பொருளடக்கம் 286 / 300
இகழ்ச்சியின் கெட்டாரை
அச்சுப் பக்கம் 610–611 · ஸ்கேன் 627–628 · அதிகாரம் 54 (பொச்சாவாமை) — குறள் 539
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
உருவிய வாளை உறையிலே போடாமல் போரிட்டுக் களம் பல வென்று அசைக்க முடியாத பேரரசை உரோமானிய மன்னர்கள் உருவாக்கினார்கள்.
அவர்கள் கட்கமேந்திச் சென்று கால்வைத்த இடமெல்லாம், அவர்கள் காலடியில் வீழ்ந்தன. கரங்களில் ஏந்திச்சென்ற கொடிகளை, எதிரிகளின் கோட்டை உச்சியில் ஏற்றிவிட்டே திரும்பினர்.
மகுடபதிகள் பலர் அவருக்கு மண்டியிட்டனர். கப்பப் பொருளாக முத்துக்களும் பவளங்களும் அவர்தம் கொலுமண்டபங்களில் குவிக்கப்பட்டன.
உரோமாபுரிப் பேரரசு, உலகின் தங்கக் கிரீடமாக ஒளிவிட்டு விளங்கிய காலத்தை, அந்நாட்டு வீரர்களின் தோள்வலிமையால், அவர்களை வழிநடத்திய தவ நாயகர்கள் படைத்துக் காட்டினார்கள்.
சீசரின் புகழும் - அண்டனியின் கீர்த்தியும் - அகஸ்டசின் ஆற்றலும் அகிலத்தில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தன. வீர வரலாற்றுப் பெட்டகமாக விளங்கிய அந்தப் பேரரசு, அதன் வழி வழி வந்த ஆளுநர்களால் கொஞ்சம் கொஞ்சமாகத் தேய்ந்து மாய்ந்ததற்கும் வரலாறு உண்டு!
வாளேந்தி நின்ற வரிப்புலிகள், மானனைய மங்கையின் மென்மைமிகு தாளேந்திக் கிடந்தனர். பாசறைகளில் கூடிக்கிடந்தோர் பஞ்சணைகளில் வஞ்சியரை விட்டுப் பிரிந்து வர இயலாமல் அவருடன் கொஞ்சு மொழி பேசிப் பொழுதைக் கழித்தனர். மது பானம் சுவைக்கிறதா! அல்லது மங்கையின் இதழ் பானம் சுவைக்கிறதா - என ஒப்பிட்டுப் பார்ப்பதிலே, அம்சதூளிகா மஞ்சங்கள் ஆராய்ச்சிக் கூடங்களாக மாற்றப்பட்டன.
பகைவரின் தோளோடு மோதிய தோள்கள் - பாவையின் தொடையோடு இணைந்து கிடந்தன. நெஞ்சிலே காமநெருப்பு - தலையிலே மதுவின் கிறுகிறுப்பு - கலகலவெனக் கட்டித்தழுவிக் கொட்டிடும் இன்பச்சிரிப்பு! ஆடல்! பாடல்! ஊடல்! கூடல்! வெறிபிடித்து மேலே விழுகின்ற காண்டாமிருகங்களைக் கண்டு மிரண்டோடிக் கண் கசக்கும் இளங்கையரைப் பார்த்து, “போர்க்களத்தில் ஒப்பாரியும் போகக் களத்தில் புலம்பலும் கோழைகள் செயலடி கோமானாங்கி!” என ஆறுதல் கூறி, அணைத்துக் கசக்கி முகர்ந்திடும் காட்சிகள்! நாளைக்கொரு ராணியை மாற்றும் ராஜாக்கள்! வேளைக்கொரு ராஜாவை மாற்றும் ராணிகள்! கழுதைப்பாலில் குளித்து மேனியை மெருகேற்றிக்கொள்ளும் பேரழகிகள்! அவர்களைத் திருப்திப்படுத்த “காயகல்பம்” அருந்தும் ஆடவர்கள்!
வீரம் செழித்திருந்த நிலம், விரகதாபக்காரர்களின் வேட்டைக்காடாயிற்று! மாவீரர்கள் பவனி வந்த பூமி, மதனகாமராஜாக்களின் கேளிக்கை அரங்கமாக மாறிற்று!
களிப்பு! காதல்! காமம்! மது! மகிழ்ச்சி! வெறிக்கூத்து! இதிலே கடமையுணர்வு இருந்த இடம் தெரியாமல் போயிற்று!
அரசு அலுவல்கள் தேங்கிக் கிடந்தன! அலுவல்களைத் தாண்டிட வேண்டிய அரசர்கள்தான் அழகிகளின் மீது தூங்கிக்கொண்டிருந்தனரே! எல்லாம் தானே நடக்குமென்று “எல்லாம் இன்பமயம்” எனப் பாடி மகிழ்ந்த அரசினர் - எல்லாம் இழந்து நின்றனர்.
- இது உரோமாபுரி, உச்சிவானத்திலிருந்து தரையில் உருண்டுபோன வரலாறு!
இந்த வரலாறு - அடுத்து வருகிறவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டுமல்லவா?
அதைத்தான் வள்ளுவர் அழகு பொழிந்திடக் கூறுகிறார்.
“களிப்புக்கடலில் வீழ்ந்து செருக்குக் கொண்டு கடமையை மறந்திருக்கும் போது; அவ்வாறு கடமை மறந்து சோர்ந்தவர்கள் முற்காலத்தில் அழிந்து போனதை நினைக்க வேண்டும்”.
அதற்கு இதோ குறள்:
“இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம் மகிழ்ச்சியின் மைந்துறும் போது”
அதிகாரம் - 54 - பொச்சாவாமை; பாடல் - 539
இகழ்ச்சியின் = கடமையை மறந்து இருந்தமையின்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்