பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 289 / 300

அஞ்சுவ தோரும்

அச்சுப் பக்கம் 616617 · ஸ்கேன் 633634 · அதிகாரம் 37 (அவா அறுத்தல்) — குறள் 366

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஆசையை அறுத்து அறத்தை வளர்த்திட வேண்டுமென்று கங்கணம் பூண்ட இரண்டு துறவிகள்! மற்ற உயிர்களுக்கு உதவிட வேண்டுமென்பதையே வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றிடுவோமென, அவர்கள் இருவரும் தங்களின் குருவினிடத்திலே உறுதிமொழியளித்து விட்டுப் பயணம் மேற்கொண்டனர். ஒரு துறவியின் பெயர் அறவாழி! இன்னொருவர் பெயர் ஏனாதி! மலைக் குகையொன்றில் இருவரும் இளைப்பாறத் தங்கியுள்ளனர் எனக் கேள்வியுற்ற அவ்வூர் செல்வந்தர் ஒருவர், அவர்களைக் காண்பதற்குச் சென்றார். இரண்டு தட்டுகளில் பழம் வைத்துக் கொடுத்து அவர்களைச் செல்வந்தர் வணங்கினார். துறவிகள் தங்கள் பசி நீங்க இரண்டு பழங்களை வைத்துக்கொண்டு, மிச்சமிருந்த எல்லாப்பழங்களையும் ஏழை எளியோருக்குக் கொடுத்து மகிழ்ந்தனர். செல்வந்தர், துறவிகள் இருவரையும் தனது இல்லத்திற்கு வருமாறு அழைத்தார். அவர்கள் மறுத்துவிட்டனர். செல்வந்தர், பத்து பொற்காசுகளை எடுத்து அறவாழியிடம் ஐந்து காசுகளையும் ஏனாதியிடம் ஐந்து காசுகளையும் அளித்து - “வழிப்பயணத்தின் போது பிறர்க்குதவிட இதனைப் பயன்படுத்திக் கொள்க!” எனக் கூறி விடைபெற்றுச் சென்றார்.

பொற்காசுகளைப் பையில் போட்டுக்கொண்டு துறவிகள் அந்தக் குகையிலேயே சற்றுக் கண்ணயர்ந்தனர். அறவாழி நிம்மதியாகத் தூங்கினார். ஏனாதி அமைதியான உறக்கமின்றி அவதிப்பட்டார்.

ஏனாதியின் உறக்கத்தில் ஓர் கனவு! செல்வந்தரின் அழைப்பை ஏற்று அவர் மாளிகைக்குச் செல்கிறார். ஆடம்பரமான வரவேற்பு தரப்படுகிறது! பாத பூசை நடைபெறுகிறது! அவரது காலடியில் வெள்ளி நாணயங்கள் கொட்டப்படுகின்றன! என் இல்லத்திலேயே தங்கிவிடுங்கள் என்று செல்வந்தர் கேட்கிறார்! ஏனாதி, புன்னகையுடன் அதனையேற்று அந்த இல்லத்தில் தங்கிவிடுகிறார். தங்குவதற்கேற்ற தனியறையொன்று ஒதுக்கப்படுகிறது! நாள்தோறும் செல்வந்தர், ஏனாதியை வணங்கி வாழ்த்துப் பெற்றே வெளியே செல்கிறார்.

தனியறையில் தரையில் படுத்துறங்கிய ஏனாதிக்கு, கட்டிலும் மெத்தையும் தேவைப்படுகின்றன! சில நாட்களுக்குப்பிறகு கால்களை பிடித்திட ஆட்களும் தேவைப்படுகின்றனர்! பின்னர் அந்த ஆட்கள் தன் அடிமைகளாக இருந்திடல் நலமன்றோ என்று ஆசையும் எழுகிறது ஏனாதிக்கு! செல்வந்தரிடம் இந்தச் செய்தி சொல்லப்படுகிறது! கண்டுகொண்டிருந்த கனவில் திடீர் மாற்றம்! செல்வந்தர் வீட்டுப் படிக்கட்டில் ஓர் இரவில் ஏனாதி நின்றுகொண்டிருக்கிறார். அவரைப் பார்த்தும் பார்க்காதது போலச் செல்வந்தர் தனது பல்லக்கு வண்டியில் ஏறி வெளியே போகிறார்! ஏனாதி முகத்தில் அசடு வழிகிறது!

கனவு கலைந்து ஏனாதி விழித்துக்கொள்கிறார். அறவாழியை எழுப்பித் தான் கண்ட கனவைச் சொல்லி, மனத்தில் ஏற்பட்ட கலக்கத்திற்கு மருந்து கேட்கிறார்!

அறவாழி, ஏனாதியைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறுகிறார்!

“செல்வந்தர் என்னிடம் தந்த ஐந்து பொற்காசுகளின் மதிப்பைப்பற்றி நான் கவலை கொள்ளாமல் - வழியில் சந்திக்கும் ஏழைகட்கு வழங்கிவிடலாமென்ற நினைவுடன் தூங்கினேன்! உமது நிலை அப்படி இருந்திடவில்லை! ஐந்து பொற்காசுகளின் மதிப்பையும் அவற்றை வழங்கிய செல்வந்தரின் மகிமையையும் அவர் விடுத்த அழைப்பையுமே பெரிதாக எண்ணிக் கண்ணை மூடியிருக்கின்றீர்! குறள் மொழியை மறந்துவிட்டீரா? ஒருவன் ஆசைகளைக் கண்டு அஞ்சி வாழ்வதுதான் அறம்! ஏன் தெரியுமா? ஒருவனைச் சோர்ந்து போய்ச் சருண்டு விழுமாறு செய்து வஞ்சிப்பது, அவனை முற்றுகையிடும் ஆசைகளேதான்!”

அறவாழியின் அறிவுரை, ஏனாதியின் நெஞ்சில் குறள் வரிகளை அலைபாய விடுகின்றது!

“அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை வஞ்சிப்ப தோரும் அவா”

அதிகாரம் - 37 - அவா அறுத்தல்; பாடல் - 366

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்