பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 277 / 300

நிலையில் திரியாது

அச்சுப் பக்கம் 591592 · ஸ்கேன் 608609 · அதிகாரம் 13 (அடக்கமுடைமை) — குறள் 124

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“ஓ! என் நண்பனே! உன்னையொன்று கேட்பேன், எனக்கு விளக்கம் உரைப்பாயா?”

“தயக்கமின்றிக் கேள். இயன்றவரையில் எது குறித்துக் கேட்டாலும் விளக்கம் தர முயற்சி செய்கிறேன்.”

அருகருகே இரண்டு குதிரைகளில் அமர்ந்து, காட்டுச்சாலையில் பயணம் செய்துகொண்டிருந்த வாலிபர் இருவரிடையே நடந்த உரையாடல் இது! விளக்கம் கேட்டவன் பெயர் வேழமுகன்! விடையளித்தவன் பெயர் வேங்கை மார்பன்! முதலாமவன் பெருத்த உடலைச் சுமப்பவன்! இரண்டாமவன் கட்டுக் கோப்பான உடலமைப்புக் கொண்டவன்!

வேழமுகன் கேட்டான், “நான் இந்த ஊராளும் பொறுப்புக் குழுவிலே ஒருவனாக இருக்கிறேன் உன்னைப்போல! ஆனால் நான் நம்மவரில் பலரது வெறுப்புக்கு ஆளாகிறேனே; அதை நீ கவனித்து வருகிறாயா, வேங்கை?” என்று!

வேங்கை சிரித்தான்! பதிலும் அளித்தான்!

“நானேகூடப் பல நேரங்களில் உன்னை வெறுப்பது உண்டு வேழம்! ஏன் தெரியுமா? இருக்கும் பொறுப்புணர்ந்து நடந்து கொளாதவர்களில் நீயும் ஒருவன்!”

“நீயே என்னை வெறுக்கிறாயா? அப்படியென்ன நான் பொறுப்பற்று நடந்துவிட்டேன். அறிவற்றவனைப் போலப் பேசாதே! அளந்து பேசு!”

“பார்த்தாயா! பார்த்தாயா! வாயை வாளாக மாற்றிக் கொண்டு என் மீதே வீசுகிறாயே! உன்னைப் போன்றோர், தமது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள நிலைமை உயர்வை எண்ணிப்பார்த்து அதற்கேற்ப நடந்துகொள்ளவேண்டும்! ஆத்திரப்படுகிறாய் - அவசரப்படுகிறாய்! ஆணவமான சொற்களைத் தங்கு தடையின்றிப்

மொழிகிறாய்! இளையோரிடமே இனிமையாகப் பழகவேண்டிய நிலையில் உள்ள நீ, மூத்தவர்களிடமே மீசையை முறுக்குகிறாய்?”

“அது என் இயல்பு வேங்கை! அதனை நான் மாற்றிக்கொள்ள முடியாது! ஊராளும் குழுவில் இருக்கிற என்னிடம்தான் மற்றவர்கள் பணிந்து போக வேண்டும்!”

“அறிவு கண்டு பணியலாம்! ஆணவத்திற்கு அடிமைகள் வேண்டுமானால் குனியலாம்; ஆன்றோர் அதற்கு என்றுமே தலைவணங்கிடார்!”

“வேங்கைமார்பா! என்றைக்கும் என் வழியே தனி வழி!”

“எவரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் எனப் பேசுவது நல்லவழியல்ல! உனக்குத் தனி வழியாக இருக்கலாம்! ஆனால், அது தகராத வழி!”

“என் நிலைக்கேற்ற நினைப்பு இருத்தல் கூடாதா?”

“அதைத்தான் சொல்லுகிறேன்; எந்த நிலையில் இருக்கிறோம்! எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற நினைப்பு வேண்டும்.”

“நீ பெரிய உபதேசியாதி விட்டாய்! உன்னோடு இணைந்து பயணம் செய்தாலே உன் உபதேசத்தைக் கேட்கும் தொல்லை என்னை விடாது!”

இப்படிக் கூறிக்கொண்டே வேழமுகன், தனது குதிரையை வேறு பக்கம் தட்டிவிட்டான். வேறு வழியில் குதிரை ஓடத்தொடங்கியது!

“ஏ! ஏ! நீ செல்வது ஆபத்தான வழியப்பா!”

“நான்தான் முன்பே சொன்னேனே, என் வழி தனி வழியென்று!”

வேழமுகன் வேகமாக வேறு வழியில் சென்று, வேங்கைமார்பனின் விழிகளில் இருந்து மறைந்தான். வேங்கை ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு மெல்ல உதடுகளைப் பிரித்துச் சொன்னான்.

“நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது”

தன் நிலையை உணர்ந்து அதற்கு ஏற்ப அடக்கத்துடன் நடப்பதிலிருந்து சிறிதும் மாறுபடாமல் இருப்பவனின் பண்பு, மலையின் உயர்வைவிடப் பெருமை யுடையதாகும்.

குறளையும் அதற்குரிய பொருளையும் அவன் உணர்ந்து கூறி முடிப்பதற்குள் சற்றுத் தொலைவில் “ஐயோ” என்ற அலறற்குரல் கேட்டு அடங்கியது!

பரபரப்புடன் வேங்கைமார்பன், வேழமுகன் சென்ற திசை நோக்கிக் குதிரையைத் திருப்பிப் பறந்தான்.

ஒரு பயங்கர படுகுழிக்குள் வேழமுகனும், அவன்மீது குதிரையுமாக, வெளியில் எடுத்துக் காப்பாற்ற முடியாத எல்லையற்ற ஆழத்துக்குள் போய்க்கொண்டிருந்த காட்சி கண்டு வேங்கைமார்பன் ஓர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டுக்கொண்டான்.

நிலையில் திரியாமல் இருந்து மலையென உயர்வடைய வேண்டியவன், நிலை தடுமாறிய காரணத்தால் பூமியின் பாதாளத்திற்கு போய்ச் சேர்ந்துவிட்டான் என எண்ணியவாறு, வேங்கைமார்பன் தனது குதிரையிலேறிப் பயணத்தைத் தொடர்ந்தான்.

அதிகாரம் - 13 - அடக்கமுடைமை; பாடல் - 124

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்