பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 290 / 300

அறனிழுக்கா தல்லவை

அச்சுப் பக்கம் 618619 · ஸ்கேன் 635636 · அதிகாரம் 39 (இறைமாட்சி) — குறள் 384

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

வளநாடு எனும் பெருநாட்டை ஆண்டுவந்த பேரரசன், நிலா நாட்டுப் படையெடுப்பை எதிர்க்க வொண்ணாது தோல்வி கண்டான். வெற்றி கண்ட நிலா நாட்டு மன்னன், வளநாட்டுப் பேரரசனைச் சிறையில் அடைத்துவைத்தான். சிறைக் கோட்டத்தில் இருந்தவாறே, வெளியில் குறுநில மன்னர்கள் பலரது துணையை வளநாட்டான் யாருமறியாவண்ணம் தேடிக்கொண்டான். ஒருநாள், நிலா நாட்டுச் சிறையிலிருந்து வளநாட்டான் தப்பி வெளியேறிவிட்டான். மலைநாட்டுக் குறுநில மன்னன் ஒருவன் மட்டும், வளநாட்டுப் பேரரசனுக்குத் துணை நிற்க மறுத்து விட்டான். மறுத்ததோடு மட்டுமல்லாமல், வளநாட்டான் நேர்மையற்றவன் என்றும் நெறிகெட்டவன் என்றும் மலைநாட்டான் செய்திகளைப் பரப்பி வந்தான். வளநாட்டானைத் தோற்கடிக்க நிலா நாட்டானுக்குத் தன் படைகளை அனுப்பினான். வளநாட்டானுக்குத் துணையாக இருந்த மற்ற குறுநில மன்னர்களையெல்லாம் சந்தித்து வளநாட்டானைக் குறித்து இழிவான செய்திகளையெல்லாம் கூறினான். அந்தக் குறுநில மன்னர்களோ, மலை நாட்டான் பேச்சைக் காதிலே போட்டுக்கொள்ளாமல் வளநாட்டான் பக்கம் நின்றனர். போர் முரசு கொட்டப்பட்டது. நிலா நாடு படுதோல்வி அடைந்தது. நிலா நாட்டு மன்னன் இறுதிவரை போராடிக் களத்திலேயே உயிர் நீத்தான்.

வளநாட்டுப் பேரரசு, நிலா நாட்டையும் இணைத்துக்கொண்டு தன் ஆட்சியின் பரப்பை மேலும் விரிவாக்கிக் கொண்டது. வளநாட்டானுக்குத் துணைநின்ற குறுநில மன்னர்கள் எல்லாம் பேரரசனை வாழ்த்தினார்கள். வளநாட்டானும் அவர்கட்கு நன்றி கூறி வழியனுப்பி வைத்தான். வளநாட்டான் ஒருநாள் கொலுமண்டபத்தில் அமர்ந்திருந்தபோது, மலைநாட்டுக் குறுநில மன்னனிடமிருந்து தூதுவன் ஒருவன் ஓலையுடன் வந்து வணங்கி நின்றான். அது, மலைநாட்டான், வளநாட்டானுக்கு அனுப்பிய மன்னிப்புக்கோரும் மடல்! “பேரரசே! தங்கள் அறிவையும் ஆற்றலையும் நேர்மை நெறிகளையும் உணராமல், தங்களைப் பற்றித் தவறான செய்திகளைப் பரப்பிவிட்டேன். அத்துடன் நில்லாமல் நிலா நாட்டுடன் சேர்ந்து போரிலும் தங்களை எதிர்க்கும் நிலைக்கு ஆளானேன். போரின் இறுதிக் கட்டத்திலேதான் உண்மையை

உணர்ந்து, தங்களின் உத்தம குணங்களைப் புரிந்துகொண்டு நானும் என் படை வீரர்களும் நிலா நாட்டானைத் தனியே களத்திலே விட்டுவிட்டுத் திரும்பி எங்கள் மலைநாட்டுக்கு ஓடி வந்துவிட்டோம். என்னை மன்னித்துத் தங்கள் காலடியில் என் மணிமுடி இருப்பதாகக் கருதி அருள் புரிய வேண்டுகிறேன்.

மலைநாட்டுக் குறுநில மன்னனின் ஓலை, அவைக்களத்தில் உரக்கப் படிக்கப்பட்டது. உடனே அவைப் புலவர், கேலிப் புன்னகை புரிந்தவாறு எழுந்தார். புலவரைப் பேரரசன் நோக்கினான். புலவர் பேசினார்:

“பேரரசே! மடல் அனுப்பியுள்ள மலைநாட்டான், மானத்தைப்பற்றிக் கவலைப்படாதவன் மட்டுமல்ல; ஆட்சி முறைக்கு உரிய அறங்கள் அனைத்தையும் மறந்து நாடாளுகின்றவன். தாங்கள் தங்களுக்குத் துணை நின்ற மன்னர்களை மறந்துவிட்டு, மலைநாட்டானுக்கு மன்னிப்பு அளித்தால், அறமல்லாத ஒரு செயலை செய்கிறீர்கள் என்று மக்கள் கருதுவர். மலைநாட்டு மன்னன் எப்போதும் வெற்றி பெறுவோர் பக்கம் சேர்ந்து அவர்தம் அடிதொழுவதை வேலையாகக் கொண்டவன். வீரத்திற்கும் அவனுக்கும் தொடர்பில்லை. அதனால்தான் நிலா நாட்டானைப் போலக் களம்பட்டுச் சாகும் உறுதியைப் பெறாமல் அவனையும் தனியே விடுத்துக் களத்திலிருந்து ஓடிவிட்டான். அவனை ஏற்பது அறமாகாது.”

பேரரசன், புலவரின் அறிவுரையைப் புறக்கணித்துவிட்டு, மலைநாட்டானை மன்னித்து ஏற்றுக்கொள்வதாகப் பதில் முடங்கல் அனுப்புமாறு அமைச்சருக்கு ஆணை பிறப்பித்தான். புலவரால் அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சினந்து சீறி பேரரசனைப் பார்த்து முழங்கினார்:

“பேரரசே! தங்களையும் தங்களிடம் மன்னிப்புக் கோரி மடல் தீட்டியுள்ள மலைநாட்டுக் குறுநில மன்னனையும் நான் அரசர்களாகவே கருதவில்லை! ஏன் தெரியுமா? தாங்களோ ஆட்சிமுறைக்குரிய அறம் தவறி அறமல்லாதவற்றைச் செயல்படுத்துகின்றீர்கள். துணை நின்ற மன்னர்களைத் துச்சமெனக் கருதி துரோகம் புரிவதையே தொழிலாகக்கொண்டவனை அரவணைத்துக் கொள்கின்றீர். இது அறமாகாது! வீரத்தில் குறையாத மானமுடையவனே அரசன்! இந்த அளவுகோல் மலைநாட்டு மன்னனுக்குப் பொருந்தவே பொருந்தாது! எனவே நீவிர் இருவரும் வள்ளுவரின் கருத்துப்படி அரசர்கள் அல்ல!”

இந்தச் சொற்களைத் தீப்பொறி போல வீசிவிட்டுப் புலவர் அவைக்களம் விட்டு வெளியேறினார்.

புலவர் குறிப்பிட்டாரே, வள்ளுவரின் கருத்து - அது என்னவென அறிய வளநாட்டுப் பேரரசன் திருக்குறளைப் புரட்டிப் பார்த்தான்.

“ஆட்சி முறைக்குகந்த அறநெறி வழுவாமல் அறமல்லாதவற்றை அகற்றி வீரத்தில் மங்காத மான உணர்வு பொருந்தியவனே சிறந்த அரசன்”

என்ற பொருள் கூறும் குறள், அவன் கண்ணில் பட்டது. பேரரசன் அப்படியே அசைவற்று அரியாசனத்தில் அமர்ந்துவிட்டான். இதோ அந்தக் குறள்:

“அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு”

அதிகாரம் - 39 - இறைமாட்சி; பாடல் - 384

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்