பொருளடக்கம் 291 / 300
பரிந்தவர் நல்காரென்று
அச்சுப் பக்கம் 620–621 · ஸ்கேன் 637–638 · அதிகாரம் 125 (நெஞ்சொடு கிளத்தல்) — குறள் 1248
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
“அகிற்புகையன்ன நான் உடுத்தியிருந்த ஆடையும் என் அழகை மறைக்கிறதென்று முகஞ் சுளித்தார்! இறுதியில் அவர் முகம் கோணாமல் இருக்க வேண்டுமென்பதற்காக, நான்தான் தோல்வியை ஏற்றுக்கொண்டேன். அந்தத் தோல்வியிலும் எனக்கோர் தெவிட்டாத இன்பம்தான்; மறக்கவில்லை!
உச்சி மாடத்துத் திறந்த வெளியில் யாருமே இல்லை - வான்மீது உலவும் நிலவுப் பெண்ணாள்கூட, முகில் திரையிட்டுத் தன் வீட்டுப் பலகணியை மறைத்துக்கொண்டு தூங்குகிறாள் போலும்; அதனால் வெட்கம் தேவையில்லை அன்பே! அழகே! அந்த இடத்தில் இன்பக் கூத்து நடத்தலாம் என எனையிழுத்தார் - நாணத்தால் “முடியாது” எனத் தலையை ஆட்டினேன் எனினும், கடைசியில் அவர்தான் வென்றார்! அந்த வெற்றியை நான் கொண்டாடிக் களித்தேன்; இல்லையென்று சொல்லவில்லை.
சலசலவென ஒலியெழுப்பும் சருகுகளின் மீது கட்டிப் புரண்டு, கற்கண்டில் கரைந்த தேனிதழ்களைக் கெளவிச் சுவைப்பதும் உன் காற் சதங்கை நமக்கேற்ப இசை கூட்டுவதும் எப்படியிருக்கும் தெரியுமா என்று கேள்வி கேட்டு, இன்ப வேள்வியொன்றை நடத்திக் காட்டினாரே; அந்த மாந்தோப்பின் நிழலுக்கிடையே - அடடா! உச்சி முதல் உள்ளங்கால் வரையில் ஏறிற்று உணர்ச்சி!
கன்னங்கள், மதுக்கிண்ணங்கள் என்றார்! மாதுளையே மார்பகம் என்றார். சன்ன இழையே உன் மின்னலிடை என்றார்! நானோ அவர் மொழியில் மயங்கிக் கண்மூடிக் கிடந்தேன், அவர் மடிமீது! என் முடியை கோதியது அவர் கரம்! கதையின் முடிவைக் கூறிட முடியாது! யாரும் கற்பனையும் செய்து பார்க்க முடியாது! அனுபவத்தில் மட்டுமே அந்த அமுத வேளையை உணர்ந்திட இயலும்!
எல்லாம் சரிதான் என் நெஞ்சே! ஈடு இணையற்ற இன்பத்தை வாரி வழங்கியவர் எனப் புகழ்ந்து மகிழ்கிறாய்! உன் நன்றியுணர்வை மதிக்கிறேன்!
ஆனால், இப்போது உன்னைப் பிரிவுத் துன்பத்தில் ஆழ்த்திவிட்டுப் போயிருக்கிறாரே; உடன் திரும்பிவந்து இரக்கம் காட்டி ஆறுதல் கூறவில்லையென்று ஏங்கிக் கிடக்கிறாயே; இந்தச் சூழ்நிலையிலும் நீ அவர் பின்னாலேயே அவரைத் துரத்திக்கொண்டு திரிகிறாயே - அய்யோ, நெஞ்சமே! உனக்கு அறிவே கிடையாது! நீ ஒரு பேதை!”
பிரிந்து சென்ற காதலர் வந்து அன்பு காட்டவில்லையே என்று ஏங்கிடும் நிலையிலும் அந்தக் காதலர் பின்னால் ஓடுகிற நெஞ்சமே! நீ பெரு பேதை!”
என நொந்துகொள்கிறாளாம்! அவளைத்தான் - இதோ; இந்தக் குறள் அடையாளம் காட்டுகிறது.
“பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு”
அதிகாரம் - 125 - நெஞ்சொடு கிளத்தல்; பாடல் - 1248
நல்கார் = அன்பு செய்யார்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்