முரசொலி கடிதங்கள் · 3516
ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்...!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3516. ஒய்யாரக் கொண்டையாம்; தாழம்பூவாம்...!
உடன்பிறப்பே,
அ.தி.மு.க. ஆதரவு நாளேடுகளில் இன்று (9-12-2010) “கருணாநிதி ஆட்சியில் கொள்ளை போகும் அரசு நிலங்கள்” என்ற தலைப்பில் தி.மு.க., எம்.எல்.ஏ., மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வீட்டுமனை வழங்கப்பட்டதாக பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு நான் தெளிவாக நேற்றைய தினமே பதில் அறிக்கை கொடுத்திருந்தபோதிலும், அதே குற்றச்சாட்டு மீண்டும் வந்திருப்பதால், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த வீட்டு மனைகள் யார் யாருக்கு வழங்கப்பட்டன என்பதை சுருக்கமாகச் சொல்லுகிறேன்.
ஜெயலலிதா ஆட்சியில் தலைமைச் செயலாளராக இருந்த திரு.என். நாராயணன், ஐ.ஏ.எஸ்.க்கு 1993 ஆம் ஆண்டு 4115 சதுர அடி; முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் மகன் கே.எஸ். கார்த்தீசன் என்பவருக்கு பெசண்ட் நகர் பகுதியில் 1995 ஆம் ஆண்டு 4535 சதுர அடி; முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் துணைவியார் நூர் ஜமிலாவுக்கு கொட்டிவாக்கத்தில் 1993 ஆம் ஆண்டு 2559 சதுர அடி; நாடாளுமன்ற உறுப்பினர் தம்பிதுரை மனைவி டாக்டர் பானுமதி தம்பிதுரைக்கு அண்ணா நகரில் 7 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க. வின் தொழிலாளர் பேரவைக்கு அண்ணா நகரில் 3 கிரவுண்ட் நிலம்; அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். வேலுச்சாமியின் மனைவி திருமதி பானுமதிக்கு கோவையில் 1993 ஆம் ஆண்டு வீடு, 2004 ஆம் ஆண்டு தேவாரம், ஐ.பி.எஸ்., கே. விஜயகுமார், ஐ.பி.எஸ்., ஆர். நடராஜ், ஐ.பி.எஸ்., உட்பட பல ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சோளிங்கநல்லூரில் தலா 4800 சதுர அடி; நீதியரசர் எஸ்.ஆர். சிங்காரவேலு அவர்களுக்கு 2005 ஆம் ஆண்டு சோளிங்கநல்லூரில் இரண்டு மனைகள், சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே. செல்வராஜ் என்பவருக்கு
1994ஆம் ஆண்டு கொட்டிவாக்கத்தில் 2692 சதுர அடி, முன்னாள் முதலமைச்சரிடம் துணைச் செயலாளராக இருந்த டி.நடராஜன், ஐ.ஏ.எஸ்.க்கு 1995 ஆம் ஆண்டு திருவான்மியூரில் 6784 சதுர அடி; அதி. ராஜாராமுக்கு 1995இல் 3101 சதுர அடி., 1993இல் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சரஸ்வதிக்கு அண்ணா நகரில் 880 சதுர அடி; சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த மல்லிகாவுக்கு அண்ணா நகரில் 950 சதுர அடி; எம்.ஜி. ஆருடைய ஓட்டுநர் பூபதிக்கு நந்தனத்தில் 3600 சதுர அடி; எஸ்.ஆண்டித் தேவரின் மனைவி பிளோமினாவுக்கு 1994இல் மதுரையில் 1500 சதுர அடி என்று ஒரு நீண்ட பட்டியல் உள்ளது. 2005ஆம் ஆண்டு பலருக்கு இரண்டு மனைகள் கொடுக்கப்பட்ட நீண்ட பட்டியலும் உள்ளது.
எனவே அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்களின் மனைவி, மகன் பெயர்களிலும், அ.தி.மு.க. தொழிற்சங்க அலுவலகத்தின் பெயரிலும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பெயரிலும், அ.தி.மு.க. சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர் பெயரிலும், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரின் மனைவி பெயரிலும், நீதியரசர்கள் பெயரிலும் இத்தகைய வீடுகள், மனைகள் வழங்கப்பட்டுள்ளன என்பதற்கு ஒரு சிலவற்றை மட்டும் சான்றாகக் குறிப்பிட்டுள்ளேன். தி.மு.கழக ஆட்சியில் வீட்டுமனைகள் ஒதுக்கீட்டில் தவறு நடந்துவிட்டதாக முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்ட பத்திரிகையாளர்கள் எல்லாம் அ.தி.மு.க. ஆட்சியில் யார் யாருக்கு இத்தகைய வீடுகள், மனைகள் தரப்பட்டன என்ற முழு விவரத்தையும் தங்கள் புலன் விசாரணையின் மூலம் தெரிந்து இனியாவது வெளியிட்டால், அவர்களின் பத்திரிகா தர்மத்தைப் பாராட்டலாம்.
பத்திரிகைகள் இன்று ஜெயலலிதா விடுத்துள்ள ஒரு அறிக்கையையும் வெளியிட்டிருக்கிறார்கள். எந்த அளவிற்கு ஜெயா குழப்பம் அடைந்திருக்கிறார் என்பதற்கு ஆதாரம் தேடி நாம் வேறெங்கும் செல்லத் தேவையில்லை. அவருடைய அறிக்கையைப் பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். 6-12-2010 அன்று ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?
“ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது போல, வெள்ளத்தால் தமிழக மக்கள்
அல்லல் பட்டுக் கொண்டிருக்கையில், தன்னுடைய “இளைஞன்” திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவிலே கலந்து கொண்டு உல்லாசமாக பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் கருணாநிதி” - இப்படித்தான் 6-ந்தேதிய ஜெயா அறிக்கை தொடங்குகிறது.
8-12-2010 அன்று மீண்டும் ஜெயலலிதாவின் அறிக்கை ஒன்று வந்துள்ளது. அந்த அறிக்கை எப்படித் தொடங்குகிறது தெரியுமா?
“ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தபோது எப்படி நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்தாரோ, அதேபோல் கன மழை காரணமாக தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில், தன்னுடைய அமைச்சரவை சகாக்களுடன் திரைப்பட விழாவில் ஆனந்தமாக பொழுதைக் கழித்து இருக்கிறார் கருணாநிதி” - இந்த இரண்டு அறிக்கைகளுக்கும் என்ன வித்தியாசம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். 6-ந்தேதி வெளியிட்ட அறிக்கையை எப்படித் தொடங்கினோம் என்பது கூடத் தெரியாமல், 8-ந்தேதி அறிக்கையைத் தொடங்குகிறார் என்றால் அதற்கென்ன காரணம்? ஆத்திரமா? அறியாமையா? திரைப்படத் துறை விழாவிலே நான் கலந்து கொண்டுவிட்டேன் என்ற வயிற்றெரிச்சலா? அல்லது தன்னையாருமே அழைக்கவில்லையே என்ற பொறாமையா? இந்த லட்சணத்தில்தான் நான் கோமாளித்தனமான அறிக்கைகளை விடுவதாக எழுதியிருக்கிறார் இந்தக் கொடநாடு கோடீஸ்வரி!
அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் என்ன சொல்கிறார் தெரியுமா? “இதில் திடுக்கிட வைக்கும் உண்மை என்னவென்றால், ஒட்டுமொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுதான்” என்று எழுதியிருக்கிறார். இதில் ஒரு வயிற்றெரிச்சல்! இந்த அம்மையாரின் ஆட்சிக் காலத்தில்தான் இவர் கலந்து கொள்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அமைச்சரவையிலே உள்ள அத்தனை பேரும் சென்று கலந்து கொள்வார்கள். ஏன், தற்போது முதல் அமைச்சராக இல்லாத இந்தக் காலத்திலே கூட, இவர் கோவை, திருச்சி, மதுரை நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்ட போது, இவரது அமைச்சரவை முன்னாள் சகாக்கள், இன்றைய அ.தி.மு.க. முன்னணியினர் அத்தனை பேரும் சென்று கலந்து கொண்டார்கள்.
ஆனால் இப்போது என்ன நிலைமை? 7 ஆம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டம். 5 ஆம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தின் ஆய்வுக் கூட்டம். அந்தக் கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் என்ற முறையில் நிதியமைச்சர் பேராசிரியர், பொருளாளர் என்ற முறையில் துணை முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின், முதன்மை செயலாளர் என்ற முறையில் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச் செயலாளர்கள் என்ற முறையில் துரைமுருகன், பரிதி இளம்வழுதி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த அமைச்சர்களில் அன்று மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பேராசிரியரைத் தவிர மற்ற நான்கு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த நான்கு பேரைத் தவிர 6-ந்தேதி விழுப்புரத்தில் நடைபெற்றிருந்த நிகழ்ச்சிக்காக துணை முதல்வர் ஸ்டாலினை அழைத்துச் செல்வதற்காக வந்த உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, எ.வ. வேலு ஆகியோர் திரைப்பட விழாவிலே கலந்து கொண்டார்கள். மொத்தம் 29 அமைச்சர்களில் ஆறேழு பேர்தான் அந்த விழாவிலே கலந்து கொண்டார்கள். ஆனால் ஜெயலலிதா ஒட்டு மொத்த தமிழக அமைச்சரவையும் இந்த நிகழ்ச்சியிலே கலந்துகொண்டதாக அறிக்கை விடுகிறார் என்றால், அதற்கு என்ன பெயர் சொல்வது?
இந்த ஆறேழு பேரிலும், துணை முதல்வர், பொன்முடி ஆகியோர் நிகழ்ச்சி முடிந்தவுடன் இரவு 9 மணிக்கு மேல் சென்னையிலிருந்து புறப்பட்டு விழுப்புரம் சென்று பல்வேறு நிகழ்ச்சிகளிலும், கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் சுற்றிப் பார்த்து விட்டு நிவாரண உதவிகளை வழங்கிவிட்டு, மீண்டும் 7 ஆம் தேதி அமைச்சரவையிலே கலந்து கொள்ள வந்துவிட்டார்கள்.
ஜெயலலிதா மேலும் அவருடைய அறிக்கையிலே வெள்ள நிவாரணப் பணிகளைப் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்றும் ஒரு குற்றச்சாட்டினைக் கூறியிருக்கிறார். அதுவாவது உண்மையா? அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அன்றாடம் வெள்ளப் பகுதிகளையெல்லாம் பார்வையிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்ததின் பேரில், தமிழக அமைச்சரவையே கூடி விவாதித்து பல்வேறு உதவிகளைச் செய்ய முடிவெடுத்துள்ளது. மத்திய அரசிடம் உதவி கோரிப் பெறுவதென அமைச்சரவையில் முடிவெடுத்து,
அதற்கான கடிதமும் அனுப்பப்பட்டு விட்டது. ஆனால் வெள்ள நிவாரணப் பணிகளிலே நான் அக்கறை செலுத்தவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுகிறார் என்றால் அதிலே ஏதாவது பொருள் இருக்கிறதா? கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது - தமிழ்நாட்டில் பிணங்கள் விழுந்தபோது - கோவா கடற்கரையில் கும்மியடித்துக் கொண்டு ‘டூயட்’ பாடிக்கொண்டிருந்தவர் இதே ஜெயலலிதா!
கூட்டணிக் கட்சியை நான் ஏதோ மிரட்டுவதாகவும் ஜெயலலிதா தனது அறிக்கையிலே வழக்கம் போல உளறியிருக்கிறார். பா.ஜ.க. ஆட்சியிலே இருந்தபோது விடுதலை நாளன்று கூட ஜெயலலிதா மிரட்டியதாகவும், தனது வாழ்நாளிலேயே ஜெயலலிதாவோடு கூட்டணியிலே இருந்த காலம்தான் மோசமான காலம் என்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் கூறியதை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருப்பார்கள் என்று ஜெயா நினைக்கிறாரா?
நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை ஒப்புக் கொள்கிற வரையில் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஓயாது என்று ஜெயலலிதா அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் இவர்தான் ஏகத் தலைவி என்று தானாகவே கற்பனை செய்துகொண்டு அறிக்கையிலே சொல்லியிருக்கிறார். நினைப்பு தான் பொழப்பை கெடுக்கும் என்று சொல்வார்களே அதுபோலத்தான் எப்படியாவது, ஏதாவது நடக்காதா, அதன் மூலமாக தனக்கு விடிவு காலம் பிறக்காதா என்றுதான் ஏங்குகிறார். இதற்கிடையே கழக அரசின் சார்பில் செய்யப்படும் சாதனைகள், திட்டங்கள் கண்டு அழுகை கொண்டு, மற்றவர்கள் என்னைப் பாராட்டினால் இவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், காவியக் கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து போன்றவர்கள் அந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு என்னைப் பாராட்டியதை எப்படி அவரால் பொறுத்துக்கொள்ள முடியும்? அதனால்தான் அறிக்கையிலே அநாகரிகமான வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்துகிறார்.
இறுதியாக ஜெயலலிதா தனது அறிக்கையை முடிக்கும்போது “தான் செய்த பாவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது கருணாநிதிக்குத் தெரியும்” என்று எழுதியிருக்கிறார். செய்த பாவங்களின் பலனை தற்போது
அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜெயலலிதா என்னுடைய நாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது என்பதை ஏதோ அவரது வார்த்தை மூலம் சொல்லியிருந்தால், அதற்காக கவலைப்படுபவன் அல்ல இந்தக் கருணாநிதி!
அடுத்து ஜெயலலிதா தனது அறிக்கையில் நான் காங்கிரசை மிரட்டுவதாகவும் ஸ்பெக்ட்ரம் ஊழலில் காங்கிரசுக்கும் தொடர்பு உண்டு என்பதைப்போல கருத்து தெரிவித்ததாகவும் அவராகவே சொல்லிக் கொண்டு தி.மு.க. விற்கும், காங்கிரசுக்கும் இடையே கலகம் ஊட்டுகின்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளார். நான் “இளைஞன்” பாடல்கள் வெளியீட்டு விழாவிலே பேசும்போது, ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 352 கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், அது எவ்வளவு பெரிய தொகை, அந்தத் தொகையை ஊழல் செய்திருக்க முடியுமா? என்று பேசினேன். உடனே ஜெயலலிதா காங்கிரசை மிரட்டுவதாக வழக்கம் போல சிண்டு முடியப்பார்க்கிறார். அவரது எண்ணம் நிறைவேறாது.
அன்புள்ள, மு.க. 10-12-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 240–245. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.