பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 279 / 300

எனைத்தொன்று இனிதேகாண்

அச்சுப் பக்கம் 596597 · ஸ்கேன் 613614 · அதிகாரம் 121 (நினைந்தவர் புலம்பல்) — குறள் 1202

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

கதிரோனைத்தான் மணப்பேன் என உறுதிபூண்டு நின்ற அவளைப் பெற்றோர் எவ்வளவோ இடித்துரைத்து மனத்தை மாற்றிட முயன்றனர். அவர்தம் திருமகளாம் தேன்மொழியோ, அவன்பால் தந்துவிட்ட இதயத்தைத் திரும்பப் பெறமுடியாது என மறுத்துரைத்துவிட்டாள். இருவரையும் சந்திக்க விடாமல் செய்தால்தான் தங்கள் எண்ணம் ஈடேறுமென முடிவுக்கு வந்தனர் தாயும் தந்தையும்.

இன்ப அருவியில் ஆடி மகிழ - பஞ்சு மெத்தையில் கொஞ்சிக் குலவிட - அணைத்தும் தழுவியும் உலகில் அனைத்தையும் மறந்து கிடந்திட - அவரும் நானும் இணையும் நாள் எந்நாளோ?

இப்படி ஏங்கிக்கிடந்து கட்டிலில் புரண்டு புரண்டு இரவியில் விடியற்காலை தூங்கி விழித்த மங்கை, தன் அறையின் கதவு வெளியே பூட்டியிருப்பதை உணர்ந்தாள்.

வீட்டுக்குள்ளே சிறை வைத்துவிட்டால், என் இதயப் பூக்காட்டுக்குள்ளே அந்தக் காதல் வண்டு மொய்க்காமல் இருந்துவிடுமோ?

தன்னை வெளியில் செல்லவிடாமல்- ஒளியுமிழக் கண்ணன் கதிரோனைக் காண விடாமல் - அவனுதிர்க்கும் சுவைமிகு காதல் மொழி கேட்கவிடாமல் - தடுத்து விட்ட பெற்றோர் மீது இன்றுமுதல் போர் தொடுத்துவிட்டேன் என்று, தன்னைக் காண வந்து பலகணிக்கு வெளியே நின்று பேசிய தோழியிடம் குமுறைத்தாள்.

வருத்தத்தால் சுருக்கமுற்ற முகத்துடனே நின்றிருந்த தோழியும் அவளுக்கு ஆறுதல் கூறி, “கவலைப்படாதே! கண்ணின் மணியை இமைக் கதவால் மூடிவைத்தாலும் - நினைவுகள் விழித்துக்கொண்டு வெளியேதான் உலவும் என்பதை உன் பெற்றோர் உணரவில்லையே போலும்!” என்றுரைத்தாள். மேலும் அவளைப் பார்த்து அந்தத் தோழி சொன்னாள்:

“கதிரோனைக் காணாமல் பிரிந்திருப்பதால் உனக்கேற்படும் துன்பத்தை நானறிவேன். கட்டுக்கடங்காத காமம் எனும் மதயானை உன் நெஞ்சில் எப்படி மிதித்துத் துவைக்கும் என்பதும் எனக்குப் புரியாமல் இல்லை.”

இப்படித் தோழி சொன்னதும்; அவள் சிரித்துக்கொண்டாள்! ஆனாலும் கண் கலங்கியிருந்தது! கண்கலங்கிய காரிகை சிரித்துக்கொண்டே தனது தோழியைப் பார்த்து;

“நீ உன் அனுபவத்தைச் சொல்கிறாயா? ஆனால், எனக்கு அப்படியொன்றுமில்லை! நான் விரும்புகின்ற நாயகரைப் பிரிந்திருக்க நேரிட்டாலும்கூட அவரை நான் நினைத்துக்கொண்டேயிருப்பதால் - இந்தப் பிரிவால் ஏற்படும் துன்பம் என்னை நெருங்காமல் போய்விடுகிறது! அதனால் காமத்தின் தாக்குதலும் என்னைச் சோர்வடையச் செய்யாமல் இன்ப உணர்வையே வழங்குகிறது.” என்று கூறினாள்!

உடனே தோழி அவளைப் பார்த்து, “வியப்புக்குரியவளடி நீ! விட்டுப் பிரிந்தவரை எண்ணி மழைகொட்டும் கண்களுடன் - வளைகழன்ற கைகளுடன் - துன்புற்றுக் கிடக்கும் தோகையரைத்தான் குறள்கூடத் தொகை தொகையாகக் காட்டுகிறது? ஆனால் நீயோ.....”

என முடிப்பதற்குள்; அவள் குறுக்கிட்டு “அவசரப்படாதே! அந்தக் குறளிலும் என்னைப் போன்ற பெண்களைக் காணலாம்! அவர்களில் ஒருத்தி நான்” என்றாள், பெருமூச்சுடன்! பெருமிதத்துடன்!

ஆமாம்; அந்தக் குறள் எந்தக் குறள்? இதோ - இந்தக் குறள்!

“எனைத்தொன்று இனிதேகாண் காமம் தாம்வீழ்வார் நினைப்ப வருவதொன்று இல்”

அதிகாரம் - 121 - நினைந்தவர் புலம்பல்; பாடல் - 1202

எனைத்தொன்று = எவ்வளவாயினும் வீழ்வார் = விரும்பப்பட்டவர்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்