பொருளடக்கம் 276 / 300
ஒட்டார்பின் சென்றொருவன்
அச்சுப் பக்கம் 588–590 · ஸ்கேன் 605–607 · அதிகாரம் 97 (மானம்) — குறள் 967
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
ஓரிடத்தில் அமர்ந்து ‘உபதேசம்’ செய்வதற்கொப்ப, ஏதோ ஓர் அறிவுரைக் கொத்தினை எழுதுவதைப்போல் அல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்கள் அமைத்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறைகளைக் கண்டு, கேட்டு, உணர்ந்து ஓர் உயர்ந்த வாழ்க்கை நெறியையே குறள் வாயிலாக வழங்கிய பெருமை வள்ளுவருக்கு உண்டு. அவ்வாறு அவர் நடத்திய பயணத்தில் ஒருநாள் “பாலூர்” என்னும் பழந்தமிழூர் ஒன்று அவரது காலடிகள் பதியும் பேற்றினைப் பெற்றது. அவ்வூரில் அழகியான் எனும் தமிழ் ஆர்வங் கொண்டோன், வள்ளுவரை அவனில்லத்திற்கு அழைத்துச் சென்றான். விருந்துண்டு செல்லுமாறு வேண்டினான். வள்ளுவரும் அதற்கு இணங்கினார். விருந்துக்கான ஏற்பாடுகளை அழகியானின் துணைவி, அடுக்கலையில் செம்மையாகச் செய்து கொண்டிருந்தாள். கூடத்தில் அமர்ந்து சிந்தனை தேங்கிய முகத்துடன் விளங்கிய வள்ளுவரிடம் அழகியான் உரையிகழ்த்திக் கொண்டிருந்தான். அழகியானின் தமிழ்ப்பற்று, திறம், அனைத்தையும் வியந்து பாராட்டினார் வள்ளுவர்.
தான் கொண்டுள்ள தமிழ் உணர்வையும் தனக்குள்ள ஆற்றலையும் பழித்துக் கூறுவதைத் தொழிலாகக் கொண்டிருந்த ஒருவன், அந்த ஊரில் பெருஞ்
செல்வந்தனாகத் திகழ்கிறான் என்ற செய்தியை அழகியான் கூறினான். பெருஞ்செல்வம் அவனுக்கு வாய்த்த விதம் எவ்வாறு? எப்போது? எனக்கேட்டார் வள்ளுவர். அது பெரிய கதை எனத் தொடங்கி, அழகியான் சுருக்கமாகவே சொல்லி முடித்தான். வளமற்று வறுமை மிஞ்சி வாழ்ந்தவன்தான் அந்தப் புதுச் செல்வந்தன்! திடீரென ஒருநாள் கண்டெடுத்தான் பெரும் புதையல்! அந்தப் புதையலை அவனுக்கே உரிமையாக்கிக் கொண்டான். மாடமாளிகை, கூடகோபுரம் என்ற வகையில் செழிப்பு சிரிக்கிறது இப்போது! இத்தகு வளத்திற்கு அவன் சொந்தக்காரனாவதற்கு முன்பே எனக்கும் அவனுக்கும் பகையுண்டு. இப்போதோ இந்தப் பாலூரில் அவன்தான் கொடிகட்டி வாழ்கிறான். இப்படிச் செய்தி சொல்லி முடித்தான் அழகியான்.
“அளவற்ற வளம் பெருகிவிட்ட காரணத்தாலேயே உன் அறிவுச் செல்வத்தை அவன் வீழ்த்திவிட முடியுமா - என்ன? அஞ்சாதே!”
என்றார் வள்ளுவர். ஆனால் அழகியானோ, வள்ளுவரைப் பார்த்து ஏதோ இரகசியம்போல் கூறலுற்றான்.
“பெருமகனாரே! எதற்காக அந்தச் செல்வனின் பகையை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நானும் ஆழ்ந்து சிந்திக்கலானேன்! என் துணைவியும்கூட அப்படித்தான் கருதினாள்! இதற்கிடையே அந்தச் செல்வனிடமிருந்து எனக்கு ஓர் அழைப்பும் வந்தது. அதனைத் தட்டிக் கழிக்க மனமின்றிச் சென்றேன். ஆனால், முதல் நாள் - இரண்டாம் நாள் - மூன்றாம் நாள், இப்படி மூன்று நாட்கள் காத்திருந்தும் அவனைச் சந்திக்க இயலவில்லை. ‘நாளை வரச்சொல்’ என்ற பதிலே எனக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக ஒரு நாள் அவனைச் சந்திக்கும் வாய்ப்புப் பெற்றேன். ஒரு தட்டு நிறையத் தங்க நாணயங்களை எனக்கு வழங்குமாறு அங்கிருந்த ஒருவனுக்கு ஆணையிட்டான். பெற்றுக் கொண்டேன். என் தமிழ் அறிவாற்றலைப் பயன்படுத்தி அச்செல்வந்தனைக் குறித்து அரியதோர் நூலொன்று நான் எழுத வேண்டுமெனக் கூறியுள்ளான்.”
அழகியானின் பேச்சைப் பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருந்த வள்ளுவர், அவனைப் பார்த்து-
“இதுவரை நீர் எனக்குச் சித்தரித்துக் காட்டியுள்ள மனிதனைப்பற்றி என்னால் ஒன்றும் புரிந்துகொள்ள முடியவில்லையே! முதலில் உமக்குப் பகைவன் என்று கதையைத் தொடங்கினீர்! தமிழுக்கும் பகைவன் என்று குற்றத்துக் காட்டினீர்! இப்போது தங்க நாணயங்களை வாரிக் கொடுத்து நூல் எழுதச் சொல்லியிருக்கிறான் என்கிறீர்! அந்த நூலை எழுதத் தொடங்கி விட்டீரா இல்லையா?”
என்று விழிகளை அகல விரித்தவாறு கேட்டார்.
“வள்ளுவப் பெருந்தகையே! அதற்குத்தான் தங்கள் துணையை நாடுகிறேன். அந்த நூலின் மையக் கருத்தாக எதனைக் கொள்ளலாம் என்று தங்களிடம் தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பகைவனாக இருந்தும் அவன் என்னிடம் காட்டிய பரந்த மனப்பான்மையை அடிப்படையாகக் கொண்டு நூலை எழுதி முடிக்கலாம் அல்லவா?”
அழகியானின் இந்தக் கேள்விக்கு வள்ளுவர் சிரித்துக்கொண்டே பதில் அளித்தார்.
“பகை கொண்டோர் பகைநீங்கி உறவாடுவதை நான் பாராட்டக்கூடியவன்! ஆனால் உம்மிருவரிடையே இருந்த பகை ஒரு தட்டுத் தங்க நாணயத்தால் அல்லவா தீர்க்கப்பட்டிருக்கிறது. செல்வந்தனின் பரந்த மனப்பான்மையை இது காட்டுவது போலத் தோன்றினாலும் - முற்றிலும் உமது இழிதன்மையையே இது புலப்படுத்துகிறது. அழகியான் அவர்களே! பகைவனைச் சேர்ந்து வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்வதைக் காட்டிலும் - அவ்வாறு அந்தப் பகைவனைத் தொழுது தொடாத காரணத்தாலேயே, ஒருவன் அழிந்தான் எனக் கூறப்படுவது பெருமையுடையதாகும் என்று ஒரு குறள் எழுதுவதற்கான உணர்வை உமது வாழ்க்கை எனக்கு ஏற்படுத்தி உதவியுள்ளது. நன்றி, வருகிறேன்.”
இவ்வாறு கூறிக்கொண்டே வள்ளுவர் புறப்பட்டார்! - அழகியான், சோர்ந்த முகத்துடன் “விருந்துண்டு செல்க!” என வேண்டி நின்றான். “விருப்பமில்லை! மன்னித்திடுக:” என்று பதிலுரைத்துவிட்டு, வள்ளுவர் வேகமாக வெளியேறினார். இந்தச் சிறிய கற்பனைக் கதைக்கான சிறப்புமிகு குறள் இதோ.
“ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே கெட்டான் எனப்படுதல் நன்று”
அதிகாரம் - 97 - மானம்; பாடல் - 967
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்