பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 297 / 300

காதலர் தூதொடு

அச்சுப் பக்கம் 633634 · ஸ்கேன் 650651 · அதிகாரம் 122 (கனவுநிலை உரைத்தல்) — குறள் 1211

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

இலக்கிய ஏடுகளைப் புரட்டுகின்றாள்; ஒவ்வொன்றும் அவள் உள்ளத்தில் காதலன் பிரிவை நினைவூட்டித் துவளச் செய்கின்றனவே தவிர, ஆறுதல் கரம் நீட்டிடவில்லை.

இதிகாசங்கள், புராணங்கள் எதை எடுத்துப் படித்தாலும் அவற்றில் வருகின்ற கோபாலன், கோபிகைகளுடன் கூடி மகிழ்வதும் சிவனார், மோகினியை அணைத்துச் சுகிப்பதும் காண்டபன், அல்லியை முகர்வதும் இப்படித்தான் சுவையான கட்டங்கள் அவள் முன்னால் தோன்றி அவளைத் தகிக்கச் செய்கின்றன. ஏடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கண்ணயர்ந்தாவது கவலையை மறப்போம் என்று விழிகளை இமைகளால் தாளிட்டுக் கொள்கிறாள்.

அந்தப் பொல்லாத விழிகள், இமைக் கதவுகளைத் தட்டிப் பார்த்துவிட்டு - நினைவுச் சாளரத்தின் வழியாக வெளியே எட்டிப் பார்க்கின்றன.

அந்தக் காலத்தில் அன்னங்களைத் தூது விட்டிருக்கிறார்களே! கிள்ளைகளைத் தூதாக அனுப்பியிருக்கிறார்களே! புறாக்கள்கூட செய்திகளை ஏந்திச் சென்று காதலர்களை மகிழ்வித்திருக்கின்றனவே! அதுபோல என்னைப் பிரிந்து சென்றுள்ள என்னுயிரனையக் காதலர், தூது ஒன்றை எனக்கு அனுப்பி என் சோகத்தில் ஒரு துளியளவாவது துடைத்திடக் கூடாதா? அவர் இருக்குமிடம் எனக்குத்

தெரிந்தாலாவது, ஏதாவது ஒரு தூதான தூதினை அவர்பால் அனுப்பி வைத்திருப்பேன்.

எத்தனை நாட்களாயின நான் உறங்கி! எதையாவது மறக்க முடிந்தால்தானே உறக்கம் வரும்!

எதை மறப்பேன் நான்? அவர் என்னைத் தொட்டதையா? அப்போது அங்கமெல்லாம் சுட்டதையா? அந்தக் கொதிப்பு அடங்கக் குளிர் முத்த மாரி பொழிந்ததையா? கொடுத்ததைத் திருப்பிக் கொடுக்கும் மனமில்லையா என அவர் கேட்டதையா? அவர் கேட்டு வாய் மூடுவதற்குள் திரும்பப் பெற்றுக் கொண்டதையா? தொடர்ந்து நடந்த இன்பக் கதையையா?

இப்படிக் கேள்விகளை அடுக்கிக்கொண்டே இருந்தவள்; தன்னை மறந்து தூங்கி விடுகிறாள். பல நாள் தூங்காத களைப்பு! தூக்கத்தில் கனவு! அந்தக் கனவில் ஓர் அன்னம்! அது அவளிடம் பேசுகிறது! அவளுடைய காதலன் அனுப்பி வைத்தானாம்! இன்னும் இரண்டு நாட்களில் திரும்பி வந்து விடுவதாக உறுதியளித்தானாம். கவலைப்படாமல் இருக்கச் சொன்னானாம். பலாச்சுளையொன்றை அவள் பாதி கடித்துவிட்டு, மீதியை அவனுக்கு அனுப்பி வைக்கச் சொன்னானாம். அன்னத்தின் மொழி கேட்டு அவள் இன்பத்தில் மூழ்குகிறாள். பருவக்கிளியின் கரம், படுக்கையிலிருந்தவாறே பலாச்சுளைக் கிண்ணத்தைத் தேடுகிறது. விழித்துக் கொள்கிறாள். அன்னம் மறைந்து விடுகிறது. கனவு மறையாமல் நினைவில் நிற்கிறது.

“என் காதலர் தூதாக அனுப்பிய அன்னத்தை அழைத்து வந்த இந்த இன்பக் கனவுக்கு, நான் என்ன விருந்தளித்து உபசரிப்பது என்றே தெரியவில்லையே; அவ்வளவு மகிழ்ச்சியை அல்லவா இந்தக் கனவு எனக்கு வழங்கியுள்ளது!”

இப்படி ஆனந்தப் பெருமூச்சு விடுகிறாள். அவளது தாபத்தைச் சித்திரிப்பதே; இதோ - இந்தக் குறள்!

“காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து”

அதிகாரம் - 122 - கனவுநிலை உரைத்தல்; பாடல் - 1211

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்