பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 283 / 300

முகைமொக்குள் உள்ளது

அச்சுப் பக்கம் 604605 · ஸ்கேன் 621622 · அதிகாரம் 128 (குறிப்பறிவுறுத்தல்) — குறள் 1274

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மலைவீழ் அருவி! வெள்ளி நூல்கள் வேகமான காற்றில் அசைந்தாடுகின்றனவோ! அல்ல! அல்ல! இடையிடையே பனங்குகள் நூற்றுக்கணக்கில் கொட்டப்படுவது போலவும் காட்சி தருகின்றதே! சுற்றிலும் பலாமரங்கள்! அவற்றின் வேர்களிலே கனிகள்! அந்தக் கனிகளுக்குள்ளே இருக்கும் சுவைகள்! அவை வெளியே தெரிவதில்லை. ஆனாலும் பலாக்கனிகளைப் பார்க்கும்போதே, அவைகளுக்குள் இருக்கும் சுவைகள் தேனாகச் சுவைக்கும் என்ற இன்ப உணர்வு எழுகிறது!

அந்தப் பலாக்கனி திடீரென வெடித்துச் சுவைகள் வெளிப்பட்டால், அந்த அருவியோரம் நிற்கும் மாதுளை மரத்தில் ஒரு கனி கீழே விழுந்து உடைந்து மாதுளை முத்துக்கள் சிதறினால் - அவற்றைக் கண்டவுடன், அவைகளின் அழகுமட்டுமல்ல; அதற்குள் அடங்கியிருக்கும் சுவையும் நம்மையொரு இனந்தெரியாத மகிழ்ச்சியில் ஆழ்த்திடும் அல்லவா?

அந்த அருவியில் ஒரு பொற்பதுமை குளிக்கிறது! அருவியின் நீர்க்கரங்கள் அந்தப் பதுமையின் மேனி முழுவதையும் தழுவித் தடவுகின்றன. வண்ணத் தாமரையொத்த முகத்தை - வலம்புரிச்சங்கனைய கழுத்தை - வாழைப் பூக்கள் இரண்டு முளைத்தெழுந்த விதத்தை - வாடுமே இடையெனத் தாங்கிப் பிடிக்கும் இரு தந்தத்தை

- அருவி, அணைத்தும் பிடித்தும் ஆடும் குதூகலத்தைத் தொலைவில் நின்ற அவன், பொறாமையுமிழும் கண்களோடு பார்த்துத் துடித்துக் கொண்டிருந்தான்.

அவள் குளித்து முடித்து, ஆடையைப் போர்த்தி அழகு மேடுகள் அதிகம் தெரியா வண்ணம் அருவியின் கரையோரம் ஏறி நின்றாள். அவனும் அவள் எதிரே வந்து நின்றான். அவனை அடிக்கடி அங்கு அவள் சந்திக்கிறாள் எனினும் ஆழமாக நோக்கியதில்லை. அங்கு ஒருகணம் நின்றதுமில்லை. அவனோ விடாப்பிடியாக நாள்தோறும் அங்கு நடந்து கொண்டிருந்தான். அன்று அவளும் அவன் வரமாட்டானா என்று எதிர்பார்த்து ஏங்கினாள் போலும்!

அதனால்தான் அவனைக் கண்டதும் மான் போல் துள்ளி ஓடிவிடாமல், மயங்கி நின்றாள். பின்னர் அங்கிருந்து நகர்ந்தாள். நகர்ந்தபோது ஒரு புன்னகை அவள் இதழ்களில்! அந்தப் புன்முறுவலை அவன் விழிகளால் பருகிக் கொண்டிருக்கும்போதே, அவள் மறைந்து விட்டாள்.

அவன், வேரில் பழுத்த பலாவைக் கண்டான்! மரத்தில் தொங்கிய மாதுளையைக் கண்டான்! அங்கு கொடிகளில் நிரம்பியிருந்த அரும்புகளைக் கண்டான்!

கொடிபிடித்துக்கொண்டிருந்த ஓர் அரும்பை விரல்களால் மெல்லத் தொட்டான். பலாச்சுளையில் சுவை மறைந்து கிடப்பதைப்போல் - மாதுளை முத்தில் சுவை ஒளிந்து கொண்டிருப்பதைப்போல் - இதோ இன்னமும் மலராத இந்த அரும்புக்குள் நறுமணம் அடங்கிக் கிடக்கிறது! அரும்பில் பதுங்கியுள்ள நறுமணம் போலத்தான் - இதோ முறுவலித்து விட்டுப்போகிறாளே, அவளது புன்னகையென்ற அரும்புக்குள் ‘அவன் மீது அவளுக்கும் அளவற்ற காதல் உண்டு’ என்ற இன்பக் குறிப்பு அடங்கியிருக்கிறது - என அவன் கருதிக்கொள்கிறான்.

“முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு”

அதிகாரம் - 128 - குறிப்பறிவுறுத்தல்; பாடல் - 1274

முகை = அரும்பு

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்