பொருளடக்கம் 292 / 300
எனைமாட்சித் தாகிய
அச்சுப் பக்கம் 622–623 · ஸ்கேன் 639–640 · அதிகாரம் 75 (அரண்) — குறள் 750
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
★ பகைவர் மீது படைகொண்டு சென்று தாக்குவதற்கேற்ற வலிமை யுடைய வீரர்களையும் போர்க்கலன்களையும் உடையதாகவும் அதே நேரத்தில் பகைவரிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளும் பாதுகாப்பு இடமாகவும் இருப்பதுதான் அரண்!
★ மணியெனத் தெளிந்த நீரும், உறுதியும் செழிப்புமிக்க நிலமும் மதில் எனத்தகும் மலைகளும் நெருக்கமிகு நிழல் தரும் காடுகளும் அமைந்துள்ள பகுதி, அரண்போன்ற பாதுகாப்பு வழங்கக்கூடியதாகும்!
★ வானோக்கிடும் உயரம், அதற்கேற்ற அகலம், பகை புகமுடியாத வலிமை, உறுதி, இந்த நான்கும் அரணுக்குரியவை என நூலோர் உரைத்திடுவர்.
★ பாதுகாக்கப்பட வேண்டிய பரப்பளவு சிறியதாகவும் எஞ்சியுள்ள பாதுகாப்பு நிறைந்த இடம் பரந்த அளவிலும் உள்ள அரண்; தன்னை எதிர்த்து வரும் பகைப்பலத்தின் ஊக்கத்தை அழிக்க வல்லதாகும்.
★ பகைவரால் கைப்பற்ற முடியாததாகவும் - நிறைந்த உணவுப்பொருளைக் கொண்டதாகவும் - எத்தனை நாட்கள் முற்றுகையிடப்பட்டாலும் உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு வசதியுள்ளதாக இருப்பதே அரண்!
★ எந்தப் பொருளும் இல்லை எனச் சொல்லத்தக்க நிலைமையில்லாத பெருமையுடன் - போர்முரசு கேட்டவுடன் அரிமாக்களெனக் கிளம்பிடும் வீரர்களைத் தன்னகத்தே கொண்டது அரணுக்குரிய சிறப்பாகும்.
★ முற்றுகையிடப்பட்டோ, அல்லது நேரடித்தாக்குதல் வாயிலாகவோ, சூழ்ச்சிவலை பின்னியோ - எதிரிகளால் கைப்பற்றப்பட முடியாத அருமையுடையதே அரண் எனப்படுவது!
★ பகைவர் கோட்டை கொத்தளங்களை முற்றுகையிடுகிற அளவுக்கு வலிமை பெற்றிருப்பதுடன்; முற்றுகையிட்டுச் சூழ்கிற பகைவர்களையும் பற்றிக் கொண்டு வெற்றிக்கொடி நாட்டுவதே அரணுக்குரிய சிறப்பு!
★ உள் நுழைந்து போரிடும் எதிரிகளைக் களத்தில் அழித்தொழிக்கும் போர் முறைகளை வகுத்துப் பெருமைபெற்றுத் திகழ்வதே அரணாகும்!
“அரண்” எனும் அதிகாரத்தில் ஒன்பது குறட்பாக்களின் மூலம் அதன் சிறப்புக்களையும் இலக்கணங்களையும் விளக்குகிற வள்ளுவர்; பத்தாவது பாடலின் மூலமாக எதை வலியுறுத்துகிறார்!
அரண் என்பது எப்படியிருக்க வேண்டுமென்பது குறித்தும் - அது பாதுகாப்புப் பாசறையாக - படைவீரர்களின் கோட்டமாக - வசதிமிக்க களஞ்சியமாக - வலிமைமிகு கருவூலமாக எவ்வாறெல்லாம் திகழவேண்டும் என்பது குறித்தும் ஒன்பது பாக்களில் ஒளியுமிழ்க் கருத்துக்களை வழங்குகிறார்.
இவ்வளவு சிறப்பும் செழிப்பும் பகைவர் செருக்கடக்கும் வீரமும் தீரமும் - அனைத்துப் பெருமையும் உடையதாக இருந்தாலும் ஆற்றலற்றவர்களால் இயக்கப்படும் நிலைமை அந்த அரணுக்கு இருக்குமேயானால் - அந்த அரண் எந்தப் பயனுமற்றதாக ஆகிவிடும் என்று கூறி முடிக்கிறார்!
இதோ; அந்தப் பத்தாவது குறள்:-
“எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி இல்லார்கண் இல்லது அரண்”
அதிகாரம் - 75 - அரண்; பாடல் - 750
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்