பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 294 / 300

சிற்றினம் அஞ்சும்

அச்சுப் பக்கம் 626627 · ஸ்கேன் 643644 · அதிகாரம் 46 (சிற்றினம் சேராமை) — குறள் 451

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

வீதியில் பசுவொன்று, தனது கன்றுடன் போய்க்கொண்டிருந்தது. கன்றுக்குட்டி, தாயைச் சுற்றி சுற்றி ஓடியும் தாயுடன் நடந்தும் அந்த வீதியில் சென்ற காட்சி, அனைவரையும் கவர்ந்தது; தன்னை விட்டு விலகி அந்தக் கன்று தொலைவில் போய்விடக்கூடாது என்பதிலே தாய்ப்பசு கண்ணும் கருத்துமாக இருந்தது. கன்றுக்குட்டி, மான்போலத் துள்ளி வீதிக்கு நடுவே ஓடும். பசுவோ, அப்படியே நின்று அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு தனது கூரிய கொம்புகளைக் காட்டி முட்டுவது போலப் பயமுறுத்தும். தாயின் கோபத்தைப் புரிந்துகொண்ட இளங்கன்று, உடனே அதனருகே துள்ளிவரும். பசு, தனது நாவினால் கன்றின் உடலைத் தடவிக் கொடுக்கும்.

அந்த வீதியில், ஒரு கரும் பன்றி, மலம் தின்ற வாயுடன் உறுமிக்கொண்டே கன்றுக்குட்டியிடம் வந்து உரசிடத் தொடங்கியது. கன்று, தனக்கு ஒரு இணைகிடைத்துவிட்டதாக எண்ணியோ என்னவோ அந்தப் பன்றியுடன் வீதியில் குறுக்கும் நெடுக்குமாக ஓடியது. பசுவுக்குப் பொல்லாச்சினம் பொங்கிவிட்டது. கன்றுக்குட்டியை ஆத்திரத்துடன் நோக்கி, அதனைத் தன்னருகே வருமாறு கத்திக் காட்டியது. கன்று, பன்றியிடமிருந்து விடுபட்டு வர முயற்சித்தபோதிலும் அதைப்

பன்றி, விடாமல் துரத்தித் தன் மீது படிந்துள்ள சகதியைக் கன்றின் உடலில் ஒட்ட வைத்தது. தாய்ப் பசுவுக்கு அதற்கு மேல் பொறுமையில்லை. கொம்புகளை நீட்டியவாறு பன்றியின் மீது பாய்ந்தது. பசுவின் வேகத்தைக் கண்ட பன்றி, பயங்கரமாக ஓலியெழுப்பிக்கொண்டு அந்த வீதியிலே நெடுந்தொலைவு ஓடி, இறுதியாக அங்கிருந்த சின்னஞ்சிறு கழிவு நீர்க் குட்டைக்குள்ளே குதித்தது. அங்கு ஏற்கெனவே பத்துப் பதினைந்து பன்றிகள், புழுக்கள் நெளியும் அந்தக் குட்டையில் ஊறிக்கொண்டிருந்தன! தமது இனத்தைச் சேர்ந்த மற்றொன்று வந்ததும் எல்லாமே அதனைச் சூழ்ந்துகொண்டு கட்டிப்புரண்டு களிப்புக் கொண்டாடின!

இந்தக் காட்சியனைத்தையும் கண்ட வள்ளுவர், சிற்றினம் சிற்றினத்தைத்தான் சேரும் என்பதற்கான குறட்பாவை மனிதகுலத்திற்கு வடித்தளித்தார்.

“சிற்றினத்திற்கு அஞ்சி அதனை ஒதுக்குவது உயர்ந்தோரின் இயல்பு! அந்தச் சிற்றினத்தை சுற்றமாகக் கருதித் தழுவிக் கொள்வதே இழிந்தோரின் இயல்பு”

“சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்”

அதிகாரம் - 46 - சிற்றினம் சேராமை; பாடல் - 451

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்