அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3527

முரசொலி கடிதங்கள் · 3527

நஞ்சைக் கக்கிடுவோர்; நெஞ்சைத் தொட்டுச் சொல்வாரா? (2)

நாள் 13.1.2011சுமார் 6 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3527. நஞ்சைக் கக்கிடுவோர்; நெஞ்சைத் தொட்டுச் சொல்வாரா? (2) உடன்பிறப்பே,

ஒரு சில பத்திரிகைக்காரர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் - கழக அரசுக்கும் விரோதமாக எந்த அளவிற்கு செய்திகளையெல்லாம் திரித்து வெளியிடுகிறார்கள் என்பதற்குச் சான்றாக; ஏழைகளுக்கு இலவசமாக இரண்டு ஏக்கர் வரை நிலம் வழங்கும் திட்டத்தைப் பற்றி, அந்தத் திட்டத்திலே ஒருசில முறைகேடுகள் நடை பெற்றதாக “இந்தியா டுடே” இதழ் வெளியிட்டதிலே எந்த அளவிற்கு உண்மைக்கு மாறாக சிதைக்கப்பட்ட செய்தியை சிறப்புக் கட்டுரை என்ற பெயரால் வெளியிட்டிருக்கிறார்கள் என்பதற்கு பல்வேறு உதாரணங்களை எடுத்துக்காட்டி நேற்றையதினம் உனக்கு விரிவாக எழுதியிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வேறு சில எடுத்துக்காட்டுகளையும் உனக்கு எடுத்துக்காட்டிட விரும்புகிறேன்.

“தினமணி” நாளிதழ் பற்றி உனக்கே தெரியும். கழக அரசுக்கு எதிராக தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை அந்த இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த இதழில் “மக்கள் கருத்து” என்ற தலைப்பிலானாலும், “கேலிச் சித்திரம்” ஆனாலும், “தலையங்கம்” ஆனாலும் எந்த அளவிற்கு நமக்கு எதிராகச் செய்திகளை வெளியிட முடியுமோ அந்த அளவிற்கு எழுதி வருகின்றது.

10-1-2011 தேதிய “தினமணி” இதழின் முதல் பக்கத்தில் எட்டு கலம் செய்தியாக “குடும்பச் சேனல்களுக்கு கோடிகளில் விளம்பரம்” என்ற தலைப்பில் மிகப் பெரிதாக எழுதியுள்ள செய்தியில் - “108 இலவச ஆம்புலன்ஸ் சேவை” தொடர்பான விளம்பரங்களுக்காக என்னுடைய குடும்பத்திற்குச் சொந்தமான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகளுக்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு விளம்பரங்கள் தரப்பட்டுள்ளன என்றும் - அந்தத் திட்டத்தைத் தொடங்கியதற்குக் காரணமே சுய நலம்தான் என்பதைப் போலவும் எழுதப்பட்டுள்ளது.

108 இலவச ஆம்புலன்ஸ் சேவையினால் பயன் பெறும் ஏழையெளிய தமிழ் நாட்டு மக்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி அன்றாடம் மனம் திறந்து பாராட்டுகிறார்கள். அந்தத் திட்டம் எந்த அளவிற்கு வெற்றிகரமாக நடைபெறுகிறது என்பதைப் பற்றியும் - தாங்கள் உயிர் பிழைக்க அந்தத் திட்டம் எந்த அளவிற்கு உதவியாக இருந்தது என்பதைப் பற்றியும் பல ஏடுகளில் பல கட்டுரைகள் வாயிலாக வெளி வந்திருக்கின்றன. அந்தத் திட்டம் மத்திய அரசின் உதவியோடு செயல்படுகின்ற ஒரு திட்டம் ஆகும். அந்தத் திட்டத்தினால் கழக அரசுக்கு மிகப் பெரிய பெயர் வருவதை ஒரு சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் வெளிப்பாடுதான் “தினமணி” எழுதியுள்ள செய்திக் கட்டுரை. குந்தி தேவிக்கு முன்பாக தனக்குக் குழந்தை பிறந்துவிட வேண்டுமென்று ஆத்திரப்பட்ட காந்தாரி அம்மிக் குழவியை எடுத்து அடி வயிற்றிலே குத்திக் கொண்டாள் என்று பாரதத்திலே ஒரு உபகதை உண்டு. அதைப் போல எப்படியாவது இந்தத் திட்டத்திற்கு ஒரு ஊனம் வந்துவிடக் கூடாதா என்று “தினமணி” நாளிதழ் குடும்பச் சேனல்களுக்கு கோடிகளில் விளம்பரம் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. கோடிகளில் விளம்பரம் என்கிறார்களே, எத்தனை கோடிகள் என்று செய்தியைப் படித்துப் பார்த்தால் - ஒரு கோடி ரூபாய் இதுவரை விளம்பரமாக செலுத்தப்பட்டிருக்கிறதாம்! எத்தனை நாள் விளம்பரத்திற்காக இந்த ரூபாய்! அதைப் பற்றியோ, இந்த இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த விளம்பரம் தரப்பட்டிருக்கிறதா என்ற விவரங்களையெல்லாம் கெட்டிக்காரத்தனமாக அவர்கள் வெளியிடவில்லை. தினமணியில் வந்த இந்தச் செய்தியைப் பார்த்து விட்டு நான் சும்மாயிருந்து விடவில்லை. உடனடியாக அது பற்றிய முழு விவரமும் எனக்கு வரவேண்டும் என்று கூறினேன். அவசர மருத்துவ ஊர்தி 108 இலவச சேவைத் திட்டத்தின் உதவி அதிக அளவில் குறிப்பாகக் கிராமப்புற ஏழை மக்களுக்குக் கிடைத்திட வேண்டும் என்பதற்காக இத்திட்டம் தொடர்பான விளம்பரங்கள் மக்கள் விரும்பிப் பார்க்கும் பல்வேறு தொலைக் காட்சிகளுக்கும் அளிக்கப்படுகின்றன என்றும், சன் தொலைக் காட்சிக்கும் கலைஞர் தொலைக்காட்சிக்கும் மட்டும் அளிக்கப்படுவதில்லை எனறும் எனக்கு விளக்கம் கூறினார்கள்.

பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு விளம்பரம் தரப்படுகிறது என்றால் எந்தெந்த தொலைக் காட்சிகள் என்று விவரம் கேட்டேன். இந்த விளம்பரங்கள் சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி ஆகியவைகளுக்கு மட்டுமல்லாமல், பொதிகை தொலைக்காட்சி, தூர்தர்ஷன், விஜய் தொலைக்காட்சி, மெகா தொலைக்காட்சி, எஸ்.எஸ். மியூசிக் ஆகிய தொலைக்காட்சிகளுக்கும் அளிக்கப்படுவதாகக் கூறினார்கள். ஆனால் இந்த விவரங்களையெல்லாம் தினமணி நாளிதழ் மறைத்து விட்டு - சன் தொலைக் காட்சிக்கும், கலைஞர் தொலைக்காட்சிக்கும் மட்டும் விளம்பரம் தரப்பட்டதைப்போல முதல் பக்கத்தில் கொட்டை யெழுத்துக்களில் செய்தி வெளியிட்டிருப்பது நியாயம்தானா?

இவ்வாறு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யப்பட்ட காரணத்தினால்தான் 108 ஊர்தியை அழைப்பவர்கள் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 14 ஆயிரம் என்பது தற்போது 30 ஆயிரம் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளது. மக்கள் இந்த அளவிற்கு விரும்பி, பயன் பெறுகின்ற ஒரு நல்ல திட்டத்திற்கு ஏதாவது குதர்க்கம் சொல்ல வேண்டும் என்ற நோக்கத் தோடு “தினமணி” கொட்டை எழுத்துக்களில் அதுவும் முதல் பக்கத்தில் வெளியிடுகிறது என்றால் எந்த அளவிற்கு அவர்களுக்கு இந்த ஆட்சியின் மீது குரோதம் இருக்கிறது என்பது புரிகிறதா அல்லவா?

“தினமணியின் இந்தச் செய்தியைப் பார்த்ததும் “தீக்கதிர்” நாளிதழுக்குப் பொறுத்துக்கொள்ள முடியுமா? தினமணியில் செய்திதானே வந்துள்ளது, தீக்கதிரில் இதே செய்தியை வைத்து தலையங்கமே தீட்டலாம் என்று அவசர அவசரமாக இந்த விளம்பரங்களை வைத்து தமிழக அரசைக் கண்டித்து ஒரு தலையங்கமே இரண்டு நாட்களாக எழுதி விட்டார்கள். பிரதான எதிர்க்கட்சியோடு கூட்டணி வைத்துக் கொள்ளத் துடிக்கும் கட்சி அல்லவா? அந்தக் கட்சியின் தலையங்கத்தில் “மேலும் கூர்மையோடு கவனித்த போதுதான் இந்த விளம்பரங்களை இரண்டு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மட்டுமே தந்துள் ளார் என்பது தெரிந்தது” என்று எழுதியிருக்கிறார்கள். இந்த இரண்டு தொலைக்காட்சிகளைத் தவிர விஜய் தொலைக்காட்சிக்கும், தூர்தர்ஷன் மற்றும் பொதிகைக்கும் இதே விளம்பரம் கொடுக்கப்பட்டதாக அரசின் சார்பில் தெரிவித்திருக்கிறார்களே, அது உண்மையா, பொய்யா?

மேலும் தீக்கதிர் கிண்டலாக, மக்களுக்கு வசதி செய்து தரும் இந்தச் சேவைக்காக சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் இலவசமாக சேவை செய்கிறார்களோ என்றும் எழுதியுள்ளது. மக்களுக்கு வசதி செய்துதரும் பல திட்டங்களைப் பற்றி அரசின் சார்பில் விளம்பரங்கள் தீக்கதிர் இதழில் பல முறை வெளியிடப்பட்டதே, அப்போதெல்லாம் தீக்கதிர் இலவசமாக அந்த விளம்பரங்களுக்கு கட்டணம் தேவையில்லை என்றுதான் கூறியதா?

மேலும் தீக்கதிர் தனது தலையங்கத்தில் “எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழக்க மிட்டவர்கள் எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்று மாறிவிட்டார்கள்” என்று எழுதியிருக்கிறார்கள். இதிலே என்ன ஊழல்? அரசு ஆறு நிறுவனங்களுக்கு விளம்பரம் தருகிறபோது இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் தந்துள்ளது. அது ஊழலா? அரசின் சார்பில் பொது மக்கள் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்தால் அது ஊழலுக்கு அடையாளமா? தீக்கதிர் கூட்டணி சேரத் துடிக்கும் அ.தி.மு.க. தலைவி 66 கோடி ரூபாய்க்குச் சொத்துக் குவித்து, வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறதே, அது ஊழலாகத் தெரியவில்லையா? இதே கட்சிக் காரர்கள் தலைமைச் செயலகத்திற்கே வந்து ஜெயலலிதா சிறுதாவூரில் “தலித்”களுக்கு அரசின் சார்பில் தரப்பட்ட நிலங்களையெல்லாம் ஆக்ரமித்துக் கொண்டதாக புகார் மனு கொடுத்து சிவசுப்பிரமணியம் கமிஷன் அமைக்கப்பட்டதே, அப்போது ஊழலாகத் தெரிந்தது, இப்போது உண்மையாகத் தெரிகிறதா? தினமணியும், தீக்கதிரும் இப்படியெல்லாம் உண்மைக்கு மாறாக பொய்ச் செய்திகளை உண்மைபோல எழுதினாலும் இந்தத் திட்டத்திற்கு மக்களிடம் இருக்கின்ற செல்வாக்கை மறைத்திட முடியுமா? இந்தத் திட்டத்தின் வாயிலாக உயிர் பெற்ற ஏழையெளிய மக்கள் இவர் களின் சூது வலையில் நிச்சயமாக சிக்க மாட்டார்கள்!

இந்தியா டுடே, தினமணி, தீக்கதிர் வரிசையிலே 11-1- 2011 தேதிய “தினமலர்” நாளிதழில் மற்றும் ஓர் செய்தி முதல் பக்கத்திலே பெரிய அளவில் புகைப்படத்தோடு வெளிவந்துள்ளது. “ரேஷன் கார்டு கேட்டு சாபம் விட்ட ஊனமுற்ற தம்பதி” என்பது அந்தச் செய்திக்கான தலைப்பு. மாடிப்படிகளில் இரண்டு மாற்றுத் திறனாளிகள் தங்கள் குழந்தையோடு இறங்கிவருவதைப் போன்ற படத்தை வெளியிட்டு, அவர்களுக்கு மூன்றாண்டு

காலமாக ரேஷன் கார்டு தராமல், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இழுத்தடித்து வருவதாகவும், அவர்கள் தினமலர் செய்தியாளரிடம் கதறி அழுதனர் என்றும் படிப்பவர்கள் மனதைத் தொடுகின்ற அளவிற்கு செய்தி வெளியிட்டுள்ளார்கள்.

இந்தச் செய்தியை நான் படித்தவுடன் துடித்துப் போய் செயலாளரை அழைத்து கடிந்து கொண்டதோடு, உடனடியாக இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறினேன். உடனடியாக ராமனாதபுரம் மாவட்ட ஆட்சியரோடு தொலைபேசியிலே தொடர்புகொண்டு - மாவட்ட ஆட்சித் தலைவரும் இதுபற்றி உடனடியாக விசாரித்து, முதலமைச்சர் அலுவலகத்திற்கு காலை 10.30 மணிக்கெல்லாம் “பேக்ஸ்” மூலமாக பதில் அறிக்கை அனுப்பியிருக்கிறார்.

அந்தப் பதில் அறிக்கையில், ரேஷன் கார்டு கிடைக்காத அந்தத் தம்பதியினர் இருவரும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டவர்கள் என்றும், காதலுக்கு பெற்றோர் அனுமதிக்க வில்லை என்றும், இருவரும் தற்போது முஸ்லீம் மதத்திற்கு மாறி விட்டதாகவும், ரேஷன் கார்டு கேட்டு 9-2-2010இல் மனு செய்ததாகவும், ஆனால் அவர்களுடைய பெற்றோர் பழைய குடும்ப அட்டைகளைக் கொடுக்க மறுப்பதாகவும் 10-1-2011 அன்றுதான் மக்கள் குறைதீர்க்கும் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மனு கொடுக்கிறார்கள்.

இந்த மனு மீது விசாரணை நடத்தியபோது 9-2-2010இல் அவர்கள் மனு கொடுத்ததற்கான எந்தப் பதிவும் இல்லை. இவர்களது பெற்றோர்களின் குடும்ப அட்டைகளைப் பரிசீலனை செய்தபோது அதிலே இவர்கள் இரண்டு பேருடைய பெயர்களும் அதிலே இடம் பெறவில்லை. எனினும் இவர்கள் மாற்றுத் திறனாளிகள் என்பதைக் கருதி 11-1-2011 அன்று காலையிலேயே புதிதாக குடும்ப அட்டை ஒன்று வழங்கப்பட்டு விட்டது. இவர்கள் ஏற்கெனவே மனு கொடுத்து உண்மையிலேயே கால தாமதம் ஏற்பட்டிருக்குமேயானால், அதற்குக் காரணமானவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் எனக்கு அனுப்பிய அறிக்கையிலே தெரிவித்துள்ளார்.

ஆனால் “தினமலர்” நாளேடு முதல பக்கத்திலே அந்த மாற்றுத் திறனாளிகள் மாடிப்படிகளில் பரிதாபமாக இறங்குவதைப்

போல படம் எடுத்து, மூன்று ஆண்டு காலமாக அவர்கள் ரேஷன் கார்டிற்காக இந்த ஆட்சியிலே அலைவதைப்போல செய்தி வெளியிடுகிறார்கள் என்றால் எந்த அளவிற்கு காழ்ப்புணர்ச்சி இந்த அரசின் மீது அவர்களுக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா? மேலும் “தமிழக காவல் துறையில் மகளிர் கமாண்டோ படை கலைப்பு” என்று ஒரு செய்தி கொட்டை எழுத்துக்களில் சில ஏடுகளில் வந்துள்ளது. நாம்தானே காவல் துறைக்கு அமைச்சர் - நாம் எப்போது மகளிர் கமாண்டோ படையைக் கலைத்து கோப்பிலே கையெழுத்திட்டோம் என்று விசாரிக்கச் சொன்னேன். பெண் கமாண்டோ படைப் பிரிவைக் கலைப்பதற்கான எவ்வித ஆணையும் வெளியிடப்பட வில்லை. கமாண்டோ பயிற்சி முடித்த பெண் கமாண்டோக்கள் தமிழ்நாடு சிறப்புக் காவல் அணிகள், மாநகர-மாவட்ட சேம நலப்படைகளில் தொடர்ந்து பணி புரிந்து வருகிறார்கள். எனவே நாளேடுகளில் இன்று இது சம்பந்தமாக வெளிவந்த செய்திகள் எல்லாம் உண்மைக்கு மாறானதாகும். யாராவது ஒருவர் நம்மிடம் வந்து ஒரு செய்தியைக் கூறும்போது, அது உண்மையா என்று கேட்டால், “பத்திரிகையிலேயே வந்திருக்கிறது” என்று அந்தச் செய்தி எவ்வளவு உண்மை என்பதை விளக்கிட உதாரணமாகக் கூறிய காலம் போய் - பத்திரிகைச் செய்தி தானே? அதுவும் அந்தப் பத்திரிகைதானே? உண்மைச் செய்தி என்ன? என்று விசாரிக்கக் கூடிய அளவிற்கு சில ஏடுகள் தற்போதெல்லாம் செய்திகளைத் தங்கள் வசதிக்குத் திசை திருப்பக்கூடிய வகையில் வெளியிடுவதும் - அதுவும் இந்த அரசைக் குறை கூறக் கூடிய செய்திகள் என்றால், குதூகலத்தில் துள்ளிக் குதித்து, அதற்கு கண் வைத்து, மூக்கு வைத்து பூதாகாரமாக அதனை ஆக்கி முதல் பக்கத்திலே கொட்டை எழுத்துக்களில் வெளியிடுவதும் நியாயம்தானா? பத்திரிகை தர்மம்தானா? என்ற கேள்விகள் பத்திரிகையாளர்களுக்காக அடுக்கடுக்கான சாதனைகளை நிறைவேற்றியவன் என்ற முறையில் என்மனதில் எழுவது நியாயந்தானே? அன்புள்ள, மு.க. 13-1-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 312–317. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்