பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 274 / 300

செப்பின் புணர்ச்சி போல்

அச்சுப் பக்கம் 584585 · ஸ்கேன் 601602 · அதிகாரம் 89 (உட்பகை) — குறள் 887

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

ஒரு வீட்டு அடுக்கலையில் சமையலுக்கும் உணவு பரிமாறுவதற்கும் ஏற்ற பாத்திரங்கள் இருந்தன! இல்லத்தரசி இரங்கை என்பவள் ஒருநாள் வீட்டு வேலைகளை ஓய்வின்றிக் கவனித்துவிட்டுக் களைப்பு மிகுதியால் அடுக்கலையிலேயே பாயும் தலையணையும்கூட இல்லாமல் படுத்துறங்கி விட்டாள். உறங்குவதற்கு முன்பு அவளுக்கு அவளது குடும்பத்தைப் பற்றிய ஒரு கவலை!

இரங்கையின் கணவன் எழிற்கோ, இனிய இதயமுடையவன். இரங்கும் இயல்புடையவன். எவரையும் மனம் நோகப் பேசுவதுகூட அவனுக்குப் பிடிக்காது. அவனுக்கு ஒரு தம்பி - பெயர் கோவேந்தகோ! நல்ல ஆற்றலாளன். இருப்பினும் அண்ணனுக்கும் அவனுக்கும் ஒத்துவராத ஒரு சூழ்நிலை! இயற்கையிலேயே சினத்தை அடக்கிக்கொள்ளத் தெரியாத கோவேந்தகோ, அண்ணன் எழிற்கோவிடம் எப்படியோ பகைமை பாராட்டுகிறவனாக மாறிவிட்டான். இந்த நிலைமை, இரங்கையை வாட்டிக்கொண்டேயிருந்தது. ஒற்றுமையாக இருந்த குடும்பத்திற்குள் இப்படியொரு உட்பகையா என்ற கவலையுடன் அடுக்கலையில் படுத்த அவள், சிந்தித்துக் கொண்டேயிருந்தாள்.

அன்று காலையில் கோவேந்தகோ அவளிடம் பேசிக்கொண்டிருந்தபோது, “அண்ணீ! கவலை கொள்ளாதீர்கள்! எனக்கும் அண்ணனுக்கும் எந்தப் பகையும் இல்லை! இதோ; நீங்கள் பயன்படுத்துகிறீர்களே; இந்தச் செப்புதான் அண்ணன்! இந்தச் செப்பின் மூடியாக இருப்பதுதான் நான்!” என்று உவமை கூறி விளக்கமளித்தான்.

அந்த விளக்கம், அவளுக்கு மன நிறைவைத் தரவில்லை! அந்த நினைவு அலைகளினூடே அவள் தூங்கிவிட்டாள்!

கனவு படர்ந்தது! அடுக்கலையில் இருந்த செப்பும் மூடியும் அவளெதிரே நின்று ஒன்றோடொன்று பேசுவதுபோல் தோன்றியது!

செப்பு: எனது உடலில் ஒரு பகுதியான மூடியே! நாம் இருவரும் இணைந்திருப்பதாகத்தானே எல்லோரும் கருதுகிறார்கள்?

மூடி: ஆம்! அதில் என்ன சந்தேகம்? நான் என்றைக்கும் உன்னைவிட்டு நீங்காமல்தானே இருக்கிறேன்.

செப்பு: நீங்காமல் இருக்கிறாய் என்பதுதான் எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்! ஆனால் என்னுள் இருக்கும் பொருளை பிறர் எடுக்க முனையும் போது; நீ அவர்களுக்குத் துணையாக என்னைவிட்டு அகன்று போய்விடுகிறாய்! உன் செயலைச் சாதகமாக்கிக்கொண்டு அவர்கள் என்னுள் இருப்பவற்றை எடுத்துக்கொள்கிறார்கள்!

மூடி: அதற்கு நான் என்ன செய்வது? எந்நேரமும் நான் உன்னுடன்தான் இணைந்திருக்கிறேன்! இணைவதற்கு உவமை கூறுகிறவர்கள்கூட “செப்பும் அதன் மூடியும்போல” என்றுதான் சிறப்பிக்கிறார்கள்!

செப்பு: உண்மைதான்! வெளித்தோற்றம் அப்படி! ஆனால்; நம்மிடையே நல்ல பிணைப்பு இல்லாததால் நீ என்னைவிட்டு அகலுமாறு செய்துவிட்டு, என்னுள் இருப்பவற்றைப் பிறர் எடுத்துக்கொள்கின்றனர்! மூடியே! இச்செயல் எப்படியிருக்கிறதென்றால் - இந்த வீட்டு அண்ணன் தம்பி ஒற்றுமையைப்போல உறுதியற்றதாக இருக்கிறது! தம்பி அண்ணனிடம் கொண்டுள்ள கருத்து மாறுபாடுகளால், அவனை அண்ணனிடமிருந்து தனிமைப்படுத்தி எதிரிகள் காரியத்தைச் சாதித்துக்கொள்ள முனைகிறார்கள் அல்லவா; அதைப்போல இருக்கிறது!

இரங்கை திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கனவு கலைந்து போயிற்று! காலையில் கோவேந்தகோ அவளிடம் சொன்ன “செப்பும் மூடியும்” என்ற உவமை அவள் நினைவுக்கு வந்தது! மீண்டும் எழுந்த அந்த நினைவுடன் அடுக்கலையை விட்டுப் படுக்கையறைக்கு வந்தாள். அங்கே அவள் கணவன் எழிற்கோ திருக்குறள் படித்துக்கொண்டிருந்தான்.

“இன்றைக்கு எந்தக் குறளை ஆய்வு செய்கிறீர்கள்?” எனக் கேட்டாள்!

“உட்பகை குறித்து வள்ளுவர் எத்துணை அழகான உவமையைக் கூறியிருக்கிறார், தெரியுமா?” என வியந்தான் அவன்!

“எங்கே, எனக்கும் சொல்லுங்களேன்.”

“சொல்லுகிறேன்! செப்பு எனப்படும் சிமிழில் பொருந்தியிருப்பது போலப் புறத்தே தோன்றினாலும் அந்தச் சிமிழின் மூடி, அந்தச் சிமிழை விட்டு அகன்று சிமிழில் உள்ளவற்றைப் பிறர் பயன்படுத்திக்கொள்ள வழிவகுக்கும். அதைப் போலத்தான் புறத்தே பொருந்தியிருப்பதுபோலத் தெரிந்தாலும், உட்பகையென்பது அகத்தே பொருந்தியிருக்காது.”

பொருளை முதலில் கூறிவிட்டுக் குறளைப் பிறகு படித்துக் காட்டினான் அவன்!

“செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே உட்பகை உற்ற குடி”

அதிகாரம் - 89 - உட்பகை; பாடல் - 887

புணர்ச்சி = பொருந்துதல், தொடர்பு, இணைப்பு செப்பு = சிமிழ்

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்