முரசொலி கடிதங்கள் · 3437
வன்முறை தவிர்த்து வரும் தேர்தல்களிலும் வெல்வோம்!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3437. வன்முறை தவிர்த்து வரும் தேர்தல்களிலும் வெல்வோம்!
உடன்பிறப்பே,
வரும் டிசம்பர் திங்கள் 19ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஆயத்தப் பணிகள் முடிவுற்று, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் பணியிலே ஈடுபட்டுள் ளார்கள். ஒரு தொகுதி தெற்குப் பகுதியிலும் இன்னொரு தொகுதி வடக்குப் பகுதியிலுமாக நமது கழக முன்னணியினர் பகிர்ந்து கொண்டு பணியிலே ஈடுபடுவதற்கு வசதியாக அமைந் துள்ளது. தலைமைக் கழகத்தின் சார்பில் எந்தெந்த மாவட்டங்கள், அந்தந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலே இந்த இடைத் தேர்தல்களில் பணியாற்ற வேண்டுமென்று முடிவெடுத்து இன்றைய முரசொலியில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தூத்துக்குடி மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி என். பெரியசாமி தலைமையிலும், கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி சுரேஷ் ராஜன் தலைமையிலும், திருநெல்வேலி மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி கருப்பசாமி பாண்டியன் தலைமையிலும், இராமநாதபுரம் மாவட்டக் கழகத்தினர் தம்பி சுப.தங்கவேலன் தலைமையிலும், சிவகங்கை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி பெரியகருப்பன் தலைமையிலும், விருதுநகர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையிலும், திண்டுக்கல் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி ஐ.பெரியசாமி தலைமையிலும், தேனி மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எல்.
மூக்கையா தலைமையிலும், மதுரை புறநகர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி மூர்த்தி தலைமையிலும், மதுரை மாநகர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி தளபதி தலைமையிலும், திருச்சி மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி கே.என். நேரு தலைமையிலும், கரூர் மாவட்டக் கழகத்தினர் விரைவில் நியமிக்கப்படவுள்ள பொறுப்பாளர் தலைமையிலும், தஞ்சை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி பழனிமாணிக்கம் தலைமை யிலும், நாகை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஏ.கே.எஸ். விஜயன் தலைமையிலும், திருவாரூர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி கலைவாணன் தலைமையிலும், புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பெரியண்ணன் அரசு தலைமையிலும் பணியாற்ற வேண்டுமென்று தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுபோலவே வந்தவாசி (தனி) சட்டமன்றத் தொகுதியில் திருவண்ணாமலை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி. எ.வ. வேலு தலைமையிலும், விழுப்புரம் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி முனைவர் க. பொன்முடி தலைமையிலும், வேலூர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி ஆர். காந்தி தலைமையிலும், கடலூர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையிலும், கிருஷ்ணகிரி மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி செங்குட்டுவன் தலைமையிலும், தருமபுரி தெற்கு மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகப் பொறுப்பாளர், தம்பி முல்லைவேந்தன் தலைமையிலும், தருமபுரி வடக்கு மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி பெரியண்ணன் தலைமையிலும், சேலம் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி வீரபாண்டி ஆறுமுகம் தலைமையிலும், நாமக்கல் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி காந்திச்செல்வன் தலைமையிலும், திருப்பூர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர், தம்பி வெள்ளக்கோவில் சாமிநாதன் தலைமையிலும், பெரம்பலூர் மாவட்டக் கழகத்தினர்,
மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி பா. துரைசாமி தலைமையிலும், அரியலூர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி எஸ். சிவசங்கர் தலைமையிலும், திருவள்ளூர் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஈ.ஏ.பி. சிவாஜி தலைமையிலும், காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி தா.மோ. அன்பரசன் தலைமையிலும், தென் சென்னை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி ஜெ. அன்பழகன் தலைமையிலும், வடசென்னை மாவட்டக் கழகத்தினர், மாவட்டக் கழகச் செயலாளர் தம்பி வி.எஸ். பாபு தலைமையிலும் பணியாற்ற வேண்டுமென்று தலைமைக் கழகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையில் அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக முன்னணியினர் இடைத்தேர்தல் பணியிலே இணைந்து பணியாற்ற வேண்டு மென்று கேட்டுக் கொள்கிறேன். இந்த இடைத் தேர்தல்களில் தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் இருவரையும் ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர், நண்பர் திரு. தங்கபாலு அவர்களும், மற்ற தோழமைக் கட்சிகளின் தலைவர்களும் அறிக்கைகள் வாயிலாகவும், பேட்டிகள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டிருக் கின்றார்கள். அந்தத் தொகுதிகளிலே உள்ள தோழமைக் கட்சிகளைச் சேர்ந்த நண்பர்களின் துணையையும் பெற்று அவர்களையும் இணைத்துக் கொண்டு தேர்தல் பணிகளிலே முறையாக ஈடுபட வேண்டும்.
திருச்செந்தூர் தொகுதியிலே நமது கழகத்தின் சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். இவர் அந்தத் தொகுதியில் ஏற்கெனவே அ.தி.மு.க. சார்பில் நின்று வெற்றி பெற்றவர். இவர் நினைத்திருந்தால் இந்தப் பதவியிலே தொடர்ந்து நீடித்திருக்க முடியும். இருந்தாலும் அந்தக் கட்சியின் கொள்கைகள் பிடிக்காமல், அந்தக் கட்சியின் தலைமையின் போக்குப் பிடிக்காமல், அங்கிருந்து விலகி கழகத்திலே இணைந்து முழு அளவில் கழகப் பணிகளை ஆற்றி வருபவர். மற்றொரு கட்சியிலிருந்து பிரிந்து வந்த காரணத்தினால், அந்தக் கட்சியின் சார்பில் தனக்குக்
கிடைத்த அந்தப் பதவியை வைத்துக் கொள்வது முறையல்ல என்பதை ஜனநாயக அடிப்படையில் உணர்ந்து, அந்த பதவியை தானே முன்வந்து ராஜினாமா செய்த காரணத்தினால் இந்த இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தி.மு. கழகத் தலைமையும் அவரது நேர்மையை உணர்ந்து, பதவியில் இருந்து, அதனை துச்சமாக மதித்து வந்தவருக்கு மீண்டும் அந்தப் பதவியை அளிப்பது தான் நியாயம் என்ற அடிப்படையில் அவரையே அந்தத் தொகுதியின் வேட்பாளராக நிறுத்தி வைத்துள்ளது. அந்தத் தொகுதியில் நிற்க வேண்டுமென்று விரும்பி, கழகத்தின் சார்பில் பதினைந்துக்கு மேற்பட்டவர்கள் கோரிக்கை வைத்த போதிலும், கழகத்தின் தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு, அனைவரும் ஒற்றுமையோடு இருந்து அனிதா ராதாகிருஷ்ணனின் வெற்றிக்குப் பாடுபடுவோம் என்று என்னிடம் உத்திரவாதம் கூறிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள். அந்த வெற்றிச் செய்தியினை உறுதி செய்ய வேண்டுமென்று நான் அந்தத் தொகுதியிலே உள்ள வாக்காளப் பெருமக்களையெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். அதுபோலவே வந்தவாசி (தனி) தொகுதியின் கழக வேட்பாளராக, தோழமைக் கட்சிகளின் ஆதரவோடு, ஜெ. கமலக்கண்ணன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளார். இவருக்குள்ள சிறப்பு, இந்தத் தொகுதியிலே ஏற்கெனவே சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மறைந்த ஜெயராமன் அவர்களின் புதல்வர். தொகுதியிலே எந்த அளவிற்கு அரும்பாடுபட்டு ஜெயராமன் பணியாற்றினார் என்பதை அந்தத் தொகுதி மக்களே நன்கறிவார்கள். இயற்கை இடம் கொடுத்திருந்தால் தொடர்ந்து பதவியிலே நீடித்திருப்பார். அவருடைய இடத்தைப் பூர்த்தி செய்ய, அவரது புதல்வரையே அங்கே நிறுத்தியிருக்கிறோம். நல்ல இளைஞர். அமைதியாகப் பணியாற்றக் கூடியவர். அவரையும் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று அந்தத் தொகுதியின் வாக்காளப் பெருமக்களை யெல்லாம் கேட்டுக் கொள்கிறேன். கழகத் தோழர்கள் இந்த இரண்டு தொகுதிகளிலும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும்போது, கழக அரசின் சாதனைப்
பட்டியல்களையெல்லாம் மக்களிடம் எடுத்துக் கூறி, செய்து வரும் பணிகளைத் தொடர்ந்திட, தோழமைக் கட்சிகளின் ஆதரவைப் பெற்ற கழக வேட்பாளருக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ள வேண்டும். நன்முறையில் நம்முடைய சாதனைகளை எடுத்துவிளக்குவோம்! வன்முறை தவிர்த்து வரும் தேர்தல்களிலும் வெல்வோம்! நம்மை எதிர்த்து நிற்பவர்கள், கடந்த முறை இடைத் தேர்தல்களைப் புறக்கணிப்போம் என்று சொன்னார்கள். ஆனால் இன்று போட்டியிட முன்வந்துள்ளார்கள். அண்ணா அவர்கள் ஒரு முறை கூறியதைப் போல, “செல்வாக்கு சிதைந்து வரும் நிலையில் ஒரு கட்சி, பணம் சேர்த்து புதிய பலம் பெற நினைப்பது ஆசை அடங்காததால் தங்க பஸ்பம் சாப்பிடுவதற்கு ஒப்பானது - முறுக்கு ஏறும் வேகமாக - அதை விட வேகமாக முறுக்கு தளர்ந்து விடும் - முறிந்தே கூடப் போய் விடும்” என்பதற்கேற்ப, இந்த இடைத் தேர்தல்களில் அவர்களுக்குப் பாடம் கற்பித்தாக வேண்டும். உடன்பிறப்பே, நாம் மேற்கொண்டுள்ள இலட்சியம்
மகத்தானது. அதனை எடுத்து விளக்கவும், அதற்கு வலிவு தேடவும், அது வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு வளரவும், இந்த இடைத்தேர்தல்கள் பயன்பட வேண்டும் என்பதிலேதான் நமக்கு மிகுந்த அக்கறை இருத்தல் வேண்டும். எந்தெந்த மாவட்டங்கள் எந்தெந்த தொகுதியிலே பணிபுரிய வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவித்து விட்டது. இனி உன் கடமை உதயசூரியன் வெற்றிக்காகப் பாடுபடுவதுதான். அண்ணா எழுதிய சில வரிகளையே மீண்டும் எழுதி இந்த மடலை முடிக்க விரும்புகின்றேன்.
உறங்கும் உலகை எழுப்பி விடும் உதயசூரியன்!
உலகு தழைக்க ஒளி தருவது உதயசூரியன்!
உழைப்பவர்க்கு உரிய சின்னம் உதயசூரியன்!
உமது வாழ்வு மலரச் செய்வது உதயசூரியன்!
இருளகற்றி எழில் அளிக்கும் உதயசூரியன்!
இன அரசு விரும்புவோர்க்கு உதயசூரியன்!
திராவிடத்தின் விடுதலைக்காம் உதயசூரியன்!
தி.மு.கழக தேர்தல் சின்னம் உதயசூரியன்!
ஓட்டுப் போட ஏற்ற சின்னம் உதயசூரியன்! நாட்டினரே போற்றிடுவீர் உதயசூரியன்! உயிர்களுக்கெல்லாம் உற்ற தோழன் உதயசூரியன்! அரும்பை மலரச் செய்பவனும் உதயசூரியன்! அனைத்துக்கும் ஒளி ஊட்டுபவன் உதயசூரியன்! அகிலம் ஆளும் வலிமை பெற்றோன் உதயசூரியன்!
பொங்கிவிடும் வளத்தைத் தந்திடுபவனும் உதயசூரியன்!
இதனை நாடு அறிந்து, நல்லோர் எல்லாம் நம்மவராகி
நாட்டின் நலிவு போக்கிடும் பணியில், நமக்கு ஆதரவு மிகவும்
தந்திடச் செய்திடல், உன் கடன் அறிவாய் உடன்பிறப்பே!
மற்றவை தொடர்ந்து தெரிவித்திடுவேன், மரபு காத்திடும் உடன்பிறந்தோனே!
அன்புள்ள,
மு.க.
30-11-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 93–98. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.