பொருளடக்கம் 300 / 300
நெருநல் உளனொருவன்
அச்சுப் பக்கம் 639–640 · ஸ்கேன் 656–657 · அதிகாரம் 34 (நிலையாமை) — குறள் 336
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
உலகத்தை “நிலமகள்” என உருவகப்படுத்துவது உண்டல்லவா? அந்த நிலமகள், ஒரு நாள் வள்ளுவரைச் சந்திக்க வந்தாள். உலகமே மங்கை வடிவு கொண்டு வரும்போது, வள்ளுவர் எங்கே அமர்ந்திருந்தார் என்று கேட்டுவிடக் கூடாது. இது ஒரு மிகையான கற்பனை என்று கருதிக்கொள்ள வேண்டும். இது போன்ற கற்பனைகளை உண்மையெனக் கொள்ள வேண்டுமெனப் புராணங்களின் வாயிலாகக் கூறும்போதுதானே வாதங்கள், எதிர்வாதங்கள் எழுகின்றன.
அதிருக்கட்டும்; வள்ளுவர் - நிலமகள் இருவரின் சந்திப்பை நோக்குவோம். அவர்தம் உரையாடலில் கருத்தைச் செலுத்துவோம்.
“வா, தாயே, வா! எங்கே இப்படித் திடீரென்று வருகை?”
“அன்பு மகனைக் காண அன்னை வரக்கூடாதா; இதிலென்ன வியப்பு?”
“காரணமின்றி வந்திருக்கமாட்டாயே அம்மா!”
“அருங்குறட் காவியம் எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறாயே! உன்னிடம் ஓர் ஐயப்பாட்டுக்கு விளக்கமறிந்து போகலாம் என்றுதான் வந்தேன்.”
“என்னம்மா அப்படியொரு ஐயம் உனக்கு?”
“எனக்குள்ள பெருமைகளைப் பற்றி நீ என்ன கருதுகிறாய்? அதை உன் குறளில் எழுதிக் காட்டு. நான் அதைத் தெரிந்துகொள்ளவே துடிக்கிறேன்.”
“உலகத் தாய்க்கு இப்படி ஓர் ஐயமும், அவாவுமா? வேடிக்கைதான்! பரவாயில்லை. இப்போது உனக்குள்ள பெருமைகள் எவ்வளவெல்லாம் கூறப்படுகின்றன?”
“மகனே! அவற்றை நானே சொல்ல வேண்டுமா?”
“நான் விரும்பியவாறு நீ விவரித்தால், நீ விரும்புகிறவாறு உன் பெருமையை நான் எழுதுகிறேன்.”
“அப்படியா! மகிழ்ச்சி! இதோ கூறுகிறேன். இரவும் பகலுமாக மாறி மாறிக் காட்சியளிக்கிறேன். இதம் தரும் பனிக்காற்றையும் வீசுகிறேன். பாலைவனத்து மணற்காற்றையும் கொடுக்கிறேன். ஏரி, குளம், ஆறு என இயற்கை எழிற் செல்வங்களையும் வழங்குகிறேன். எரிமலை, பூகம்பம் எனும் விளைவுகளும் என்னாலேதான்.”
“பச்சைப் பட்டாடை விரித்தது போல் கழனிகள் - பார்க்கப் பார்க்கக் கண் குளிரும் பழமுதிர்ச் சோலைகள்; அங்கே மானினம், தேன்சிட்டு, மயில், குயில், மணிப்புறா இன்னோரன்ன படைப்புகள்! அதற்கெதிராகச் சினங்கொண்ட வேங்கை, சீறும் சிறுத்தை, சிங்கம், கரடி எனக் கொடிய விலங்கினங்கள், மாறிவரும் பருவ காலங்கள், மழை, மின்னல் இடிகள்! அருவிகள், நீர்வீழ்ச்சிகள், ஆனந்தப் பள்ளுப் பாடும் பூங்காக்கள்!”
“கடலுக்கடியில் முத்து - மண்ணைத் தோண்டினால் பொன், அவைகளை எடுத்துப் பயன்படுத்தும் மனித இனம்!”
“அந்த இனத்திலேயே அழகுப் பாவைகள்! அலங்கோலப் பதுமைகள்! அறிவுடையோர் - அறிவற்றோர்.”
“இத்துணை மகிமை பொருந்திய படைப்புக்கள் என் வலிமையினால்தானே கிடைத்தன. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாமே என் பெருமையை! இன்னும் சொல்லவா?”
“போதும்மா! போதும்! இதுவரை நீ சொன்னவற்றை எதையுமே நான் உனக்குரிய பெருமையாகக் கருதவில்லை; இவற்றையெல்லாம்விட மிகச் சிறந்த பெருமை யொன்று உனக்கு உண்டு.”
“என்ன மகனே அது?”
“அதைத்தான் நான் குறளாக எழுதிப்போகிறேன். நேற்று இருந்த ஒருவர் இன்று இல்லாமல் மறைந்து போய்விடுகிறார் அல்லவா; அதுதான் உலகத் தாயே! உனக்குள்ள பெருமை!”
“என்னைப் புகழ்வது போல், என் மீது உனக்குள்ள சினத்தைக் காட்டுகிறாயா?”
“எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்க! நீ வகைப்படுத்திக் கூறிய எதுவும் உன் பெருமைக்குப் பொருத்தமாகத் தெரியவில்லை. நேற்றிருந்தவரை இன்று இல்லாமல் செய்து விடுகிறாயே, அதுதான் உனக்குப் பொருத்தமான பெருமை!”
வள்ளுவர் பேசிக் கொண்டிருக்கும்போதே நிலமகள் மறைந்துவிட்டாள்; அவர், தன் விழிகளைத் திறந்தார். கொடிகட்டிப் பறந்த சிந்தனையின் விளைவாக எழுத்தாணியையும் ஓலையையும் எடுத்தார். உலகத்தின் பெருமை சொல்லும் குறள் பிறந்தது.
அதுதான் இது:
“நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்திவ் வுலகு”
அதிகாரம் - 34 - நிலையாமை; பாடல் - 336
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்