பொருளடக்கம்

குறளோவியம்

பொருளடக்கம் 268 / 300

கல்லாத மேற்கொண்டு

அச்சுப் பக்கம் 572573 · ஸ்கேன் 589590 · அதிகாரம் 85 (புல்லறிவாண்மை) — குறள் 845

கீழே அச்சிட்ட நூலின் ஸ்கேனுடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்ட தமிழ் உரை, பக்க வாரியாக.

குதிரைகளை வளர்த்து அவற்றைப் பழக்குகின்ற தொழிலில் ஈடுபாடு கொண்ட ஒருவர்! குட்டியிலிருந்தே குதிரைகளை முறைப்படி உணவு தந்தும் உடல் வலிவு பெறச் செய்தும் பட்டாளத்திற்கானாலும் பந்தயத்திற்கானாலும் வளர்ப்பதில் திறமையாளர் என்று பெயர் பெற்ற காரணத்தால், அத்தொழிலில் பெரும் செல்வமும் புகழும் ஈட்டுகின்ற வாய்ப்பினைப் பெற்றார். குதிரை வகைகளைப்பற்றிய நூல்களையும் ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் நிரம்பப் படித்திருந்தார். அவரால் வளர்க்கப்பட்ட குதிரைகள், வாட்டசாட்டமாகவும் வலிவு கொண்டவைகளாகவும் வெற்றிகளை எளிதில் தரக்கூடியவைகளாகவும் விளங்கின. அவரது நீண்டகாலத்தொழில் நுட்பத்தையும் குதிரை வளர்ப்புப் பற்றிப்பல நூல்களில் இருந்து அவரால் எடுத்துத் தொகுக்கப்பெற்ற அழகிய நூல் ஒன்றையும் பாராட்டி விழா நடத்திட அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். எல்லாவகையிலும் விழா சிறப்புற எண்ணிப் பெருந்தலைவர்களையும் பல்துறை அறிஞர் பெருமக்களையும் அழைத்திருந்தனர்.

விழாவில் அவருக்கு “புரவிப் புரவலர்” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. வந்திருந்த மேதைகள், அவரை வாழ்த்திப்போற்றினர். இறுதியாக “புரவிப்புரவலர்” நன்றி கூற எழுந்தார். குதிரை வளர்ப்பு மட்டுமல்லாமல், தனக்கு எல்லாமே தெரியும் என்பதை

அந்த அவையில் காட்டிக்கொள்ள வேண்டும் என ஒரு திடீர் ஆசை அவருக்குத் தோன்றியது! உரையாற்றத் தொடங்கினார்! அவரது உரை வருமாறு:-

“குதிரைகள் - இன்று நேற்றல்ல; நமது நாட்டில் வரலாற்றுக் காலந்தொட்டு வீரமிக்க ஒரு பரம்பரையை உருவாக்கியிருக்கின்றன! கரிகாலன் என்ற சோழ மன்னன், கனக - விஜயர் என்ற மன்னர்களைத் தோற்கடிக்கத் தனது குதிரைப் படையைக் கொண்டுசென்றான். அவர்களை வெற்றிகண்டு விந்திய மலையில் கல் எடுத்து, அதை அவர்கள் தலையில் வைத்து மதுரைக்குக் கொண்டுவந்து மாதவிக்குச் சிலை வைத்தான். அந்த மாபெரும் வெற்றிக்குப் பயன்படுத்தவை குதிரைகள் அல்லவா? அதைப்போல பல்லவ மன்னன் இலங்கைக்குத் போர் தொடுத்து, அங்கிருந்து பல்லாயிரம் கைதிகளை கொண்டு வந்து வைகை நதியிலே கல்லணை கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டது குதிரைப்படையேதான்!”

புரவிப் புரவலரின் இந்த உரையைக் கேட்டு, விழா மேடையில் இருந்தோர் வெடிக்கும் சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியாமல் தவித்தனர்! என்ன இருந்தாலும் விழாவின் கதாநாயகராயிற்றே; நேருக்கு நேராக அவர் பேச்சைக் குறை கூறமுடியுமா? அதனால் எப்போது விழா முடியும் என்று காத்திருந்துவிட்டு, முடிந்ததும் பெருமூச்சு விட்டவாறு கலைந்து சென்றனர்.

அப்படிச் செல்லும்போதே அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.

“வரலாற்றையே புரட்டிப் போட்டுக் குழப்பிவிட்டாரே; மனிதன்!”

“நிறையப் படிப்பவர் என்பார்களே இவரைப் பற்றி! இவரது தகுதி இப்போதல்லவா புரிகிறது.”

“சும்மாவா சொன்னார் திருவள்ளுவர்!”

“என்ன சொன்னார்?”

“அறிவில்லாதவர்கள்; தாங்கள் கற்றிராதவைகளைப் பற்றிப் பேசிக் கற்றவர்களைப் போலக் காட்டிக் கொள்ளும்போது - அவர்கள் ஏற்கெனவே கற்றிருப்பதாகச் சொல்கிறார்களே; அதைக்கூடக் குறைவுறக் கற்றார்களா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் என்று வள்ளுவர் குறள் தீட்டியுள்ளார்.”

“இவரைப் போன்ற மனிதர்களுக்காகவே அப்படி எழுதியிருப்பார்.”

இவ்வாறு பேசிக்கொண்டே விழாவுக்கு வந்திருந்த பெருமக்கள் மண்டபத்திலிருந்து வெளியேறினர்.

“கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடற வல்லதூஉம் ஐயம் தரும்”

அதிகாரம் - 85 - புல்லறிவாண்மை; பாடல் - 845

கலைஞர் மு. கருணாநிதி · குறளோவியம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்