அடக்கம்

முரசொலி · தொகுதி 44 · கடிதம் 3526

முரசொலி கடிதங்கள் · 3526

நஞ்சைக் கக்கிடுவோர்; நெஞ்சைத் தொட்டுச் சொல்வாரா?

நாள் 12.1.2011சுமார் 8 நிமிட வாசிப்பு
X

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.

3526. நஞ்சைக் கக்கிடுவோர்; நெஞ்சைத் தொட்டுச் சொல்வாரா?

உடன்பிறப்பே,

தி.மு. கழகம் என்றால், தி.மு.கழக ஆட்சி என்றால் பொது மக்கள் வரவேற்று அதன் திட்டங்களினால் பயன்களைப் பெற்று வருகின்ற நிலையில், அதைக் கண்டு எத்தனை பேர் பொச்சரிப்பு கொள்கிறார்கள், பொறாமைப்படுகிறார்கள் என்பதற்கு உதாரணமாக, தேர்தல் நெருங்க நெருங்க ஒருசில ஏடுகள் இந்த அரசைக் குறை கூறி பல்வேறு செய்திகளை தங்கள் ஏடுகளிலே வெளியிட்டு வருவதை நீயும் அறிவாய்; நானும் அறிவேன். உன்னைப் பொறுத்தவரையில் அதைப் படித்து விட்டு அடுத்த நிமிடமே அதனை உதாசீனப் படுத்தி விட்டுப் போய் விடுகிறாய். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நான் அப்படியிருந்து விடுவதில்லை. உடனடியாக அந்தச் செய்தியிலே ஏதாவது உண்மை இருக்கிறதா என்று அறிந்து கூறும்படி என்னுடைய செயலாளர்களிடம் உடனடியாகத் தெரிவித்து, அதுபற்றியே மீண்டும் மீண்டும் அவர்களிடம் கேட்டு உண்மையைத் தெரிந்து கொள்கின்ற வரையில் அமைதிகொள்வதில்லை.

இப்படி கடந்த இரண்டு மூன்று நாட்களாக வருகின்ற செய்திகளில் ஒன்றுதான் இரண்டு ஏக்கர் வரை இலவசமாக ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டம். இந்தத் திட்டத்தைப் பற்றி “இந்தியா டுடே” தமிழ் இதழில் 29-12-2010 தேதியில் “தரிசாகும் திட்டம்” என்ற தலைப்பில் ஐந்து பக்கங்களில் புகைப்படங்களுடன் வந்துள்ள கட்டுரையை எடுத்து வைத்துக் கொண்டுதான் - அதிலே உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ளாமல், சில எதிர்க்கட்சிகள் நிலம் வழங்கும் திட்டத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெறுவதாகச் சொல்லி வருகிறார்கள்.

இந்தப் புகார்கள் குறித்து சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களோடு தொடர்புகொண்டு, வெளியிடப்பட்ட முறைகேடுகள் குறித்து நேரடியாக விசாரித்து விளக்க அறிக்கையினை உடனடியாக அனுப்பி வைக்கவேண்டுமென்று தெரிவித்ததின்பேரில், மாவட்ட ஆட்சியர்களும் நேரடியாக விசாரணை செய்து, அறிக்கைகளை அனுப்பியுள்ளனர். விபரங்கள் பின்வருமாறு :

1. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: பவானி வட்டம், அந்தியூர் “ஏ' கிராமப் பகுதியில் நிலமில்லாத ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் (சர்வே எண். 82/6, 82/7, 82/8, 82/9, 106/3, 117/3, 212/6, 229/2) இப்பகுதியின் அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனின் உறவினர்கள், நெருக்க மானவர்கள் ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ ஆய்வாளர் கண்ணன் என்பவருக்கு இந்தப் பகுதியில் நிலம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவர் அமைச்சர் சாமிநாதனுக்கு வேண்டியவர் என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலரின் விளக்கம்: குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களில் மொத்தம் 2.94.5 எக்டேர் நிலம் 8 பேருக்கு ஒப்படை செய்யப்பட்டு, அனைத்தும் பயனாளிகளின் அனுபவத்தில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவ ஆய்வாளர் கண்ணன் என்பவருக்கு இந்த கிராமத்தில் நிலம் ஏதுமில்லை. உண்மைநிலை இப்படியிருக்க, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களைத் தொடர்புபடுத்தி வெளியிடப்பட்ட செய்தி முற்றிலும் தவறானது.

2. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகாவில் தேவண்ணக்கவுண்டனூரில் மலைப் பகுதியில் ஒதுக்கப்பட்ட இலவச நிலம் உள்ளூர் அரசியல்வாதிகள்

கையில் சிக்கியிருக்கிறது. “எங்கள் பகுதி தி.மு.க. பஞ்சாயத்துத் தலைவர் அந்த மலைப்பகுதி நிலத்தை (சர்வே எண். 489/5லிருந்து 489/21 வரை) அபகரித்து ஜே.கே.மைனிங் அண்ட் கெமிக்கல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி நடத்தி வருகிறார்” என்கிறார் அந்த ஊரைச் சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர். அரசு இந்த ஊரைச் சேர்ந்த 150 பேருக்கு இலவச நிலங்களை அறிவித்து 3 வருடங்கள் ஆகியும், அந்த நிலம் இருக்கும் இடம்கூட அவர்களுக்குத் தெரியவில்லை. சேலம் மாவட்ட ஆட்சியரின் விளக்கம்: தேவண்ணக்கவுண்டனூர் சர்வே எண். 489ன் மொத்த பரப்பளவு 4.30.0 எக்டேர் பாறை என கிராமக் கணக்குகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சர்வே எண். 489/1 என உட்பிரிவு செய்யப்பட்டு, 0.22.5 எக்டேர் நிலம் பெந்தகோஸ் சபை கிறித்துவ மயானம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர் சர்வே எண். 489/5 முதல் 489/21 வரை உள்ள பாறை புறம்போக்கில் 3.64.5 எக்டேர் நிலம் 15 பேருக்கு ஒப்படை செய்யப்பட்டு; இந்த நிலங்கள் அனைத்தும் ஒப்படை பெற்றவர்களின் அனுபவத்தில் இருந்து வருகின்றன. மேலும், ஜே.கே.மைனிங் அண்டு கெமிக்கல்ஸ் நிறுவன உரிமையாளர் திரு.ஜே.மோகன் என்பவருக்கு இந்த கிராமத்தில் சர்வே எண். 18/1பி.ல் 1.54.0 எக்டேர் நிலம், சர்வே எண். 183/2-ல் 1.91.5 எக்டேர் நிலம், ஆக மொத்தம், 3.45.5 எக்டேர் பட்டா நிலம் உள்ளது. இந்த நிலத்தில், சென்னையில் உள்ள புவியியல மற்றும் சுரங்கத் துறை ஆணையரிடம் 20 ஆண்டுகளுக்கு கனிமங்கள் வெட்டி யெடுக்க அனுமதி பெற்றுள்ளார். இந்த நிலங்களுக்கும், 15 பேருக்கு நில ஒப்படை

செய்யப்பட்ட நிலங்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. ஜே.கே.மைன்ஸ் நிறுவனத்தினர் 15 பேருக்கு நில ஒப்படை செய்யப்பட்ட நிலங்களில் ஆக்கிரமிப்பு ஏதும் செய்யவில்லை. ஜே.கே.மைன்ஸ் நிலத்திற்கும், 15 பேருக்கு ஒப்படை செய்யப் பட்ட நிலங்களுக்கும் இடையே 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது.

இது அந்த மாவட்ட ஆட்சித் தலைவர் உண்மை நிலை அறிந்து அரசுக்குக் கொடுத்துள்ள விவரமாகும். உண்மைநிலை இவ்வாறிருக்க, யாரோ ஒருவர் தனது பெயர் சொல்ல விரும்பாமல், பொறுப்பற்ற முறையில் கொடுத்த விவரங்களை நம்பியோ அல்லது இந்தியா டுடே இதழில் கட்டுரை எழுதியவர் தானாக ஒரு நபரை கற்பனையிலே உண்டாக்கிக் கொண்டோ அவர் கூறியதாக இந்தப் புகாரை - அந்த விவரங்களை அரசு நிலையில் யாரிடமும் விசாரித்து ஒப்பிட்டுப் பார்க்காமல் - வெளியிட்டுள்ளார்.

3. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: திருச்சி மாவட்டம், சூரியூர் கிராமத்தில் ஒதுக்கப்பட்ட இலவச நிலங்களை (சர்வே எண். 50/11, 50/12, 52/3, 52/8, 63/1, 63/3, 63/4, 67/2, 67/12, 67/13, 67/14, 67/16, 76/15) இப்போது அப்பகுதி தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் நவல்பட்டு விஜி (இந்தியா டுடே இதழ் வலசல்பட்டு விஜி என்று எழுதியுள்ளது) தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உள்ளூர்க்காரர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இவர் இந்த இடத்தின் ஒரு பகுதியில் மீனா என்ஜினியரிங் நிறுவனத்திற்காக ஒரு கட்டிடம் கட்டியிருப்பதாகத் தெரிகிறது. இவர் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேருவிற்கு மிக நெருக்கமானவர் என உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். “எங்கள் ஊரைச் சேர்ந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தைத் தி.மு.க.வினர் ஆக்கிரமித்திருக்கிறார்கள்'” என்கிறார் அப்பகுதியின் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரும் அ.இ. அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளருமான ஜெய் சூரியா. திருச்சி மாவட்ட ஆட்சியரின் விளக்கம்: சூரியூர் கிராமம் சர்வே எண்கள். 50/11, 50/12, 52/3, 52/8, 67/2, 67/12, 67/13, 67/14, 67/16, 63/1, 63/3, 63/4 ஆகியவற்றில் மொத்தம் 4.58.5 எக்டேர் நிலம் 12 பேருக்கு ஒப்படை வழங்கப்பட்டு; அனைத்தும் பயனாளிகளின் அனுபவத்தில் உள்ளன.

நவல்பட்டு விஜி என்பவர் சூரியூரில் மீனா என்ஜினியரிங் இன்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை, நில உச்சவரம்பின்கீழ் வரும் தரிசு நிலங்களில் அமைத்துள்ளார். சூரியூரில் இந்த நிலங்களுக்கும், 12 பேருக்கு ஒப்படை செய்யப்பட்ட நிலங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை. இலவசமாக ஒப்படை செய்யப்பட்ட நிலங்களை யாரும் ஆக்கிரமிக்கவில்லை. உண்மைநிலை இவ்வாறிருக்க, போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு அவர்களை சம்மந்தப்படுத்தி, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ஒருவர் சொன்ன பொய்யை நம்பி, செய்தி வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

4. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: வருவாய்த் துறை அமைச்சரும் திண்டுக்கல் மாவட்டச் செயலாளருமான ஐ.பெரியசாமியின் சகோதரர் அன்பு, நிலக் கோட்டை தாலுகா பகுதியில் அறிவிக்கப் பட்ட இலவச நிலங்களை ஆக்கிரமித்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. “இப்பகுதியில் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட நிலப்பட்டாக்களை அன்பும், அவரது நண்பரும் ரியல் எஸ்டேட் புரோக்கருமான பிரகாஷும் சேர்ந்து கொண்டு அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் பட்டாவைக் கேட்டாலும் மிரட்டு கிறார்கள்” என “இந்தியா டுடே”விடம் தெரிவித்தார். இப் பகுதியில் இலவச நிலத்திற்கான பயனாளி என்று அறிவிக்கப்பட்டும் நிலத்தைப் பெற முடியாத எஸ்.மணிகண்டன். இதேபோல் திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் இந்த நபர்கள் இலவச நிலத்தை (சர்வே எண்.4/5லிருந்து 4/9 வரை) ஆக்கிரமித்து ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஆரம்பித் திருப்பதாகத் தெரிகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் விளக்கம்: திண்டுக்கல் மாவட்டம், சந்தையூர் கிராமம், சர்வே எண். 38/4.ல் 0.24.0 எக்டேர் தீர்வை ஏற்பட்ட தரிசு நிலத்தை

கருப்பையா மனைவி திருமதி. தொந்தியம்மாள் என்பவருக்கும்; சர்வே எண். 38/5.ல் 0.23.0 எக்டேர் தீர்வை ஏற்பட்ட தரிசு நிலத்தை சண்முகம் மனைவி திருமதி. சாந்தி என்பவருக்கும் ஒப்படை வழங்கப்பட்டு, அவர்களுடைய அனுபவத்தில் இருந்து வருகிறது. அவர்கள் நிலமற்ற ஏழை விவசாயக் கூலிகள் ஆவர். ஒப்படை வழங்கப்பட்ட நிலத்தை யாரும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. திண்டுக்கல்-மதுரை நெடுஞ்சாலையில் ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் எதுவும் இல்லை. ஊறுகாய் தயாரிக்கும் நிறுவனம் ஒன்று திண்டுக்கல்லில் இருந்து வெகு தொலைவில், தேனி- ஆண்டிப்பட்டி சாலையில், புள்ளிமான்கோம்பை என்னும் ஊருக்குச் செல்லும் பாதையில், சாலையையொட்டி திரு.ஜிதேந்திரா ஜெயின் என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில், “போரஸ் அக்ரோ எக்ஸ் போர்ட்ஸ்”' என்ற பெயரில் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. மேலும், திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை.

உண்மை நிலைமைகள் இவ்வாறிருக்க, வருவாய்த் துறை அமைச்சர் திரு.ஐ. பெரியசாமி அவர்களை சம்மந்தப்படுத்தி, மணிகண்டன் என்பவர் கொடுத்த செய்தியை அப்படியே நம்பி, யாரிடமும் விசாரித்து உண்மையை அறிந்துகொள்ளாமல், செய்தி வெளியிட்டிருப்பது விஷமத்தனமானது.

5. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், வடசித்தூர் கிராமத்தில் ஜகோபி என்ற கார்பன் தயாரிக்கும் நிறுவனத்தின் கட்டிடம் அமைந்திருக்கிறது. இது அரசு ஏழைகளுக்கு ஒதுக்கிய நிலத்தில் அமைந்திருப்பதாக அந்த ஊர் மக்கள் சொல்கிறார்கள். அந்த நிறுவனத் தின் தொழில் நிலையங்கள் இருக்கும் 576, 580, 581 ஆகிய சர்வே எண்கள் இலவச நிலத்திட்டத்திற்கு உட்பட்டவை என்கிறார் சிவா. ஜகோபி நிறுவனம்

ஸ்வீடனில் வசிக்கும் என்.ஆர்.ஐ. ஒருவருக்குச் சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. “இந்த வெளிநாட்டு நிறுவனம் எந்தவித அனுமதியும் இன்றி செயல்பட்டு வருகிறது. சுற்றுச்சூழலுக்குக் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வரும் இந்த ஆலை, நிலமற்ற விவசாயிகளுக்குத் தரப்பட்ட இரண்டு ஏக்கர் நிலத்தில் இயங்கி வருவது தான் அதிர வைக்கிறது'' என்கிறார் பேரூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும் கோவை புறநகர் மாவட்டச் செயலாளருமான எஸ்.பி. வேலுமணி. இந்தப் பகுதியில் 2 ஏக்கர் நிலம் நிறைய பேருக்கு ஒதுக்கப்பட்டிருப்பது இப்பகுதி மக்களுக்குத் தெரியவில்லை. கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம்: இலவச நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் பொள்ளாச்சி வட்டம், மெட்டுவாவி கிராமத்தில் நிலம் ஏதும் யாருக்கும் வழங்கப்படவில்லை. ஜகோபி கார்பன்ஸ் இந்தியா (பி) லிட். என்ற கார்பன் தயாரிக்கும் கம்பெனி சர்வே எண்.580-ல் அமைந்துள்ளது. இந்த சர்வே எண் தனியாருக்குச் சொந்தமான ரயத்துவாரி புஞ்சை நிலமாகும். இந்தக் கம்பெனிக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் அனுமதி 31.3.2010 வரை வழங்கப்பட் டுள்ளது. இந்த கம்பெனி வளாகத்தில் அரசு புறம்போக்கு நிலம் எதுவும் இல்லை. உண்மைநிலை இவ்வாறிருக்கும் போது, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி. வேலுமணி என்பவர் சொன்னதாக ஒரு தவறான தகவலை வைத்துக்கொண்டு, அரசுத் தொடர்புடைய யாரிடமும் விசாரித்து அறிந்து கொள்ளாமல், பொத்தாம்பொதுவில் செய்தி வெளியிட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாகும்.

6. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இருக்கும் நிலம் (சர்வே எண்.567/25 ஏபியிலிருந்து 567/40, 738/2-லிருந்து 738/40 வரை) வேலி அமைக்கப்பட்டு தற்போது கல்லூரி கட்டப்பட்டு வருகிறது.

கோவை மாவட்ட ஆட்சியரின் விளக்கம்: முறைகேடு என குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ள சர்வே எண்கள் மலுமிச்சம்பட்டி கிராமத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. “இந்தியா டுடே”யில் வெளியிடப்பட்டுள்ள படம் ஒத்தக்கால் மண்டபம் கிராமத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி (இந்துஸ்தான் என்ஜினியரிங் கல்லூரி) கட்டிட வளாகத்தில் அமைந்துள்ளதாகும். இந்தக் கல்லூரி தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்டு, இயங்கி வருகிறது. மலுமிச்சம்பட்டி மற்றும் ஒத்தக் கால்மண்டபம் கிராமங்களில் 2 ஏக்கர் தரிசு நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் யாருக்கும் நிலம் வழங்கப்படவில்லை. உண்மைநிலை இவ்வாறிருக்கும்போது, படிப்பவர்களைத் திசைதிருப்பும் நோக்கத்தோடு செய்தி வெளியிட்டிருப்பது முறையற்ற காரியமாகும்.

7. “முறைகேடு என வெளியிடப்பட்ட செய்தி”: தேனி மாவட்டத் தி.மு.க. செயலாளர் வைகை சேகர், கிரி, அ.இ.அ.தி.மு.க.வின் சன்னாசி ஆகியோர் வைகை அணைப் பகுதியைச் சுற்றி சுமார் 300 ஏக்கரை (சர்வே எண். 1349/5, 1353/6, 1445/1, 1445/2, 1446/1) ஆக்கிரமித் திருப்பதாக சொல்லப்படுகிறது. “ஏழைகளுக்கான நிலத்தை சேகர் திட்டமிட்டுத் தனது உறவினர்களின் பெயரில் பதிவு செய்திருக்கிறார். விதவைகள் உள்ளிட்ட பலரை அவர் நிலத்தை விட்டு வெளியேற்றியிருக்கிறார்” என்கிறார் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவரான சிவா. தேனி மாவட்ட ஆட்சியரின் விளக்கம்: பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் பிட் 1 மற்றும் 2, ஜெயமங்கலம் பிட் 1 மற்றும் 2, குள்ளப்புரம், சில்வார்பட்டி, டி.வாடிப்பட்டி ஆகிய கிராமங்களில் 543.41 ஏக்கர் நிலம் 454 பேருக்கு ஒப்படை வழங்கப்பட்டுள்ளது. வைகை சேகர் பெயரில் இலவச நில ஒப்படை எதுவும் வழங்கப்படவில்லை. மேல்மங்கலம் பிட் 2 கிராமம் சர்வே எண். 1799/2-ல் 0.62.5 ஏர்ஸ் நிலம் நில ஒப்படைத்

திட்டத்தின்படி வைகை சேகர் மனைவி மகாலட்சுமி என்பவர் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலம் உழவடை தரிசாக உள்ளது. வைகை சேகர் மனைவியின் தாயார் பாக்கியம் பெயரில் சர்வே எண்.1799/1.ல் 0.61.0 ஏர்ஸ் நிலம் ஒப்படை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் அருகே, மகாலட்சுமி, பாக்கியம் ஆகிய இருவரைத் தவிர, 17 சர்வே எண்களில் 14 பேருக்கு நில ஒப்படை வழங்கப்பட்டுள்ளது. அந்த 14 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலம் பயனாளிகளின் அனுபவத்திலேயே இருந்து வருகிறது. அவர்கள் அனைவரும் அதில் பயிர் செய்து வருகிறார்கள். அந்த 14 பேருக்கு வழங்கப்பட்ட நிலம் எதையும் வைகை சேகர் ஆக்கிரமிப்பு செய்யவில்லை. பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் பிட்.2 கிராமத்தில் சர்வே எண். 1349/5, 1353/6 உள்ளிட்ட 5 சர்வே எண்களில் 6 பேருக்கு 2.61.5 எக்டேர் நிலம் ஒப்படை செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒப்படை செய்யப்பட்ட நிலங்களுக்கிடையே கிரிஸ் கிருஷ்ணா என்பவரது பெயரில் 0.40.5 எக்டேர் பட்டா நிலமும், இவரது தாயார் கோமளவல்லி பெயரில் 17.29.0 எக்டேர் பட்டா நிலமும், தந்தை சுதாகர் பெயரில் 16.93.0 எக்டேர் பட்டா நிலமும் உள்ளன. சர்வே எண்.1349/5.ல் தங்கம் மனைவி சித்ரா என்பவருக்கு ஒப்படை செய்யப்பட்ட 0.62.5 எக்டேர் நிலத்தையும், சர்வே எண்.1445/1.ல் முத்திருளன் மகன் பரமசிவம் என்பவருக்கு ஒப்படை செய்யப்பட்டு, பட்டா வழங்கப்படாமல் உள்ள 0.69.0 எக்டேர் நிலத்தையும், கிரி ஆக்கிரமித்து வேலி போட்டு அடைத்து வைத்திருக்கிறார். சர்வே எண்.1353/6.ல் முத்துசாமியின் மனைவி சுப்புலட்சுமி என்பவருக்கு ஒப்படை செய்யப் பட்ட 0.60.0 எக்டேர் நிலத்தை ஒப்படைதாரர் கேரள மாநிலத்தவருக்கு விற்றுவிட்டு வெளியேறிவிட்டார். பெரியகுளம் வட்டம், மேல்மங்கலம் பிட்.1 கிராமத்தில் சன்னாசி என்பவருக்குச் சொந்தமான பட்டா நிலங்களுக்கு அருகில், இலவச நில ஒப்படை வழங்கும்

திட்டத்தின் கீழ் 3 பேருக்கு வழங்கப்பட்ட 0.97.0 எக்டேர் நிலம், பயனாளிகளின் பயன்பாட்டில் இல்லை. இதில் 0.45.0 ஏர்ஸ் நிலம் மூக்கையாதேவர் மகன் பாண்டி என்பவரின் ஆக்கிரமிப்பில் உள்ளது. கிரி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும், பாண்டி என்பவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தையும் மீட்பதற்கு மாவட்ட ஆட்சியரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உடன்பிறப்பே, இதுதான் உண்மை விவரம். நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு உதவிட வேண்டுமென்ற குறிக்கோளோடு தி.மு. கழக அரசு ஆட்சிப் பொறுப்பையேற்றதும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 747 ஏக்கர் நிலத்தினை 1 இலட்சத்து 75 ஆயிரத்து 798 விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. ஏழை விவசாயிகளுக்கு உதவி செய்கின்ற இந்தத் திட்டத்தைப் பாராட்டா விட்டாலும் கூட பரவாயில்லை. நஞ்சைக் கக்கிடுவோர்; நெஞ்சைத் தொட்டுச் சொல்வாரா? ஆனால் ஒரு குடிநீர் குளத்திலே விஷத்தைக் கலப்பதைப் போன்ற காரியத்தில் ஒருசில பத்திரிகையாளர்கள் ஈடுபடுவது எந்த நோக்கத்தோடு என்பதை தமிழ் நாட்டு மக்கள் புரிந்துகொண்டு அப்படிப்பட்ட தீய நோக்கம் கொண்டவர்களுக்கும், அதைப் பெரிதுபடுத்தி பேசுகின்ற ஒரு சில அரசியல் கட்சியினருக்கும் தக்க பாடம் புகட்ட ஆவன செய்திடுவதே இதற்கெல்லாம் நல்ல தீர்வு காண்பதற்கான வழி யாகும்! அன்புள்ள, மு.க. 12-1-2011

மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 302–311. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.

தொகுதி 44-இல் மேலும் கடிதங்கள்