பொருளடக்கம் 287 / 300
நெஞ்சத்தார் காதல்
அச்சுப் பக்கம் 612–613 · ஸ்கேன் 629–630 · அதிகாரம் 113 (காதற் சிறப்புரைத்தல்) — குறள் 1128
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
காட்டாற்று வெள்ளம் எனக் காதல் கரை புரள, கோட்டத்தில் கோதையினைத் தொட்டுச் சுவை பார்த்தான். மானாக முன்னர் மருண்ட நிலைமாறி, அந்த ஆண்மகன் மடியினிலே அவளும் தவழ்ந்துவிட்டாள்.
கூட்டுக்குரல் எடுத்துக் குயில்கள் நலங்கு இசைக்க - ஓட்டம் பிடித்து அணில்கள் மரங்களில் இலை அசைக்க - மீட்டிய வீணையென மெல்லியாள் முனகலிட - இன்ப வேட்டையே நடத்தினான் வெற்பு நிகர் தோளுடையான்!
எழிலுக்குப் பெருமைதனை இணைக்க வந்த ஏந்திழையாள், விழியாலே அவனை விழுங்கியே மனத்திரையில் அழியாத ஓவியமாய் ஆக்கிக் களித்திடுவாள். தொழுதறியாள் தெய்வத்தை - நெஞ்சினுள்ளே தொழுதிடுவாள் காதலனை!
எப்போதும் தழுவியே கிடந்திட்டால் தருவார் யார் செலவுக்கு? எனவே தொழில் புரிய வேண்டித் துணைவனும் சென்றிட்டான்.
பொழுதேதோ போகவில்லை பூவைக்கு; முன்னாப் பழகி வந்த தோழியைப் பார்த்து வரப் புறப்பட்டாள்.
நீண்டநாள் கழித்து வரும் நேரிழையைக் கண்டதுமே தாண்டவமே ஆடினாள் - தணியாத பாசத்தாள் - தங்கம் நிகர் தோழி. ஏதேனும் தின்னக் கொடுப்பதற்கோ தித்திப்புப் பொருள் இல்லை. பால் மட்டுமே இருந்தது; அதனைப் பக்குவமாய்ச் சுடவைத்தாள். சீனியைக் கலந்தாள்; சேயிழையால் நீட்டினாள்.
குவளைவிழிக் கோதையவள் பால் குவளையைத் தொட்டதுமே,
“என்னடி இவ்வளவு சூடு?” - என்று உடனே வைத்துவிட்டாள் கீழே.
“சூடு குறைந்துவிட்டால் சுவைக்காது என்று முன்பு கூறுவாயே! இப்போது எப்படி மாறிவிட்டாய்?” - என்று வியப்புக் கணை தொடுத்தாள் விளங்காத தோழி.
அவள் அறிவாளா ஆரணங்கு நினைப்பதனை?
‘கொஞ்சும் தமிழாலே என்னைக் குளிப்பாட்டும் காதலரோ என் நெஞ்சோடு நெஞ்சாக நிறைந்து உறைகின்றார். தோழியே, கொஞ்சமும் புரியாமல் கொதிக்கும் பால் தருகிறாய். சூடு பறக்கும் பால் நான் குடித்தால் - அந்தச் சூடு பொறுக்காமல் துடிப்பாரே நெஞ்சுக்குள் இருக்கின்ற என் தலைவர்! எப்படிப் பருகிடுவேன்? எப்படி என் அன்பரை வேக வைப்பேன்? தப்பன்றோ நான் அவரைத் தவிக்கவிட்டுப் பால் அருந்தல்?’
எண்ண ஓட்டந்தான் இவ்வாறு ஓடிட, அன்ன நடையழகி - பால் ஆறும்வரை காத்திருந்தாள்.
காதற் சிறப்பினை எத்துணைக் கனிச் சுவையாய் வழங்குகிறார் வள்ளுவர்!
“நெஞ்சத்தார் காதல் அவராக வெய்துண்டல் அஞ்சுதும் வேபாக் கறிந்து”
அதிகாரம் - 113 - காதற் சிறப்புரைத்தல்; பாடல் - 1128
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்