பொருளடக்கம் 295 / 300
வாழ்தல் உயிர்க்கன்னள்
அச்சுப் பக்கம் 628–630 · ஸ்கேன் 645–647 · அதிகாரம் 113 (காதற் சிறப்புரைத்தல்) — குறள் 1124
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
மாமல்லபுரத்துச் சிற்பங்கள் படைக்கப்பட்ட காலம். பகற்பொழுது முழுவதும் சிற்றுளிகளின் ஓசை, கடல் அலைகளின் நடனத்திற்குத் தாளம் போடுவதுபோல் கேட்டுக்கொண்டிருக்கும். பல்லவமன்னரின் கலையார்வத்தை இன்றும் என்றும் புவனமெங்கும் பறையறிவித்துப் புகழ்ந்துகொண்டிருக்கும் அந்தச் சிற்பத் தோரணையும் மலைகளைக் குடைந்த கலைக்குகைகளையும் பாறைகளில் ஓவியம் வரைந்ததுபோல் சிலைக்குவியல்களையும் உருவாக்கிய சிற்பிகள், கடற்கரை யோரத்தில் எளிய குடில்களை அமைத்துக்கொண்டு தங்கியிருந்தனர். அவர்களில் கதிரொளியென்னும் கட்டழகன் - வாலிபன் - மொட்டவிழ்ந்த மல்லிகைக் கொத்தனைய சிற்புக்குச் சொந்தக்காரன்.
சிற்பிகளுக்குத் துணையாக சிறு சிறு பணிகளிலும் உணவு சமைத்து வழங்குவதிலும் அந்தப் பகுதி பெண்டிர் ஈடுபட்டிருந்தனர். அவர்களில் ஒரு மூதாட்டி பொன்னியம்மை! அவளுக்கு உயிரோடு பிறந்த சிலையொருத்தி மகளாக வாய்த்திருந்தாள்! பெயர் கண்மணியாள்! கதிரொளிக்குச் சோறும் குழம்பும் கொண்டு செல்லும்போது, அவளும் கூடவே போவாள்! சில நேரங்களில் களைப்பு மிகுதியில்
பழுப்பு இலை, குடிசையில் தங்கிவிட, கண்மணியாள் அந்தப் பணியை மேற்கொள்வாள்.
எத்தனையோ அழகிகளின் சிற்பங்களை வடித்தெடுத்த அவனுக்கு, அவனைப் போல் சிற்பமொன்று வடித்திட முடியவில்லை. வியப்பட்டான்! வியப்பட்டான்! இருவருமே பயப்பட்டுப் பிரிந்துவிட்டனர். கதிரொளியின் கண்களும் கண்மணியின் கண்களும் பார்வையால் பேசுகின்ற மொழிகளை மூதாட்டி கவனித்துவிட்ட காரணத்தால்; அவளை அடைகாக்கத் தொடங்கிவிட்டாள்.
தடைகள் வரும்போதுதானே அதனை மீறவேண்டும் என்று காதலுக்குப் புதிய வலிவே வரும்! எப்படியும் ஒருநாள் அவளைச் சந்தித்து மனம்விட்டுப் பேசி வாழ்வின் துணைகளாக - வசந்தத்தின் இணையராக - ஆகிவிட வேண்டும் என்று அவன் துடித்தான்! அதனால், சிலைகளைக்கூட அரைகுறையாகவே வடித்தான்!
ஒரு நாள், அவளுக்கு ஒரு துண்டு மடலை எழுதி முடித்தான்! அன்றிரவு எப்படியும் அவள் வந்து தன்னைச் சந்திக்க வேண்டும்! இவன் அங்கு போக முடியாதே; அவளது தாய் இருப்பாளே - அதனால் மடல் தீட்டினான்; தன் மனங்கவர்ந்த மங்கை நல்லாளுக்கு!
“கண்மணி! இன்றிரவு எந்நேரமாயினும் என் குடிலின் கதவு தாளிடப் படாமலேயிருக்கும்! விடியும் வரையிலேகூட உனக்காகக் காத்திருப்பேன்.”
மூதாட்டியுடன் சோறு கொண்டுவந்தபோது, அவள் கையில் எப்படியோ திணித்துவிட்டான், அந்தக் காதல் மடலை!
அவளோ, தூங்குவதுபோல் அன்னையின் அருகே படுத்திருந்தாள்! கதிரொளியின் குடில் அருகாமையில்தானிருக்கிறது! இருந்தாலும் எப்படித் தாயை ஏமாற்றிவிட்டுச் செல்ல முடியும்! இதயத்தில் பெரும் போராட்டம்! வெளியே இடி மின்னல் வேறு! மழையும் கொட்டியது! கடலும் பேரிரைச்சல் போட்டுக் கொண்டிருந்தது. அந்த ஓலியில் கதவைத் திறந்தால், மூதாட்டியின் செவிகளில் கதவொலி விழப் போவதில்லை! துணிந்துவிட்டாள். எழுந்துவிட்டாள்.
கதிரொளியின் குடில் நோக்கி நடந்தபோது, மழை அவளைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தது! ஈரத்துணி அவள் உடலில் ஒட்டிக்கொண்டு, அவளது அழகை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது.
கதிரொளி வீட்டுக் கதவைத் தொட்டாள்! திறந்துகொண்டது! தயாராக இருந்த கதவுகள்தானே!
பேச்சில்லை! அவன், அவளை ஆரத் தழுவிக்கொண்டான். மழையில் நனைந்திருந்த அவள் மேனி, இப்போது அவனது இதழ்களால் சூடேறிவிட்டது! இருவருமே சுவைபேறி நிற்கும்போது, அந்த நடுங்கும் குளிரில் பொன்னியம்மை உள்ளே நுழைந்துவிட்டாள். கண்மணியின் கரங்களை அழுத்தப் பற்றியவாறு இழுத்துக்கொண்டு வெளியேறினாள். கதிரொளி, அசைவற்று நின்றான். அவன் உதடுகள் மட்டும் மெல்ல அசைந்தன.
இறுகத்தழுவியபோது அவள் அணிந்திருந்த அணிகலன்கள், அவன் உடலில் பதிந்திருப்பதைப் பார்த்துப் பெருமூச்சு விட்டவாறு அவனது உதடுகள் அசைந்தன!
“ஆராய்ந்த அணிகலன்களைப் பூண்டிருந்த அவள், கூடும்போது உயிர்க்கு வாழ்வு அளிப்பவளைப்போல இருந்தாள்! பிரியும்போது என் உயிர்க்குச் சாவு அளிப்பவளைப்போல ஆகிவிட்டாளே!”
வானத்து இடி முழக்கமும் மின்னல் வீச்சும் மழை ஓசையும் அலைகளின் குமுறலும் - நிற்கவில்லை! அவன் அப்படியே நின்று கொண்டிருந்தான்.
அவன் மனத்துயரை விளக்குவதே இந்தக் குறள்!
“வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து”
அதிகாரம் - 113 - காதற் சிறப்புரைத்தல்; பாடல் - 1124
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்