முரசொலி கடிதங்கள் · 3435
முடிந்த தொடர்கதை; முடியாத வரலாறு!
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாக ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, மூலப் பக்க வாரியாக.
3435. முடிந்த தொடர்கதை; முடியாத வரலாறு!
உடன்பிறப்பே,
இரண்டாவது முறையாக முரசொலியில் வெளிவந்து கொண்டிருந்த “பாயும் புலி பண்டாரக வன்னியன்” வரலாற்று ஓவியம்; முடிவுற்றுவிட்டது.
எத்தனை முறை அந்த வீரனின் வரலாறு வெளிவரினும்; அந்த வீரகாவியம் வாழ்ந்து கொண்டே இருக்கும்.
அதை விளக்கவே இந்தக் கடிதம்:-
1991ஆம் ஆண்டுவாக்கில் வெளியிடப்பட்டதும், நான் எழுதிய வரலாற்றுப் புதினமுமான “பாயும் புலி பண்டாரக வன்னியன்” எனும் எழுச்சிமிக்க காவியத்தில், நான் படைத்துள்ள கதாபாத்திரங்கள் பண்டாரக வன்னியனும், அவன் உள்ளங்கவர்ந்த காதலி, குருவிச்சி நாச்சியாரும், அவன் அருமைத் தங்கையர், நல்ல நாச்சியும், ஊமைச்சி நாச்சியும் இலங்கை மண்ணில் தமிழர்களின் உரிமை காக்கப் போராடியவர்கள் என்று நான் சித்திரித்துள்ளதை அந்தப் புதினத்திற்கு அணிந்துரை வழங்கிய நமது பேராசிரியர் அவர்கள் ஓரிடத்தில் குறிப்பிடும் போது “வஞ்சிக்கப்பட்ட நல்ல நாச்சியார், நானும் தமிழன்தானே என்று கூறுகிற கயவன் காக்கை வன்னியனை நோக்கி - “ நீ தமிழன் தான்! இனத்தால், மொழியால், உன் உடலில் ஓடும் இரத்தத்தால் நீ தமிழன்தான்! ஆனால் சூடு சொரணை இல்லாத தமிழன்! பணத்துக்காகப் பாத பூஜை செய்யும் தமிழன்! பதவிக்காக மானத்தை அடகு வைக்கும் தமிழன்!” என்று சினந்து கூறிய சொற்கள், இன்றைய தமிழ் மண்ணில் எவ்வளவு பேருக்கு ஏற்புடையதாக அமையும் என எண்ணத் தோன்றுகிறது. அதுதான் எண்ணத் தொலையாதே என்ற ஏக்கந்தான் மேலோங்குகிறது” என்று குறிப்பிட்டு விட்டு “மற்றொரு களம், பண்டாரக வன்னியன் பற்று வைத்திருந்த தமிழகத்தில், கயத்தாறு பூமியில், வெள்ளைக்கார மேஜர், வீரபாண்டிய கட்டபொம்மனைக்
குற்றஞ்சாட்டிய போது கட்டபொம்மன் உரையாக இடம் பெறுவது இது; “ஒற்றுமை இன்மையால் உருப்படாமல் போன இனம் என்று உலகில் ஒரு இனம் உண்டென்றால் அது தமிழ் இனம் தான்! எதிரிகள் கஷ்டப்பட்டுப் பிரித்து வைக்கத் தேவை இல்லாமலே - தாங்களாகவே கசப்பு, பொறாமை, காழ்ப்பு இவற்றின் உச்சக் கட்டத்திற்குச் சென்று பிரிந்து நிற்கும் இனமும் தமிழ் இனம் தான்! அதன் விளைவுதான் இதோ உமது எதிரில் வீரபாண்டியன் கூண்டில் நிற்பதும், அதனை இத்தனைத் தமிழ்க் குறுநில மன்னர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பதும். இதுதானே இன்றையத் தமிழ்நாட்டின் அரசியல் திருக்கோலம்!” என்று இந்த நூலில் கலைஞர் குறிப்பிடுவது தான் எவ்வளவு வேதனையோடு நம் நெஞ்சில் அதிர்கிறது என்று தான் கொண்ட அதிர்வை பேராசிரியர் அந்த அணிந்துரையில் எடுத்துக் காட்டுகிறார். அவரது அணிந்துரையோடு தொடங்கும் “பண்டாரக வன்னியன்” எனும் வீர காவியத்தில் “தோரண வாயில்” எனும் தலைப்பில் நான் எழுதிய முன்னுரையைக் குறிப்பிட்டு விட்டு அடுத்தகட்டமாக சில வரலாற்றுக் குறிப்புகளையும் இந்தக் குறுந்தொடரில் நான் குறிப்பிட விரும்புகிறேன். 1982-ல் இலங்கையில் வவுனியா மாவட்ட வளர்ச்சிக் குழுவினர், வவுனியாவில் கற்சிலை மடுவு என்ற இடத்தில் பண்டாரக வன்னியனுக்கு சிலையெடுக்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அந்த விழாவையொட்டி வெளியிடப்பட்ட மலருக்கு நான் எழுதியனுப்பிய வாழ்த்து பின்வருமாறு :- “தமிழகத்தில் எந்த அளவுக்கு வீரபாண்டியக் கட்டபொம்மன், வெள்ளையரை எதிர்த்துப் போராடித் தன் உயிரைத் தியாகம் செய்தானோ - அதைப்போலவே இலங்கை வன்னி நாட்டில் “உண்டேல் சுதந்திரம், இன்றேல் இல்லை வாழ்வு!” என்ற கோஷத்தை முன்வைத்து, தன் இறுதிமூச்சு வரையில் போராடி, உயிர் விட்ட தியாகி மாவீரன் பண்டாரக வன்னியனுக்கு
வவுனியாவில் சிலையெடுத்து அதனையொட்டி முத்தமிழ் விழா ஒன்றினையும் கொண்டாட அருமை நண்பர் - பாராளுமன்ற உறுப்பினர் தா. சிவசிதம்பரம் உள்ளிட்ட குழுவினர் முடிவு செய்துள்ளதறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தியாகத்திற்கு, நிகழ்காலம் உரிய மதிப்புத் தரத் தவறினாலும், எதிர்காலம் நிச்சயம் மதிப்பு தந்தே தீரும் என்பதற்கு அடையாளமாக இச்சிலை திறப்பு விழா நடைபெறுவது போற்றுதற்குரியதாகும்.” அன்றுதொட்டே, அந்த மாவீரனைப் பற்றிய குறிப்புகளைப்
பலர் வாயிலாகத் திரட்டிட ஆவல் எழுந்தது எனக்கு! எனினும்
அக்குறிப்புகள் எளிதிற் கிடைத்திடவில்லை!
அச்சிலை திறப்பு விழாவுக்கு வாழ்த்தளித்த - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் கலாநிதி வித்யானந்தன் அவர்கள்:-
“வன்னி நாடாகிய அடங்காப்பற்றின் மானம் காக்க அந்நியருடன் இறுதி மூச்சு வரை போராடிய மாவீரன் பண்டாரக வன்னியன். மக்கள் நலனை மனதிற் கொண்டு தேசப்பற்றுடன் ஆண்டவன் அவன். ஆங்கிலப் படைத்தளபதி ஒன்டிரிபர்க் தனது புகழை நிலைநாட்டிக் கொள்வதற்காக கற்சிலை மடுவில் பண்டாரக வன்னியனுக்கு நினைவுக் கல் அமைத்தான். அவனின் வீரத்தைப் பறைசாற்ற வவுனியா மாவட்ட அபிவிருத்தி சபையினர் வவுனியாவில் சிலையெழுப்புகின்றனர். வன்னிப் பிரதேசத்து மக்களுக்கு மட்டுமன்றி, நம்பிக்கை குலைந்து தளர்ந்து போயிருக்கும் ஈழத்துத் தமிழர் யாவருக்கும் நம்பிக்கையும், தேசப்பற்றும், உரிமைக்குரலும் ஓங்கிட இச்சிலை அமையுமென எதிர்பார்க்கலாம். நல்ல தலைவர்களை மக்கள் விரும்பவும், இனங்கண்டு கொள்ளவும் நல்ல தலைவர்கள் தோன்றவும் இச்சிலை வழிவகுப்பதாக!” என்று குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலேயே அந்த சுதந்திரப் போர் வீரன் தோற்கடிக்கப்பட்டானா? அத்துடன் அவனது போர் முழக்கம் முற்றுப்பெற்று விட்டதா? அல்லது மீண்டும் ஆர்ப்பரித்துக் கிளம்பியதா அந்த அரிமா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் “பாயும் புலி பண்டாரக வன்னியன்” தொடர் சித்திரம், பதில் அளிக்கத்தான் செய்கிறது! விளக்கமான பதில்! வீரங்கொப்பளிக்கும் பதில்!
அந்த மானங்காத்த மன்னவனுக்குச் சிலையெழுப்பிய பொழுது இலங்கைப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரான நாவலர் திரு. அமிர்தலிங்கம் அவர்கள் வழங்கிய வாழ்த்தில் “ஆங்கிலேயரின் படையெடுப்பினால் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் ஆட்சி செய்த தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் தங்கள் இறைமைகளை இழந்த போதும் - இறுதி வரையில் தமது ஆட்சிக்கு உட்பட்ட மக்களின் இறைமையை நிலைநாட்ட முழு மூச்சாக நின்று போராடியவன் வன்னியின் கடைசி மன்னன் மாவீரன் பண்டாரக வன்னியன். அவனது வீழ்ச்சிக்கு ஆங்கிலேயரின் ஆக்ரமிப்பு மட்டுமல்ல, கூடப் பிறந்தே கொல்லும் வியாதி போல் விளங்கிய காக்கை என்பவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட இழிசெயலும் முக்கிய காரணமாக இருந்தது” என்று குறிப்பிடுகிறார். துரோகிகளைச் சந்திக்க நேர்ந்த அந்த தூயவனுக்கு நல்ல நண்பர்களும் இல்லாமலில்லை. கி.பி. 1815 ஆம் ஆண்டு வரையில் கண்டியை ஆட்சி செய்து ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு தமிழகத்து வேலூர் சிறையில் பதினாறு ஆண்டுக்காலம் அடைக்கப் பட்டு அந்தச் சிறையிலேயே உயிர்நீத்த கண்ணுசாமி என்ற விக்ரம ராஜ சிங்கன், பண்டாரக வன்னியனின் உயிர்த்தோழனாவான். காட்டிக் கொடுப்போரால் மனம் நொந்த அந்த மாத்தமிழனின் எரிமலை இதயத்தை சிறிது மாற்றியமைத்து, அவன் இளைப்பாறும் குளிர் தருவாக குருவிச்சி நாச்சியார் என்னும் கோதையொருத்தியும் இருந்தாள்! மன உறுதியின் அடிப்படையில் கட்டப்பட்ட அந்தக் காதல் மாளிகை, ஒரு வைராக்கிய மாளிகை! தியாக மாளிகை! போர்ச்சுக்கீசியர், ஒல்லாந்தர் எனப்படும் டச்சுக்காரர், ஆங்கிலேயர்-இவர்களின் நுழைவினால் இலங்கையில் தமிழ் மன்னர்களின் அரசுகளும், சிங்கள மன்னர்களின் அரசுகளும் ஒவ்வொன்றாக வீழ்ந்த போதும் பண்டாரக வன்னியனின் அரசும், கண்டி மன்னனின் அரசும் மட்டுமே, இறுதியாக ஆதிக்கம் பெற்று நிலைத்து விட்ட ஆங்கிலேயரை எதிர்க்கின்ற வல்லமை பெற்றவைகளாக விளங்கின. வடக்கே யாழ்ப்பாணப் பரவைக் கடலையும், தெற்கே அருவி ஆற்றையும், மேற்கே மன்னார் மாவட்டத்தையும், கிழக்கே
திரிகோண மலையையும் எல்லைகளாகக் கொண்ட பகுதியைப் பண்டாரக வன்னியன் பரிபாலித்தான். டச்சுக்காரர் எதிர்ப்புக்கும், ஆங்கிலேயர் எதிர்ப்புக்கும் அவன் ஈடு கொடுக்க வேண்டியிருந்தது. அவனுக்குத் துணையாக திருகோணமலை எல்லைப்புறத்தில் நல்லநாச்சி - மன்னார் எல்லையில் பனங்காமம் பகுதியை ஊமச்சிநாச்சி - என்ற அவனது சகோதரிகளும் பரிபாலித்துப் பாதுகாத்தனர் என்ற வரலாற்றுக் குறிப்பைக் காணும்பொழுது - அந்த மண்ணில் வாழ்ந்திடும் தமிழர்கள் அன்றும் இன்றும் கண்ணகியைத் தமது தெய்வமாக வழிபட்டனர், வழிபடுகின்றனர் என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! சேரன் செங்குட்டுவன் தமிழகத்தில் வஞ்சிமூதூரில் பத்தினித் தெய்வமாம் கண்ணகிக்கு, இமயத்திலே கல் எடுத்து அதனைத் தன்னுடன் போரிட்டுத் தோற்ற கனகவிசயர் தலையிலேற்றிக் கொணர்ந்து சிலையெடுத்தான். அப்போது ஈழத்து மன்னன் கயவாகு அந்தப் பத்தினி வழிபாட்டை ஈழத்தில் தொடக்கி வைத்தான் எனச் சிலப்பதிகாரம் கூறுகிறது. மதுரையை எரித்தும் சினந்தணியாத கண்ணகி பத்தாவது இடமாக வந்து அமர்ந்த இடந்தான், “பத்தாப்பளை” என வழங்கப்பட்டு, மருவி, இன்று “வற்றாப்பளை” ஆகியது என ஒரு கதை, அந்தப் பகுதியில் இன்றைக்கும் உண்டு. அந்தக் கண்ணகி வழிவந்தோரைத் தனது சகோதரிகளாகவும் - தனது அன்புக் காதலி குருவிச்சி நாச்சியாராகவும் பெற்றிருந்த பண்டார வன்னியன் எனப் பட்டம் கொண்ட அந்த வீரன், மிக இளமைப் பருவத்திலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்று முப்பத்தி நான்கு வயதிலேயே, களச் சாவில் தனது புகழை நட்டான்! பண்டார வன்னியன் என வரலாற்றுக் குறிப்புகளிலும் - பண்டாரக வன்னியன் என்று இந்தத் தொடர்கதைத் தலைப்பாகவும் குறிப்பிடப்படும் அவனது இயற்பெயர் குலசேகரம் வைரமுத்து என்பதாகும். குலசேகரம் என்ற குடிப் பெயருக்குரிய மன்னர்களின் வழி வழி வந்த தோன்றல்தான் வாள்வீரன் வைரமுத்து! “ஏகாதிபத்தியம் எதுவாக இருந்தாலும் அந்த ஏகாதிபத்தியம் ஒரு இனத்தின் இறைமையைப் பறிக்க முற்படும்போது அந்த இனம்
வீறு கொண்டு எழுந்து, தனது உரிமைக்காகப் போராடும் என்பதைப் பண்டார வன்னியன் வாழ்க்கை எமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. பண்டார வன்னியன் வாழ்ந்த மண்ணிலே அவனின் வாரிசுகளாக வாழ்ந்து வரும் மக்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் சுதந்திர தாகம் கொண்ட மக்களாக, தங்கள் அரசியல் உணர்வை வெளிப்படுத்தியதை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடுவதிலே நான் பெருமையடைகிறேன். இன்று அளிக்கப்படும் கெளரவம் மாவீரன் பண்டார வன்னியனுக்குத் தான் உடையதல்ல. இன்று கெளரவிக்கப்படுவது அவனுடைய இலட்சியமும், சுதந்திர வேட்கையும்தான்” என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. மு. சிவசிதம்பரம் அவர்கள் பண்டார வன்னியனின் சிலை திறப்பு விழாவில் குறிப்பிட்டார்.
இலங்கையின் பிரதமர் பிரேமதேசா கூட, அந்தச் சிலை திறப்பு விழாவை முன்னிட்டு வழங்கிய வாழ்த்தில்,
“கெளரவிக்க வேண்டியவர்களைக் கெளரவிப்பது தார்மீக ஒழுக்க நெறியாகும்” என்றும்,
“மாவீரன் பண்டார வன்னியனை கெளரவிக்க சிலையெடுக்கும் விழா, முற்றிலும் சரியான செயல் என்பதை நான் உறுதியாகக் கூறுகிறேன்”
என்றும் குறிப்பிட்டிருப்பது அந்த வீரனின் புகழைப் பறைசாற்றுவதாகும்.
போர்வாளைத் தனது கொடியின் சின்னமாகக் கொண்டு - புலியெனப் பாய்ந்து களம் பல கண்ட - பண்டாரக வன்னியனின் உருவமோ; -
உயர்ந்த தோற்றம்!
விரிந்த மார்பு!
ஒடுங்கிய இடை!
பரந்த நெற்றி! உரமேறிய தோள்கள்!
கூரிய பார்வை!
அந்தத் தீரனின் அஞ்சாநெஞ்ச வாழ்க்கையின் அடிச்சுவட்டில் விளைந்த வீரமண்ணின் தீரர்களையும், வீரர்களையும், தியாகிகளையும் அவர்களின் சரிதங்களையும் முத்தாரமாகக்
கோத்து நான் வழங்கிய அந்தப் போர்க் காதையின் முடிவை எவ்வாறு தீட்டியுள்ளேன் என்பதைப் படித்துப் பார்த்தால் - இதோ படித்துத்தான் பாருங்களேன்!
குருவி நாச்சியார் சற்று குழப்பமடைந்தாள். பண்டாரக வன்னியன் எதிரியிடம் தோல்வியுற்று, அவனிடம் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு, அவன் கூடாரத்தில் அமர்ந்து விருந்து அருந்துகின்றான் என்று வெள்ளையர் தளபதி எட்வர்ட் என்பவன் கூறியதைக் கேட்டு, குருவி நாச்சியார் குழப்பமடைந்தாள். ஆனால் ஒன்று - ஆங்கிலேயப் படையினரின் நவீன போர்க் கருவிகளுக்கு மத்தியில் அப்படியொரு தோல்வி பண்டாரகனுக்கு ஏற்பட்டிருக்கக்கூடும் என்பதையும் அவளால் முழுமையாக மறுக்கமுடியவில்லை.
எனவே “சரி வருகிறேன்!” என்று கூறிக் கொண்டே வாளை உறையில் போட்டுக்கொண்டு குருவிச்சி நாச்சியார் எட்வர்டைப் பின் தொடர்ந்தாள்; பண்டாரகனை சந்திக்க! எட்வர்டைச் சேர்ந்த இரு வீரர்களும், குருவிச்சியின் இரு வீரர்களும் முல்லைத் தீவு அரண்மனையின் முகப்பிலேயிருந்து அந்த இருவரின் பின்னால் தொடர்ந்து சென்றார்கள். ஆறு குதிரைகளும், முல்லைத் தீவின் தெருக்கள் பலவற்றைக் கடந்து நீண்ட குறுகிய சாலையொன்றில் போய்க் கொண்டிருந்தபோது எதிரில் ஒரு குதிரையில் ஓர் ஆங்கிலேய வீரன் மிக வேகமாக வந்து எட்வர்டின் முன்னால் குதிரையை நிறுத்தினான்.
எட்வர்ட், அந்த வீரனை இறுமாப்புடன் நோக்கி “என்ன?” என்றான்.
அந்த வீரன், ஒரு கடிதச் சுருளை எட்வர்டின் கையில் கொடுத்தான். எட்வர்ட், அந்த மடலைப் பரபரப்புடன் படித்துப் பார்த்தான் மனதுக்குள்ளாகவே!
“அன்புள்ள எட்வர்ட்! பண்டாரக வன்னியன், அவனது படை வீரர்கள் ஐம்பது பேருடன் ஓட்டுச் சுட்டான் பகுதியில் நெடுங்காணி சாலையருகே நமது படைகளால் வளைக்கப்பட்டு சிறைவைக்கப்பட்டு விட்டான். நண்பா! நீ உடனே பனங்காமம் சென்று அங்கே மிக ஆவேசமாக நம்மை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கும் குருவிச்சி நாச்சியாரைத் தோற்கடித்தாக வேண்டும் - இங்ஙனம் வான்ட்ரி பெர்க்.”
எனக் கடிதம் பேசிற்று! எட்வர்ட், மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்! பனங்காமம் செல்லும் வேலையில்லாமலேயே குருவிச்சியை ஏமாற்றி அழைத்துப் போகிறோமே என்ற எக்களிப்பால் அவன், தன்னைத் தானே புகழ்ந்து கொண்டான். குருவிச்சி எதுவும் நினைத்து விடக் கூடாதே என்பதற்காக அவளைப் பார்த்து புன்னகை புரிந்தவாறு “நீ முதலில் கேட்டாயே, கூடாரம் எங்கே இருக்கிறது என்று - இந்தக் கடிதத்தில் அந்த விபரம் வந்திருக்கிறது” என்றான் எட்வர்ட்! “எங்கே இருக்கிறது?” என்றாள் குருவிச்சி. “ஓட்டுக்கட்டான் பகுதி நெடுங்கேணிச் சாலையருகில் இருக்கிறதாம்!” கடிதத்தைச் சுருட்டி, அதைக் கொண்டு வந்த வீரனிடமே எட்வர்ட் வீசி எறிந்தான். அந்த வீரன் அதை லாவகமாகப் பிடித்துக் கொண்டான். உயர்ந்த மரங்கள் அடர்ந்த தோப்பு. அந்தத் தோப்புக்குள்ளே ஒரு கூடாரம். கூடாரத்தை யொட்டியுள்ள மரங்கள் ஒவ்வொன்றிலும் முல்லைத்தீவின் வீரன் ஒருவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருக்கிறான். அப்படி ஐம்பது வீரர்கள் கட்டப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நடுவே ஒரு பெரிய வலுவான மரத்தில் சங்கிலியால் கட்டுண்டு பண்டாரக வன்னியன். அந்தக் கொடுமையான காட்சியைப் பார்த்ததும் குருவிச்சி, தன்னை மறந்து ஓடிப்போய் பண்டாரகனைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கோவெனக் கதறிவிட்டாள். அவளது கூந்தலைக் கோதிவிட்டவாறு, பண்டாரகன் அவளுக்கு ஆறுதல் சொன்னான். “கவலைப்படாதே! இந்தத் தோப்பில் களைப்பாறிக் கொண்டிருந்த எங்களைத் திடீரெனச் சூழ்ந்து கொண்டு வென்று விட்டதாக ஆர்ப்பாட்டம் புரிகிறார்கள்.” பண்டாரகன் புலியாக உறுமினான்! “இவர்களுடன் நீங்கள் உடன்பாடு செய்து கொண்டதாகக் கூறி என்னை அழைத்து வந்தார்களே!” “உடன்பாடா? இலங்கை மண்ணையும் தமிழ் ஈழத்தையும் அந்நியராம் ஆங்கிலேயர்க்கு அடிமையாக்க ஒரு உடன்பாடா?
அதற்கு இந்த உயிர் உள்ளவரையில் என் தலை அசையுமென நீ நம்புகிறாயா?”
குருவிச்சி பேசாமல் நின்றாள். ஏதோ தீர்க்கமாக சிந்தித்தாள். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாக வான்ட்ரி பெர்க்கையும், எட்வர்ட்டையும் பார்த்துச் சொன்னாள்.
“அவர் அப்படித்தான் பேசுவார் - ஆனால் நான் அவரை என் வழிக்குக் கொண்டு வர முடியும் - உங்களோடு இதுவரை உடன்பாடு செய்து கொள்ளாவிட்டாலும், இனி ஒரு உடன்பாடு செய்துகொள்ள நான் தயார்! இவரும் என் பேச்சைத் தட்டமாட்டார்!”
என்று கூறிக்கொண்டே குருவிச்சி, பண்டாரகனைப் பார்த்துக் கண்ணைச் சிமிட்டியபடி, “என் பேச்சைத் தட்டக்கூடாது! என்ன சரிதானா?” என்று கேட்டாள். பண்டாரகன் குருவிச்சியின் மனதைப் புரிந்து கொண்டு மெளனமாக நின்றான்.
“மெளனம் சம்மதத்திற்கு அறிகுறி! காலமெல்லாம் ஆங்கிலேயருடன் போரிட்டு நாங்கள் களைத்துப் போய்விட்டோம். எங்களின் பழைய படைக் கருவிகள் அற்புதமானவை! ஆற்றல் வாய்ந்தவை! ஆயினும் உங்களின் நவீன ஆயுதங்கள் முன்னால் அவை நிற்க முடியவில்லை! ஆயுதங்களின்றியே நாங்கள் பல சாகசங்களைச் செய்யக் கூடியவர்கள்! வாளையும், ஈட்டியையும் வைத்துக் கொண்டே இந்த வையகம் விளங்கும் சாதனைகளைச் செய்வோம்!”
என்று குருவிச்சி பேசிக் கொண்டிருக்கும்பொழுதே, வான்ட்ரி பெர்க் குறுக்கிட்டு,
“வாளையும் ஈட்டியையும் வைத்துக் கொண்டு அப்படியென்ன வையம் புகழக்கூடிய சாதனைகளைச் செய்வீர்கள்?”
என்று வியப்புடன் கேட்டான்.
“எங்கள் வீரர்கள் ஐம்பது பேரை இரு பிரிவாகப் பிரித்து இருபுறமும் நிறுத்துவோம். அவர்கள் கைகளில் வாட்கள் இருக்கும். நான் என் தலையின் மீது ஈட்டியால் குத்தப்பட்ட ஒரு பெரிய பழத்தை வைத்துக்கொண்டு நடுவில் நிற்பேன். எங்கள் ஐம்பது வீரர்களும் எதிரும் புதிருமாக வாளுடன் பாய்ந்து யாருக்கும் ஒரு காயமில்லாமல் என் தலையில் ஈட்டி முனையில் உள்ள பழத்தை
ஐம்பது துண்டுகளாக ஒரே வெட்டில் வெட்டுவார்கள். ஒரே ஒரு பழத்துண்டு மட்டும் ஈட்டியுடன் என் தலைமீது எஞ்சியிருக்கும்.”
குருவிச்சி இதைச் சொன்னவுடன், “அப்படியா?” என்ற கேள்வியுடன் வான்ட்ரி பெர்க், வீரர்களைப் பார்த்து “ஏய்! பண்டாரக வன்னியனைத் தவிர மற்றவர்களை அவிழ்த்து விடுங்கள்! அந்த அதிசய சாதனையை அவர்கள் நிகழ்த்தட்டும் பார்க்கலாம்” என ஆணையிட்டான்.
“பண்டாரகனைத் தவிர” என்றதும் குருவிச்சிக்குப் பெரும் ஏமாற்றம்தான்! ஆனாலும் சமாளித்துக் கொண்டாள்.
பெரிய பழமொன்றை ஈட்டியில் பொருத்தி, தன் தலை மீது வைத்துக் கொண்டு நடுவில் நின்றாள். பண்டாரகனைத் தவிர கட்டவிழ்த்து விடப்பட்ட முல்லைத் தீவின் வீரர்கள் ஒரு பக்கத்துக்கு இருபத்தைந்து பேராக வாட்களுடன் குதிரைகளில் அமர்ந்திருந்தனர்.
“உம்! பாயலாம்!” என்று குருவிச்சி தனது கையை ஓங்கித் தட்டியதுதான் தாமதம். அந்த ஐம்பது வீரர்களும் அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேய வீரர்களுடன் மோதினர். பெரும் அமளிக்கிடையே பண்டாரக வன்னியனின் கட்டுக்கள் களையப்பட்டன. பண்டாரகன், பாயும் புலியாகவே ஒரு குதிரையிலேறி எட்வர்டைக் குத்திச் சாய்த்தான். நூற்றுக்கணக்கான ஆங்கிலேய வீரர்களின் உடல்கள் துண்டு துண்டுகளாகச் சிதறின.
கீழே சாய்ந்த எட்வர்டு, மரண மூச்சு விட்டுக்கொண்டே தனது துப்பாக்கியைத் தூக்கினான். துப்பாக்கிக் குண்டு, குருவிச்சியின் நெற்றிப் பொட்டை நோக்கிப் பாய்ந்தது. அதற்குள் அவளைத் தூக்கிக் கொண்டு போகப் பண்டாரக வன்னியன் குதிரையுடன் அவளிடம் பாய்ந்தான். ஆனால் அதற்குள் துப்பாக்கிக் குண்டுகள் அவள் உயிரைக் குடித்துவிட்டன.
அவள் மூச்சு நின்றுபோனது தெரியாமலே குதிரை மீது அவளை அணைத்தவாறு பண்டாரக வன்னியன், ஆங்கிலேயரிடமிருந்து தப்பிவிட்டான். எஞ்சிய அவனது வீரர்களும் அவனைப் பின் தொடர்ந்தனர்.
மணக்கோலம் பூண்டு வாழ்வின் சுவை அறியத் துடித்தவள் - இலட்சியத் திருவிளக்காய் - அணைந்தும் அணையாத தியாகச் சுடர்விளக்காய் - பிணக்கோலம் பூண்டு, பண்டாரகனின் மடியில் படுத்துக் கொண்டு - அவனது இறுக்கமான தழுவலுடன் குதிரையில் வேக வேகமாகப் போய்க் கொண்டிருந்தாள். அவள் உயிருடனிருப்பதாகவே கருதிக் கொண்டு அவனும், அவனைப் பின்தொடர்ந்த தமிழ் வீரர்களும் காட்டுப் பாதையில் நெடுந்தூரம் சென்று கொண்டிருந்தனர். காட்டுப் பாதையில் சென்று அவர்கள் அன்று காட்டிய பாதை வீரமறவர்களின் பாதை! பண்டாரக வன்னியன் ஒருவனல்ல; அவனைப் போல பலர்; உறுதியும் வாய்மை ஒளியும் உணர்வும் கொண்டவர்கள் தோன்றிட - அந்த மாவீரனின் வரலாறு பயன்படத் தவறவில்லை. எனவே அது வாழும் வரலாறு! அன்புள்ள, மு.க. 26-11-2009
மூலம்: கலைஞரின் கடிதங்கள் — தொகுதி 43 (சீதை பதிப்பகம்), TVA_BOK_0065828_கலைஞரின்_கடிதங்கள்_தொகுதி_43.pdf; PDF பக்கம் 76–86. தமிழ் உரை அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் நேரடியாகச் சரிபார்க்கப்பட்டது; அச்சிட்ட கடித எண் மாற்றமின்றித் தரப்பட்டுள்ளது.