பொருளடக்கம் 281 / 300
உலகத்தோடு ஒட்ட
அச்சுப் பக்கம் 600–601 · ஸ்கேன் 617–618 · அதிகாரம் 14 (ஒழுக்கமுடைமை) — குறள் 140
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
ஒரு குறும்புக்கார இளைஞன்! பெயர், குன்றன்! அவனது ஆசிரியர் அவனிடம் அடிக்கடி கூறுகிற அறிவுரை; “குறளைப் படி! அதன்படி நட” என்பது தான்! அந்த அறிவுரை அவனுக்குக் கசப்பாக இருந்தது. “குறள், வாழ்க்கை நெறியை வகுத்தளிக்கும் அறிவுக் கருவூலமாகும். ஆடவர் பெண்டிர் இருபாலாரும் - குறள் வழி நடந்தால் அவர்கள் ஏற்றுள்ள எந்தப் பொறுப்பிலும் புகழ் எய்துவதோடு நெஞ்சுறுதியாளர் களாகவும் திகழ்ந்து வாழ்க்கையின் இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக அமைவர்.” இப்படி நாள்தோறும் தனது மாணவர்களிடம் - அதிலும் குறிப்பாகக் குன்றனிடம் ஆசிரியர் கூறிடத்தவறுவதில்லை. ஒரு நாள், குன்றன் - தனது குறும்புத்தனத்தை ஆசிரியரிடமே காட்டிவிட முடிவு கட்டிக்கொண்டான். அவ்வாறே செயல்பட்டான்.
ஆசிரியர், மரத்தடியில் நாற்காலியொன்றில் அமர்ந்து நூலொன்றைப் படித்துக் கொண்டிருந்தார்! குன்றன், அவருக்கு எதிரே வந்து அவர் கண்களில் படும்படியாகத் தன்னைத்தானே பம்பரம்போல் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தான். ஆசிரியர் அவன் செயலைக் கவனித்தார். தன்னைத்தானே சுற்றிக்கொண்டிருந்த குன்றன், அவ்வாறு செய்துகொண்டே ஆசிரியர் எந்த மரநிழலில் அமர்ந்திருந்தாரோ அந்த மரத்தையும் மெதுவாகச் சுற்றி வரத் தொடங்கினான். வியப்புற்ற ஆசிரியர் அவனைப்பார்த்து, “என்னப்பா செய்கிறாய்?” எனக் கேட்டார். “குறள் கூறிய வழி நடக்கிறேன் அய்யா!” எனச் சிரித்துக்கொண்டே குன்றன் பதிலுரைத்தான்.
“குறள் வழியா? இஃதென்ன கூத்து” என ஆசிரியர், சற்று சினங்கொண்டு கேட்டார்.
“அய்யா! ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் வேண்டும்’ என்று குறள் கூறுகிறதல்லவா? நேற்றுத்தானே அந்தப் பாடம் நடத்தினீர்கள்! உலகத்தோடு ஒட்ட ஒழுகுவது எப்படியென்று யோசித்துப் பார்த்தேன்! உலகம், தன்னைத்தானே சுற்றிக்கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது அல்லவா? அதனால் நானும் உலகத்தைப்போல என்னையே நான் சுற்றிக்கொண்டு இந்த மரத்தையும் சுற்றி வருகிறேன்.”
எனக் குன்றன் பதில் அளித்தான்.
“இது குறும்புத்தனமான விளக்கம்! அல்லது குறளைச் சரியாகப் புரிந்துகொள்ளாத அறியாமை! உலகம் என்று வள்ளுவர் குறிப்பிட்டிருப்பது, உலகத்தில் உள்ள மக்களைத்தானே தவிர, பூமியெனப்படும் இந்தக் கோளத்தையல்ல! உலகில் வாழும் மக்களின் இயல்புகளோடு ஒட்டிப் போக வேண்டும் - அப்படி ஒட்டிப் போகும் இயல்பைக் கற்காதவர்கள்; வேறு பல்வேறு நூல்களைக் கற்றிருந்த போதிலும் ‘கல்லாதார்’ என்ற பட்டியலிலேதான் அடங்குவார்கள்! இது தானப்பா அந்தக் குறளின் கருத்து!”
என ஆசிரியர் மொழிந்தார்!
“அப்படியானால், உலக மக்களில் பெரும்பாலோர் மூடர்களாக இருப்பதாக வைத்துக்கொள்வோம்! இன்னமும் காட்டு மிராண்டிக் காலத்தில் வாழுகின்ற நிலையில் இருப்பதாக வைத்துக்கொள்வோம்! அந்த உலக மக்களின் இயல்போடு நாமும் நம்மை இணைத்துக்கொண்டு ஒழுகிட வேண்டுமா?”
என விளக்கத்தைத் தொடுத்தான், குறும்புக்காரக் குன்றன்!
“தம்பி! வள்ளுவர் குறிப்பிடும் உலக மக்கள்; உயர்ந்த பண்பாடும் அறிவும் உடைய மக்கள்தானே தவிர - மாக்களைப் போல வாழும் மக்கள் அல்ல! ஒன்றைப் புரிந்து கொள்க! வீட்டிலே எரியும் விளக்கில் கிடைப்பதும் ஒளிதான்! சுடுகாட்டிலே பிணம் எரியும்போது கிடைப்பதும் ஒளிதான்! இரண்டிலும் ஒளிதானே கிடைக்கிறது எனக் கூறி சுடுகாட்டு ஒளியைப் பயன்படுத்திக்கொள்ள முனைவாயோ? முனையமாட்டாய்! அதுபோலத்தான் மக்கள் என்றால், மக்களுக்குரிய உயர்ந்த பண்புகளைக் கடைப்பிடிப்போர் எனக்கொண்டிட வேண்டுமே தவிர, மனித உருவில் இருப்போரெல்லாம் மக்களல்ல! எனவே, நற்பண்புவாய்ந்தவருடன் பொருந்தி ஒழுகிடல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிற வள்ளுவர், அப்படி ஒழுகிடாதவர் எவ்வளவு கற்றவராயிருப்பினும் கற்றறியா மூடரேயாவார் எனத் திட்டவட்டமாகக் கூறுகிறார்.”
ஆசிரியரின் இந்த விரிவுரை கேட்டு குறும்புக்காரக் குன்றன் தலை குனிந்தான்! அவரிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்! “குறள் வழி இனி நடப்பேன்” என்று உறுதி கூறி அவரை வணங்கினான்.
“உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார்”
அதிகாரம் - 14 - ஒழுக்கமுடைமை; பாடல் - 140
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்