பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 282 / 300

அ. அடுத்தது காட்டும் / ஆ. நுண்ணியம் என்பார்

அச்சுப் பக்கம் 602603 · ஸ்கேன் 619620 · அதிகாரம் 71 (குறிப்பறிதல்) — குறள் 706, 710

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

மெல்லிய சிற்றலைகள் அசைந்தாடிடும் தடாகத்தில், மேலிருந்து கல் எதுவும் வீசப் படாமலே திடீரென மேல் மட்டத்து நீர் கலங்குகிறது. எப்படி? எவ்வாறு நிகழ்கிறது?

நீருக்கடியில் நீந்தி விளையாடும் மீன்களுக்கிடையே ஏற்பட்ட மோதுதலால், தெளிந்த நீர்த் தடாகத்து மேற்பரப்பில் ஒரு கலக்கம்.

அந்த மனிதனின் முகம் அமைதியாகக் காட்சி தருகிறது. தென்றலின் கரம்பட்டு அந்த இன்பத்தைச் சுவைத்திடும் புன்னகை வேறு; அமைதி நிரம்பிய அந்த முகத்திலே ஒளி நடனம் ஆடிக்கொண்டிருக்கிறது. அவனது உயிர்த்தோழன் அவனருகே அமர்ந்து, சமண பெளத்த துறவிகள் எவ்வாறெல்லாம் துன்பங்களையேற்றுக்கொண்டு, தாங்கள் கொண்ட கொள்கைகளை உலக மக்களுக்கு எடுத்துச் சொல்லிப் பரப்பிட ஓய்வின்றி உழைத்தனர் என்ற உள்ளமுருக்கும் நிகழ்ச்சிகளையெல்லாம் வகைப்படுத்திச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த மாண்புகள் கேட்டு, அவன் அந்த நிகழ்ச்சிகளோடு ஒன்றிப் போய்விடுகிறான். தெளிந்த மெல்லிய சிற்றலைகள் அசைந்தாடிடும் அமைதியான தடாகம் போன்ற அவன் முகம் விளங்குகிறது.

எங்கிருந்தோ ஓர் இசைப்பாடல் ஒலிக்கிறது! ஆம்; அவன் கேட்ட பாடல்! பலமுறையும் கேட்ட பாடல்

“இன்பஅமுதே! அன்பின் உயிரே! இதயமலரே! உதயக்கதிரே! என்னை மறந்து உன்னைத் தழுவ- உன்னை மறந்து என்னைத் தழுவ- அருகில்வருக! அள்ளிப்பொழிக!”

அவன் பாடியது! அவனும் இணைந்து பாடியது! இப்போது அவள் பாடவில்லை; அவனும் பாடவில்லை! அவர்கள் பாடியதை யாரோ ஒருத்தி எங்கிருந்தோ பாடு கிறாள்!

அவனுக்கு இப்போது பாடுகிறவளைப் பற்றிக் கவலையில்லை- அப்போது பாடினாளே அந்த அழகரசி - அவள் இப்போது இல்லை - அவளை இயற்கை பறித் தோடிச் சென்றுவிட்டது! பல திங்கள்கள் பறந்து விட்டன! இப்போது அதே பாடு! அதே பாடு! அவன் நெஞ்சத் தடாகத்தின் கீழ்ப்பரப்பில் மீன்கள் முட்டிக் கொள்கின்றன! எத்தனையோ நினைவுகள்! எத்தனையோ நிகழ்ச்சிகள்! ஒன்றோ டொன்று மோதிக்கொள்கின்றன! அகத்தின் மேற்பரப்பு; முகம்தானே; அதில் அதிகம் செழித்துக்கொண்டிருந்த அமைதியைக்காணவில்லை! கலக்கம்! கவலையின் பேரலைகள்!

நெஞ்சின் அடித்தளத்தில் நிகழ்ந்திடும் போராட்டத்தின் விளைவு! அந்த விளைவு கண்டு, நெஞ்சுக்குள் நடப்பதை உணர்ந்து கொள்ளமுடிகிறது.

நெஞ்சத்தில் ஏற்படும் மாறுபாடு எத்தகையது என்பதை, முகத்தின் வாயிலாக எளிதில் அறிந்துகொள்ளலாம் அல்லவா? தன்னெதிரில் உள்ளதைத் தன்பால் காட்டுகின்ற கண்ணாடியைப்போல், அகத்தில் ஏற்படும் உணர்வுகளை - முகம் தன்மூலமாகக் காட்டிவிடுகிறது என்கிறார், வள்ளுவர்.

அமைதியின் மெருகு, பொலிவை வழங்கிடும் வண்ணம் விளங்கிய அவன் முகத்தில், எங்கிருந்தோ ஒலித்த ஒரு பாடல், எத்தகைய சோகக் கொந்தளிப்பை உருவாக்கி விட்டது!

இது அவனது நெஞ்சத்தை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடிதானே! எனவே அகத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி முகம்தானே!

“அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம் கடுத்தது காட்டும் முகம்”

என்னதான் மனப்புயலை மறைக்க முயன்றாலும் - மன உணர்வுகளை ஒளித்திட முயன்றாலும் - தன்னை அடுத்துள்ள பொருளைத் தன்னிடம் காட்டுகிற கண்ணாடியைப்போல முகம் காட்டிவிடும்!

அங்கிருந்த உயிர்த்தோழன், தனது நண்பனின் முகமாற்றத்தைக் காணுகிறான். இசையொலியையும் கேட்கிறான். நண்பனின் முகம் ஏன் இப்படி மாறிவிட்டது என்பதை, நுட்பமாக அவனால் அறிந்து கொள்ள முடிகிறது.

அத்தகைய நுட்பமான அறிவுடையவன் எனத்தக்க அளவுக்கு, பிறர் கருத்து என்ன என்பதை - அவர் நெஞ்சில் அலையாய்ந்திடும் உணர்வு எத்தகையது என்பதை - அவரது முகத்தைப் பார்த்து அளந்து கூறுகிற கோலாக இருப்பது எது என ஆராய்ந்து பார்த்தால், அது கண்களைத்தவிர வேறில்லை என்று குறள் திட்டவட்டமாகக் கண்களின் பெருமையைப் பேசுகிறது!

அகத்தின் மாற்றம் முகத்தில் தெரிகிறது! அப்படித் தெரிவதை அளந்து சொல்லும் கோலாகக் கண் விளங்குகிறது!

“நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற”

அதிகாரம் - 71 - குறிப்பறிதல்; பாடல்கள் - 706, 710

பளிங்கு = கண்ணாடிக்கல்; கடுத்தது = மிகுந்துள்ளது; நுண்ணியம் = நுட்பமான அறிவு

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்