மண்டியிட்டான்.

எந்த ஆரியத்தை அரசியல் துறையில் எதிர்த்து தமிழ் நாட்டுக் கற்பின் சார்பில் வென்று, போர்க்கைதியாகப் பிடித்தானோ, அதே ஆரியத்திற்குத் தெண்டனிட்டான். அஞ்சலி செய்தான். அருள் வேண்டி நின்றான்.

மறக்குல வேந்தனை சாய்த்தவன் ஒரு மறக்குல மழவனல்ல! சேரனை சாய்த்தவன் அவன் இனத்தவன் பாண்டியனல்ல! அந்த சூரனை சாய்த்தவன் சோழனுமல்ல!

சோறும், குதுமன்றி எதுவுமறியா ஒரு சோதா, சேரன் செங்குட்டுவனை வீழ்த்தினான். வீரத்தை விலை கேட்கும் ஒரு ‘விருதா’ சேரன் செங்குட்டுவனை வீழ்த்தினான்.

வீழ்த்திய முறை பெருமைக்குரியதா? இல்லை! போர் முனையிலா? இல்லை! போகசாலையை மட்டும் காட்டியா? இல்லை!

யாகசாலையில்!... வீழ்ந்தான்!... வீழ்ந்தான்! ... வீழ்ந்தது தமிழன் மறம்! வீழ்ந்தது தமிழன் கொற்றம்!

குதிரைகளின் குளம்படிச் சத்தம் கேட்கவில்லை. வேழப் படையின் வெற்றி முரசமில்லை. காலாட் படையின் கடுமையான தாக்குதலில்லை. ஊரும் தேருமில்லை. இவை ஒன்றுமே இல்லாமல் சேரன் கோட்டையில் ஆரியம் நுழைந்தது. படைத் தலைவன் மாடலவறையவன். ஆம், அந்தக் காலத்து “மஹா கனம்”! அரசியல் துறையில் வெற்றி கண்ட ஆண்மையாளனைப் பழி தீர்த்துக்கொள்ளப் பலிபீடம் அமைத்தான் அவன்!

அந்த பலி பீடம் நோக்கி சேரனை இழுத்துச் சென்றான்.

ஆரியத்தின் அஸ்திரங்கள் சேரனின் அங்கங்கள் அறுத்திருக்கலாகாதா? சிந்திய ரத்த அணுக்களிலிருந்து சிங்கத் தமிழர் படை ஒன்று தோன்றி இருக்குமே!... அவன் நெஞ்சைப் பிளந்திருக்கக் கூடாதா? அந்த வெடிப்பில் ஒரு புது சமுதாயம் முளைத்திருக்குமே!... அது ஆரியத்தின் கருவை அப்பொழுதே அறுத்திருக்குமே?...

அந்த அஸ்திரங்கள் செங்குட்டுவனின் மானத்தையல்லவா துளைத்து மழுங்கின. யாக நெருப்பில் அவனே பாய்ந்து ‘ஆண்டவனுக்குத் தன்னை அர்ப்பணித்திருக்கலாகாதா? தமிழனின் தனிப் பண்பு, தன்மானம்!’ .. அதை யல்லவா தணலில் வேக வைத்தான்.

கனகவிசயர் தலையில் கல்!

மாடலவறையன் தலையில் பணமுட்டை!

அது அரசியல்! இது மத இயல்! ஆரியம் ஆனந்த நர்த்தனம் செய்தது. பலிபீடத்தில் தமிழரைத் தள்ளுவதற்குப் பல வழிகள் அமைத்தது! ... எங்கும் வரவேற்பு பலகைகள்... ஆரியத்தின் அன்பு(?) அழைப்புகள்.

‘சொர்க்கம் செல்லும் மார்க்கம்,’ ‘தேவலோகத்திற்குப் பாதை,’ ‘வைகுண்ட வழி...’ எல்லாக் கைகாட்டிகளும்... பாதைகளைப் பிரித்துக் காட்டி, கடைசியில் ‘பலி பீடம் நோக்கி’ தமிழரை இழுத்துச் சென்றன.

இந்த ஆட்டு மந்தைகளும் சேரன் சென்ற திக்கில் பயணம் வைத்தன. ஆரிய பலிபீடத்திற்கு அணிவகுத்தன. அணிவகுப்பில் எத்தனை அரசர்கள்... எத்தனை ஆண்மையாளர்கள்...? அய்யகோ...! என் நாட்டுத் தோழீர்!... அங்க பெருகி ஓடும் உதிர ஆறுகளைப் பாருங்கள். நீங்களும் பலிபீடம் நோக்குங்கள்.

வீழ்ந்துபோக அல்ல!... வாழ்ந்து வா! பலிபீடம் நோக்கிகளே !... இதோ மாடலவறையன் மரபிலே ஒருவர்!...

வேதியர் வெங்கண்ணா! திரைப் படமாக உருப்பெற்றிருக்கிறார்... படக்காட்சி ஆரம்பமாகிறது பாருங்கள். படம் உங்களுக்கு ஒரு பாடம் தரட்டும்.

திரையில் ஒரு எரிமலை குமுறுகிறது. ‘குபீர் குபீர்’ என்று நெருப்புக் குழம்பை வாரி வீசுகிறது. அந்த நெருப்பு அபிஷேகத்திற்கு ஆளாகி இடிந்து சரியும் ஆலயங்களின் கோபுரங்கள், மடாலய மதிற்சுவர்கள், பண்ணைக்காரரின் களஞ்சியங்கள் அனந்தம்... அனந்தம்! பயங்கரப் பின்னணி சங்கீதம் ‘கட கடா... குடு குடு..’ என்ற அகோர இரைச்சல்.

எரிமலையைச் சுவராகக்கொண்டு பல எழுத்துக்கள் உருள்கின்றன.

மு. கருணாநிதி · பலிபீடம் நோக்கி, முதற்பதிப்பு ஏப்ரல் 1947. அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்