முரசொலி கடிதங்கள் · 3436
சிதம்பரம் மீது சீற்றம் ஏன்?
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3436. சிதம்பரம் மீது சீற்றம் ஏன்? உடன்பிறப்பே,
“நினைப்புதான் பொழப்பைக் கெடுத்து தான்பேராண்டி” என்று கிராமப்புறத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதைப்போல நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு எப்படியோ பொழுது விடிந்தால் ஒரு அறிக்கை விட்டுவிட வேண்டும். இல்லா விட்டால் தலை வெடித்துவிடும். தமிழகத்திலே எந்தக் கிராமத்திலாவது ஏதாவது ஒரு சாலையில் சிறிது பாதிப்பு என்றால் போதும், உடனே அங்கே ஒரு ஆர்ப்பாட்டம் என்று அறிக்கை. அந்த வகையில் தற்போது தமிழகத்தை விட்டு விட்டு, அடுத்த பிரதமர் என்று நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கண்ட கனவின் காரணமாக நாடாளுமன்றத்திலே நடைபெறும் லிபரான் கமிஷன் அறிக்கை கசிவு பற்றி அறிக்கை விடுத்துள்ளார். எந்த அறிக்கை எழுதினாலும், கடைசியில் அதை முடிக்கும்போது, எனவே மந்திரி பதவியில் இருந்து அவர் விலக வேண்டும், இவர் விலக வேண்டும் அல்லது அவரை விலக்க வேண்டும், இவரை விலக்க வேண்டும் ஆட்சியையே கலைக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி விடுவார். தற்போது லிபரான் கமிஷன் அறிக்கை கசிவுக்கு முழுப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர், மாண்புமிகு ப. சிதம்பரம் அவர்கள் வெளியேற வேண்டுமாம் அல்லது வெளியேற்ற வேண்டுமாம். அப்படி ஜெயலலிதா அறிக்கை விட்டுவிட்டார்.
பழத்தை உரித்தால் சுளையைத்தான் சாப்பிட வேண்டுமே தவிர, அய்யோ, இந்தச் சுளை எப்படி வந்தது, இந்தத் தோலை உரித்ததால் அல்லவா வந்தது, இதைச் சும்மா விடக் கூடாது என்று புலம்புவதைப் போலவும் - திருடிய பொருள் கைப்பற்றப்பட்டது கண்டு திருடன்; “இதை யார் முதலில் கண்டு பிடித்தது?” என்று திருடியவன் திசை திருப்புவது போலவும்; லிபரான் கமிஷன் அறிக்கையிலே கூறப்பட்டதையெல்லாம் விட்டு விட்டு, அது எப்படி கசிந்தது, அதற்கு யார் பொறுப்பு என்ற சர்ச்சையிலே தீவிரமாக இறங்கியுள்ளார்.
லிபரான் கமிஷன் அறிக்கையிலே உள்ள செய்திகளை ஆராயப் புகுந்தால் அம்மையாரும் சிக்கிக்கொள்ள வேண்டும். ஏனென்றால் லிபரான் தனது அறிக்கையின் இறுதியில் கூறும்போது, அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் சாதி மதத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களைத் தண்டிக்க தனிச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இது தொடர்பான வழக்குகளை விசாரிக்க நாட்டின் சகல பகுதிகளிலும் பிராந்திய நடுவர் மன்றங்களை அமைக்க வேண்டும் என்றும் சொல்லி யிருக்கிறார்.
பாபர் மசூதி இடிப்பின் போது கரசேவையை ஆதரித்தவர் அப்போது முதல்வர் பதவியிலே இருந்த ஜெயலலிதா. 1992ஆம் ஆண்டு டெல்லி ஜான்சி ராணி மைதானத்தில் சுமார் 5000 சாமியார்கள் கலந்து கொண்ட விசுவ இந்து பரிஷத்தின் பேரவைக் கூட்டம் நடைபெற்று; அயோத்தியில் இராமர் கோயில் கட்டும் பிரச்சினை சம்பந்தமான தீர்மானம் நிறை வேற்றப்பட்டு; அப்போது பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் பாபர் மசூதியை அகற்றி இராமர் கோயில் கட்டும் முயற்சிக்கு ஆதரவு தராமல் இருப்பதைச் சுட்டிக்காட்டி; டிசம்பர் 6ஆம் நாள் அதற்கான கரசேவையை துவக்குவது என்று முடிவெடுத்தார்கள்.
அறிவிக்கப்பட்ட கரசேவையைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அறிக்கை விடுத்தனர். அது குறித்து நான் கூறும்போது, தேசிய முன்னணி ஆட்சியில் பிரதமர் வி.பி. சிங் அவர்கள் பதவியைப் பற்றிக் கவலைப்படாமல் எடுத்த நடவடிக்கையைப் போல அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாட்டில் ரத்தக் களரியை உருவாக்கிட நடைபெறும் செயலுக்கு வாசல் கதவைத் திறந்துவிட்ட குற்றத்துக்கு மத்திய காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்க வேண்டியிருக்கும் என்று கூறினேன்.
தேசிய ஒருமைப்பாட்டுக் குழு கூட்டம் கூடி பொருத்தமான நடவடிக்கை எதையும் எடுக்க பிரதமருக்கு அதிகாரம் அளித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சுர்ஜித் அவர்கள். அந்தக் கூட்டத்தில் பேசிய அன்றைய தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா “டிசம்பர் 6-ந்தேதி பாரதீய
ஜனதா, விஸ்வ இந்து பரிஷத் மற்றும் சில அமைப்புகள் துவக்கப் போவதாக அறிவித்துள்ள கரசேவை நடைபெறுவதற்குத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்” என்று பேசி
அது 24-11-1992 தேதிய தினமணி நாளிதழில் வெளிவந்தது. மேலும் அவரது பேச்சில் குறிப்பிட்ட
சில கருத்துகள் வருமாறு :-
“அரசியல் சட்டத்தின்படி பெரும்பான்மையினருக்குக் கிடைக்கும் சாதாரண உரிமைகளையும், சிறப்புரிமைகளையும் பாதிக்கும் வகையில் அரசியல் சரித்திர, சமூக அமைப்புகளின் பின்னணியில் தங்கள் நலன்களை முன்னிருத்தி செயல்படுவது சிறுபான்மையினருக்கு ஏற்றது அல்ல. இந்த நாட்டில் பெரும்பான்மை வகுப்பு, இந்துக்கள் என்பதை அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அவர்கள் தங்களுடைய மதச் சார்பான லட்சியங்களை அரசியல் சட்டத்தின் குறிக்கோள்களுக்கு மாறுபடாத வகையில் அமைதியான வழியில் நிறைவேற்றிக் கொள்ள முயன்றால் அதனை அனுமதிக்க வேண்டும். பெரும்பான்மையினரும், அவர்களுடைய உரிமைகளை சிறுபான்மையினரைப் போல அனுபவிக்க அனுமதிக்க வேண்டும். அயோத்தி பிரச்சினையில் இதனைத் தொடர்புபடுத்தி குறிப்பாகக் கூற வேண்டுமென்றால், உத்தரப் பிரதேச அரசு கையகப்படுத்திய இடத்தில் இந்துக்கள் விரும்பியபடி கட்டுமானப் பணியை நிறை வேற்ற அனுமதிக்க வேண்டும். கரசேவையை அனுமதிக்கும்படி நீதி மன்றங்களை அணுகத் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும். மிகவும் சுருக்கமாக என்னுடைய வேண்டுகோளைத் தெரிவிக்கிறேன். உத்தரப்பிரதேச அரசு கையகப் படுத்திய இடத்தில் கரசேவை நடைபெறத் தேவையான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும். அயோத்தியில் கோயில் கட்டப்பட வேண்டும் என்பது இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் விருப்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக உள்ளது. பொது மக்கள் கருத்தை இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின் கருத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது.”
இவ்வாறு அப்போது கரசேவையை ஆதரித்து ஒருமைப்பாட்டு மன்றக் கூட்டத்திலேயே பேசியவர்தான் ஜெயலலிதா. அதனால்தான் தற்போது லிபரான் கமிஷன் அறிக்கையில்
கசிவு என்றெல்லாம் கூறி, அந்தப் பழியை நண்பர் ப.சிதம்பரம் அவர்கள் மீது போட்டு, அவரை பதவி விலகச் செய்ய வேண்டுமென்றெல்லாம் அறிக்கை விடுகிறார்.
கரசேவையை ஆதரித்து ஜெயலலிதா இவ்வாறு குரல் கொடுத்த நேரத்தில் டிசம்பர் 5ஆம்தேதிய “முரசொலி”யில் “துள்ளி வரும் வேலாக - ஆவேசத்தை அள்ளி வரும் வாளாக” என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதையையும் பாருங்கள்!
“கரசேவை என்பது தான் என்ன?
கடவுள் சேவையா? அல்லால்
கலக விதை தூவும் சேவையா? அதற்குக்
கை கொடுத்திட இங்கோர் பாவையா?
திரேதா யுகத்தில் பிறந்தான் இராமன் எனில்
துவாபர யுகம் தொடர்ந்து வந்து; அதுவும் முடிந்து,
இப்போது நடப்பது கலியுகம் என்கின்ற போது
இருபது லட்சம் ஆண்டுகள் அன்றோ கடந்து போயின!
இத்தனை லட்சம் ஆண்டுக்கு முன்னே
இராமன் பிறந்த இடத்தைக் கண்டது
யாரோ? விண்டது எவரோ?
இப்போது இது தான் அந்த இடம் என்று கூறி,
இஸ்லாமிய வரலாற்று சின்னத்தை இடித்தலென்ன நீதி?
அயோத்தி நகரில் இராமனுக்கோர் கோயில்
அட்டியின்றிக் கட்டிக் கொள்ள அனைவரும்
அனுமதிக்கின்றோம்; எனினும் அதற்காக
அகற்றுவோம் பாபர் மசூதியை எனில்
ஒப்பிடமாட்டோம்!”
ஆனால் நடந்தது என்ன? பாபர் மசூதியின் முழுக் கட்டிடமும் மாலை 5 மணிக்குள் இடித்துத் தள்ளப்பட்டது. இந்தியா முழுவதும் அதற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியதால் தான் கரசேவையை ஆதரிக்கவே இல்லை யென்று ஜெயலலிதா ஒரு பல்டி அடித்தார். தமிழ் ஈழம் பற்றி அடித்த பல்டி போல; அது வேறு கதை.
அதையெல்லாம் அப்படியே மறந்துவிட்டு அல்லது மக்கள் மறந்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் ஜெயலலிதா இப்போது மத்திய உள்துறை அமைச்சர் திரு.ப. சிதம்பரம் அவர்களை வெளியேற்ற வேண்டும் என்கிறார்.
ஒரு ஆட்சியின் சார்பில் ஒவ்வொரு சம்பவத்தின்போது கமிஷன் நியமிப்பதும், அந்தக் கமிஷன் அதற்கான அறிக்கையினை அரசுக்குத் தாக்கல் செய்வதும் பொதுவான நடைமுறை. அப்படி வெளியிடப்படுவதற்கு முன்பு அந்த அறிக்கைகள் எதிர்க்கட்சியினரால் வெளியிடப்பட்டு விடுவதும் உண்டு.
அதற்கோர் உதாரணம் கூற வேண்டுமேயானால் - 26- 11-1980 அன்று திருச்செந்தூர் கோயில் வளாக விடுதியில் அறநிலையத் துறையின் உதவி ஆணையாளராக இருந்த சுப்பிரமணியப் பிள்ளை, அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த சில அறங்காவலர்களால் படுகொலை செய்யப்பட்டு அதற்கு தற்கொலை என்று பெயர் சூட்டி மறைத்திடப் பார்த்தபோது, தி.மு. கழகம் போர்க் குரல் கொடுத்தது. இந்தச் சம்பவம் குறித்து முதல் அமைச்சர் எம்.ஜி. ஆர். அரசினால் அமைக்கப்பட்டு விசாரணை நடத்திய நீதிபதி சி.ஜெ.ஆர். பால். அவர் அரசாங்கத்திற்குக் கொடுத்த அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்பதால், அரசு அதனை வெளியிடாது இருந்த நேரத்தில், நீதிபதி பால் அவர்களின் அறிக்கையின் நகல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் எனக்குக் கிடைத்ததால், அந்த அறிக்கையின் நகல்களை 24-11-1981 அன்று ஏடுகள் மூலமாக நான் வெளியிட்டேன்.
13-2-1982 அன்று சட்டப் பேரவையில் பால் கமிஷன் அறிக்கை மீதான விவாதம் நடை பெற்றபோது, கழகத்தின் சார்பில் பேசிய நான் - நீதிபதி பால் அவர்களின் அறிக்கை எவ்வாறு வெளியானது, அதற்கு யாரைப் பழி வாங்குவது என்பதைப் பற்றியெல்லாம் அரசு நேரத்தைச் செலவிடாமல், அந்த அறிக்கையிலே கூறியிருப்பது என்ன என்பதிலே கவனம் செலுத்த வேண்டும். உண்மையான குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.
அரசின் சார்பில் அந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் துறை மீண்டும் விசாரித்த பிறகு தான் பரிசீலிக்க வேண்டுமென்று சொன்ன போது, தி.மு. கழகம் அவையிலிருந்து வெளி நடப்பு செய்தது. அப்போது முதலமைச்சராக இருந்த எம்.ஜி. ஆர். எழுந்து, திருச்செந்தூர் கோவில் அறங்காவலர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை அனுப்பியிருப்பதாக அப்போதுதான்
அவைக்கு தகவலைச் சொன்னார். அதன் பின்னரும் நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தால், 15-2-1982 அன்று மதுரையிலிருந்து நானும் கழகத் தோழர்களும் திருச்செந்தூர் வரை நீதி கேட்டு நெடியப் பயணம் நடத்தினோம் என்பது வரலாறு. லிபரான் கமிஷன் அறிக்கை கசிந்து விட்டது எனக் கூறி, அதற்குப் பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப் படவேண்டும் என்று முழங்குகின்றாரே ஜெயலலிதா, அப்போது நீதிபதி பால் கமிஷன் அறிக்கை வெளியான போது அப்போது ஆட்சியிலே இருந்த முதலமைச்சரோ அல்லது அமைச்சர்களோ யாராவது அதற்கு தார்மீகப் பொறுப்பேற்று பதவி விலகினார்களா அல்லது விலக்கப் பட்டார்களா என்பதையும் தெரிவித்திருந்தால் அது பொருத்தமாக இருந்திருக்கும். அன்புள்ள, மு.க. 28-11-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 87–92. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.