பொருளடக்கம் 284 / 300
அமரகத்து வன் கண்ணர்
அச்சுப் பக்கம் 606–607 · ஸ்கேன் 623–624 · அதிகாரம் 103 (குடிசெயல்வகை) — குறள் 1027
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
குறளில் வரும் ‘குடிசெயல்வகை’ எனும் அதிகாரம், குடும்பத்தை மட்டுமே குறிப்பதல்ல! சுற்றியிருப்போர், நாட்டு மக்கள், இனத்தார் எனப் பல பொருள் கொண்டு காணவேண்டிய கருத்துக் கருவூலம் அது! நாட்டுக்கு உழைக்கும் தியாக மறவனாயினும் - அப்படி உழைத்திடும் தன்னலமற்றோர் அணியின் தளபதியாயினும் - இன எழுச்சியூட்டி இழிவு போக்க எழுந்து நிற்கும் இலட்சியவாதியாயினும் - அவனை நோக்கி எத்தனையோ எதிர்ப்புகள்! ஏசற் கணைகள்! தூற்றல் மொழிகள்! சிறைகள்! வதைகள்! தலையெடுக்கவொட்டாமல் தனிமைப்படுத்திட வேண்டுமென்ற தடைகள்! சூழ்ச்சிகள்! அடக்குமுறைகள்! பழி வாங்கும் படலங்கள்! அவதூறுகள்! துரோகங்கள்! இத்தனையையும் ஒருவன் தாங்கிக் கொண்டால்தான்; அவன் யாருக்காக - எந்த இனத்திற்காக அல்லும் பகலும் பாடுபடுகிறானோ; அந்த இனத்திற்கு அவனால் இயன்ற அளவு மேன்மையைத் தேடித்தரமுடியும். அப்படியொருவன் தன் மீது வீசப்படுகிற ஆவேசக் கண்டனங்களை - ஆபாசப் பொழிவுகளைத் தாங்கிக்கொள்வது எப்படியிருக்கிறது தெரியுமா? என்ற கேள்வியைக் கேட்டு, அதற்கு வள்ளுவரே விளக்கமும் தருகிறார்.
விளக்கம் தருவதற்கும் - அதனை நாம் பெறுவதற்கும் ஏற்ற இடமாக அவருக்குப் போர்க்களம்தான் தெரிகிறது. கத்திகளின் ஒளி வீச்சுகளும் - கட்டாரிகள், சிறகின்றி எதிரும் புதிருமாகப் பறக்கும் காட்சிகளும் - கவசங்களுக்குள் நுழைந்தும் கேடயங்களில் மோதியும் சிதறாடிடும் போர்வாட்களும் - களத்திலே நாம் காண்பவை! குதிரைகள் பாய்ந்து வந்து குளம்படிகளால் மிதிக்கின்றன! யானைகள் துதிக்கையால் தூக்கி அடிக்கின்றன! கடுவேகத்தில் உருளும் தேரின் சக்கரங்கள் உடலில் ஏறிச் செல்கின்றன! ஏ! அம்மா! பயங்கர எதிர்ப்பைத் தாங்கமுடியாத படைவீரர் சிலர் பதுங்குகின்றனர்! சிலர் திரும்பியோடுகின்றனர். சிலர் எதிரிகளிடம் மண்டியிடுகின்றனர்! சிலர் செத்து மடிவோம் என்று சிரித்த முகத்துடன் வேல் தாங்கி - விழுப்புண் தாங்கி - களத்தில் வீர மரணத்தை அணைக்கின்றனர்! படை நடத்திடும் அஞ்சாநெஞ்சு கொண்ட தளபதியோ; தன்னுடன் களம்புகுந்தோர் புறமுதுகிட்டாலும் அதனையும் தாங்கிக்கொண்டு - தன்னுடன் அணிவகுத்து வந்தோர் பகைவனிடம் பணிந்து குனிந்தாலும் அதற்காகவும் உறுதியைத் தளரவிடாமல் - எப்பக்கமிருந்து படைக்கலங்கள் பாய்ந்திடினும் அவற்றைத் தானேதான் தாங்கித் தீர வேண்டிய பொறுப்புக்கு உரியவன் என்ற திடமனத்துடன், தன்னுடன் தொடர்ந்து வரும் வீரர்களின் துணையோடு களத்தில் முன்னேறிக் கொண்டேயிருக்கிறான்.
குடிப்பெருமையெனும் இனப்பெருமை காத்திடப் பொறுப்பேற்றுக் கொண்டவனும் போர்க்களத்தில் எதிரிகளின் தாக்குதலைத் தாங்குகிற அஞ்சா நெஞ்சுத் தளபதியைப்போல இருந்திடல் வேண்டுமென்றார் வள்ளுவர்!
“அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை”
அதிகாரம் - 103 - குடிசெயல்வகை; பாடல் - 1027
அமரகம் = போர்க்களம் தமரகம் = சூழ இருக்கும் இனத்தார் வன்கண்ணர் = அஞ்சாத வீரர்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்