பொருளடக்கம் 285 / 300
பெறுமவற்றுள் யாமறிவது
அச்சுப் பக்கம் 608–609 · ஸ்கேன் 625–626 · அதிகாரம் 7 (மக்கட்பேறு) — குறள் 61
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
கதிருடன் எழுந்த கழனியில் உழன்று, நெற்கதிரினைக் குவிக்கும் கடமையில் தவறாக் கணியன் என்பான், குன்றன் என்னும் மகனைக் குலவிளக்காய்ப் பெற்றிருந்தான். அவனுக்கு எதிர்வீட்டில் பச்சையெனும் முதியோன் பச்சையான் எனும் மகனைப் பாசமுடன் வளர்த்து வந்தான். கணியன் கற்றுத்தந்த நற்கல்வியெல்லாம் பயின்று கோபுர விளக்கென உயர்ந்தான் குன்றன். பச்சையான் அருகிலிருந்தால் போதுமெனக்கூறிப் பகுத்தறிவு அவன் பக்கம் நெருங்காமலே ஆக்கிவிட்டான் பச்சை!
ஒரு நாள், நெருங்கிய உறவினன் வீட்டில் அவனது தாய் இறந்துவிட்டாள் எனச் செய்தி வர, அவ்வூர் நோக்கிப் பச்சையானும் குன்றனும் சென்றனர், இரங்கல் தெரிவிக்க! தாயை இழந்து சோகத்தில் வீழ்ந்திருந்த உறவினனைப் பார்த்துக் குன்றன் ஆறுதல் மொழியாக, “உன் தாய் உனக்கு மட்டுமா தாயாக இருந்தாள். இந்த ஊருக்கே தாயாகத்தான் திகழ்ந்தாள்,” என்று கூறினான். கண் கலங்கினான்! இறுதிக் காரியங்கள் நடைபெற்றபிறகு இருவரும் ஊர் திரும்பினர்.
சில நாட்கள் கழிந்தன! பக்கத்து ஊரில் பச்சையானின் நண்பன் ஒருவன்! அவனது மனைவி இறந்துவிட்ட செய்தி கிடைக்கவே பச்சையான் பறந்தோடினான், நண்பனுக்கு ஆறுதல் கூறிட முனைந்தான்! தாயை இழந்த மகனைப் பார்த்துக் குன்றன் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன! நண்பன் கதறியழுது கொண்டிருக்கிறான்.
ஊரார் கூடியிருக்கின்றனர். பச்சையான், நண்பனின் தோளில் கைவைத்து, “அழாதே! உன் மனைவி உனக்கு மட்டுமா மனைவியாக இருந்தாள்! இந்த ஊருக்கே...” என்று அவன் முடிக்கவில்லை.
அவன் உடையெல்லாம் கிழிந்தது! உடல் எங்கும் புண்ணானது! ஓடிவந்தான் தந்தையிடம்! நடந்த உண்மையை ஒளிக்காமல் சொன்னான். கணியனும் குன்றனும் அங்கு விரைந்து வந்து அவன் காயங்களைக் கண்டு உருகினர்.
“இப்படி எனக்கொரு பிள்ளை வந்து பிறந்தான் பார்த்தாயா?” என்று பச்சை, கணியனிடம் கவலை தெரிவித்தான்.
கணியன் சொன்னான்.
“ஒருவன் பெறவேண்டிய பேறுகள் அனைத்திலும் மிக உயர்ந்த பேறு, அறிவறிந்த மக்களைப் பெறுவதைத் தவிர வேறொன்றுமில்லை.”
“பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற”
அதிகாரம் - 7 - மக்கட்பேறு; பாடல் - 61
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்