பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 293 / 300

அ. கொல்லான் புலாலை / ஆ. அவிசொரிந் தாயிரம்

அச்சுப் பக்கம் 624625 · ஸ்கேன் 641642 · அதிகாரம் 26 (புலால் மறுத்தல்) — குறள் 260, 259

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மீன் தொட்டியிலே, வண்ண வண்ணக் கயல்களை விளையாட விட்டுக் கண்டு மகிழ்கிறோம். சின்னஞ்சிறு முயல்கள் வீட்டுத் தோட்டத்திலே, காற்றிலே உருளும் பஞ்சு உருண்டைகளைப்போல் சுற்றிச் சுற்றி ஓடுவதை, உவகை பொங்கிடக் கண்டு சுவைக்கிறோம்.

புறாக்களின் சிறகுகளைத் தடவிக் கொடுத்து, அவற்றுக்கு உணவு தானியங்களை அள்ளி இறைத்து, அவை, கொத்தி உண்ணும் கோலத்தில் உள்ளத்தைக் கொள்ளை கொடுக்கிறோம்.

வளர்க்கும் மீன்களில் ஒன்றையோ, புறாக்களில் ஒன்றையோ, முயல், கோழி, இவற்றில் ஒன்றையோ அறுத்துச் சமைத்து இன்றைக்கு அமுது பரிமாறட்டுமா என்று வீட்டில் உள்ளோர் கேட்டால், “வேண்டாம் வேண்டாம்!” என்று அன்பு பீறிடச் சொல்கிறோம்.

நம் கைபட்டு வளர்ந்து விட்டவை என்பதால், அவற்றைக் கொல்வதும்- உண்பதும் நம் இதயம் ஏற்றுக்கொள்ளாத ஒன்றாக ஆகிவிட்டது.

நம்மால் வளர்க்கப்பட்டவைகள் மட்டுமல்ல; வளர்க்கப்படாத உயிரினங்களும் கொல்லப்படுகின்றன; அதுவும் உணவுக்காகக் கொல்லப்படுகின்றன என்பதை ஆழ்ந்து எண்ணிடும் பொழுது - வளர்க்கப்பட்ட உயிரினங்களின் மீது காட்டப்படும் அதே அன்பினையும் இரக்கத்தையும் வளர்க்கப்படாத நிலையில் பறந்து திரியும்

புறாக்களையும் குருவிகளையும் ஆடுகளையும் மாடுகளையும் மான்களையும் முயல்களையும் உணவுக்காகக் கொன்றிடும் பொழுது இரக்கம் காட்டிட வேண்டாமோ என்ற கேள்வி எழத்தான் செய்கிறது!

மக்கள் தொகையின் பெருக்கம், கோடி கோடியாக வளர்ந்துகொண்டே போகும் போது - உணவு தானியங்களே மட்டும் போதாமல் ஊன் உணவும் தேவைப்படுகிற நிலை உலகில் தவிர்க்க முடியாததாகிவிட்டிருக்கிறது. ஊன் உணவு வாயிலாகவும் உணவுத் தேவையை நிறைவுசெய்து, ஊட்டச்சத்தினையும் பெற்றிடுக; என்று அரசுகள், மக்களுக்கு வேண்டுகோள் விடுகிற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புலால் உண்ணுவதைப் பெருங்கொடுமையாகக் கருதாமல் - புலாலும் உணவு வகையினுள் ஒன்றாக இணைக்கப்பட்டே உலகம் இயங்கிவருகிறது!

ஆனால் வள்ளுவர், நம் கை தொட்டு வளர்க்கிற உயிரினங்களைக் கொன்று புசிப்பதை நாம் வெறுப்பதே போல் - உலகில் எந்தவொரு உயிரையும் கொன்று புசிப்பதை வெறுத்துக் கூறுகிறார்!

ஓர் உயிரை வளர்ப்பதற்காக இன்னொரு உயிர் போக்கப்படுவதை அவரால் சகிக்க முடியவில்லை!

“எந்த உயிரையும் கொன்று உணவாக ஆக்கிக் கொள்ளாமல் இருப்பவரை, உலகில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பித் தொழும்” என்று குறள் தீட்டுகிறார்.

“கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்”

இதற்கு மேலே வள்ளுவர் ஒருபடி சென்று அவிசொரிந்தாயிரம் வேள்விகள் செய்வோரையும் சாடுகிறார்! நெய்யைக் குடம் குடமாகக் கொட்டி ஆயிரக்கணக்கில் யாகங்கள் செய்வதைக் காட்டிலும் ஓர் உயிரைக் கொன்று தின்னாதிருத்தல் மேலானது - நன்மை பயக்கக் கூடியது - என்று திட்டவட்டமாகக் கூறுகிறார்.

அவியெனும் நெய் சொரிந்து மட்டுமல்ல; ஆடு மாடு குதிரைகளைக்கூட வெட்டி யாகங்கள் நடத்தியோரும் - நடத்துவோரும் உண்டே!

நெய்யைப் பெய்து வேள்விகள் செய்வதே கூட; ஓர் உயிரைக் கொன்று புசிப்பதைத் தவிர்த்தால் தேவையற்றது எனக் கூறும் வள்ளுவர் - பல உயிர்களைக் கொன்று நடத்திடும் யாகங்களை ஏற்றுக்கொள்வாரா? ஏற்றுக்கொள்ள மாட்டார்! ஏற்றுக்கொள்ளவில்லை!

புலால் மறுத்தல் எனும் இந்த அதிகாரத்துப் பாடல்கள், துறவறவியலில் இணைக்கப்பட்டுள்ளன என்றாலும்கூட, இல்லறம் மேற்கொண்டோரும் சிந்தித்துப் பார்க்க வேண்டிய உள்ளமுருக்கும் கருத்துகள் அல்லவா?

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத் துண்ணாமை நன்று”

அதிகாரம் - 26 - புலால் மறுத்தல்; பாடல்கள் - 260, 259

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்