பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 298 / 300

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு

அச்சுப் பக்கம் 635636 · ஸ்கேன் 652653 · அதிகாரம் 6 (வாழ்க்கைத் துணைநலம்) — குறள் 59

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

அதோ தெரிகிறதே ஊர்ப் பொது மன்றம் - அந்த மன்றத்திலேதான் குடவோலை முறைப்படி அந்த ஊர்ப் பொறுப்பாளர்களைத் தேர்ந்தெடுப்பார்கள் மக்கள். அந்தத் தலைமைப் பணிக்கென முறைப்படுத்தப்பட்டுள்ள தகுதியுள்ளவர்கள்தான் பொறுப்புக்களுக்குப் போட்டியிட உரிமை படைத்தவர் களாவார்கள். அத்தகைய தகுதி வாய்ந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட ஓலைகள், ஒரு குடத்தினுள் போடப்படும். மன்றத்தினுள் கூடியுள்ள ஊர் மக்கள் நடுவே, அந்த ஓலைகள் குடத்துடன் குலுக்கப்பட்டு, போட்டியில் கலந்து கொள்ளாத ஒருவர் ஓலைகளை ஒவ்வொன்றாக எடுத்திடுவார். எடுக்கப்பெற்ற வரிசைக்கேற்ப அந்த ஊர்ப் பொறுப்பாளர்கள் அமைவர். இந்தக் குடவோலை முறைத் தேர்தல், தமிழகத்துப் பழங்காலக் கல்வெட்டுக்களிலும் இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. அத்தகைய அமைந்த மன்றங்களில், அந்தப் பணி நடைபெறாத காலத்தில், ஊர்மக்களில் பலர் கூடிப் பொழுது போக்குவர். அவர்தம் உரையாடல்களில் எத்தனையோ கருத்துக்கள் மிளிரும்! நல்லோர் மட்டுமே பொது மன்றங்களில் கூடுவர் என்று கூறிட இயலாதன்றோ! ஊரார், ஒருவருக்கொருவர் பகையுற்ற நிலையில் வாழ்ந்தனர் என்றும் கூறிவிட முடியாதன்றோ!

அந்த மன்றத்தில் அன்று கூடியிருந்தோர், ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவர்கள்.

ஊரிலுள்ள எல்லோரையும் பற்றி ஆய்வு நடத்தி வீண்காலம் கழிக்கும் இயல்புடையவர்கள். அன்றும் அவ்வாறே ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு ஊர்க்கதைகளைப் பேசிக் கொண்டிருந்தனர். யாரையாவது இகழ்ந்து பேசுவது என்பது, அவர்களுக்கு இனிமையான பொழுது போக்கு. பகை புகுந்தது எனக் கண்டு, ஊரில் படைதிரண்டால், இந்தக் கூட்டத்தினர் ஓடிப் பதுங்கிக் கொள்வர். பகை முடித்து ஊர்ப்படையினர் வெற்றிக்கு விழா எடுத்திடும்போது, ஒளிந்தோர் திரும்பி வந்து, எப்படிக் கிடைத்தது வெற்றியென வீண் உரையாடல் நிகழ்த்துவர். ஊர்ப்பணிகளிலும் ஈடுபடும் ஊக்கமில்லை. ஊரைக் காத்திடும் வீரச் செயல்களிலும் நாட்டமில்லை. வக்கணை பேசிப் பொழுதைக் கழிப்பதிலே மட்டும் பேரார்வம்!

தங்கள் பணியின் நிமித்தம் அந்த மன்றத்தைக் கடந்து செல்வோர், அவர்களைப் பொருட்படுத்துவதில்லை. வணிகர்கள் அவ்வழி செல்வர். வீரர்கள் அவ்வழி நடந்திடுவர். அழகு மங்கையர் அவ்வழி எதிர்வர். அவர்கள் யாரும் அந்தக் குழுவினரைக் கண்டு மதிப்புத் தந்ததில்லை. தங்கள் பணியுண்டு, தாங்களுண்டு என்றே சென்றிடுவர்.

அன்று மட்டும் ஏனோ, ஒரு வீரன் அந்த மன்றத்தைக் கடந்திடும்போது தலையைக் கவிழ்த்துக் கொண்டான்!

அவன் கால்கள் தள்ளாடின. முதுமை அவனை வருத்திடவில்லை. காரணம், அது அவன்மீது ஆட்சி நடத்தவே தொடங்கிடவில்லை. நோய் அவனை அணுகிட வில்லை. மலைத் தோள் கொண்டவன்தான். கதிர் ஒளிபரப்பும் கண்கள்தான் அவனுக்கு. இரும்புச் சிலையொன்று நடப்பதுபோல் நடப்பவன்தான். போர்க் களத்தில் பகைக் குலத்தின் இடுப்பு முறிப்பதில் புலிப் போத்துத்தான் அவன்.

அந்த ஆற்றல் மறவன், அந்த மன்றத்தைக் கடந்திடும்போது, புழுவாக நெளிவானேன்? புயல்காற்றைத் துரும்பாக அவன் உள்ளம் இருப்பதால்தானே பூனைபோல் பதுங்கிச் செல்கிறான்!

எல்லோரையும் இகழ்ந்து பேசுவதையே தொழிலாக்கிக் கொண்ட அந்தக் குழுவினரை அவன் அகன்ற விழியின் நோக்கே, அவரிப் புடைத்து ஓடச் செய்துவிடும்.

ஆனால், அந்தப் பெருமித நோக்கு எங்கே?

அந்தப் பீடு நடை எங்கே? யாரும் பதில் கூறவில்லை. மன்றத்தில் குழுமியிருந்த இகழ்ச் சொல்லாளர்களும் அந்த வீரனின் தளர்ந்த நடைக்குக் காரணம் அறியாது பல கதைகளைப் படைத்தனர்.

உண்மையான காரணத்தை, அவன் உளச்சான்று உரைத்திடுகின்றது.

எல்லாப் புகழும் அவனுக்கு இருந்தும்கூட, அந்தப் புகழைக் காக்க விரும்பும் மனைவி அவனுக்கு வாய்க்கவில்லை. அதனால்தான், இழித்துப் பேசுவதைத் தொழிலாகக் கொண்டவர்களின் முன்னால் செல்லும்போது, அவன் உள்ளம், அவனைத் துளைத்தெடுக்கிறது. நடை தளருகிறது. தலை கவிழ்கிறது.

“புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை”

அதிகாரம் - 6 - வாழ்க்கைத் துணைநலம்; பாடல் - 59

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்