முரசொலி கடிதங்கள் · 3529
அரசு அலுவலர்களும் அம்மையார் ஜெயலலிதாவும்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3529. அரசு அலுவலர்களும் அம்மையார் ஜெயலலிதாவும்!
உடன்பிறப்பே,
அரசு அலுவலர்கள், சத்துணவு ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், கவுரவ விரிவுரையாளர்கள், இன்னபிற அரசு அலுவலர்களுக்காக நீலிக் கண்ணீருடன் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலர்கள் என்ன பாடுபடுத்தப்பட்டார்கள் என்பதை அவர் இவ்வளவு சீக்கிரத்தில் மறக்கலாமா? போக்குவரத்து ஊழியர்களைப் பற்றிக் கூட ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகிறாரே, அந்த போக்கு வரத்து ஊழியர்கள் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்புடைய சங்கத்திற்கு எத்தனை தொழிலாளர்கள் வாக்களித்தார்கள் என்பது மறந்து விட்டதா? முதல் இடத்திலே தி.மு.க. சார்புடைய சங்கமும், அதற்கு அடுத்து சி.ஐ.டி.யு., சங்கமும், அதற்கடுத்து மூனறா வதாகத் தான் அ.தி.மு.க. சங்கமும் வாக்குகளை போக்குவரத்துத் தொழிலாளர்கள் மத்தியிலே பெற்றன என்ற புள்ளி விவரங்களை ஜெயலலிதா அறிய மாட்டாரா?
அரசு அலுவலர்களுக்காக தற்போது அறிக்கையிலே பாசாங்கு செய்து பரிந்து பேசும் ஜெயலலிதா ஆட்சியில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியாகள் ஆகியோரை அழைத்துப் பேசப் போகிறேன் என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் என்ற முறையில் ஜெயலலிதா அறிவித்த போதிலும், அவர்களை அழைத்துப் பேசாதது மட்டுமல்ல, அதிரடிச் சட்டங்களைப் பிரயோகித்து அவர்களை அடக்கி ஒடுக்கவும், நிர்வாகிகளை கைது செய்யவும், ஆயிரக்கணக்கானவர்களை பணி நீக்கம் செய்யவுமான அடக்குமுறைக் கொடுமைகளை ஏவி விட்டார். இந்தப் பிரச்சினை குறித்து சட்டப் பேரவையில் தரப்பட்ட ஒத்தி வைப்புத் தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள
வேண்டுமென்று எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருந்த தம்பி துரைமுருகன் 25-10-2002 அன்று வற்புறுத்தினார். அப்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஜேக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தன்னைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும், அப்போது பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்றும் தெரிவித்தார். ஆனால் போராட்டக் குழுவினரிடம் போராட்டத்தை கை விட்டு விட்டு வந்தால்தான் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று கூறி அவர்களை சந்திக்கவே மறுத்துவிட்டார். இந்தப் பிரச்சினை குறித்து தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுத்ததோடு தி.மு.கழக உறுப்பினர்களையெல்லாம் அவையை விட்டே வெளியேற்றினர். ஆசிரியர், அரசு அலுவலர் போராட்டத்தில் கலந்துகொண்டு மறியலில் ஈடுபட்ட பொள்ளாச்சி நம்பியமுத்தூர் பள்ளி தலைமை ஆசிரியர் காசிப் பாண்டியன் தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்து மாண்டார். தேனி மாவட்டம், பெரியகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த தேவதானப்பட்டி மஞ்சளாறு அணைப்பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த அப்துல் சத்தார் அ.தி.மு.க. அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து தற்கொலை செய்து கொண்டு இறந்தார். இந்த இரண்டு குடும்பங்களுக்கும் தி.மு.கழக அறக்கட்டளை சார்பில் தலா ஐம்பதாயிரம் ரூபாய் வீதம் நிதி உதவி அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியிலே பத்து நாட்களாக நடைபெற்று வந்த அரசு அலுவலர் போராட்டம் அதற்குமேல் தொடர முடியவில்லை. அரசாங்கம் தன் அராஜகப் பிடிவாதத்திலிருந்து இறங்கி வர மறுத்தது. போராட்டம் நடத்திய சங்கத் தலைவர்கள் தங்களை அரசு அழைத்துப் பேச வேண்டுமென்று தொலைபேசி வாயிலாக கூறிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் ஜெயலலிதாவோ இனி பேச ஒன்றும் இல்லை, பணிக்குத் திரும்பாவிட்டால் ““எஸ்மா”' பாயும், பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று உருட்டி மிரட்டிக் கொண்டேயிருந்தார். போராட்டம் நடத்திய நாட்களுக்கு ஊதியம் கிடையாது என்று முதலில் கூறிய அரசு, அந்த நாட்களை விடுமுறை நாட்களாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமென்று அறிவித்தது. வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும், சஸ்பெண்ட் உத்தரவுகள் ரத்து செய்யப்படும் என்றும், பழிவாங்கும் நடவடிக்கைகள் இருக்காது என்றும் அளித்த உறுதிமொழிகளையேற்று போராட்டம் கைவிடப்பட்டது.
1997ஆம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியின் போது பத்தாயிரம் சாலைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 2001ஆம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில், நிதி நெருக்கடி என்று போலியான காரணம் கூறி, சாலைப் பணியாளர்களை பணி நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. அந்தச் சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் தி.மு. கழக ஆட்சி அமைந்தவுடன் பணி தரப்பட்டு அவர்கள் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தச் சாலைப் பணியாளர்கள்தான் அ.தி.மு.க. ஆட்சியிலே தாங்கள் வேலையில்லாமல் இருந்த 41 மாதங்களை பணியிலே இருந்ததாக கணக்கிலே கொள்ள வேண்டுமென்று கேட்டு சென்னையிலே நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். அந்தச் சாலைப் பணியாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முக்கிய காரணமே ஜெயலலிதா ஆட்சிதான். நேற்றையதினம் அவர்கள் காவலர்கள் தடுத்தும் கேளாமல் புதிய தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்திட முற்பட்டபோதுதான் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். தலைமைச் செயலகத்திலிருந்து மதியம் வீட்டிற்கு நான் புறப்பட்டபோது, சாலைப் பணியாளர்களைப் பற்றிய செய்தி எனக்கு கூறப்பட்டவுடன், நான் என் காரை நிறுத்தி, என்னுடைய பாதுகாப்பிற்காக வந்து கொண்டிருந்த காவல் துறை அதிகாரிகளை அழைத்து நேராக சாலைப் பணியாளர்களும், மற்றும் அவர்களோடு இணைந்து ஒரு சில அலுவலர்களும் உண்ணா விரதம் இருந்த இடத்திற்கே நேராகச் சென்று அவர்களின் பிரதிநிதிகளை என்னைச் சந்திக்கச் செய்யுமாறு கூறச் செய்தேன். அவர்களும் அவ்வாறே அந்த அலுவலர்களிடம் சென்று பேசி, அவர்களின் பிரதிநிதிகள் ஐந்தாறு பேரை என் இல்லத்திற்கே அழைத்து வந்தார்கள். அந்த ஐந்தாறு பேரிடம் அரசின் மூத்த அதிகாரிகளை என் வீட்டிற்கே அழைத்து அந்த அலுவலர்களிடம் பேசச் செய்தேன். பின்னர் அவர்கள் என்னைச் சந்தித்தபோது படித்தவர்களாகிய நீங்கள் இப்படிச் செய்யலாமா என்று கூறிவிட்டு பின்னர் நிகழ்ச்சிகளிலே கலந்து கொள்ளச் சென்றேன்.
இதைப்பற்றி எதுவும் தெரியாத ஜெயலலிதா விரைவில் தேர்தல் வரப்போகிறது என்றதும், அவசர அவசரமாக இன்று விடுத்துள்ள அறிக்கையில் உண்ணாவிரத அறப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களை அழைத்துப் பேச வேண்டு மென்று தெரிவித்துள்ளார். அவருடைய ஆட்சிக் காலத்தில் அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசுவதாகக் கூறியபடி
பேச மறுத்தவர், அந்த அரசு அலுவலர்களை யெல்லாம் நள்ளிரவில் அவர்கள் வீடு புகுந்து கைது செய்து சிறையிலே அடைத்தவர், அந்த அரசு அலுவலர்கள் நீதி மன்றங்களில் முறையிட்ட போதும் அவர்களை எதிர்த்து கடுமையான நடவடிக்கை எடுத்தவர் தற்போது நான் என் வீட்டிற்கே அரசு அலுவலர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசியதைப் பற்றி தெரிந்து கொள்ளாமலே அவர்களை அழைத்துப் பேச வேண்டுமென்று அறிக்கை விடுகிறார் என்றால் அந்த அரசு அலுவலர்களே சிரிக்க மாட்டார்களா? நேற்று முன்தினம் கூட, அதாவது 25-2-2011 அன்று தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பிலும் - தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம ஊழியர் சங்கத்தின் சார்பிலும் - தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்றச் சங்கத்தின் சார்பிலும் - தமிழ்நாடு நில அளவைத் துறை சங்கங்களின் சார்பிலும் அதன் கூட்டமைப்பு நிர்வாகிகள் தனித்தனியாக வந்து என்னை நேரில் சந்தித்ததோடு - தி.மு. கழக அரசு, அதன் அலுவலர்களுக்காக தொடர்ந்து செய்து வரும் நற்காரியங்களுக்காக நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களது எஞ்சியுள்ள கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் தங்கள் போராட்டங்களை உடனடியாகத் திரும்பப் பெற்று பணிக்குத் திரும்புவதாக முடிவு செய்திருப்பதாகவும் என்னிடம் கூறிச் சென்றார்கள். அந்தச் செய்தி ஏடுகளிலும் நேற்றையதினம் வெளிவந்துள்ளது. அரசு அலுவலர்களின் மிகப் பெரிய சங்கமான அரசு அலுவலர் ஒன்றியத்தின் தற்போதைய தலைவரான திரு. இரா. சண்முகராஜன் அவர்களும், அவரது சங்க நிர்வாகிகளும் என்னைச் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டதோடு, இன்று அவர்கள் சங்கத்தின் சார்பில் ஏடுகளில் வெளியிட்டுள்ள அறிக்கையிலும், “தமிழகத்தில் அய்ந்தாம் முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழக மக்கள் அனைவரும் நலமோடும் வளமோடும் வாழவேண்டும் என்பதைக் குறிக்கோளாக - அடிப்படையாகக் கொண்டு பொற்கால ஆட்சி நடத்தி வருகிறார்கள். தமிழக அரசில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் வாழ்வில் மகிழ்ச்சியையும், ஒளியையும்
ஏற்படுத்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி வைத்துள்ளார்கள்” என்று தெரிவித்திருப்பதோடு, தமிழக அரசின் கவனத்தை
ஈர்க்கும் பொருட்டு பத்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்
கோரி ஒரு நாள் உண்ணாவிரதம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்ட தென்றும், ஆனால் அந்தச் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் என்னைச் சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தை அடிப்படையில் தங்களின் பத்து அம்சக் கோரிக்கைகள் கனிவுடன் பரிசீலிக்கப்படும் என்றும், அவற்றின் மீது சாதகமான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தமிழக முதல்வர் அளித்த உறுதி மொழியை ஏற்று ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் ரத்து செய்யப்படுகிறது என்றும் கூறி அதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்தச் செய்திகளையெல்லாம் மறைத்து விட்டு அரசு அலுவலர்களின் அபிமானத்தைக் கொஞ்சமாவது பெற முடியாதா என்ற நப்பாசை யில் ஜெயலலிதா அறிக்கைவிட்டு, அந்த அலுவலர்கள் அ.தி.மு.க. ஆட்சியிலே பட்ட சிரமங்களையெல்லாம் நினைவுபடுத்தி, நுணலும் தன் வாயால் கெடும் என்பதைப் போல நடந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதா தனது அறிக்கையிலே சத்துணவு ஊழியர்கள்
பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்த ஆட்சியில் 2
இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள்
பயன்பெற வேண்டும் என்பதற்காக காலமுறை ஊதியம் அளித்ததோடு ஓய்வூதியம் தரவும் ஒப்புக் கொண்டிருக்கின்றோம்.
ஜெயலலிதாவின் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட
எஸ்மா, டெஸ்மா சட்டங்களை நீக்கி அரசு அலுவலர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பறிக்கப்பட்ட சலுகைகளை மீண்டும் வழங்கியதோடு - 1-1-2006 முதல் தமிழகத்தில் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 155 கோடியே 79 இலட்சம் ரூபாய் கூடுதல் செலவில் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக 11 ஆயிரத்து 93 கோடி ரூபாய் அரசு அலுவலர், ஆசிரியர்களுக்கு நிலுவைத் தொகையாக மட்டும் அனுமதிக்கப்பட்டு புதிய வரலாறு படைக்கப்பட்டிருப்பதே இந்தக் கழக ஆட்சியிலேதான்.
ஊதியக் கமிஷன் பரிந்துரையிலே சில முரண்பாடுகள் இருப்பதாக அரசு அலுவலர்களின் சங்கங்கள் தெரிவித்த நேரத்தில் அதனையேற்று 2 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன் பெறும் வகையில் 200 கோடி ரூபாய் கூடுதல் செலவிலே ஒரு நபர் குழுவின் பரிந்துரைகளையேற்று அவற்றை 1-8-2010 முதல் நடை முறைக்குக் கொண்டு வந்தோம். ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை நீக்கி 163 கோடி ரூபாய்ச் செலவில் கூடுதல் சலுகைகள் அளித்ததின் வாயிலாக 2 இலட்சத்து 73 ஆயிரம் ஆசிரியர்கள் பயன் பெற்றனர். அரசு அலுவலர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும், சத்துணவு பணியாளர்களுக்காகவும், அங்கன்வாடி ஊழியர்களுக்காகவும், சாலைப் பணியாளர்களுக்காகவும் தி.மு. கழக அரசு செய்துள்ள சாதனைகளையெல்லாம் பட்டியலிடுவதென்றால் ஒருநாள் கடிதம் போதாது. அதையெல்லாம் மறைத்துவிட்டு ஜெயலலிதா தற்போது ஏதோ திடீரென்று அரசு அலுவலர்களிடம் அக்கறை கொண்டவரைப் போல அறிக்கை நாடகம் போட்டால் அதனை நம்பி ஏமாற இனியும் அவர்கள் தயாராக இல்லை. கிடப்பதெல்லாம் கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மனையிலேவை என்பதைப் போல ஜெயலலிதா உண்மை நிலைமைகளை மறைத்து விட்டு என்னையும் என் குடும்பத்தினரையும் கைது செய்ய வேண்டும், விசாரணை நடத்த வேண்டுமென்றெல்லாம் புலம்புகின்றார் என்றால் அதற்குக் காரணம் இன்னும் சில நாட்களில் அவர் மீதான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கிலே விசாரணை, தீர்ப்பு என்றெல்லாம் தன்மீது எங்கே சட்டத்தின் பாய்ச்சல் நிகழ்ந்து விடுமோ என்கின்ற அச்சம்தான்! என்ன செய்வது? வினை விதைத்தவர்கள் வினையை அறுவடை செய்துதானே ஆகவேண்டும்! அன்புள்ள, மு.க. 27-02-2011
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 326–331. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.