பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 269 / 300

உப்பாடு இலாதவர்

அச்சுப் பக்கம் 574575 · ஸ்கேன் 591592 · அதிகாரம் 89 (உட்பகை) — குறள் 890

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

பளபளப்பான உடலைப் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்தான். தன்னை வளைத்துத் தழுவி நெளிந்திடும்போது மேனி முழுதும் புல்லரிக்கப் புளகாங்கித முற்றான். குழைந்து குழைந்து ஆடிடும்போது குதூகலத்துடன் குதித்தான். “பாலருந்தடி என் கண்ணே” என்று பால் கிண்ணத்தை நீட்டுவான். “என் தங்கமல்ல; உனக்காக ஒரு தாலாட்டே இயற்றியிருக்கிறேன் - அதைக் கேட்டுக் கொண்டே என் மடியில் உறங்கிடு” என்று தலைமுதல் வால்வரையில் தடவிக் கொடுப்பான்.

அவ்வளவு அன்பாக அந்தப் பாம்பை வளர்த்தான் அவன்! அதுவும் அவனோடு அந்தக் குடிலிலேயே வசித்தது. குடிலோரமுள்ள குட்டையில் இருந்து தவளைகள் கரைக்குத் தாவி, அந்தப் பாம்பின் வயிற்றுக்குள் போய்விடும். சில நேரங்களில் எலி வேட்டையும் நடத்தும் அந்தப் பாம்பு! ஓய்வு கொள்வது அந்தக் குடில்தான்! உறங்குவது அவன் படுக்கையிலேதான், உடலைச் சுருட்டிக் கொண்டு!

“மான் வளர்ப்பார் - மாடப்புறா வளர்ப்பார் - கிள்ளை வளர்ப்பார் - கிளிப் பிள்ளை வளர்ப்பார் - நாய் வளர்ப்பார் - பூனை வளர்ப்பார் - ஆனால், யாரும் நான் வளர்ப்பது போலப் பாம்பு வளர்த்திட மாட்டார்! அப்படியே வளர்த்தாலும் அதற்கெனப் பெட்டி

செய்து, நச்சுப்பல்லை அகற்றிவிட்டு, நச்சுப் பையையும் நீக்கிவிட்டுத்தான் வளர்ப்பார்கள் - அந்தப் பெட்டிக்குள் போட்டு மூடி! அதுவும் பாம்பை வைத்துத் தொழில் நடத்துவதற்காக! ஆனால், நானோ பாம்புடன் நட்புக் கொண்டிருக்கிறேன். பாசத்துடன் பழகுகிறேன். ஒன்றாகப் படுத்துறங்குகிறேன்.”

இப்படிப் பெருமை பேசுவது அவனுக்கு வாடிக்கை! வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டுக் குடிலுக்குத் திரும்பியவன், பாம்புத் தோழனுடன் கொஞ்சினான்; குலவினான். பின்னர், அதை அருகில் படுக்க வைத்துக்கொண்டு உறங்கினான். பாம்பும் நன்கு உறங்கியது.

நள்ளிரவு! அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தவன் புரண்டு படுத்தான். அப்படிப் படுத்தபோது, அவன் கை வேகமாக அவனது தோழனின் தலையின் மீது விழுந்துவிட்டது. மின்னல் வேகத்தில் “நாக நண்பன்” சீறிக்கொண்டு படமெடுத்தான் - சீறிய வேகத்தில் அவன் கழுத்தில் நச்சுப்பல் நன்கு அழுந்திவிட்டது - மிக அருகிலிருந்த மூளைக்கும் இதயத்திற்கும் நஞ்சின் வாய்க்கால் பெருகியோடியது! நட்பு, விஷக்கொடி கட்டிப் பறந்தது - நண்பனின் உயிரும் பறந்தது! குட்டைக் கரையில் ஒரு தவளையின் அழைப்பு; அதையேற்றிட அந்தப் பாம்பு, அமைதியாக ஊர்ந்து சென்றது!

மனப்பொருத்தம் இல்லாதவர்களுடன் கூடி வாழும் வாழ்க்கையானது; ஒரு குடிலில் பாம்புடன் இணைந்து வாழ்வதால் ஏற்படும் விளைவை, என்றோ ஒரு நாள் சந்திக்க வேண்டியதைப் போன்ற நிலையை உருவாக்கக் கூடியதாகும் என்று வள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்.

“உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று”

அதிகாரம் - 89 - உட்பகை; பாடல் - 890

உடம்பாடு = மனப் பொருத்தம் குடங்கர் = குடிசை

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்