பொருளடக்கம் 278 / 300
தாங்குக தாங்கி
அச்சுப் பக்கம் 593–595 · ஸ்கேன் 610–612 · அதிகாரம் 68 (வினைசெயல்வகை) — குறள் 672
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
குறளைக் குறைவறக் கற்றோ அல்லது கேட்டோ அறியாத ஒருவன், குறட்பாக்கள் சிலவற்றை அரைகுறையாகத் தெரிந்து வைத்துக்கொண்டு, அதுவும் தெரியாத பலரிடம் தன்னை ஒரு புலவன் போலக் காட்டிக்கொண்டு ஏமாற்றி வந்தான். அவனைத் தமிழ்மேதையென ஊரார் எண்ணிப் புகழ்ந்து, போற்றி வந்தனர்.
அடுத்த ஊர்களிலும் தன் சிறப்புப் பரவிட வேண்டுமென்ற ஆவலுடன், அவன் வெளியூர்ப்பயணம் புறப்பட்டான்.
அவன் சென்ற ஊர்களில் ஒன்றுக்கு உரிமை படைத்த குறுநில மன்னன் ஒருவன், தமது புலவனைத் தனது அமைச்சராக இருந்து தமிழ் இலக்கியம் பரப்பிடும் பணியைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டான்.
புலவனுக்கு அமைச்சர் பொறுப்புக் கொடுத்ததைத் தமிழுக்கு, தான் செய்த பெருந்தொண்டு எனக் கருதிக்கொண்டான் அந்தக் குறுநில மன்னன். நல்ல தமிழ் பயின்றவன், இலக்கியங்களை முறையாகக் கற்றவன். தன் அமைச்சரவையில் ஒரு புலவரும் அமைச்சராக இருக்க வேண்டுமென்று விரும்பினான். அந்த விருப்பத்தை நிறைவேற்றினான். ஆனால், விளைவுதான் வேறுவிதமாக இருந்தது!
திடீரெனக் காட்டு விலங்குகள் இரவு நேரங்களில் ஊருக்குள் புகுந்து பயிர் பச்சைகளை அழிப்பதோடு, மக்களின் உயிரையும் பறிக்கின்றன என்ற செய்தி குறுநில
மன்னன் செவிக்கு எட்டியது. உடன் அதனைத் தடுத்து மக்களைக் காக்க நடவடிக்கையெடுப்பதுபற்றி அமைச்சர்களைக் கலந்தாலோசிக்க அமைச்சரவையைக் கூட்டினான். புலவன் மட்டும் வரவில்லை. நெடுநேரங் காத்திருந்து, பின்னர் ஓர் ஆளை அனுப்பிப் புலவனை அழைத்து வரச் செய்தான்.
“என்ன புலவரே! அமைச்சர் பொறுப்பை மறந்துவிட்டு இவ்வளவு காலந்தாழ்த்து வருகின்றீர்?”
எனக் கேட்டான் மன்னன்.
“தூங்கி விட்டேன்.”
- இது அந்த அமைச்சப் புலவனின் பதிலாக இருந்தது!
“என்ன, தூங்கி விட்டீரா? நமது ஆளுகையின் கீழ் உள்ள மக்களுக்கு ஏற்பட்டுள்ள அல்லலைத் தீர்க்க எப்படி செயல் மேற்கொள்ளலாம் என்று கருத்தறிவதற்கு அழைத்தால், தூங்கி விட்டேன் என்று கூறுகிறீரே; இது என்ன வேடிக்கை?”
மன்னன் இப்படிச் சொன்னதும், புலவன் சிரித்துக்கொண்டே விடையளித்தான்;
“மன்னவா! வினை செய்வதை பற்றி வள்ளுவர் என்ன கூறியிருக்கிறார் தெரியுமா? ‘தூங்குக தூங்கிச் செயற்பால’ என்று கூறியிருக்கிறார். அதாவது தூங்கிச் செய்ய வேண்டிய செயல்களுக்காகத் தூங்குக என்று கூறியிருக்கிறார். அதனால் தான் நான் தூங்கினேன்.”
இப்படிக் கூறிய புலவன், தனது தமிழாற்றலை மன்னர்க்கும் மற்றவர்க்கும் உணர்த்தி விட்டதாக எண்ணி மார்பை நிமிர்த்துக்கொண்டு அமர்ந்தான். குறுநில மன்னன் மிகுந்த ஏமாற்றத்துடன் அந்தப் புலவனை நோக்கி, “அய்யா! நீர் விளையாட்டாகப் பொருள் கூறுகிறீரா? அல்லது உண்மையான பொருளே அதுதான் என்று கருதுகிறீரா?” எனக்கேட்டான்.
“இதில் விளையாட்டே இல்லை! தூங்குக தூங்கிச் செயற்பால - என்று திருக்குறளே தெளிவாக இருக்கிறது! அதனால்தான் தூங்கிக் கொண்டிருந்தேன். காட்டு மிருகங்கள் இரவிலேதான் வருகின்றன. இரவு என்பது நமக்குத் தூங்கும் நேரம்! ஆகையால், ‘தூங்கும் நேரத்தில் செய்யவேண்டிய காரியங்களுக்காகத் தூங்குக’ என்றுதான் குறள் கூறுகிறது” என்றான் புலவன்!
அறியாமையாலும் அவசரத்தாலும் தான் செய்துவிட்ட செயலை எண்ணி மன்னன் வருந்தினான். எனினும், மன்னன், புலவனுக்கு விளக்கமளித்தான்.
“தூங்குக தூங்கிச் செயற்பால - என்றால், ‘காலந்தாழ்த்துப் பொறுமையாகச் செய்யவேண்டிய காரியங்களைக் காலந்தாழ்த்தே செய்யவேண்டும்’ என்று தான் பொருள். அதை விடுத்துத் தூங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று பொருள் கொள்வது பெரும்பிழை! அதுபோகட்டும், புலவரே! அந்த முழுக் குறளையும் ஒருமுறை சொல்லுங்கள் பார்ப்போம்.”
மன்னன் கேட்டவாறு முழுக் குறளையும் சொல்ல புலவனால் இயலவில்லை. மன்னன், புலவனை ஏளனமாக நோக்கினான். “புலவரே! நான் சொல்லுகிறேன் கேளும்; தூங்கற்க தூங்காது செய்யும் வினை - அதாவது ‘காலந்தாழ்த்தாது உடனடியாகச் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யக் காலந்தாழ்த்தக் கூடாது’ என்று பொருள் - புரிகிறதா இப்போது?” எனக் கேட்டான்.
“எனக்கு எல்லாம் தெரியும். மன்னருக்குத் தெரியாதா என்று சோதிக்கத்தான் இப்படிச் செய்தேன்.”
எனப் புலவன் சமாளித்தான். உடனே குறுநில மன்னனின் ஆணை பிறந்தது; “நமது வீரர்கள் இப்போதே காட்டு மிருகங்களைத் துரத்தி மக்களைக் காக்கப் புறப்பட்டாக வேண்டும். அதற்கான முறைகளை அமைச்சரவை வகுக்கும்! அந்த மிருகங்களைத் துரத்துவதற்கு முன்பு, இந்தப் புலவரை நமது ஊரை விட்டுத் துரத்துகிறேன்.” - ஆணை பிறந்த பிறகு அரைகுறைப் புலவனுக்கு அங்கென்ன வேலை? இந்தக் கற்பனை ஓவியம் வரையப் பயன்படுத்த குறள் இதுதான்!
“தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை”
அதிகாரம் - 68 - வினைசெயல்வகை; பாடல் - 672
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்