பொருளடக்கம் 270 / 300
பழியஞ்சிப் பாத்தூண்
அச்சுப் பக்கம் 576–577 · ஸ்கேன் 593–594 · அதிகாரம் 5 (இல்வாழ்வியல்) — குறள் 44
கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.
நாடாளும் மன்னன் அவன்! நாள்தோறும் அவன் புகழ் பாடத் தமிழில் நாவல்லார் வருதல் வேண்டும்! இத்தரையில் ஊர்ந்து செல்லும் எறும்புகள் போல், எத்தனையோ புலவர்கள் அணிவகுத்தார் அவன் அரண்மனைக்கு! பாடிக் குவித்தார் அவனைப்பற்றி! கைகுவித்தார் அவன் பாதம்பற்றி! கொடுப்பதில் குமணன் என்றார்! கணைதொடுப்பதில் காண்டவனையும் வெல்வான் என்றார்! வீரத்தில் சேரன் என்றும் வெற்றிகளை விளைப்பதிலே சோழன் என்றும், பற்றுக் குறையாத் தமிழ்ச் சங்கப் பாண்டி மன்னன் மறுபிறப்பே அவன்தானென்றும் கவியாரம் தொடுத்திட்டார்! அவனும் கையில் கிடைத்ததைக் கொடுத்திட்டான்!
வரிசையாய் நிறைந்து நின்று வாழ்த்துப்பா, வண்ணப்பா வரைவதற்கு விரைகின்ற கவிஞர் கூட்டத்தைக் கண்ட மன்னன்; ஒரு நாள் அமைச்சரவையைக் கூட்டிக் கேட்டான், ஆச்சரியமாய் ஒரு கேள்வி!
“என் ஆளுகைக்கு உட்பட்ட நிலத்தில் உள்ள அருங்கவிஞர் - பெரும் புலவர் - அனைவருமே என்னைநோக்கிப் புகழ் மணக்கும் மலர்களாலே பூஜித்துப் பயனைப் பெறும்போது - ஒரு தனி மனிதன்; தன்மானச்சிங்கமெனும் போர்வைத்த கவிமனிதன் இன்னும் ஏன் இங்கு வர மறுக்கின்றான்? இனிய நற்கவிதைகளை என்மீது இயற்றுதற்குத் தயங்குகின்றான்?”
வினாக்கள் இரண்டுக்கும் விடையளிக்க ஓர் அமைச்சர் முன்வந்தார்!
“மன்னவனே! மகுடத்தின் பெருமை சொல்லி அழைத்துப் பார்த்தோம்; மண்டியிட்டுக் கெஞ்சியும் அழைத்துப் பார்த்தோம்; இரண்டு முறைகளுமே பலிக்கவில்லை அவனிடத்தில்! வாள்கொண்டு தலைகொய்திடுவீர் என்றாலும் வரமாட்டான் இந்தத் தமிழ்க் கவிஞன்; காரணம் தன்மானக் கவிஞன்!’ என்று கூறிவிட்டான்.”
அது கேட்ட மன்னவனும் அடலேறாய்க் கொதித்தெழுந்து “அற்ப மனிதன் அவன்! ஓங்கி வளர்ந்த உப்பரிகை அழைப்பையொரு ஓலைக்குடில் இல்லறத்தான் உதாசீனப்படுத்துவதா? உடன் ஆணை பிறப்பித்திடுக! அந்த வீணனை விலங்கிட்டு இழுத்து வருக!” என்றான்.
அமைச்சரவை ஆணைப்படியே, தன்மானச் சிங்கத்தைக் கோவேந்தன் கொலுமுகப்பில் விலங்கிட்டு நிறுத்திவைத்தனர்!
“எனடா - புலவரே! இந்நாட்டை ஆளும் வேந்தன் நான்! நீயோ என் பிடிக்குள் இருக்கின்ற எத்தனையோ இல்லறத்துக் குடிகளில் ஒரு மனிதன்! நின் இல்வாழ்வு நல்வாழ்வாய்த் திகழ்வதற்கு நாட்டமின்றி எதற்காக நாக்குத் தடிப்பேறி அலைகின்றாய்? எத்தனையோ பேர் எனைப்பாடி நத்திக்கிடக்கும் போது, நீ மட்டும் என் காலைத் தொத்திக் கிடக்க எதற்காகத் தயங்குகின்றாய்? விடையளித்திடுக! இல்லையேல் தலை நொறுக்கும் தண்டனைக்கு, நீ ஆளாவாய்!”
மமதையால் மன்னன் மிரட்டிய போதும் தன்மானச் சிங்கம் தலை தாழாமல் சொன்னான்.
“உன் கரம் வழங்குகின்ற பரிசுகள்; கனகமணிக்குவியல்களாய் என் கால்களை முத்தமிடினும் - அந்தக் கரைபட்ட பொருளை நான் தொடமாட்டேன். பழிக்கு அஞ்சாமல் நீ சேர்த்த பொருட்கணக்குப் பலகோடி என நான் அறிவேன்! ‘பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப்பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கை நெறி குறையாத சிறப்பு உண்டு’ என்று வள்ளுவர் கூறியதை மறவாத இல்லறத்தான் நான்! நீ இந்நிலத்தை ஆண்டாலும் - உன் முன்னே இறங்காது என் மானம்! பாடமாட்டேன்; உன்னைப் பாடமாட்டேன், பழிக்கஞ்சாமல் பொருள் சேர்க்கும் உன்னைப் பாடமாட்டேன்”
காவலன் வெகுண்டான்! கடும்புலியின் உறுமலுடன் “கழுவிலேற்றுக இந்தக் கவிஞனை!” என்றான்.
“கரைபடிந்த உன் கரங்களாலே பொருள் பெறுவதைக் காட்டிலும் கழுமரத்தின் கூர்முனையே இன்பம்.”
எனச் சொல்லித் தண்டனைக்கு அஞ்சாமல் அங்கிருந்து நடந்திட்டான்! அவைக்களம் அசைவற்று அதிசயத்தால் திறந்த விழி மூடாமல் அப்படியே இருந்தது!
“பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்”
அதிகாரம் - 5 - இல்வாழ்வியல்; பாடல் - 44
பாத்தூண் = பகுத்து உண்ணுதல்
கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்