பொருளடக்கம் 296 / 300
குன்றின் அனையாரும்
அச்சுப் பக்கம் 631–632 · ஸ்கேன் 648–649 · அதிகாரம் 97 (மானம்) — குறள் 965
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
தளபதி, தடந்தோள் தட்டினான்! “இளமைக்காலந்தொட்டு இந்த அரண்மனைச் சோற்றைத் தின்று வளர்ந்தவன் மன்னா நான்! எங்கேயோ திரிந்து கொண்டிருந்த என்னை மாளிகைக்கு அழைத்து வந்து ஆற்றலாளனாக்கி, படை முகத்துப் பெருவீரர்களில் ஒருவனாகத் திகழச் செய்து, கடந்த ஆண்டு பகை மன்னன் கோட்டத்தை அடக்கத் தளபதியாக என்னையே நியமித்து, அந்தக் களத்தில் பெற்ற வெற்றிக்காக விருது வழங்கினீர்களே; அதனை என் வாழ்நாளில் பெற்ற பேராகவன்றோ நான் எண்ணியிருக்கிறேன்! இப்போது எனக்கு ஒரு புதிய வாய்ப்பு வலிய வந்திருக்கிறது! அதை இழந்து விடமாட்டேன் நான்! நம்மிடம் தோற்றுத் தனது நாட்டின் ஒரு பகுதியை இழந்த அதே பகைவன், புது வலிவு திரட்டிக் கொண்டிருக்கின்றான் - நம்மோடு போரிடவும், இழந்த பகுதிகளை மீண்டும் கைப்பற்றிடவும்! ஆணையிடுங்கள், ஆட்பெரும் படையுடன் நானே தலைமையேற்றுப் போரை நடத்துகிறேன்!” என முரசு கொட்டுவதுபோல் அதிர்ந்தான்!
மன்னனும் தளபதியை மார்புறத் தழுவி; “சென்ற தடவை நீ பெற்ற வெற்றியால் உனக்குக் கிடைத்த புகழைவிடப் பெரும்புகழ் இந்த முறை நீ பெறப்போகும் வெற்றியால் கிடைக்க இருக்கிறது! எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடேன் எனும் எஃகு உள்ளம் படைத்தவர்களில் நீயொருவன் என்பதிலே எனக்கு அசையாத
நம்பிக்கையுண்டு! அஃதேபோல் உன் ஆற்றலிலும் படை நடத்தும் பாங்கிலும் எனக்கு எள் முனையளவு ஐயமுமில்லை! உனக்குப் புகழ் மாலைகள் மேலும் குவியட்டும்! வாழ்க! வெல்க! சென்றுவா! வென்றுவா!” எனக் கூறி வழியனுப்பி வைத்தான்.
தளபதி, பெரும்படையுடன் சென்று பகை மன்னனின் கோட்டையை முற்றுகையிட்டான். எதிர்பாராத முற்றுகை கண்டு எதிர்நாட்டான் திகைத்தான். போருக்கான முன்னேற்பாடுகளில் அவன் முனைந்திருந்தான் எனினும் இப்படித் திடீரென முற்றுகையிடப்படும் தனது கோட்டையென்பதை அவன் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.
தனது தளபதியின் போர்த்திறனையும் திடீர் முற்றுகையால் பகை மன்னன் அதிர்ச்சியுற்று அடங்கிக் கிடப்பதையும் வேந்தன் அறிந்தான்! விழிகள் ஒளி பொழிய “வெற்றி வெற்றி” எனக் கூறிக் களித்தான். முற்றுகைக்குள் முடங்கிவிட்ட பகைவனின் ஆணவம், அழிந்து சிதறியது என ஆர்ப்பரித்தான்! அரண்மனையில் விருந்து வைத்து மகிழ்ந்தான்!
திடீரென ஒரு செய்தி வந்து, உற்சாகத்தில் திளைத்திருந்த மன்னனைத் தாக்கியது!
பகைவன் கோட்டையை முற்றுகையிட்டுச் சென்ற தளபதி, பகைவனிடம் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டு போர் நிறுத்தம் செய்துவிட்டான்! பகைவன் நாட்டில் சில பகுதிகளைத் தளபதிக்கு அளித்து, அவற்றுக்கு அவனைச் சிற்றரசனாக ஆக்குவது என்று முடிவு ஏற்பட்டுவிட்டது! தளபதியும் தனக்கு வந்த “அரசன்” எனும் சிறப்பைப் பெண்ணி, பகைவனுடன் கை குலுக்கிக்கொண்டு விட்டான்! அவன் தலைமையில் சென்ற படை வீரர்களில் ஒருவன், இந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு ஓடிவந்தான்!
சிறிது நேரம் முகம் சிவந்து சோகத்தில் ஆழ்ந்த மன்னன், தனது மெளனத்தைக் கலைத்துவிட்டு சிங்கமென எழுந்து நின்றான்!
“பரவாயில்லை......பகை வெல்ல வாள் எடுத்துச் சென்ற தளபதி, பகைவனின் தாள் பிடித்துக் கிடக்கிறான்! அதற்கான பரிசும் அவனுக்குக் கிடைத்துவிட்டது! அவனையும் சேர்த்துக்கொண்டு எதிரி, நம்மீது மோதுவான்! சமாளிப்போம்! சந்திப்போம்! ஆனால், எனக்குள்ள கவலையெல்லாம்; மலையென உயர்ந்த புகழால் நிமிர்ந்து நின்ற நமது தளபதி, தனது இழிந்த செயலின் மூலம் தன்னையே தாழ்த்திக் கொண்டுவிட்டானே என்பதுதான்!”
எனக்கூறி, கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு களம் புகுந்தான்.
குன்று போல் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள், தாழ்வுக்குக் காரணமான செயலை ஒரு குன்றிமணி அளவு செய்து விட்டாலும் மக்கள் மன்றத்தில் தாழ்ந்தவராகவே கருதப்படுவார்கள்.
“குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ குன்றி அனைய செயின்”
அதிகாரம் - 97 - மானம்; பாடல் - 965
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்