பொருளடக்கம் 271 / 300
செய்யக்க அல்ல
அச்சுப் பக்கம் 578–579 · ஸ்கேன் 595–596 · அதிகாரம் 47 (தெரிந்து செயல்வகை) — குறள் 466
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
அழகர்குடி ஒரு சிற்றூர்! அந்தச் சிற்றூருக்கே ஒரு சிங்கம்போல செவத்தான் என்பவன் இருந்தான். காட்டில் எல்லா மிருகங்களும் சிங்கத்தைத்தானே அரசனாக ஏற்றுக்கொண்டு அஞ்சி நடுங்கிடும் என்பார்கள். அதைப்போல அழகர்குடி மக்கள் செவத்தானுக்குப் பயந்துகொண்டு பணிவிடை புரிந்து வாழ்ந்தனர். செவத்தான் செய்யாத கொடுமைகள் இல்லை. அந்த ஊர்த் தோட்டத்தில் அழகிய மலர் ஒன்று பூத்துச் சிரித்தால், அதை முகர்ந்து பார்த்து அதன் இதழ்களைக் கடித்துத் துப்பினால்தான் அவனுக்குத் தூக்கம் வரும். இப்படி எத்தனையோ பருவமலர்கள் அவன் படுக்கையில் காம்பொடிந்து நசுங்கிப்போய்விட்டன. உழைத்திடும் கூட்டம் சேர்த்திடும் பொருள் அனைத்துக்கும் அவனே உரிமை கொண்டாடுவான்.
அவன் நுழைந்தால், யார் வீட்டுக் கதவானாலும் தானே திறந்துகொள்ள வேண்டும்! அவன் எதிரில் எவராயினும் காலணி அணிந்து நடப்பதுகூட அவனை அவமதிப்பதாகக் கருதப்பட்டு, அக்குற்றம் புரிந்தோருக்கு ஆயிரம் சவுக்கடிகள் தண்டனையாகத் தரப்படும்.
நீர் வீழ்ச்சியில் குளித்திடும் பெண்கள் - தடாகத்தில் நீராடும் பெண்கள் - அவன் கண்களில் பட்டுவிட்டால் உடனடியாக நிர்வாணமாகக் காட்சி தர வேண்டும். அவர் தம் ஆடை அணிகலன்களை அவன் அபகரித்துக்கொண்டு மரக்கிளையில் அமர்ந்து “கலியுகக் கண்ணன்” என்று தன்னை வர்ணித்துக்கொள்வான்.
இவன் சேட்டைகளைத் தடுத்து அழகர்குடியில் தன்மான உணர்வு தலைதூக்கச் செய்ய, யாருமே முன்வரவில்லை!
அழகர்குடிக்குப் பல கல் தொலைவில் மலைப்பாறையொன்றில் குகைகுடைந்து வாழ்ந்துகொண்டிருந்த இளந் துறவியொருவர் - குறள் நெறி நெஞ்சினர் - இச்செய்தி கேள்வியுற்றுப் பெரிதும் வருந்தினார். அவரைச் சந்தித்த அழகர்குடி மக்கள் சிலரிடம், “செய்தக்க செய்யாமை யானும் கெடும்” என்று கடிந்துகொண்டு கூறினார்.
இளந்துறவி, என்ன கூறுகிறார் என்று புரியவில்லை அழகர் குடியினருக்கு!
“செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யாமையானும் கெட்டுவிடும்! அழகர்குடி மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்தக் கொடியவன் செவத்தானை எதிர்த்துத் துரத்தியிருக்கலாம் அல்லவா; அதைச் செய்யாததால்தான் இவ்வளவு கேடுகளும்” என்று இளந்துறவி விளக்கினார்.
“ஆமாம்! அப்படியே செய்கிறோம்” என்று அழகர்குடி மக்கள் ஆர்த்தெழுந்தனர். செவத்தான் வீட்டை நோக்கித் திரண்டு வந்தனர். அப்போது செவத்தானுக்கு இருதய நோய் ஏற்பட்டு உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்தான். உயிர் போகும் தருவாயில் அவன் ஊர்மக்களிடம் பேசினான்.
“எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்! நான் உங்களுக்குப் பல தீமைகள் செய்துவிட்டேன். நான் இறந்தபிறகு என் பிணத்தைக்கூட இந்த ஊர் இடுகாட்டில் புதைக்காதீர்கள்! இந்தப் பாவியின் பிணத்தை பக்கத்து ஊர் இடுகாட்டில் புதைத்து விடுங்கள்”
செவத்தானின் இறுதி வேண்டுகோளை அழகர்குடியினர் ஏற்றுக் கொண்டனர். அவன் கண் மூடியதும் அவன் பிணத்தைத் தூக்கிச்சென்று பக்கத்து ஊர் இடுகாட்டில் புதைத்தனர். செய்தியறிந்த பக்கத்து ஊரார் ஆத்திரப்பட்டு இடுகாட்டுக்குத் திரண்டு வந்தனர்.
“வெளியூர்ப் பிணத்தை எம் ஊரில் புதைப்பதா?” என வெகுண்டனர்! விளைவு? இருதரப்பாரும் மோதிக்கொண்டனர். இடுகாட்டில் இரு ஊராரப் பிணங்களும் இருபது வீழ்ந்தன! நூற்றுக்கணக்கானோர் படுகாயமுற்றனர்.
இச்செய்தி கேள்வியுற்ற இளந்துறவி, அங்கு ஓடிவந்து அமைதி உருவாக்கினார்!
“செய்ய வேண்டிய காரியத்தை முதலில் செய்யாமல் கெட்டீர்கள்! இப்போது செவத்தான் பேச்சைக் கேட்டு செய்யக்கூடாத காரியத்தைச் செய்தும் கெட்டீர்கள்!”
எனச் சொல்லி வருந்தினார். அழகர்குடி மக்கள் தலைகுனிந்து மெய்சோர்ந்து நின்றனர்.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும்”
அதிகாரம் - 47 - தெரிந்து செயல்வகை; பாடல் - 466
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்