பொருளடக்கம் 272 / 300
இடுக்கட் படினும்
அச்சுப் பக்கம் 580–581 · ஸ்கேன் 597–598 · அதிகாரம் 66 (வினைத்தூய்மை) — குறள் 654
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
சிவகங்கைச் சீமையெனப் புகழப்படும் வீரம் மணந்திடும் மண்ணில் மருது பாண்டியர்களின் நினைவுச் சின்னங்களாக அவர்களது சிலைகள் மாத்திரமன்றி காளையார் கோயிலும் விளங்குகின்ற காட்சியை இன்றைக்கும் காணலாம். பெரிய மருது, சின்ன மருது என்ற அந்த மாவீரர்களின் சிலைகளுக்கிடையே கோயிலின் முகப்பின் வலதுபுறத்தில் ஒருவன் கையில் துப்பாக்கியுடன் நிற்பது போன்ற சிலையும் உள்ளது. அந்தச் சிலையுடன் ஒரு கரடியும் சிலையாக நிற்கிறது. மருது பாண்டியர்களில் இளையவனான சின்ன மருதுவுக்கு உற்ற தோழனாக விளங்கிய கருத்தான் என்பவனின் சிலையே அது! வேட்டையாடுவதில் மிகத் திறமை படைத்த கருத்தானை, விலங்குகளை அவன் தனது வலைக்குள் வீழ்த்துகிற காரணத்தால் ‘வலையன்’ என்றும் அழைத்தார்கள் போலும். ஒரு சமயம் மருதிருவர், காட்டுக்கு வேட்டையாடச் சென்றபோது அவர்களைக் கரடி ஒன்றின் தாக்குதலில் இருந்து காப்பாற்றி அந்தக் கரடியையும் சுட்டு வீழ்த்தினான் கருத்தான்! அவனது வீரத்தையும் துணிவையும் திறனையும் மெச்சிய மருது பாண்டியர், தங்களது சிலைகள் அமைக்கப்பட்டபோது கருத்தானுக்கும் ஒரு சிலை அமைத்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
ஆனால், ஒரு கட்டத்தில் தக்க துணைவனாகவும் உற்ற நண்பனாகவும் மருது சகோதரர்களிடம் பழகிய அந்தக் கருத்தான், தனக்குப் பெருந்துன்பம் நேரப் போகி
றது என்று உணர்ந்தோ - அல்லது நேரிடக்கூடும் என்று ஐயமுற்றோ தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் தன்னல நோக்குடன் இழிசெயல் ஒன்றினைப் புரிந்திட்டான்.
வாணிபத்திற்கென வந்து இந்தியத்துணைக் கண்டத்தின் பல்வேறு நாடுகளை வளைத்துக்கொண்ட ஆங்கிலேயர், தென்னகத்தையும் - குறிப்பாகத் தமிழ் நாட்டையும் தங்கள் ஆதிக்கத்திற்குக் கீழே கொண்டுவர அரும்பாடுபட்டனர். மரணத்தை, மங்கையுடன் கொஞ்சும் மஞ்சமெனக் கருதிய உறுதிவாய்ந்த தமிழ் வீரர்களை, அவர்கள் எதிர்த்து அடிமைப்படுத்துவது அவ்வளவு எளிதாக இருந்திடவில்லை. அந்த வீரத்தலைவர்களின் வரிசையிலேதான் சிவகங்கை மன்னர்களான மருதுபாண்டியர்கள் இருந்தார்கள்.
அவர்களைத் தோற்கடிக்க ஆங்கிலேயர் அங்குலம் அங்குலமாகத்தான் முன்னேற வேண்டியிருந்தது. மருதிருவரின் படைகளுக்கு முன்னால் பல இடங்களில் ஆங்கிலேயர் படை சிதறி ஓடிற்று! எனினும் புதியமுறைப் போர்த் தளவாடங்களையும் தமிழினத்திலேயே துரோகம் புரியத் தயாராக இருந்த பாளையக்காரர்களையும் குறுநில மன்னர்களையும் துணையாய்க் கொண்டு ஆங்கிலேயர் வெற்றியின் உச்சக்கட்டத்தை எட்டிக் கொண்டிருந்தனர். அதன் விளைவாகப் பதுங்கிப் பாய்வதற்கு பெரிய மருது, காட்டுக்குள் தனது படைகளுடன் செல்ல நேர்ந்தது. இனி ஆங்கிலேயரை வெல்லமுடியாது எனக் கண்டுகொண்ட கருத்தான் எனும் அந்த உயிர்த்தோழன்; தன்னைக்காத்துக் கொண்டால் போதும் என்ற கருத்து உள்ளத்துடன், சின்ன மருதுவை ஆங்கிலேயருக்குக் காட்டிக்கொடுத்து விட்டான்.
பிடிபட்ட சின்ன மருதுவையும், தோல்வியுற்ற பெரிய மருதுவையும் ஆங்கிலேயர் தூக்கிலே தொங்கவிட்டனர். காட்டிக்கொடுத்த அந்தக் கருத்தானாவது தப்பினானா என்றால்; அதுவுமில்லை! அவனையும் ஆங்கிலேய அதிகாரிகள் தூக்கில் மாட்டிக்கொன்று போட்டனர்.
என் செய்வது; அந்தக் கருத்தானின் சிலையும் இன்னமும் காளையார் கோயிலில் அவன் செய்த துரோகத்தின் அடையாளமாக நின்றுகொண்டு தானிருக்கிறது! தோழமையின் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய சிலை, துரோகத்தின் சின்னமாகத் திகழ்கிறது!
இதைத்தான் அன்றைக்கே அழகாகச் சுட்டிக்காட்டி இழித்துரைக்கிறது குறள்!
“மனங்குலையாத அறிவுத் தெளிவுடைய உறுதி படைத்தவர்கள்; துன்பத்திலிருந்து மீள முடியாத நெருக்கடி நிலையில் சிக்கிக்கொண்ட நேரத்திலும் இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.”
இந்தப் பொருளுக்குரிய குறள்தான் இது!
“இடுக்கட் படினும் இளிவந்த செய்யார் நடுக்கற்ற காட்சி யவர்”
அதிகாரம் - 66 - வினைத்தூய்மை; பாடல் - 654
இளிவந்த = இழிவான; காட்சி = அறிவு
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்