முரசொலி கடிதங்கள் · 3512
துரோகத்தின் முகத்திரையைக் கிழிப்போம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3512. துரோகத்தின் முகத்திரையைக் கிழிப்போம்!
உடன்பிறப்பே,
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் - ஒவ்வொரு கட்டத்திலும் தமிழக அரசின் சார்பில் உரிய விளக்கங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், நமது விளக்கங்களைப் படித்துப் பார்த்து, புரிந்தோ புரியாமலோ அல்லது வேண்டுமென்றோ, கேரள மாநிலத்தின் தரப்பில் திசை திருப்பும் நோக்கத்தோடு, அதிர்ச்சி அளிக்கக்கூடிய பதில்களை வெளியிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். கேரளம் தருகின்ற இந்தப் பதில்களை, தமிழகத்திலே உள்ள சில நாளேடுகள் உள்நோக்கத்தோடு, மிகைப்படுத்தியும், திரித்தும் வெளியிடுகின்றன. அந்த நாளேடுகளைப் படிப்போர், சிலவேளைகளில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் குழப்பம் அடைந்து விடுகின்றனர்.
இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட சமீபகால நில அதிர்வுகள் காரணமாக, “முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்த கவலைகள் எழுகின்றன. (Mullai Periyar - Fresh tremors in Idukki raises concerns about dam’s safety)” என்ற தலைப்பிட்டு; “இந்தியன் எக்ஸ்பிரஸ் “ ஆங்கில நாளேடு 7.11.2010 அன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதைப்போலவே, “தினமணி’ நாளேட்டில் 10.11.2010 அன்று; “உச்சநீதி மன்றக் குழுவைத் திசை திருப்பவே முல்லைப் பெரியாறில் தமிழகப் பராமரிப்புப் பணி - கேரள நிபுணர் குழு அறிக்கை “ என்ற தலைப்பிட்டு; செய்தி வெளியிட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசு - உச்சநீதி மன்றத்தின் உத்தரவுப்படி - தொடர்ந்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்படிப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதைத்தான், கேரள மாநிலத் தரப்பினர் திரித்து, தங்கள் வசதிக் கேற்றவாறு கதை கட்டி விடுகின்றனர். பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து, கேரள அரசின் ஆட்சேபணை எனது கவனத்திற்கு
வந்தவுடன் - நமது அரசு பொதுப்பணித்துறையின் மூலமாக அதற்குப் பதிலளித்துள்ளது. கேரள அரசுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கும் உண்மை நிலைமை தெரிந்திட வேண்டுமென்பதற்காக நான் இந்த விளக்கத்தினை மீண்டும் இன்று அளிக்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து, 1998-ஆம் ஆண்டிலிருந்து 2001-ஆம் ஆண்டு வரை, கேரள அரசு சார்பில் அவ்வப்போது ஆட்சேபணை தெரிவித்ததன் பேரில், தமிழக அரசின் சார்பிலும், கேரள அரசின் சார்பிலும் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம், 2000ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், நடுவண் நீர்வளத் துறை அமைச்சரை இரு மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டி ஒரு சுமுகத் தீர்வு காணுமாறு கூறியது. அந்தக் கூட்டத்தில் சுமுகத் தீர்வு ஏற்படாததால், நடுவண் நீர்வளத் துறை அமைச்சகம், ஒரு வல்லுநர் குழுவை 14.6.2000 அன்று அமைத்தது. இந்த வல்லுநர் குழு முல்லைப் பெரியாறு பிரதான அணை, மற்றும் சிற்றணைகளின் பாதுகாப்புப் பற்றி அனைத்து கோணங்களிலும் ஆய்வு நடத்தி, அணைப் பகுதியில் நில அதிர்வுகள் ஏற்பட்டாலும் அணை பாதுகாப்பாக இருக்கும் என்று கணக்கிட்டுப் பார்த்து, அதன்பின்புதான் அணையின் நீர்மட்டத்தை 142 அடிவரை உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது. (“After going through the results of field and laboratory investigations for Baby dam and stress analysis of Baby dam as well as the main dam, all the members of the Committee are of firm opinion that the Mullai Periyar Baby dam and main dam are safe for raising the reservoir water level to 142 ft. (43.28 m)” )
இதற்கிடையே, கேரள அரசு பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிலையம் (Indian Institute of Science, IISc) வாயிலாக அணை நில அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாக இல்லை என்று ஓர் அறிக்கையை 2001-இல் அளித்தது. அந்த அறிக்கையில் அவர்கள் கொய்னா மற்றும் உத்தரகாசி ஆகிய இடங்களில் ஏற்பட்ட நில அதிர்வுகளை எடுத்துக் கணக்கிட்டிருந்தனர். அந்த கணக்கீடுகள்
முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருந்தாது என்று மத்திய நீர்வளக் குழுமம் நிராகரித்தது. இது குறித்து ஒரு பிரமாண அறிக்கையை மத்திய நீர்வளக் குழுமம் உச்ச நீதி மன்றத்தில் 2004-இல் தாக்கல் செய்தது.
இதற்கு முன்பும் இம்மாதிரி சில நில அதிர்வுகள் ஏற்பட்டதாகக் கேரள அரசு கூறியதின் - பேரில், அப்போதைய மத்திய நீர்வளக் குழுமம் 7.2.2001-இல் ஒரு நிபுணரை அனுப்பி, அணையைச் சோதித்தது. அவர் தமது சோதனை மூலம் அணைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார். இதுபோல 2004-இல் நில அதிர்வுகள் அணைப் பகுதியில் ஏற்பட்டுள்ளது எனக் கேரள அரசு கூறியதின் பேரில், மத்திய நீர்வளக் குழுமத்தின் தலைமைப் பொறியாளர் டாக்டர் ஜீ. ஆண்டனி பாலன் அவர்கள், அணையை 9.7.2004-இல் பார்வையிட்டு அணையில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று அறிக்கை கொடுத்தார். அவற்றை எல்லாம் கருத்தில் கொண்டுதான் உச்ச நீதிமன்றம் 27.2.2006 அன்று அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்தலாம் என ஆணையிட்டது. (“There is no report to suggest that the safety of the dam would be jeopardized, if the water level is raised for the present to 142 ft.”)
தீர்ப்பு வந்த பிறகு, மீண்டும் கேரள அரசு நில அதிர்வு ஏற்பட்டால் அணை பாதுகாப்பாக இருக்காது என 30.3.2007 அன்று உச்ச நீதிமன்றம் தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் தெரிவித்தது.
அதற்காகத் தமிழக அரசு முல்ல அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய ஒரு பிரத்தியேகமான வல்லுநர் குழுவை தேசிய நீர் மேம்பாட்டு முகமையின் ஓய்வு பெற்ற பொது இயக்குநர் திரு. ஆர்.கே. சர்மா அவர்களைத் தலைவராகவும், உத்திரபிரதேச மாநிலத்தின் ஓய்வு பெற்ற முதன்மை தலைமைப் பொறியாளர் திரு. பி.எல். ஜட்னா, ஒரிசா மாநிலத்தின் முதன்மை தலைமைப் பொறியாளராக இருந்த, ஓய்வுபெற்ற திரு. ஜீ.சி. சாகு, உத்த மாநிலத்தின் ஓய்வுபெற்ற முதன்மை பொறியாளர் திரு. சி.கே. அகர்வால், ஆந்திர பிரதேசம் மாநிலத்தின் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் திரு. கே.வி. சுப்பாராவ், ஆகிய நான்கு அனுபவமிக்க பொறியாளர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு 2007-இல் அமைத்து ஆய்வு செய்தது.
இந்த வல்லுநர் குழு முல்லைப் பெரியாறு பிரதான அணை மற்றும் சிறிய அணைகளின் பாதுகாப்பு பற்றித் தேவையான எல்லா ஆய்வுகளையும் இந்திய தர நிர்ணயம் (I.S.I) வகுத்துள்ள முறைகள்படி ஆய்வு செய்து; அணைப் பகுதிகளில் ஏற்படக் கூடிய நில அதிர்வுகளையும் கணக்கில் கொண்டு அணை உறுதியாக உள்ளது என அறிக்கை அளித்தது. அந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஓர் ஆவணம் ஆகும்.
இவ்வாறு, கேரள அரசு பலமுறை எழுப்பிய நில அதிர்வுகள் பற்றிய கருத்துகள் எல்லாம் நிராகரிக்கப்பட்டதால், மீண்டும் 2008-இல் ரூற்க்கியில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவனத்திடம் நில அதிர்வு ஏற்பட்டால் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யக் கோரியது. அந்த நிறுவனம் ஆய்வு செய்து அளித்த அறிக்கையைக் கேரள அரசு, ஓர் ஆவணமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் நில அதிர்வு இந்திய தர நிர்ணயம் (I.S.I.) குறிப்பிட்டுள்ளதைவிட மிக அதிகமாக இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், அந்த அறிக்கையைத் தயாரித்த டாக்டர் டி.கே. பால் மற்றும் டாக்டர் எம்.கே. சர்மா இருவரும் தம் ஆய்வு முடிவை நிரூபிக்கும் வகையில் விசாரணைக்கு வந்து கலந்து கொள்ளவில்லை. அவர்களின் அறிக்கையை உறுதி ஆவணமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கேரள அரசின் பிரதிநிதி திரு. எம்.கே. பரமேசுவரன் நாயர், அந்த 2 அறிக்கையைப் பற்றிய குறுக்கு விசாரணையில் சரியான விவரங்களையும் தகவல்களையும் தெரிவிக்கவில்லை. எனவே, அந்த அறிக்கை ஒரு நிரூபிக்கப்படாத ஆவணமாகும்.
அதன்பிறகு, 2009-இல் சாட்சிகளின் குறுக்கு விசாரணை முடிந்து இறுதி வாதங்கள் நடந்து வரும் தருணத்தில் டாக்டர் டி.கே. பால் அவர்கள் இரண்டாவது அறிக்கையைத் தயாரித்துக் கேரள அரசுக்குக் கொடுத்துள்ளார். அந்த அறிக்கையை ஓர் ஆவணமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் கேட்ட போது, அதனை 4.11.2009 அன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்து ஆணையிட்டது.
உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத திரு. டி.கே.பால் அறிக்கையில், அணையின் நீர் மட்டம் 136 அடியாக இருக்கும் பொழுதும் நில அதிர்வுகள் ஏற்பட்டால் அணை பாதுகாப்பாக
இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருடைய அறிக்கையை மீண்டும் தற்போது உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட அதிகாரமுள்ள குழுவிடம் ஓர் ஆவணமாகக் கேரள அரசு அளித்துள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளக் கூடாதெனத் தமிழக அரசு கோரியுள்ளது. இதுபற்றி அதிகாரமுள்ள குழு எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லையென 15.10.2010 அன்று நடைபெற்ற, அதன் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாக்டர் டி.கே.பாலின் அறிக்கை, ஒரு நிரூபிக்கப்படாத அறிக்கை என்பது உறுதியாகிறது. மேலும், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அந்த அறிக்கையில் உள்ள பல குறைபாடுகளை இங்கே சுட்டிக்காட்ட முடியாது.
பலப்படுத்தப்பட்ட முல்லைப் பெரியாறு பிரதான அணை, மற்றும் சிற்றணைகளிலிருந்து மாதிரிகள் (Core Samples) எடுத்து சோதித்து, அதைக் கணக்கில் கொண்டு இந்திய தர நிர்ணயம் வகுத்துள்ள விதிமுறைகளின்படி, நீரைத் தேக்கவும், நில அதிர்வுகள் ஏற்பட்டால் அதனால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் 2001-இல் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. அணை கட்டுமானப் பொருட்களின் பலு தாங்கும் தன்மையைச் சோதித்த பின்புதான் அதன் அடிப்படையில் வல்லுநர் குழு அதன் அறிக்கையைத் தந்துள்ளது. ஆனால், அணை கட்டுமானப் பொருட்களின் பலுதாங்கும் தன்மையைப் பற்றி ஆதாரமற்ற செய்திகள் பத்திரிகையில் வந்துள்ளன.
மேலும், இந்திய தர நிர்ணயம், (I.S.I.) 2003-இல் நிர்ணயித்துள்ள நில அதிர்வு வரைபடத்தின்படி பெரியார் அணை மூன்றாவது பகுதியில் (Zone-III) உள்ளது. அதன்படி, இப்பகுதியில் மிக அதிகமாக ஏற்படக்கூடிய நில அதிர்வுகள் (ரிக்டர் அளவுகோல் - 6 வரை) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. அணையின் நீர்மட்டம் 142 அடியாக இருக்கும் போது நில அதிர்வு ஏற்பட்டாலும் அணைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் வல்லுநர் குழு தெரிவித்துள்ளது. அதனை உச்ச நீதி மன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணையில் அன்றாடப் பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்குக் கூட, கேரள அரசின் அலுவலர்கள் இடையூறு செய்து வந்துள்ளனர். ஒருமுறை
அணையின் 5 நீர்மட்ட அளவுகோல் பலகையைச் சரிசெய்த போது கூட மறுப்பு தெரிவித்து அதை எடுத்துவிட்டனர். அது மீண்டும் சரிசெய்யப்பட்டது. இவற்றை எல்லாம் தமிழக அரசு உச்ச நீதி மன்றத்தில் 2009, நவம்பரில் தெரிவித்தது. உச்ச நீதிமன்றம் 10.11.2009-இல் அளித்த ஆணையில் மராமத்து பணிகள் மற்றும் சிறு பணிகள் செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை எனக் கூறியுள்ளது. ஆனால், இம்மாதிரி பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இம்மாதிரி பணிகள் இப்பொழுதுதான் நடைபெறுகின்றன எனப் பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் சரியானவை அல்ல; மண் அணை மற்றும் வழிந்தோடிகளில் புதர்களை அகற்றுவது, அணைக்கதவுகள் மற்றும் அணைப்பகுதி களில் வண்ணம் பூசுதல், சேதமடைந்த பகுதிகளைச் சரிசெய்தல் போன்ற பணிகள் எல்லா அணைகளிலும் செய்வது போல் இந்த அணையிலும் அவ்வப்போது செய்யப்படும் பணிகளாகும். எனவே, அணையில் செய்யப்படும் பணிகள் அனைத்தும் மராமத்துப் பணிகளே. ஏதோ மூடி மறைத்துச் செய்யப்படும் பணிகள் என்று கூறுவது தவறானதாகும்.
மேலும் அணையினைச் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்பதற்காகப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டுள்ள காரணங்கள் யாவும் சரியானவை அல்ல.
ஓர் அணை பழமையானதாக இருந்தாலும், நன்கு ஆய்வு செய்து அணை செறிவூட்டப்பட்டாலோ அல்லது வலுப்படுத்தப்பட்டாலோ (Retrofitted) அதன் ஆயுட்காலம் மீண்டும் புது அணைபோல் இருக்கும்.
முல்லைப் பெரியாறு அணையைப் பொறுத்த வரையில் அதன் வடிநிலம் அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் அணையின் நீர்ப் பரப்புப் பகுதியில் மண் படிதல் மிகமிகக் குறைவாக உள்ளது. மேலும், இந்த நீர்த்தேக்கத்தில் பயன்படுத்த முடியாத நீர்மட்ட அளவு (Dead Storage) 104 அடியாகும். ஆகையால், மண்படிதல் இந்த நீர்த்தேக்கத்தைப் பொறுத்த வரையில் ஒரு பொருட்டாகாது. எனவே, அணையைச் செயலிழக்கச் செய்ய இதை ஒரு காரணமாகக் காட்ட முடியாது.
பெரியாறு அணையைப் பொறுத்தவரை 2003-இல் மத்திய
சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு அணையின் நீர்மட்டத்தை முழு கொள்ளளவு உயரமான 152 அடிக்கு நீரை உயர்த்தினாலும் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் வராது என்றும், அது வன விலங்குகளுக்கு உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனை உச்சநீதிமன்றமும் அதன் 27.2.2006 அன்று அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டு ஆணையிட்டுள்ளது. (“If the lowest water level even after increasing the water capacity of the dam is maintained at the current level, then the increased high water table will make more area available as Vayals, effectively adding some more area to the existing vayals, thereby increasing the carrying capacity of the reserve for ungulates, elephants and in turn of tigers”)
இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் பொழுது, உச்சநீதிமன்றம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட கருத்துகளுக்கு மாறுபட்ட கருத்துகளைப் பத்திரிகை வாயிலாக கேரள அரசின் சார்பில் தெரிவிப்பதும்; தமிழகத்திலே உள்ள சில ஏடுகள் மட்டும், கேரள அரசின் கருத்துகளைப் பெரிதுபடுத்தி வெளியிடுவதும்; நீதிக்கும், நியாயத்திற்கும் நல்லதல்ல. தமிழ கத்தின் பொதுநலனை பாதிக்கும் - தமிழகத்திற்கு எதிரான செய்திகளை, பத்திரிகையில் அச்சியற்றி; தமிழகத்திலேயே அவற்றை விற்பனை செய்து, தொழில் நடத்தும் ஒருசில பத்திரிகைகளின் முகத்திரையை அகற்றி; தமிழக மக்கள், அவற்றை முழுமையாகப் புரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை!
அன்புள்ள, மு.க. 14-11-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 207–213. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.