முரசொலி கடிதங்கள் · 3513
மனு தர்மத்திற்கு மறு பிறவி கிடையாது!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3513. மனு தர்மத்திற்கு மறு பிறவி கிடையாது!
உடன்பிறப்பே,
ஜெயலலிதா 15-11-2010 அன்று விடுத்த ஆங்கில அறிக்கை ஒன்றில், “Raja had been mocking at all constitutional institutions including the Office of the Prime Minister, the Comptroller and Auditor General of India and even the Supreme Court of India” என்று கூறியிருக்கிறார். அதாவது, பிரதமர் அலுவலகம், தணிக்கைத் துறை, உச்ச நீதிமன்றம் போன்ற அரசியல் சட்ட அமைப்புகளை மத்திய அமைச்சராக இருந்த ஆ.ராசா கேலிக் கூத்தாக்கி விட்டார் என்று ஜெயலலிதா அறிக்கையிலே கூறுகின்றபோது, 25-2-2006 அன்று வருமான வரி வழக்கிலே இதே ஜெயலலிதாவைப் பற்றி உச்சநீதிமன்றம் “You are making a mockery of the Judicial Process. How long you can drag the proceedings” (நீதிமன்ற நடவடிக்கைகளை நீங்கள் (ஜெயலலிதா) கேலிக் கூத்தாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த நடவடிக்கைகளை எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இழுத்தடிப் பீர்கள்) என்று கேட்டதை மறந்து விடலாமா?
தம்பி ராஜா மீது ஜெயாவும் மற்ற எதிர்க்கட்சிகளும் அலைவரிசை ஒதுக்கீடு குறித்து சொல்லுகின்ற குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக அவர்கள் எடுத்து வைப்பது தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையில் அரசுக்கு ராசா இழப்பினை ஏற்படுத்திவிட்டார் என்பதாகும். அவர்கள் குறிப்பிடுகின்ற தணிக்கைத் துறை அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்படுவதற்கு முன்பே அந்த அறிக்கையின் நகல் அனைத்து ஊடகங்களிலும் வெளியிடப்பட்டு விட்டன.
அந்த அறிக்கையிலே உள்ள ஒரு வாசகம் - “Any loss ascertained while attempting to value the spectrum can only be ‘presumptive’..........” என்றுள்ளது. அதாவது, “அலைவரிசையின் மதிப்பைக் கணக்கிட்டு அதனால் ஏதாவது இழப்பு என்று
சொல்லப்படுவது “அனுமானத்தின்” அடிப்படையிலே மட்டும் சொல்லப்படுவதாகும்.
எனவே தற்போது லட்சக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு என்பதெல்லாம் “அனுமானத்தின்” அடிப்படையிலே சொல்லப்படுவதாகும் என்று அவர்கள் ஆதாரமாகக் காட்டுகின்ற தணிக்கை துறை அறிக்கையிலேயே வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. அனுமானத்தில் சொல்லப்படும் கருத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பை எழுதி முற்படுவது முறை தானா?
தணிக்கை அதிகாரியின் அறிக்கை என்பது ஆண்டு தோறும் அரசின் பல்வேறு துறைகளின் வரவு செலவு கணக்குகளைப் பற்றி ஆய்ந்தறிந்து, அறிக்கை அரசுக்குத் தரப்பட்டு, அந்த அறிக்கை நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றத்திலும் முறையே வைக்கப் பட்டு, அதன் பின்னர் அதிலே கூறப்படும் குற்றச்சாட்டுகள் அந்தந்த துறைகளுக்கு அனுப்பப்பட்டு, துறைகளின் விளக்கங்களைப் பெற்று அவை பொதுக் கணக்குக் குழுவிலே விவாதிக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்திலே நடைபெற்ற நேரத்திலும் இது போன்ற தணிக்கை அதிகாரிகளின் அறிக்கைகள் தரப்பட்டு சட்டப் பேரவையிலே வைக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. ஆட்சியில் அவ்வாறு வைக்கப்பட்ட தணிக்கை அதிகாரியின் அறிக்கை “இந்து” நாளிதழ் உட்பட அனைத்து ஏடுகளிலும் வெளிவந்தது. 3-8-2004 தேதியிட்ட இந்து நாளிதழ் பக்கம் 5-ல் “Short levy / audit report for 2003 – 2004” / Rs. 1033/- crore potential Revenue loss என்ற தலைப்பில் The State Government suffered a loss of Rs. 1033 /- crore potential Revenue in 2003 – 2004 as a result of short levy of Taxes. Besides, it incurred an “avoidable expenditure” of various companies and autonomous bodies under government control was to the tune of Rs. 3681/- crores in the last financial year.
Giving these figures, T. Teethan, Accountant General (audit) for Tamil Nadu, told press persons here today that the aggregate of “Short levy” and “wasteful expenditure” was Rs. 2982 crores in 2002-2003; Rs. 3930 crores in 2001-2002; Rs. 2621 crores in 2000-2001 and Rs.1901 crores in 1999-2000. ........
A Rs. 61 crore cash loss was incurred owing to an excess procurement of 1.75 lakh tonnes of paddy. Poor planning, lack of infrastructure and a defective pricing policy of the Tamil Nadu Housing Board led to blocking of Rs. 96 crores on 18,755 plots under 17 schemes completed.”
(“விலை குறைவாக நிர்ணயம் செய்து பற்றிய 2003- 2004ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை - 1033 கோடி ரூபாய் வருவாய் இழப்பு’ என்ற தலைப்பில் முறையாக வரிகள் விதிக்கப்படாததன் காரணமாக 2003-2004ஆம் ஆண்டில் மாநில அரசுக்கு 1033 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டது. அது மட்டும் மல்லாமல் அரசு நிர்வாகத்தின்கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களின் மூலமாக தவிர்க்கப்பட்டிருக்க வேண்டிய செலவுகள் என்ற வகையில் மட்டும் மாநில அரசுக்கு 3681 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இந்தப் புள்ளிவிவரங்களை வழங்கிய தமிழ்நாடு தலைமை கணக்காயர் திரு. டி. தீத்தன் அவர்கள் முறையாக வரிகள் விதிக்காததன் காரணமாகவும், வீணான செலவுகளின் காரணமாகவும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பு 2002-2003ஆம் ஆண்டில் 2982 கோடி ரூபாய்; 2001-2002ஆம் ஆண்டில் 3930 கோடி ரூபாய்; 2000-2001ஆம் ஆண்டில் 2621 கோடி ரூபாய்; 1999-2000ஆம் ஆண்டில் 1901 கோடி ரூபாய் என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். .........
1.75 இலட்சம் டன் நெல்லை அதிகப்படியாக கொள்முதல் செய்ததன் காரணமாக 61 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. சரியாக திட்டமிடாததாலும், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் தேவையான அளவுக்கு இல்லாததாலும், தவறான விலை கொள்கையாலும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 17 திட்டங்களில் 96 கோடி ரூபாய் மதிப்புள்ள 18,755 மனைகள் விற்பனையாகாமல் உள்ளன.”)
இது மாத்திரமல்ல, அதே நாளைய “இந்து” முதலமைச்சராக இருந்த ஜெயாவின் துறையைப் பற்றி தணிக்கை அதிகாரி கூறிய செய்தியையும் வெளியிட்டிருந்தது. அதில், “The Comptroller and Auditor General of India (CAG) has criticized the Tamil Nadu Home Department for not following open tender system in purchase of tents for the police. Though the rates quoted by ordinance factories were higher than open market prices, orders were still placed with
them resulting in an extra expenditure, the CAG said in his report for the year ended March 2003 placed in the Legislature.” (தலைமைக் கணக்காயர் காவல் துறைக்கு “டெண்ட்”கள் வாங்குவதற்கு திறந்தவெளி ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றாததன் காரணமாக உள் துறையை கடுமையாகச் சாடினார். வெளிச் சந்தை விலையைவிட துப்பாக்கி தொழிற்சாலைகள் கொடுத்த விலைப்புள்ளி கூடுதலாக இருந்தபோதிலும், “டெண்ட்”கள் அந்தத் தொழிற்சாலைகளிடமிருந்தே வாங்கப்பட்டன. இதன் காரணமாக அதிகச் செலவு ஏற்பட்டுள்ளது.)
இவ்வாறு தொடங்கி “இந்து” தணிக்கைத் துறை அதிகாரியின் அறிக்கையையும்; அவர் செய்தியாளர்களிடம் வெளியிட்ட தகவல் களையும் விரிவாக வெளியிட்டுள்ளது.
அதே செய்தி அனைத்து நாளேடுகளிலும் வெளி வந்த போதிலும், தமிழ் நாளேடு ஒன்று வெளியிட்ட தலைப்பே, “ஆடிட்டர் ஜெனரல் ஆதாரத்துடன் பேட்டி - ஜெ. ஆட்சியில் ரூ. 11 ஆயிரம் கோடி இழப்பு - மந்திரி, அதிகாரிகளை அடிக்கடி பந்தாடியதால் நிர்வாகம் சீர்குலைந்தது - மத்திய அரசின் மலிவு விலை அரிசி வாங்காததால் ரூ. 66 கோடி நட்டம் - 46 திட்டங்கள் தொடங்காமலேயே ரூ. 3500 கோடி திரும்ப ஒப்படைப்பு - வீண்செலவும் அதிகரிப்பு - பொறுப்பில்லாமல் நடப்பதாக புகார்” என்பதாகும். இதுதான் அந்தத் தலைப்பு. ஆனால் அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா என்ன செய்தார் என்றால், உடனடியாக இந்தியன் எக்ஸ்பிரஸ், பைனான்சியல் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களுக்கு அரசு பணத்திலே முழுப் பக்க விளம்பரம் ஒன்று கொடுத்தார். இந்த ஏடுகளின் விலை ஒரு ரூபாய், 2 ரூபாய், 3 ரூபாய் என்ற அளவிலே இருந்த போது, இதிலே ஒரு ஏட்டிற்கு முழு பக்கத்திற்கு விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் எத்தனை லட்சம் ரூபாய் கட்டணம் என்பது உலகத்திற்கே தெரியும்.
“தணிக்கை அதிகாரி அறிக்கை தொடர்பான குறைபாடுகளுக்கு விரிவான பதில் - வருவாய் இழப்பு என்பது கருத்தியலான தொகையே தவிர, உண்மையான இழப்பு அல்ல” என்ற தலைப்பில் தமிழக அரசின் விளம்பரம் வெளியிடப்பட்டது.
முரணானது என்றும் எடுத்துக்கூறி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு முழுப் பக்க அறிக்கையினை தணிக்கை அறிக்கை குறித்து செய்தியாளர்களிடம் விளக்கிய ஒரு அதிகாரிக்குப் பதில் கூறி சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு அப்போது வெளியிட்டார். இந்தப் பிரச்சினையை அடிப்படையாக வைத்துத்தான் அறிக்கையாகக் கூட அல்ல, அரசின் சார்பாக விளம்பரமாகவே முழுப் பக்கத்திற்கு கண்டனம் அப்போது வெளியிடப்பட்டது. தமிழகத்திலும், வட இந்தியாவிலும் வெளிவந்துள்ள ஜெயலலிதாவின் இந்த முழுப் பக்க விளம்பரத் திற்காக மட்டும் தமிழக மக்களின் வரிப்பணம் 1 கோடியே 22 லட்சத்து 81 ஆயிரத்து 100 ரூபாய் கொட்டி அழிக்கப்பட்டது.
ஜெயா வெளியிட்ட அந்த முழுப் பக்க விளம்பரமே எப்படி தொடங்குகிறது என்றால்,
“தமிழ்நாடு அரசின் கணக்குகள் மீதான இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவரின் 2002-2003-ஆம் ஆண்டுக்கான அறிக்கை வெகு அண்மையில்தான் -2004 ஜூலையில் தமிழ்நாடு சட்டப்பேரவை முன் வைக்கப்பட்டுள்ளது. இந்தியத் தணிக்கைத்துறைத் தலைவரின் அறிக்கை உரிய கால முறையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் பொதுக் கணக்குக் குழுவில் விவாதிக்கப்படும். இந்த அறிக்கையில் கடுமையான முறைகேடு எதுவும் சுட்டிக்காட்டப்படவில்லை. சில பொருள்கள் மீது இந்தியத் தணிக்கைக் துறைத் தலைவரின் கருத்தறிவிப்புகளை மட்டும்தான் இந்த அறிக்கை கொண்டுள்ளது. அதைப்பற்றி பொதுக்கணக்குக் குழுவால் உரிய காலமுறையில் விரிவாக விவாதிக்கப்படும். இந்தியத் தணிக்கைக் துறைத் தலைவரின் அறிக்கை மீது பொது கணக்குக் குழு தனது பணியினை முடித்த பின்னரே, இது முழுமை அடையும். .......இவ்வாறு பல நிகழ்வுகளில் கூறப்பட்டிருக்கின்ற இழப்பானது, வெறும் கருத்தியலான இழப்பு என்பதை தணிக்கைக் துறை தலைவரின் அறிக்கையே சுட்டிக்காட்டுகிறது. ஆகவே இந்த விஷயங்களைப் பெரிதுபடுத்திக் காட்டுவதும், இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டுவிட்டது என்ற தோற்றத்தை உருவாக குவதும் சற்றும் முறையானதல்ல.”
ஜெயலலிதா மீது தணிக்கைக் துறை அதிகாரி குற்றஞ்சாட்டிய போது இப்படியெல்லாம் வியாக்யானம் செய்தவர் தற்போது, எப்படியெல்லாம் தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டு
தணிக்கைக் துறை அதிகாரியின் அறிக்கையே முடிவான ஒன்று என்றும், அதனையேற்று ராசாவை கைது செய்ய வேண்டும், வழக்கு போடப்பட வேண்டுமென்றும் சொல்வது எத்தகைய ஈனத்தனமான நோக்கம் என்பதை இந்த இரண்டு நடவடிக் கைகளையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரிந்து கொள்ள முடியும்.
ஜெயலலிதா ஆட்சியில் உண்மையிலேயே நடைபெற்று உச்ச நீதி மன்றத்தாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு ஊழல் குறித்துக் கூட, தணிக்கைக் துறை அதிகாரி தாக்கல் செய்த அறிக்கையிலே கூறப்பட்டதை இங்கே நான் நினைவுபடுத்துகிறேன். அதன் தலைப்பே,, “TANSI - Loss of revenue due to failure to follow uniform procedure in disposal of assets” (டான்சி - சொத்துக்களை விற்றதில் முறையான அணுகுமுறையை பின்பற்றாததால் ஏற்பட்ட வருவாய் இழப்பு) என்பதாகும்.
“........the sale of land in all the three defunct units had been effected almost at the same time, in the same locality, the sale price of land of Tansi Foundry to Jaya Publications Limited at Rs. 1350 per square metre was very low when compared to the sale price of Rs. 2080 and Rs, 2100 per square metre obtained in case of sale of land of Tansi Enamelled Wires and Tansi Forgings, respectively. Thus, the Company had not fully explored the possibility of getting a higher rate..........”
(ஒரே பகுதியில் இருந்த டான்சி நிறுவனத்திற்குரிய டான்சி எனாமல் வயர்ஸ் மற்றும் டான்சி போர்ஜிங்ஸ்க்குச் சொந்தமான இரண்டு இடங்களை ஒரு சதுர மீட்டர் 2080 ரூபாய் மற்றும் 2100 ரூபாய் என்ற விலைக்கு விற்றிருக்கும் போது, ஜெயாபப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் டான்சி பவுண்டரி நிறுவன இடத்தை ஒரு சதுர மீட்டர் 1350 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்றிருக்கிறார்கள். எனவே அதிகத் தொகையை பெறுகின்ற வாய்ப்பினை டான்சி இழந்துவிட்டது.)
இந்தக் கருத்து தணிக்கைத்துறை அதிகாரியினால் அறிக்கையிலே எழுதப்பட்டு இன்றளவும் அந்தப் புத்தகத்திலே உள்ள வாசகங்களாகும். தற்போது அரசின் சார்பில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு தகவல் தொழில்நுட்பப் பணிக்காக குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட இடம் குறித்து அறிக்கை வெளியிட்ட ஜெயலலிதா, அந்த இடம் குறைந்த விலைக்கு
கொடுக்கப்பட்டு விட்டது என்றும், அந்த இடத்திற்குப் பக்கத்திலே உள்ள இடம் அதிக மதிப்பு கொண்டது என்றும் அதன் காரணமாக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது என்றும் கூறியிருந்தார். ஜெயலலிதா குறைந்த விலைக்கு வாங்கிய இடம், அவருடைய சொந்த நிறுவனத்திற்காக குறைந்த விலையில் வாங்கப்பட்டதாகும். தற்போது கழக அரசில் ஒதுக்கப்பட்ட இடம் தனியார் ஒருவர் பங்குதாரராக இருந்து, தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகத்தோடு இணைந்து தகவல் தொழில் நுட்பப் பணிகளைத் தொடங்கி பல்லாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இருந்தார் என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாகும். ஆனால் அந்தத் தனியார் நிறுவனம் அந்த இடத்தைக் கூட தங்களுக்குத் தேவையில்லை என்று கூறி, அரசுக்கு மனு கொடுத்துள்ளார்கள் என்பதிலிருந்தே, யாரோ ஒரு தனிப்பட்டவருக்கு இந்த அரசு உதவி செய்து விடவில்லை என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இப்படிப்பட்ட ஜெயலலிதா தேவையில்லாமல் தனது அறிக்கையில் என்னைப் பற்றிக் கூறும் போது, ஊழலே என்னுடைய வாழ்க்கை முறையாக உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார். என்னைப் பற்றியா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வருமானவரி வழக்கில் நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக் கூத்தாக்குகிறேன் என்று சொன்னார்கள்? அரசுக்குச் சொந்தமான டான்சி நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கி, அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டுமென்று என்னைப் பற்றியா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூறினார்கள்? ஜெயாவுக்குத்தானே வேண்டுமென்றே விலையைக் குறைத்தும், முத்திரைக் கட்டணத்தைக் குறைத்தும் வாங்கிய நிலத்தை அரசுக்குத் திரும்ப கொடுத்திட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கொடநாட்டில் எஸ்டேட் வாங்கிக் கொண்டு, மாதக்கணக்கில் ஓய் வெடுத்துக் கொண்டிருப்பவனா நான்? சிறு தாவூரில் தலித் மக்களுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலத்தையெல்லாம் பறித்துக் கொண்டதாக ஜெயாவின் தோழமைக் கட்சியாலேயே குற்றம் கூறப்பட்டு, அதற்காக நீதிபதியைக் கொண்டு விசாரித்து, தலித்துகளுக்காக ஒப்படைக்கப்பட்ட நிலம் கைப்பற்றப்பட்டது உண்மைதான் என்றும், அந்த நிலங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், அந்த இடத்திற்குப் பக்கத்திலே உள்ள அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தை இன்றளவும் கைப்பற்றி மாளிகை கட்டியிருப்பதிலே அடிக்கடி சென்று
ஓய்வெடுப்பது நானா? ஜெயலலிதாவா? வெளிநாட்டிலிருந்து தன் பெயருக்கு வந்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வங்கியிலே உள்ள தன் கணக்கிலே வரவு வைத்துக் கொண்டு, யார் அனுப்பியது என்றே தெரியவில்லை என்று ஊரை ஏமாற்ற நினைத்த ஜெயலலிதா ஊழல் பேர் வழியா? நானா? முதலமைச்சராக ஜெயா பொறுப்பேற்பதற்கு முன்பு 1-7- 1991இல் ஜெயாவின் சொத்து மதிப்பு 2 கோடியே 2 இலட்சம் ரூபாய். அவர் முதலமைச்சராக ஐந்தாண்டுகள் பொறுப்பிலே இருந்த பிறகு 30-4-1996இல் ஜெயாவின் சொத்து மதிப்பு 66 கோடியே 45 இலட்சம் ரூபாய் என்றால் அன்றாடம் ஊழலையே வாழ்க்கை முறையாகக் கொண்டிருப்பது நானா? ஜெயலலிதாவா? வருமானத்திற்கு மீறி 64 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, இன்றளவும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுக் கொண்டிருப்பது என் மீதா? அல்லது அந்த வழக்குக்கு ஆண்டுக் கணக்கில் வாய்தா வாங்கிக் கொண்டிருப்பது ஊழல் மகாராணி ஜெயலலிதாவா? நானா? செய்தியாளர்கள் ஒருமுறை ஜெயாவைப் பார்த்து, “உங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக நீதிமன்றங்களில் வழக்குகள் நடைபெறுகின்றனவே, இந்நிலையில் நீங்கள் பதவி வகிக்க முடியுமா?”, என்று கேட்டபோது, “உச்ச நீதி மன்றம் வரையில் விசாரிக்க வாய்ப்பும் காலமும் இருக்கிறது. உச்ச நீதிமன்றம் என்னைக் குற்றவாளி என்று தீர்ப்பளித்தால் மட்டுமே நான் குற்றவாளி ஆவேன், அதுவரையில் நான் குற்றவாளி அல்ல, வெறும் குற்றம் சாட்டப்பட்டவர்தான்” என்று பதிலளித்ததையெல்லாம் மறந்துவிட்டு, நான் ஊழலை வாழ்க்கை முறையாகக் கொண்டுள்ளேன் என்று சொல்கிறார் என்றால், எவ்வளவு பெரிய பித்தலாட்டக்காரரை தமிழ்நாடு எதிர்க் கட்சித் தலைவராகப் பெற்றுள்ளது என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது அல்லவா?
இத்தனை உண்மைகளையும் மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில், மனு தர்ம ஆட்சியை மீண்டும் கொண்டு வரலாம் என்று மகிழ்ச்சிக் கூத்தாடும் மமதையாளர்களுக்கு கடைசி எச்சரிக்கையும், அறிவிப்பும் இதுதான்!
“சூத்திரனுக்கொரு நீதி - தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கொரு நீதி”
என்று பாரதி கேட்டது போல் -
“தனக்கொரு நீதி தம்பிகளுக்கொரு நீதி”
என்ற மனு தர்மத்திற்கு தமிழகத்தில் மறு பிறவி கிடையாது!
அன்புள்ள, மு.க. 17-11-2010
( இன உணர்வுள்ள உடன்பிறப்புகள் ஆங்காங்கு கழக அமைப்புகள் சார்பில் இந்தக் கடிதத்தை முழுமையாக அச்சிட்டு; அவரவர் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் வழங்கிட வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.)
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 214–222. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.