பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 299 / 300

பெரிதாற்றிப் பெட்ப

அச்சுப் பக்கம் 637638 · ஸ்கேன் 654655 · அதிகாரம் 128 (குறிப்பறிவுறுத்தல்) — குறள் 1276

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“பிரிந்திருந்தமைக்காகப் பெரிதும் கலங்கினாயோ கண்ணே! ‘இருக்கின்றேன் சாகவில்லை’யென்று பாவேந்தர் கவிதை வரியினைத் தீட்டிக் காட்ட உனக்கு மட்டும்தான் தெரியுமோ? ‘இங்கென்ன வாழ்கிறது!’ எனப் பதில்மடல் எழுதி அல்லவோ தவிர, என் இதயத்தைப் பிழிந்தெடுத்த பிரிவுத் துன்பத்தை நீயென்ன கண்டாய்! அடடா! அப்படியேன் பார்க்கிறாய்? சிறார்கள் தெருவினில் விளையாடும் கோலிக் குண்டுகளைப்போல், உன் விழிகள் என்மீது விர்ரென்று பாய்கின்றனவே! பசலை படர்ந்திருக்கும் - பைந்தொடிகள் கழன்று இருக்கும் - ‘இனிப் பார்ப்பதேயில்லை இந்த இரக்கமற்றவனை’ என்றெல்லாம் கூடச் கூறினாய்; உன்னைச் சினக்காட்டின் மத்தியிலே நிறுத்தியிருக்கும் - எல்லாம் அறிவேன் அன்பே!

அழகே! அமுதமே! சத்து நிறைப் பலாச்சுளை முத்தங்களைக் கத்தும் கடல் ஓரத்தில் பரிமாறிக்கொண்டதையும் முத்து மொழிக் கொஞ்சலுக்கு முற்றுப்புள்ளி வைத்துக் கட்டிலறைக் காவியத்தின் உச்சக்கட்டக் கவிதையினை மெளனமாய் இசைத்ததையும் எப்படித்தான் மறந்திட இயலும் பெண்ணே! அந்த நினைவுகளின் தித்திப்பால்தான் விநாடி யுகங்களை விரட்டிட முடிகிறது என்பது உனக்கும் பொருந்துகிற உண்மைதானே கண்ணே! சரிதானே! வா! ஆறிடாது அல்லும் பகலும் வருந்துகின்ற காதல் அணையைக் கட்டித் தழுவிச் சுற்றக் குளிரவைப்போம் வா! தழுவிடும்போது ஏற்படும் தகிப்பு; தண்ணிலவின் குளிர் மழைபோல் இருக்குமென அறிவோம் நாம்!”

அதனாலே ஊடல் விடுத்துக் கூடல் கோபுரத்துக் கலசத்தில் என்னை உலவவிடு; நீயும் கைகோத்து இன்பப் பூங்காவில் நடை பயிலத் தொடங்கு! பிரிவுக்குப்பின் விளைகின்ற சந்திப்பு, பேரின்பப் பெருக்கன்றோ! அந்தக் காதல் இன்பத்திற்கு வழிவிட்டுக் கதவைத் திறந்திடு!

காதலன், காதலியிடம் தன் நெஞ்சத்தை வளைய வைத்து முறையிட்டு அளித்தவுடன், அவளும் மஞ்சத்துக் கதவுதனை மூடி - மகிழ்வால் பூத்த உதடுகளைத் திறந்து, நாணமணக்க - நல்ல தேன் மணக்க - “அத்தான்” என்றாள்!

அத்தானா நின்றிடுவான்? “ஆருயிரே! நாம் ஒருயிர்!” என்று அள்ளிக் கொண்டான், அந்தப் புள்ளி மயிலை! அவள் விரும்பியதையெல்லாம் அவன் புரிந்துகொண்டு, இதுவரையில் இருவரும் காணாத இன்பமெல்லாம் துய்த்தனர்!

அப்போது, தென்றலில் நீந்தும் அந்தத் தேன்மொழியாளின் நினைவில் ஒரு மின்னல் கீற்று! என்ன அது?

“பேரன்பு காட்டி என் பிரியம்போல் இவர் என்னைக் கூடி இன்பம் தருவதெல்லாம், மீண்டும் என்னை விட்டுப் பிரிந்து அவரது அன்பின்மையை வெளிப்படுத்தப்போகிற குறிப்பாகுமோ?”

இதோ அதற்குரிய குறள்:

“பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து”

அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1276

பெரிதாற்றி - பெரிதும் அன்பு காட்டி பெட்ப = விரும்பியவாறு

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்