பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 280 / 300

முறைப்படச் சூழ்ந்தும்

அச்சுப் பக்கம் 598599 · ஸ்கேன் 615616 · அதிகாரம் 64 (அமைச்சு) — குறள் 640

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

நல்லரசு ஒன்றை நிலைநாட்டல் - நாட்டு மக்கள் அனைவரும் நலிவு நீங்கி வளமிகு வாழ்வு பெற்றிடச் செய்தல்; கூனன் நிமிர்ந்திடவும் - குருடர் கண் பெற்றிடவும் - திட்டங்களை வகுத்தல் - வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிவதைத் தடுத்தல் - பசி, பட்டினி என்ற சொற்களுக்கே இடமில்லாமல் ஆக்குதல் - உழவர்க்கும் உழைக்கின்ற பாட்டாளிக்கும் உற்ற துணையாக ஆக்கிப் பணிகளை இயற்றல் - குறையொன்றுமில்லாக் கரங்கள், குறையொன்றுமில்லா ஆட்சி எனும் பெருமையை உலகுக்கு அறிவித்தல் - மகளிர் குலத்தின் மாண்பு காத்திடப் பாதுகாப்பு அரணாக அரசு விளங்கிடச் செய்தல் - இப்படியெல்லாம் அறிவித்துவிட்டு அமைச்சப் பொறுப்பை ஏற்றனர் அந்தக் குழுவினர்!

அறிவித்தவைகளை நடைமுறைப்படுத்த, அரசின் அலுவலர்களைக் கூட்டிக் கலந்து பேசினர். முறைப்படக் காரியங்கள் எப்படி நடைபெற வேண்டுமென்பதற்கான வழிமுறைகளை, அறிவு முதிர்ச்சி கொண்ட உயர் அலுவலர்கள் எடுத்தியம்பினர்.

அறிவித்தவை அனைத்தும் நடைமுறைக்கு வந்துவிட்டது போன்ற ஒரு மாயத்தோற்றமே நாட்டில் இருந்ததே தவிர, நலிவு, மலிவுப் பொருளாகி விட்டது!

சூதும் சூழ்ச்சியும் பெருகின! கொலையும் கொள்ளையும் மக்களை அதிர்ச்சியுறச் செய்தன! குறையில்லாத துறையே இல்லை; கறைபடாத கரமேயில்லை அரசு நடத்துவோரிடம் - என்ற நிலை விரிவடைந்து கொண்டேயிருந்தது!

அமைச்சர்கள், தாங்கள் அறிவித்த நல்ல திட்டங்கள் அனைத்தும் செயல்பட்டு நாடு செழிப்பதாக அடிக்கடி அறிவித்து வந்தனர்!

நாளைக்கொரு சட்டம் - வேளைக்கொரு திட்டம் - அதுவும் நிலைப்பதில்லை நிற்பதில்லை உறுதியாக! தள்ளாடிக்கொண்டேயிருந்தது!

உழவரின் பெருமூச்சு, உழைப்போரின் நெடுமூச்சு, ஊரார் வீட்டு எரி நெருப்பு மூச்சு - இவற்றுக்கிடையே அந்த அரசு, தடுமாறியது! தத்தளித்தது!

இப்படியொரு அரசு இருப்பதை உணர்ந்த புலவர் பெருமான் ஒருவரிடம்; அவரது நண்பர்கள் எடுத்துரைத்தனர்!

“முறைப்படச் செயல்புரிய வேண்டி கருத்துக்களைத் தொகுத்தனர் என்று கேள்விப்பட்டேனே!”

என்றார் புலவர்!

“உண்மைதான் புலவரே! ஆனால் முடிந்த முடிப்பாக எந்தக் காரியங்களையும் செய்யாமல் நாட்டைக் காட்டாக்கிவிட்டனர்!”

என விளக்கினர், வேதனையுடன் நண்பர்கள்!

“முறைப்படச் சிந்தித்து அறிவித்தனர்! ஆனால் முடிவில்லாமல் குறைப்பட்டவே செயலாற்றினர்! காரணம் தெரிகிறதா? அவர்கள் திறப்பாடு இல்லாதவர்! அதாவது சொல்வதையும் நினைப்பதையும் செய்யும் திறமையற்றவர்!” என்று கேலி கலந்த சினத்துடன் புலவர் பெருமான் கூறிவிட்டுக் கண்கலக்கமுற்றார்.

அதைத்தான் வள்ளுவர்; இதோ இந்தக் குறள் வாயிலாகச் சுட்டிக் காட்டுகிறார்.

“முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்”

அதிகாரம் - 64 - அமைச்சு; பாடல் - 640

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்