பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 275 / 300

ஊரவர் கொளவை

அச்சுப் பக்கம் 586587 · ஸ்கேன் 603604 · அதிகாரம் 115 (அலர் அறிவுறுத்தல்) — குறள் 1147

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

“பொன்மலர் அத்தான் நீங்கள்!”

“மணக்கவில்லையே என்கிறாயா?”

“ஆமாம்! இன்னும்தான் என்னை மணக்கத் தயங்குகிறீர்களே!”

“குறும்புக்காரி! இந்தப் பொன்மலர் நீ தொட்டவுடன் மணக்கத் தொடங்கிவிடுகிறதே! பொன்மலர் மணமுடைத்து என்ற புகழுரையே நம்மைப் பார்த்துத்தான் தோன்றியிருக்கும்!”

“அத்தான்! மணம் தென்றலில் தவழும்! அதைப்போல நமது மணமும் காற்றிலே கலந்துவிடக்கூடியதுதானா?”

“பொன்மலரில் மணம் கலந்தால், அதனைப் புயல்கூட அசைக்க முடியாது! அவ்வளவு பத்திரமான இடத்தில் பாதுகாக்கப்படும்!”

“சொற்சிலம்பம் போதும் - சொல்லுங்கள் இப்போதே! எப்போது திருமணம் நமக்கு?”

“அலர் தூற்றுகின்றார் ஊரார்! உன் அன்னையோ கடுஞ்சொல் கூறித் தடுக்கின்றாள்! இத்தனையும் நீதான் என்னிடம் சொல்லுகிறாய்! இப்போது மணவிழா

என்றைக்கென்று என் மடிமீதே படுத்து, விழிக்கணை பூட்டிப் புருவவில்லை வளைக்கின்றாய்!”

“ஆமாம்! நமது காதல் குறித்துப் பலரும் அறிய ஊரார் இழித்துரைக்கின்றார்! என் தாயும் கடுமொழி உதிர்த்துத் தடுத்து நிற்கிறாள்! ஆனால் ஒன்று அத்தான்; ஊரார் பேச்சு எருவாகவும், அன்னையின் எதிர்ப்பு நீராகவும் அமைந்து நமது காதல் பயிர் செழித்து வளருவதை நீங்கள் அறியமாட்டீர்களா?”

“அறிவேன் நன்றாக!”

“அறிந்தும் ஏன் தயக்கம்?”

அவன் மடிவிட்டெழுந்து ஊடியவாறு விலகி நின்றாள்.

“விலகாதே! விலகினால் இந்தப் பொன்மலர் மணமிழக்கும்” எனக் கூறிக் கொண்டே தொடர்ந்து நெருங்கி இடையைத் தழுவி அந்தக் கொடியை அணைத்தான்.

“உம்! மயக்கியது போதும்! மணம் எப்போது?”

எனக் கேட்டபடி அவளும் அவன்மீது ஒட்டிக்கொண்டாள்.

“ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்”

அதிகாரம் - 115 - அலர் அறிவுறுத்தல்; பாடல் - 1147

கெளவை = பழிதூற்றுதல்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்