முரசொலி கடிதங்கள் · 3511
நடுநிலையாளர்க்கு; கெடுமதி கூடாது!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3511. நடுநிலையாளர்க்கு; கெடுமதி கூடாது!
உடன்பிறப்பே,
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சியினர் - குறிப்பாக ஜெயலலிதா தொடர்ந்து செய்துவரும் பொய்ப் பிரச்சாரத்திற்கு, உதவி செய்யும் நோக்கத்துடன்; என்ன செய்தாலும் ஜெயலலிதாவைப் போன்றவர்களை ஆதரிப்பதே பிறவிப்பயன் என்று “சத்தியப்பிரமாணம்” செய்து கொண்டதைப் போல, நடுநிலை நாளேடு என்ற போர்வையில், ‘தினமணி’ இதழ் நேற்று ஒரு தலையங்கம் தீட்டியுள்ளது. அதில் படிப்பவர்களை திசைதிருப்புவதற்காக, திட்டமிட்டு செய்திகளை எல்லாம் - Blown out of proportions என்று ஆங்கிலத்திலே சொல்வார்களே, அதைப் போல - ஊதி ஊதிப் பெரிதாக்கி, மிகைப்படுத்தி - கடுகுக்குள் மலையைப் புகுத்தி எழுதியிருக்கிறார்கள்.
நல்லாட்சி நடத்தி வரும் தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்களின் சிறப்பான செயல்பாடுகளால் குறை ஒன்றும் கண்டுபிடிக்க இயலாததன் காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்ற கடைசி அஸ்திரத்தை எடுத்துக்கொண்டு, பொத்தாம்பொதுவாக, “வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ” என்ற பாணியில் சட்டம் ஒழுங்கைப் பற்றியும், குற்ற நிகழ்வுகள் குறித்தும் திசைதிருப்பும் வகையில் பல கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றன.
இந்தியாவிலேயே மிகச் சிறப்பாகச் சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்படும் மாநிலங்களில் ஒன்று தமிழகம் என்பதில் நாம் அனைவரும் பெருமை கொள்ளலாம். சாதி மதப் பூசல்கள் தலையெடுக்காத வண்ணம் தமிழக அரசின் தொடர் கண்காணிப்பில் மிகுந்த விழிப்புணர்ச்சியுடன் காவல் துறை சட்டம் ஒழுங்கைப் பராமரித்து வருகிறது.
30.10.2010 அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த “பசும்பொன் தேவர் குருபூஜை” மிகவும் அமைதியாக நடைபெற்றது. சட்டம் ஒழுங்கை காவல் துறையினரும், மாவட்ட நிர்வாகமும் நன்கு பராமரித்து வருவதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. கடந்த சில ஆண்டுகளைப்போலவே இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள். அமைதிக்குக் குந்தகமின்றி நடத்தப்பட்டதும், சட்டம் ஒழுங்கு சிறப்பாகப் பராமரித்து வருவதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகக் கூறி 18.10.2010 அன்று மதுரையில் திட்டமிட்டபடி அவரது பொதுக் கூட்டத்தை நடத்த விடாமல், தடுத்திட முயற்சிப்பதாகவும், அவரது பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தொடர்ந்து அவரது கட்சியினர் அறிக்கைகள் விடுத்தபோதும் கூட; காவல்துறையினரின் சிறப்பான நடவடிக்கை களினால் 18.10.2010 அன்று எதிர்க்கட்சித் தலைவர் எந்தவித அச்சுறுத்தலும் இன்றி மதுரை சென்று கூட்டத்தை நடத்தி பாதுகாப்பாகச் சென்னைக்குத் திரும்பினார் என்பதை நாடே அறிந்துள்ளது. எனவே, சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று கூறுவது உண்மைக்கு மாறானது என்பதைத் தமிழக மக்கள் புரிந்துகொள்வார்கள்.
தமிழகத்தில் மட்டுமே தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் கொலைக் குற்றங்களும், கொள்ளைகளும், கடத்தல்களும் நடப்பது போன்றும், இவற்றையெல்லாம் காவல்துறை எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது போன்றும் ஒரு பொய்ப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விஷமத்தனமான பிரச்சாரத்திற்கு அடிப்படை ஏதுமில்லை.
பொருளாதார, சமூக மாற்றங்களும், தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களும் மிக வேகமாக ஏற்பட்டு வரும் இன்றைய சூழ்நிலையின் காரணமாக; புதிய புதிய முறையில் பல்வேறு குற்ற நிகழ்வுகள் நடக்கின்றன. எனினும், காவல் துறையினரின் தீவிர நடவடிக்கையால் மிகப் பெரும்பாலான குற்றங்களில், குற்றவாளிகள் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
உதாரணத்திற்கு 2009ஆம் ஆண்டில் நடந்த 1644 கொலைக் குற்றங்களில், 1562 இனங்களில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மொத்த குற்ற நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்டால்கூட; அ.தி.மு.க. ஆட்சியில் 2004ஆம் ஆண்டில் மிக உயர்ந்த எண்ணிக்கையில் 8 இலட்சத்து 2 ஆயிரத்து 817 குற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில்; கழக ஆட்சியில், கடந்த 2009ஆம் ஆண்டில் 7 இலட்சத்து 17 ஆயிரத்து 957 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கள் தொகை அடிப்படையில் குற்ற நிகழ்வுகள் நடக்கும் விகிதாசாரத்தை எடுத்துக் கொண்டால்கூட பிற மாநிலங்களை விடக் குறைந்த அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலமாகத் தமிழகம் உள்ளது. உதாரணமாக, 2008ஆம் ஆண்டில் கேரள மாநிலத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 322 குற்றங்கள் நிகழ்ந்தன. டெல்லி மாநிலத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 286 குற்றங்கள் நிகழ்ந்தன. ஆனால் தமிழகத்தில் ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு 266 குற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
சென்னை, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, டெல்லி போன்ற பிற மாநிலங்களை ஒப்பீடு செய்தால்கூட; சென்னைப் பெருநகரில் குற்ற நிகழ்வுகள் குறைந்த அளவிலேயே உள்ளது என்பதும் புள்ளி விவரங்களிலிருந்து தெளிவாகத் தென்படுகிறது.
2008ஆம் ஆண்டில் சென்னையில் 11 ஆயிரத்து 829 நிகழ்வுகள் நடந்துள்ளன. அதே நேரத்தில் பெங்களூரில் 29 ஆயிரத்து 664 நிகழ்வுகளும், மும்பையில் 32 ஆயிரத்து 770 நிகழ்வுகளும், கொல்கத்தாவில் 13 ஆயிரத்து 5 நிகழ்வுகளும், டெல்லியில் 49 ஆயிரத்து 350 நிகழ்வுகளும் நடந்துள்ளன.
முக்கிய நகரங்களில் நிகழ்ந்த கொலைக் குற்றங்களைப் பார்ப்போமேயானால், சென்னையில் 2008ஆம் ஆண்டில் 100 கொலைக் குற்றங்களும், டெல்லியில் 554 கொலைக் குற்றங்களும், பெங்களூரில் 253 கொலைக் குற்றங்களும், மும்பையில் 210 கொலைக் குற்றங்களும் நடந்துள்ளன. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது 2009ஆம் ஆண்டில் தமிழகத்தில் 573 கற்பழிப்புக் குற்றங்கள் நிகழ்ந்த அதே நேரத்தில் ஆந்திர மாநிலத்தில் 1,257 குற்றங்களும், மராட்டிய மாநிலத்தில்
1,558 குற்றங்களும், மேற்கு வங்கத்தில் 2,263 குற்றங்களும் நடந்துள்ளன.
இதுவரை நான் எடுத்துச் சொன்ன ஒப்பீடுகளும், புள்ளிவிவரங்களும் குற்றங்களை நியாயப்படுத்துவதற்காக அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். குற்றங்கள் நிகழாமல், தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை காவல் துறை மேற்கொள்ள வேண்டும் என்பதில் எனக்கு இருவேறு கருத்து கிடையாது.
அண்மைக்கால குற்ற நிகழ்வுகளை எடுத்துக்கொண்டால்கூட, குற்றநிகழ்வுகளில் குற்றவாளிகள் உடனடியாகக் காவல்துறை யினரால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு சில நிகழ்வுகளைச் சுட்டிக் காட்டிட விரும்புகிறேன்.
20.11.2008 அன்று டாமின் நிறுவன முன்னாள் தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் எந்தவிதமான தடயங்களும் உடனடியாகக் கிடைக்காத சூழ்நிலையிலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, பொருட்கள் மீட்கப்பட்டு, நீதிமன்ற விசாரணை முடிக்கப்பட்டு,
3 ஆயுள் குற்றவாளிகளுக்கும் தலா 3 ஆயுள் தண்டனைகள் பெற்றுத்தந்தது மிகவும் பாராட்டக்கூடியதாகும்.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் உறவினர் விஜயன் என்பவர் 4.6.2008 அன்று கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை 8.9.2008 அன்றும்; 30.4.2009 அன்று திண்டுக்கல்லைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரன் என்பவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், 23.8.2009 அன்றும் கொலையாளிகளை கைது செய்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அரியலூர் காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினரின் தம்பி மீது கொண்ட முன்விரோதம் காரணமாக, அவரது மகன் தர்மதுரை என்ற மாணவனை 11.6.2010 அன்று கடத்திய இரண்டு குற்றவாளிகளில் ஒருவன் 14.6.2010 அன்று கைது செய்யப்பட்டு, கடத்தப்பட்ட சிறுவனையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவல் துறை மீட்டது. மற்றொரு குற்றவாளியும் வேறொரு வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டான்.
3.7.2010 அன்று சென்னை மாம்பலத்தில் போத்தீஸ் துணிக்கடை ஊழியர்களை வழி மறித்து தாக்கி அவர்களிடமிருந்து 81 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற வழக்கில்; 15.7.2010 அன்று குற்றவாளிகள் 10 பேரைக் கண்டுபிடித்துக் கைது செய்து, அவர்களிடமிருந்து 39 இலட்சத்து 37 ஆயிரத்து 500 ரூபாயை மீட்டுள்ளது காவல்துறை.
17.7.2010 அன்று நடந்த சிறுவன் ஆதித்யா கொலை வழக்கில் குற்றவாளி 4 நாட்களுக்குள் கைது செய்யப்பட்டுள்ளார்.
21.8.2010 அன்று மதுரை மாநகரில், மணிகண்டன் என்பவரைக் கொலை செய்து, 9 கிலோ தங்கம் மற்றும் 1,274 கிராம் வெள்ளி மற்றும் 12 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற குற்றவாளிகளை 24.8.2010 அன்று அதாவது 42 மணி நேரத்திற்குள் கைது செய்து அவர்களிடமிருந்து 1 கோடியே 60 இலட்சம் ரூபாய் மதிப்புடைய களவுபோன பொருள்கள் மீட்கப்பட்டன.
25.10.2010 அன்று விழுப்புரம் மாவட்டத்திலிருந்து சுமார் 11 கிலோ தங்க நகைகளை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலைக்குச் சென்றபோது வாகனம் வழிமறிக்கப்பட்டு நகைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் காரணமாக 2 மணி நேரத்தில் திண்டிவனத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உடனடியாக 8 கிலோ தங்க நகைகளும் மீட்கப்பட்டன என்பது காவல்துறையின் துரித நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாகும்.
கடத்தல், வழிப்பறி, பொருளாதாரக் குற்றங்கள், கட்டப்பஞ்சாயத்து போன்ற பல்வேறு குற்றங்களில் குழுவாக (Organized crime syndicates) ஈடுபடுபவர்களின் நடவடிக்கை களைக் கண்காணித்து, இம்மாதிரியான குற்றங்களைத் தடுக்கும் நோக்கத்துடன், காவல்துறையில் தனியாக ஒரு நுண்ணறிவுப் பிரிவு (Organized Crime Intelligence Unit) என்ற சிறப்புப் பிரிவு இந்த ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன்பயனாக, பல்வேறு பெருங்குற்றங்கள் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதச் செயல்கள் மற்றும் குற்றங்களில் ஈடுபடும் கொடும் குற்றவாளிகள் 2009ஆம் ஆண்டில் 2220 பேரும், 2010ஆம் ஆண்டில் இதுவரை 1808 பேரும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது - மயிலாடுதுறையில் காங்கிரஸ் தலைவர் குரு ஞானசேகரன் படுகொலை; முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் சம்பந்திகள் இரண்டு பேர் படுகொலை; வேலூர் நகைக் கடையைக் கொள்ளையடித்து மூன்று பேர் சுட்டுக் கொலை; மயிலாடுதுறை கல்லூரி மாணவி கற்பழித்துக் கொலை; சென்னையில் தலித் மக்கள் முன்னணித் தலைவர் பாலு என்பவர், அவர் மகன் கண்ணெதிரே படுகொலை; செய்யாறில் கதிர்வேலு என்ற தொழிலாளி அடித்துக் கொலை; சசி என்ற சசிகுமார் என்ற சினிமா ஸ்டண்ட் நடிகர் வெட்டிக் கொலை; திண்டுக்கல் நிதி நிறுவன அதிபரின் மனைவி பூங்கோதையும் அவரது மகளும் கழுத்தறுக் கப்பட்டு படுகொலை; அம்பத்தூர் அருகே பிரகாஷ் என்ற வாலிபர் வெட்டிப் படுகொலை; காரப்பாக்கத்தில் கோயிலில் புகுந்து பூசாரி உட்பட இருவர் படுகொலை; திருப்பத்தூர் அருகே பெட்ரோல் பங்க் உரிமையாளர் மணி என்ற கழகத் தோழர் சுட்டுப் படுகொலை; திருமுல்லைவாயிலைச் சார்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மகன் விஜி வாரிஸ் நடுரோட்டில் வெட்டிக் கொலை; அம்பத்தூர் கல்லூரி மாணவர் தாமோதரன் படுகொலை; சென்னை சேத்துப்பட்டில் கூலித் தொழிலாளி வெங்கடபதி குத்திக் கொலை; கொடைக்கா னலில் வக்கீல் சுதாகரன் படுகொலை; குனாம்பேட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கோவலன் வெட்டிக் கொலை - என ஜெயலலிதா ஆட்சியில், 2003ஆம் ஆண்டு மட்டும், சங்கிலித் தொடர் போன்ற படுகொலை நிகழ்ச்சிகள் நடந்தபோது; அவற்றையெல்லாம் வெறும் செய்தி என்ற அளவில், “தினமணி”கள் வெளியிட்டனவே தவிர; “சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது; நல்லாட்சிக்கு இது அழகல்ல” என்று அறிவுரை கூற முன்வருவதற்கான திராணியும், தைரியமும் இருந்தனவா என்றால், இல்லை. இப்போது மட்டும் விரிந்து கட்டிக் கொண்டு எழுதுகிறார்களே, என்ன காரணம்? நடுநிலையாளர்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டார்களா?
ஜெயலலிதா ஆட்சியில் - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் 3-9-2004 அன்று கொலை செய்யப்பட்டு; அந்த வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது சகோதரர் ரகு, மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர், அப்பு, கதிரவன், ரவி சுப்பிரமணியன் உட்பட 25 பேர் கைது செய்யப்பட்ட போதும்; சுந்தரேச அய்யர், அப்பு உட்பட 11 பேர் மீதும் குண்டர் சட்டம் ஏவப்பட்ட போதும்; “தினமணி”கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு தானே இருந்தார்கள்? தலையங்கங்கள் தீட்டி தங்கள் சான்றாண்மையைக் காட்டிக்கொள்ள முயற்சித்தார்களா?
8-8-1993 அன்று சென்னை சேத்துப்பட்டில் ஆர்.எஸ். எஸ். அலுவலகத்தில் குண்டு வெடித்து 11 பேர் பரிதாபமாக மாண்டபோது;
14-4-1995 அன்று சென்னை இந்து முன்னணி அலுவலகத்தில் குண்டு வெடித்து “பைபிள்” சண்முகம் என்பவர் மாண்டபோது; 10-7-1995 அன்று திரைப்பட இயக்குநர் மணிரத்னம் வீட்டில் குண்டு வெடித்தபோது; 1991 முதல் 1996 வரையிலான 5 ஆண்டுகால ஜெயலலிதா ஆட்சியில் 333 வெடிகுண்டு சம்பவங்கள் நடந்து - 135 பேர் மரணமடைந்து, 394 பேர் காயமடைந்தபோது; “தினமணி”கள் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தமது பேனா முனையைத் தீட்டிட முன்வந்தார்களா?
சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் எம்.கே. பாலன் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டாரே; கழக நாடாளுமன்ற உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் அவர்களின் தம்பி, ஈரோடு மாவட்டத்தில் காவல் துறை ஆய்வாளராக இருந்தவர்; திடீரெனக் காணாமல் போனாரே, இவற்றின் அடிப்படையில், ஜெயலலிதாவின் காவல் துறை செயலிழந்துவிட்டது என்று சுட்டிக்காட்ட “தினமணி”கள் முயற்சி செய்தனவா?
16-8-1991 அன்று மத்திய அமைச்சர் திரு. ப.சிதம்பரம் அவர்கள் கல்வீசித் தாக்கப்பட்ட போது; அ.தி.மு.க.வைச் சார்ந்த சட்டப் பேரவை உறுப்பினர்களே, அதாவது, திரு. ரமேஷ் என்பவரும், திரு.பி.சொக்கலிங்கம் என்பவரும் தாக்கப்பட்டபோது; 19-5-1992 அன்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது
“ஆசிட்” பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்ட போது; 2-12-1994 அன்று முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் திரு. சேஷன் தங்கியிருந்த ஓட்டல் தாக்கப்பட்ட போது; 26-7-2004 அன்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டபோது; சென்னை எம்.ஜி.ஆர். நகரில் 2005 டிசம்பர் மாதம் நிவாரணம் பெறுவதற்காக ஜெயலலிதா அரசு கையாண்ட தவறான அணுகுமுறையின் காரணமாக, 40-க்கும் மேலான அப்பாவிப் பொது மக்கள் நெரிசலில் சிக்கி மாண்டபோது; “தினமணி”கள் சட்டம்-ஒழுங்கைப் பற்றி வாய்திறந்தார்களா?
ஆனால், இனியாவது நடுநிலை நாளேடுகள் நாட்டு மக்களுக்குத் தேவையான - ஆக்கப்பூர்வமான செய்திகளையும், எந்த ஒரு கட்சியையும் சாராமல், விருப்பு வெறுப்பின்றி அரசியல் குறித்த செய்திகளையும், நாகரிக - கலாச்சாரக் கேடுகளுக்குத் துணை புரியாத செய்திகளையும், நல்லெண்ணத்தையும், நற்செயல்களையும் ஊக்குவித்து உற்சாகப்படுத்தும் செயல்களையும் வெளியிடுவது குறித்து சிந்திப்பார்கள் என்று நம்புகிறேன்! நடுநிலையாளர்க்குக் கெடுமதி; கூடா தல்லவா?
அன்புள்ள, மு.க. 4-11-2010
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 44 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065830_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_44.pdf; PDF பக்கம் 199–206. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.