பொருளடக்கம் 273 / 300
எள்ளாமை வேண்டுவான்
அச்சுப் பக்கம் 582–583 · ஸ்கேன் 599–600 · அதிகாரம் 29 (கள்ளாமை) — குறள் 281
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
பேரனைப் பார்த்துப் பாட்டனார் கேட்டார், “உன்வாழ்க்கையின் குறிக் கோளாக எதைக் கொண்டிருக்கிறாய்?” என்று!
“தாத்தா! எனக்கு வயது பதினாறு ஆகிறது! இதுவரையில் யாராலும் இழப்படாமல் நல்லபெயர் எடுத்துவிட்டேன்! இன்னும் நான் வாழவேண்டிய பெரும்பகுதி நாட்களிலும் பிறரால் இழப்படாமல் வாழவே விரும்புகிறேன். அதுவே என் குறிக்கோள்! அதற்கு ஏற்ற நல்வழியைத் தாங்கள் எனக்குக் கூறவேண்டும்.”
“குழந்தாய்! இங்கிருந்து இருபது கல் தொலைவில் உள்ள அருவூரில் அன்பின் அடிகளார் என்ற பெரியவர் ஒருவர் வாழ்கிறார். வாழ்க்கையின் கடமைகளை உணர்த்தி அவர் ஒரு பெரும் நூல் எழுதிக்கொண்டிருக்கிறார். திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு அவர் எழுதும் அந்த நூலுக்கு “நல்வாழ்க்கை” என்றே பெயர்! அவரைச் சூழ்ந்துள்ள நூற்றுக்கணக்கான மாணவர்க்கு அடிகளார், அவரது நூலில் இருந்தே கருத்துரைகளை எடுத்துக்கூறி, கனித்தமிழில் விளக்கங்கள் அளிக்கிறாராம்! நீயும் விரும்பினால், அங்கு சென்று பயின்று வருதல் சிறப்புடையதாக அமையும்.”
பாட்டனின் சொற்கேட்டுப் பேரன், அருவூரை நோக்கி விரைந்தான். அடிகளார், “நல்வாழ்க்கை” எனும் சுவடியை எழுதி முடித்துவிட்டார் என்றும் புதிய மாணவர்களைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறார் என்றும் ஊரார் கூறிடக் கேட்டு, அடிகளார் மனை நோக்கிச் சென்றான்.
அடிகளார் மனையில் பயிற்சி முடித்த மாணவர்கள், பல்வேறு பொதுப் பணிகளுக்குச் சென்றிருந்தனர். அடிகளார் மட்டுமே தனித்திருந்தார். அவர் எழுதிய “நல்வாழ்க்கை” எனும் சுவடியைத் தலையணைபோல் தலைக்கு வைத்துக் கொண்டு சிந்தனைத் துயில் கொண்டிருந்தார்.
இளைஞன், “வணக்கம்” என்றுரைத்த ஒலி கேட்டுக் கண்விழித்து, “யார்?....என்ன வேண்டும்?” என்ற விளக்கம் கேட்டார்.
அவன் வந்துள்ள விபரமறிந்து மகிழ்ச்சியடைந்தார். ஆயினும் மாணவர் குழுவில் இணைத்துக்கொள்வதற்கு முன்பு வழக்கமாக ஏதாவது ஒரு சோதனை செய்வது உண்டு! அதை அவனிடமும் நடத்திப் பார்க்க விரும்பினார்!
“தம்பீ! இதோ என் தலைக்கு வைத்துப் படுத்திருக்கிறேனே; இதுதான் எனது அரிய உழைப்பின் விளைவாக உருவாகியுள்ள ‘நல்வாழ்க்கை’ எனும் சுவடி! இதனை ஒருவன் படித்து முடித்துவிட்டால், அவன் வாழ்க்கை முழுதும் புகழ்மணம் கமழும்! யாரும் அவனை இகழ்ந்திடா வண்ணம் வாழ்ந்திடும் வகையைச் சொல்லும் இந்தச் சுவடி! இதிலிருந்தே நான் நாள்தோறும் மாணவர்களுக்குக் கருத்துக்களை வழங்குகிறேன்! நீயும் காத்திரு; நாளை முதல் நீயும் அவற்றைக் கேட்டு தெளியலாம்.”
எனக் கூறிவிட்டுச் சுவடிக்கட்டில் தலைவைத்துப் படுத்துக்கொண்டார். இளைஞன் சிந்திக்கத் தொடங்கினான். அடிகளாருக்கு நல்ல உறக்கம்.
“ஏ, அப்பா! எத்தனை நாட்கள் இங்கு தங்கிப் பாடம் கற்பது! இந்தச் சுவடியே நம் கையில் கிடைத்துவிட்டால்? இதைப் படித்து நாமே நமது வாழ்க்கையைச் சீராக அமைத்துக்கொள்ளலாமே!”
சிந்தனைக்கு, சிறகுகளும் முளைத்தன! அடிகளாரை நோக்கினான்! அவர் ஆழ்ந்த உறக்கத்தில் புரண்டு படுத்தார்! அவர் தலை, சுவடிக் கட்டிலிருந்து கீழே இறங்கியிருந்தது! இதுதான் சமயம் - இந்தச் சுவடியை எடுத்துக்கொண்டு ஓடிவிட்டால்! யாருடைய துணையுமின்றி, பிறர் இகழாத வாழ்க்கையை வாழக் கற்றுக் கொள்ளலாமல்லவா?
மெல்லச் சென்றான்! சுவடிக் கட்டைத் தூக்கிக்கொண்டான்! அங்கிருந்து பூனைபோல் வெளியேற முனைந்தபோது,
கலகலவெனச் சிரிப்பு! அடிகளாரின் சிரிப்புதான்! அவன் கைகளைப் பிடித்துக் கொண்டே எழுந்தார்!
“தம்பீ, உனக்குத் தேவையானதைத்தான் எடுத்துக் கொண்டாய்! நல்ல காரியத்திற்காகத்தான் இதைப் பயன் படுத்த எடுத்துக்கொண்டாய்! ஆனால் ஒன்று - சுவடியின் முதல் கருத்தாக நான் என்ன எழுதியிருக்கிறேன் தெரியுமா? இதோ; படித்துப்பார்! திருக்குறள் கருத்தொன்றைத் தீட்டியிருக்கிறேன்!”
அடிகளாரே அதைப் படித்துக் காட்டினார்.
“மற்றவர்களால் இகழப்படாமல் வாழ்ந்திட விரும்புகிறவன், எத்தன்மையான பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் களவாட எண்ணாதபடி தனது நெஞ்சத்தைக் காத்துக்கொள்ள வேண்டும்.”
இளைஞன், தலைகுனிந்து விழிநீர் வழிய நின்றான்! எத்தன்மையான பொருளாக இருந்தாலும் அதனைப் பிறரை வஞ்சித்துப் பெற முனைதல் இகழ்ச்சிக்கு உரியது என்பதை உணர்ந்து, அடிகளார் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். பின்னர் அவரது மாணவனாக ஏற்றுக்கொள்ளப் பட்டான்.
“எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும் கள்ளாமை காக்கதன் நெஞ்சு”
அதிகாரம் - 29 - கள்ளாமை; பாடல் - 281
எள்ளாமை = இகழப்படாமை; கள்ளாமை = களவு செய்யாமை
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்